நபி மீது பொய்! நரகமே தங்குமிடம்!
நபியின் பிறப்பு அற்புதங்கள்
அண்மையில் முஸ்லிம் இதயக்குரல் எனும் மாத இதழ், “அண்ணலின் பிறப்பே அற்புதம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது. அதில் நபியவர்களின் பிறப்பு எந்தெந்த வகையில் அற்புதமாகிறது என்பதை விலாவாரியாக (?) விளக்கியிருந்தார்கள். நபிகளாரின் பிறப்பே ஓர் அற்புதம் என்பதை நிறுவ, பல பொய்யான வரலாற்றுத் தகவல்களையும் கட்டுக் கதைகளையும் கட்டுரை முழுக்க நிரப்பியிருந்தனர்.
உதாரணத்திற்கு சில…
நபிகளாரின் தாயார் ஆமினா அவர்கள் கருவுற்ற நேரத்தில் கனவில் ஆதம் (அலை) முதல் ஈஸா நபி (அலை) அவர்கள் வரை ஒவ்வொரு மாதமும் பல நபிமார்கள் ஒவ்வொருவராக வந்து நபிகள் நாயகம் பிறப்பதைப் பற்றி விதம் விதமாக நற்செய்தி சொன்னார்களாம்.
ஆமினா அவர்களுக்குப் பிரசவம் பார்க்க பிர்அவ்னின் மனைவியும் மர்யம் (அலை) அவர்களும் வந்திருந்தார்களாம்.
பிரசவ வேதனையின்றி இலகுவாக கத்னா செய்யப்பட்டு, சஜ்தா செய்தவராக, சுட்டு விரலை வானை நோக்கி உயர்த்தியவர்களாக நபிகள் நாயகம் பிறந்தார்களாம். இது மாத்திரம் அல்ல. பிறந்த பொழுதினிலே அல்லாஹு அக்பர் கபீரா வல்ஹம்து லில்லாஹி கஸீரா வஸுப்ஹானல்லாஹி புக்ரதவ் வஅஸீலா என்று பேசியவாரே நபியவர்கள் வெளிவந்தார்களாம். கூடுதல் தகவல் நபிகள் நாயகத்தோடு சேர்த்து மொத்தம் பத்து பேர் குழந்தைப் பருவத்திலேயே பேசியிருக்கிறார்களாம்.
அது சரி!
இவ்வாறு நபியவர்களின் பிறப்பு பல வகையில் அற்புதமாகிறது என்று பல புழுகு முட்டைகளை இறக்கி வைத்தவாறு இவற்றில் எதற்கும் ஆதாரத்தையும் குறிப்பிடாமல் கட்டுரையைத் துவக்குகிறார்கள். ஒருவேளை கட்டுரையாளர் சிறு வயதில் தாம் கேட்ட, கேள்விப்பட்ட கதைகள் அனைத்தையும் இதில் எழுதியிருப்பார் போலும். அந்த அளவுக்குப் பல பொய்யான வரலாற்றுத் தகவல்களை அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதில் இவர்கள் கூறிய எந்த ஒன்றுக்கும் தகுந்த எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
நபிகள் நாயகம் ஸஜ்தா செய்தவர்களாக, சுட்டுவிரலை வான் நோக்கி உயர்த்தியவர்களாகப் பிறந்தார்கள் என்ற தகவலை அபூநுஐம் அவர்கள் தலாயில் எனும் நூலில் பதிவு செய்துள்ளதாக இமாம் சுயூத்தி அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (கஸாயிஸுல் குப்ரா, பாகம் 1, பக்கம் 82)
ஆனால் இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் அபூபக்கர் இப்னு அபீ மர்யம் மற்றும் யஹ்யா ஆகியோர் மிகவும் பலவீனமானவர்கள் என்று பல அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்கள். எனவே இது ஏற்கத்தக்கதல்ல.
