நபியின் சிறுநீரை நபித்தோழியர் குடித்தார்களா?

நபியின் சிறுநீரை நபித்தோழியர் குடித்தார்களா?

குர்ஆனும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் இஸ்லாத்தின் அடிப்படை மூல ஆதாரங்களாகும். குர்ஆனைப் பொறுத்தவரை இன்றைக்கு எது குர்ஆன் என்பதை நாம் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை. நமது ஆய்வுக்கு அப்பாற்பட்ட வகையில் குர்ஆன் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றது.

ஆனால் ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டிருந்தாலும் குர்ஆனைப் போன்று ஆய்வுக்கு அப்பாற்பட்ட வகையில் பாதுகாக்கப்படவில்லை. எந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளலாம்? எந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதை இன்றைக்கும் ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

முறையான ஆய்வுக்குப் பிறகு நல்ல செய்திகளை தனியே பிரித்துவிட முடியும். நபியுடன் தொடர்பில்லாத பலவீனமான செய்திகளையும் தனியே பிரித்துவிட முடியும். இந்த வகையில் நபிமொழிகள் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றன.

பாதுகாக்கப்பட்டுள்ள ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் குர்ஆனுக்கு விளக்கமாகவும் தனிமனிதனை நல்வழிப்படுத்தகூடியதாகவும் அமைந்துள்ளன. ஆனால் பலவீனமான பொய்யான ஹதீஸ்கள் பெரும்பாலும் குர்ஆனுக்கு எதிராகவும் மனிதனை மானக்கேடான வழிக்கு இழுத்துச் செல்லக்கூடியதாகவும் அமைந்துள்ளன.

இஸ்லாத்தின் விரோதிகள் இஸ்லாத்தை விமர்சிப்பதற்குப் பெரும்பாலும் பொய்யான ஹதீஸ்களையே முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதமாக எடுத்துக் கொள்கின்றனர்.

முஸ்லிம்களின் பெயரில் இருந்துகொண்டு இணைவைப்பு, மூட நம்பிக்கை மற்றும் கிறுக்குத்தனங்களை ஆதரிப்பவர்கள் இதுமாதிரியான பொய்யான ஹதீஸ்களையே தங்களுக்கு ஆதாரங்களாகக் கூறிக்கொள்கின்றனர். இந்த ஹதீஸ்களுக்கு இஸ்லாமியச் சாயம் பூசி மக்களை ஏமாற்றும் பித்தலாட்ட வேலைகளை அரங்கேற்றுகின்றனர்.

இந்த வகையில் சில நபித்தோழியர் நபி (ஸல்) அவர்களின் மீது வைத்திருந்த அன்பினால் அவர்களின் சிறுநீரைப் பருகினார்கள் என்ற கருத்தில் சில செய்திகள் இருக்கின்றன.  எனவே இச்செய்தியின் உண்மை நிலையை இந்த ஆய்வில் நாம் மக்களுக்குத் தெளிவுபடுத்த இருக்கின்றோம்.

இறைத்தூதர்களை அல்லாஹ் அனுப்புவது, மனிதர்களை நாகரீகமான சமுதாயமாக ஆக்குவதற்காகவே அனுப்புகிறான்.

ஒரு மனிதர் இன்னொரு மனிதரின் சிறுநீரைக் குடித்தால், அல்லது குடிக்கச் சொன்னால், அல்லது தனது சிறுநீரை பிறர் குடிப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தால், அதை ஊக்குவித்தால் அது காட்டுமிராண்டித்தனம், அநாகரீகம் என்று நாம் விளங்கி இருக்கிறோம்.

கல்லையும் மண்ணையும் மனிதர்களையும் கடவுளாகக் கருதும் சிந்தனையற்றவர்களும் கூட மனித மூத்திரத்தைக் குடிப்பதை அநாகரீகமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் கருதுகிறார்கள். இதுபோன்ற காட்டுமிராண்டித் தனங்களையும் ஒழித்துக் கட்ட அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மற்றவர்களை மிஞ்சும் வண்ணம் காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு வழிகாட்டினார்கள் என்று ஒரு செய்தி புகாரியில் இடம் பெற்றாலும் முஸ்லிமில் இடம்பெற்றாலும் அனைத்து ஹதீஸ் நூற்களிலும் இடம் பெற்றாலும் அது நபி சொன்னது அல்ல. அது கட்டுக்கதை என்று தான் நாம் முடிவுக்கு வரவேண்டும்.