கத்னா செய்யப்பட்டு நபிகள் நாயகம் பிறந்தார்கள் என்று அறிவிக்கப் படுபவற்றில் எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதை இப்னுல் கய்யூம் (ஜாதுல் மஆத், பாகம் 1, பக்கம் 80) போன்ற பல அறிஞர்களும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
நபிகள் நாயகம் குழந்தைப் பருவத்தில் பேசினார்கள் என்ற இவர்களது புழுகுதலுக்கும் எந்த ஆதாரமும் இல்லை. மேலும் குழந்தைப் பருவத்தில் பேசிய நபர்களை நபிகளார் தெளிவுபடுத்தியுள்ளார்கள். (நூல்: புகாரி 3436)
இவர்களைத் தவிர வேறு யாரும் தொட்டில் பருவத்தில் பேசவில்லை என்று நபிகளார் கூறியிருக்க மொத்தம் பத்து பேர் தொட்டில் பருவத்தில் பேசியிருக்கிறார்கள் என்றும் நபிகள் நாயகமும் அவர்களில் ஒருவர் என்பதும் இந்த நபிமொழிக்குத் தெளிவாக முரண்படக் கூடியதாகும். தம்மை அந்த பட்டியலில் இணைத்துச் சொல்லாததே நபிகளார் குழந்தைப் பருவத்தில் பேசவில்லை என்பதற்குச் சான்றாகும்.
தன்னை வரம்பு மீறிப் புகழக்கூடாது என்ற நபிகளாரின் உத்தரவை மீறி இவ்வாறு பல கற்பனைக் கதைகளை, பொய்யான செய்திகளை போகிற போக்கிலே குறிப்பிட்டு விட்டு நபிகளாரின் பிறப்பு அற்புதம் என்று நிலைநாட்டப் பார்க்கிறார்கள். நபிகளாரின் பிறப்பு அற்புதம் என்பதை நிறுவ ஹதீஸ்களின் பெயரால் அவர்கள் கூறியிருந்த ஒரு பொய்யான செய்தியை இங்கு காண்போம்.
நபியவர்களின் பிறப்பு ஓர் அற்புதம் என்பதை நிறுவ ஹதீஸின் பெயரால் அவர்கள் முன் வைக்கும் ஒரு சான்று நபியவர்கள் நம்மை போன்ற மனிதரல்ல. மாறாக, நபியவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளார்கள் என்ற அவர்களது வாதமாகும். இவ்வொளியைத் தான் இறைவன் முதன்முதலாகப் படைத்தான் என்று கூறுவதன் மூலம் அண்ணலின் பிறப்பு அற்புதம் என்கிறார்கள். தங்களது வாதத்திற்கு ஆதாரமாகப் பின்வருமாறு ஒரு செய்தி இருப்பதாகக் கூறுகிறார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் முதன்முதலில் எப்பொருளைப் படைத்தான்?” என ஜாபிர் ரலி அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், “நிச்சயமாக ஜாபிரே! சர்வ படைப்புகளுக்கு முன்பாக உமது நபியின் நூர் எனும் ஒளியை அல்லாஹ் தனது ஒளியிலிருந்து படைத்தான்” என்றார்கள்.
நூல்: “முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக்”
இது ஒரு பொய்யான, நபிகள் நாயகத்தின் பெயராலும் மற்றும் இமாம் அப்துர் ரஸ்ஸாக் அவர்களின் பெயராலும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். ஏனெனில் இப்படி ஒரு செய்தி முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் எனும் நூலில் எங்கும் கிடையாது. ஏன் இமாம் அப்துர் ரஸ்ஸாக் அவர்களின் வேறு எந்த நூலிலும் கிடையாது. இதை பல அறிஞர்கள் உறுதி செய்துள்ளனர்.
வானவர்கள் ஒளியிலிருந்து படைக்கப்பட்டார்கள் எனும் முஸ்லிமில் இடம் பெறும் செய்தியைப் பதிவு செய்து விட்டு அல்பானீ அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.
ஜாபிரே! சர்வ படைப்புகளுக்கு முன்பாக உமது நபியின் நூர் எனும் ஒளியை அல்லாஹ் தனது ஒளியிலிருந்து படைத்தான் என்று மக்களின் நாவுகளில் பிரபலமாக அறியப்பட்ட செய்தி பொய்யானது என்பது இந்தச் செய்தியின் முலமாக தெரிகிறது. நபிகள் நாயகம் ஒளியால் படைக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியும் தவறானது என்பதும் உறுதியாகிறது. ஏனெனில் இந்தச் செய்தி வானவர்கள் மட்டும் தான் ஒளியால் படைக்கப்பட்டுள்ளார்கள். ஆதமோ அவர்களது சந்ததிகளோ ஒளியால் படைக்கப்படவில்லை என்று இந்தச் செய்தி தெளிவாக எடுத்துரைக்கின்றது. எனவே இந்த செய்தியின் விஷயத்தில் கவனக்குறைவாக இருக்காதே விழிப்புணர்வுடன் இரு.