இது போன்ற செய்திகள் ஆய்வுக்கு உட்படுத்துவதற்குத் தகுதியற்றவை. ஆனாலும் இந்த ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம் போன்ற நூல்களிலும் இடம் பெறவில்லை. இதன் அறிவிப்பாளர் தொடரும் சரியானதல்ல என்பதைக் கூடுதல் தகவலாக எடுத்துக் காட்டுகிறோம்.

இதோ நபிகள் நாயகம் (ஸல்) கூறுகிறார்கள்:

என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதில்) நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன்.

என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால் இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிக தூரமானவன்.

அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி), நூல்: அஹ்மத் 15478

பிரச்சனைக்குரிய செய்தி

உமைமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு மரத்தால் ஆன பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுத் தமது கட்டிலுக்கு அடியில் வைத்து விடுவார்கள். (ஒரு நாள்) அவர்கள் எழுந்து (அந்தப் பாத்திரத்தை) தேடினார்கள். அதை அவர்கள் காணவில்லை. “பாத்திரம் எங்கே?” என்று கேட்டார்கள். “அபீசீனிய நாட்டிலிருந்து உம்மு சலமாவுடன் வந்துள்ள அவர்களின் அடிமை பர்ரா அதைக் குடித்து விட்டார்” என்று மக்கள் கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர் நரகத்திலிருந்து காக்கும் திரையைக் கொண்டு அவர் தன்னைக் காத்துக் கொண்டார்” எனக் கூறினார்கள்.

நூல்: தப்ரானீ

இந்தச் செய்தி பைஹகியிலும் இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸில் முதல் அறிவிப்பாளராக இடம்பெறும் உமைமா (ரலி) அவர்கள் நபித்தோழியர் ஆவார். இந்த நபித்தோழியரிடமிருந்து அவர்களின் மகள் ஹுகைமா பின்த் உமைமா என்பவர் அறிவிக்கின்றார்.

இவர் நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இமாம் இப்னு ஹஜர் அவர்களும் இமாம் தஹபீ அவர்களும் இவர் யாராலும் அறியப்படாத நபர் என்று கூறியுள்ளனர்.

ஹ‚கைமா பின்த் உமைமா அறியப்படாத நபர் ஆவார்.

நூல்: லிஸானுல் மீஸான், பாகம்: 7, பக்கம்: 524

மேலும் அல்பத்ருல் முனீர் என்ற நூலாசிரியர் இப்னுல் முலக்கன் என்பவர் ஹுகைமா பின்த் உமைமா நம்பகமானவர் என்று யாரும் நற்சான்று அளிக்கவில்லை என்று கூறுகிறார்.

ஹுகைமா பின்த் உமைமாவின் நிலை அறியப்படவில்லை.

நூல்: அல்பத்ருல் முனீர், பாகம்: 1, பக்கம்: 485

இமாம் இப்னு கஸீர் அவர்கள் இந்த ஹதீஸைக் குறிப்பிட்டுவிட்டு அதன் கீழ் இந்தச் செய்தி சரியானதல்ல என்று கூறியுள்ளார்.

நம்பகத்தன்மை உறுதிசெய்யப்படாத நபரைக் கொண்டதாக இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அமைந்துள்ளது.

நூல்: அல்ஃபுசூல், பாகம் : 1, பக்கம் : 307

இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் இவரை நம்பகமானவர்களின் பட்டியலில் குறிப்பிட்டுள்ளார். இந்த இமாம் அறிவிப்பாளரை நம்பகமானவர் என்று கூறுவதில் அலட்சியப் போக்குடையவர். நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களை நம்பகமானவர் என்று கூறக்கூடியவர். எனவே இவரது கூற்றை அடிப்படையாகக் கொண்டு ஹுகைமா நம்பகமானவர் என்று முடிவு செய்ய முடியாது.

மேலும் இமாம் தாரகுத்னீ அவர்கள் இந்த ஹதீஸைச் சரி என்று சொன்னதாகவும் ஹுகைமா பின்த் உமைமா நம்பகமானவர் என்று சொன்னதாகவும் சிலர் தவறான தகவலைக் கூறியுள்ளனர். இதை அடிப்படையாகக் கொண்டு தற்காலத்தில் உள்ளவர்கள் இந்த ஹதீஸ் சரியானது என்று வாதிடுகின்றனர்.

ஆனால் இமாம் தாரகுத்னீ அவர்கள் எந்த ஒரு இடத்திலும் ஹுகைமா பின்த் உமைமா நம்பகமானவர் என்றோ, அவர் இடம்பெற்றுள்ள மேற்கண்ட செய்தி சரியானது என்றோ நற்சான்று அளிக்கவில்லை. இதை இமாம் இப்னுல் கத்தான் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.

மரப்பாத்திரம் தொடர்பான சம்பவத்தை உமைமா (ரலி) அவர்களின் மகள் ஹுகைமா அறிவிக்கின்றார். இமாம் தாரகுத்னீ அவர்கள் இந்த ஹதீஸ் சரியானது என்றோ பலவீனமானது என்றோ எந்த முடிவும் கூறவில்லை. மேலும் அறிவிப்பாளர் ஹுகைமா குறித்து நிறையோ குறையோ கூறவில்லை.

எனவே இதில் இடம்பெற்றுள்ள ஹுகைமாவின் நிலை தெரிந்தால் தான் ஹதீஸ் சரியானது என்று கூற முடியும். இவர் நம்பகமானவர் என்று உறுதியானால் தான் இவரது அறிவிப்பு ஆதாரப்பூர்வமானதாகும். ஆனால் இவருடைய நம்பகத்தன்மை நிரூபணமாகவில்லை. இவ்விஷயத்தில் இமாம் தாரகுத்னீ அவர்களை ஆதாரமாகக் காட்டுவது போதுமான ஆதாரமாக இல்லை.

நூல்: பயானுல் வஹ்மி வல் ஈஹாம், பாகம் : 5, பக்கம் : 516

மேலும் இமாம் ஹைஸமீ அவர்கள் அறிவிப்பாளர் ஹுகைமா நம்பகமானவர் என்று கூறியுள்ளார். இந்த ஹதீஸைச் சரிகாணுபவர்கள் இமாம் ஹைஸமீ அவர்களின் இந்தக் கூற்றை எடுத்துக் காட்டுகின்றனர்.

ஹைஸமீ அவர்களைப் பொறுத்தவரை அறிவிப்பாளர்களை எடைபோடும் அறிஞர்களில் ஒருவர் அல்ல. இவர் ஹிஜ்ரீ 807ல் மரணிக்கின்றார். எனவே இவர் பிந்தைய காலத்தில் வந்த அறிஞர்.

அறிவிப்பாளர்கள் குறித்து முந்தைய இமாம்கள் கூறிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்கக்கூடியவர். முந்தைய இமாம்களின் கூற்றுக்கள் இல்லாமல் இவர் அறிவிப்பாளர்கள் குறித்து கருத்து தெரிவிக்க இயலாது.

ஹுகைமா பின் உமைமா அவர்களை முந்தைய இமாம்களில் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் நம்பகமானவர் என்று கூறவில்லை. இப்னு ஹிப்பான் அவர்களின் இந்தக் கூற்றை அடிப்படையாகக் கொண்டே இமாம் ஹைஸமீ அவர்கள் ஹுகைமா நம்பகமானவர் என்று கூறியிருக்க வேண்டும்.

ஒரு அறிவிப்பாளரை நம்பகமானவர் என்று முடிவு செய்வதில் இமாம் இப்னு ஹிப்பான் அவர்களின் கருத்தை ஆதாரமாகக் கொள்ள முடியாது. இப்னு ஹிப்பான் விஷயத்தில் நம்மைப் போன்று பல அறிஞர்கள் இந்த நிலைபாட்டில் இருக்கின்றார்கள்.

மேலும் இமாம் ஹைஸமீ, இப்னு ஹிப்பானைப் போன்று அறிவிப்பாளர்களை நம்பகமானவர் என்று முடிவு செய்வதில் அலட்சியப் போக்குடையவர்.

எனவே அறிவிப்பாளர் ஹுகைமா விசயத்தில் இமாம் இப்னு ஹிப்பான் கூற்றை அடிப்படையாகக் கொண்டு இமாம் ஹைஸமீ அவர்கள் தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஹுகைமா பின்த் உமைமா நம்பகமானவர் என்பதற்கு ஏற்கத் தகுந்த எந்தச் சான்றும் இல்லாத காரணத்தால் இவர் அறிவிக்கும் மேற்கண்ட செய்தி பலவீனமானதாகும்.

இரண்டாவது செய்தி

உம்மு அய்மன் என்ற நபித்தோழியர் நபி (ஸல்) அவர்களின் சிறுநீரைக் குடித்தார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி உள்ளது.

உம்மு அய்மன் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் எழுந்து வீட்டின் ஓரத்தில் இருந்த மண் பாத்திரத்தில் சிறுநீர் கழித்தார்கள். எனக்கு தாகம் ஏற்பட்டதால் இரவில் எழுந்து அந்த மண் பாத்திரத்தில் இருந்ததைத் தெரியாமல் பருகிவிட்டேன். விடிந்தவுடன் நபி (ஸல்) அவர்கள், “உம்மு அய்மனே! எழுந்து அந்த மண் பாத்திரத்தில் உள்ளதைக் கீழே கொட்டிவிடு!” என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் மீதாணையாக! அதில் இருந்ததை நான் பருகி விட்டேனே!” என்று நான் கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடைவாய் பற்கள் தெரிகின்ற அளவுக்குச் சிரித்தார்கள். பிறகு, “இனி உனக்கு வயிற்று வலி ஒருபோதும் ஏற்படாது” என்று கூறினார்கள்.

நூல்: தப்ரானீ

இந்தச் செய்தியை உம்மு அய்மன் (ரலி) அவர்களிடமிருந்து நுபைஹ் என்பவர் அறிவிக்கின்றார். நுபைஹ் நம்பகமானவராக இருந்தாலும் இவர் உம்மு அய்மன் (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை.

இவர் இந்த ஹதீஸை உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் நேரடியாகச் செவியுறவில்லை என்பதால் இவருக்கும் உம்மு அய்மன் (ரலி) அவர்களுக்கும் இடையில் யாரோ விடுபட்டுள்ளார்கள். விடுபட்ட நபர்கள் எத்தனை பேர்? அவர்கள் யார்? அவர்களின் நம்பகத்தன்மை எத்தகையது? என்பது தெளிவாகவில்லை. இதன் காரணத்தால் இந்த ஹதீஸ் பலவீனமாக உள்ளது.

மேலும் நுபைஹ் அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அபூமாலிக் நகயீ என்பவர் அறிவிக்கின்றார். இவர் பலவீனமானவர் என்று இமாம்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர்.

இமாம் யஹ்யா பின் மயீன், இமாம் நஸாஹி, இமாம் புகாரி, இமாம் அபூ ஹாதிம், இமாம் அபூதாவுத், இமாம் இப்னு ஹஜர், இமாம் தஹபீ ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இதன் காரணத்தாலும் இந்தச் செய்தி பலவீனமானதாகும்.

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தல்கீஸ் என்ற தன் நூலில் இந்த இரு காரணங்களால் இந்தச் செய்தி பலவீனமாக உள்ளது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

அபூமாலிக் பலவீனமானவர். நுபைஹ் உம்மு அய்மன் (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை.

நூல் : தல்கீஸுல் கபீர், பாகம் : 1, பக்கம் : 171

இந்தச் செய்தி பலவீனமானது என்பதை இமாம் ஹைஸமீ அவர்களும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

இந்த ஹதீஸை இமாம் தப்ரானீ அவர்கள் அறிவிக்கின்றார்கள். இதில் அபூமாலிக் நகயீ என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர்.

நூல் : மஜ்மஉ ஸவாயித், பாகம் : 8, பக்கம் : 271

ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட அறிவிப்பு

உம்மு அய்மன் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழிப்பதற்காக மண் குடுவை ஒன்று இருந்தது. அவர்கள் விடிந்தவுடன் “உம்மு அய்மனே! இந்த மண் பாத்திரத்தில் உள்ளதைக் கீழே கொட்டிவிடு” என்று கூறுவார்கள். ஒரு நாள் இரவில் எனக்கு தாகம் ஏற்பட நான் எழுந்து அந்த மண் பாத்திரத்தில் இருந்த சிறுநீரைக் குடித்துவிட்டேன். நபி (ஸல்) அவர்கள், “உம்மு அய்மனே! அந்த மண் பாத்திரத்தில் உள்ளதை கீழே கொட்டிவிடு” என்று கூறினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! தாகத்துடன் நான் எழுந்து அதில் உள்ளதைக் குடித்துவிட்டேன்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “இன்றைய நாளுக்குப் பிறகு இனி ஒருபோதும் உனக்கு வயிற்றுப் பிரச்சனை ஏற்படாது” என்று கூறினார்கள்.

நூல்: அல்மதாலிபுல் ஆலியா

இந்த அறிவிப்பில் பின்வரும் அறிவிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

  1. உம்மு அய்மன் (ரலி)
  2. வலீத் பின் அப்திர் ரஹ்மான்
  3. யஃலா பின் அதாஉ
  4. அல்ஹசன் பின் ஹர்ப்
  5. சில்ம் பின் குதைபா
  6. முஹம்மது பின் அபீபக்ர்
  7. அபூ யஃலா

இந்த அறிவிப்பாளர்களை மேலோட்டமாகப் பார்த்தால் இதில் குறை சொல்லப்பட்டவர்கள் யாரும் இல்லை என்பது போல் தெரியும். ஆனால் இந்த அறிவிப்பாளர் தொடரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில் நான்காவது அறிவிப்பாளராக ஹசன் பின் ஹர்ப் என்பவர் கூறப்பட்டுள்ளது. இவரிடமிருந்து சில்ம் பின் குதைபா அறிவிக்கின்றார். ஹசன் பின் ஹர்பை கூறியிருப்பதில் தான் குழப்பம் உள்ளது.

தாரீகு திமஷ்க், அல்பிதாயா வந்நிஹாயா ஆகிய நூற்களில் இந்த பெயருக்கு பதிலாக ஹுசைன் பின் ஹுரைஸ் என்று வேறு பெயர் சொல்லப்பட்டுள்ளது.

இப்னு சகன் என்பவருடைய நூலில் இதே அறிவிப்பாளர் தொடர் உள்ளது. அதில் ஹுஸைன் பின் ஹர்ப் என்பதற்குப் பதிலாக அப்துல் மலிக் பின் ஹுஸைன் என்று கூறப்பட்டுள்ளது. அப்துல் மலிக் பின் ஹுஸைன் என்பது அபூ மாலிக் அவர்களின் பெயராகும்.

அபூ மாலிக் என்ற அறிவிப்பாளர் பலவீனமானவர் என்பதை முன்பு தெளிவுபடுத்தி இருக்கின்றோம். அந்த அபூமாலிக்கைத் தான் இங்கே ஹசன் பின் ஹர்ப் என்றும் ஹுசைன் பின் ஹுரைஸ் என்றும் தவறாக மாற்றிக் கூறப்பட்டுள்ளது.

இதை இமாம் தாரகுத்னீ அவர்கள் அல்இலல் என்ற தன் நூலில் தெளிவுபடுத்துகிறார்கள். அபூமாலிக்கிடமிருந்து வரும் செய்திகள் ஒரே விதத்தில் அமையாமல் அதில் பல முரண்பாடுகள் அமைந்தள்ளது என தாரகுத்னீ தெளிவுபடுத்துகின்றார்.

இமாம் தாரகுத்னீ அவர்கள் மேலே நாம் கூறிய அறிவிப்பாளர் தொடரை குறிப்பிடுகிறார். ஆனால் நான்காவது அறிவிப்பாளராக ஹசன் பின் ஹர்பைக் கூறாமல் அந்த இடத்தில் அறிவிப்பாளர் அபூமாலிக்கை குறிப்பிடுகின்றார்.

எனவே மேற்கண்ட அறிவிப்பாளர் தொடரில் பலவீனமான அறிவிப்பாளர் அபூ மாலிக்கை, ஹசன் பின் ஹர்ப் எனவும் ஹுஸைன் பின் ஹுரைஸ் எனவும் தவறாக மாற்றிக் கூறிவிட்டனர் என்பது தெளிவாகின்றது. இதன் காரணத்தால் இது பலவீனமான அறிவிப்பாகும்.

நபித்தோழியர் நபி (ஸல்) அவர்களின் சிறுநீரைக் குடித்தார்கள் என்ற கருத்தில் வரும் அருவருக்கத்தக்க இது போன்ற பலவீனமான ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது. இதை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள் நபி (ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் இழிவுபடுத்தியவர்களாவர்.

சில மூடர்கள் இந்த ஹதீஸை மக்களிடம் பரப்பி இதன் மூலம் நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் தவறான எண்ணத்தை உருவாக்கி வருகின்றார்கள். இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாமியப் போர்வையில் இருந்தாலும் அல்லாஹ் தன் மார்க்கத்தை நிச்சயம் பாதுகாப்பான்.