நூல்: அஸ்ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா, பாகம் 1, பக்கம் 457
இமாம் சுயூத்தி அவர்களிடம் நபிகள் நாயகம் ஒளியால் படைக்கப்பட்டதாக செய்தி உள்ளதா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தாங்கள் குறிப்பிட்ட செய்திக்கு நம்பத்தகுந்த எந்த அறிவிப்பாளர் தொடரும் இல்லை என்று பதிலளித்துள்ளார்கள்.
இமாம் சுயூத்தி அவர்களின் அல்ஹாவி லில் ஃபதாவா, பாகம் 1, பக்கம் 313
இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இதன் முழுமையைக் கூறினால் இதைப் படிக்கின்ற எவரும் இது இட்டுக்கட்டப்பட்டது என்பதில் சந்தேகம் கொள்ள மாட்டார் என்று சென்ற நூற்றாண்டு அறிஞரான அஹமத் பின் ஸித்தீக் அல் கிமாரி என்பவர் கூறியதாக தகியுத்தீன் என்பவர் கூறுகிறார்.
அல்ஹதியத்துல் ஹாதியா, பாகம் 1, பக்கம் 88
பாகிஸ்தானைச் சேர்ந்த ‘தர்ஜுமானுல் ஹதீஸ்’ என்ற மாத இதழின் ஆசிரியர், இஹ்ஸான் இலாஹி ழஹீர் என்ற அறிஞர் வரிக்கு வரி பார்வையிட்டு இவர்கள் கூறும் இந்தக் கதை முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் நூலில் இல்லை என்று தெளிவுபடக் கூறியுள்ளார்.
இவ்வளவு அறிஞர்கள் இப்படி ஒரு செய்தி அறவே இல்லை என்று தெளிவுபடுத்திய பின்னரும் இவர்கள் கூசாமல் இப்பொழுதும் புழுகுகிறார்கள் எனில் இந்த அறிவீனர்களை என்னவென்பது?
முதல் மனிதராக ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் மண்ணிலிருந்து படைத்தான் என்பதைத் திருக்குர்ஆன் பல இடங்களில் சொல்லிக் காட்டுகின்றது. ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளின் சங்கிலித் தொடரில் அப்துல்லாஹ்வுக்கும், ஆமீனாவுக்கும் மகனாக நபி (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.
ஈஸா (நபி) தவிர மற்ற மனிதர்கள் எந்த முறையில் பிறந்தார்களோ, அப்படித்தான் நபி (ஸல்) அவர்களும் பிறந்தார்கள். எல்லா மனிதர்களுக்கும் எது மூலமாக இருந்ததோ அதுவே நபி (ஸல்) அவர்களுக்கும் மூலமாக இருந்தது. இது தான் குர்ஆன், ஹதீஸ் மூலம் பெறப்படும் உண்மையாகும்.
இன்னும் அவன் தான் மனிதனை (ஒரு குறிப்பிட்ட) நீரிலிருந்து படைத்தான்.
அல்குர்ஆன் 25:54
அவனை நாம் விந்திலிருந்து படைத்தோம் என்பதை மனிதன் அறிய வேண்டாமா?
அல்குர்ஆன் 36:77
இன்னும் பல வசனங்கள் மனித இனத்தின் மூலப் பொருளாக விந்துத் துளியையே குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் களி மண்ணால் படைக்கப்பட்டார்கள் என்பதைப் பல வசனங்கள் நமக்குத் தெளிவு படுத்துகின்றன.
களிமண்ணிலிருந்து மனிதப் படைப்பை (அவன்) துவக்கினான்.
அல்குர்ஆன் 32:7
அல்லாஹ் உங்களை மண்ணிலிருந்து, பின்னர் விந்திலிருந்து படைத்தான்.
அல்குர்ஆன் 35:11
இது போன்ற ஏராளமான வசனங்கள் மனிதத் தோற்றம் மண்ணிலிருந்து துவங்கி, பின்னர் விந்திலிருந்து தொடர்கிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.
இதற்கு மாற்றமாக “முதலில் அல்லாஹ், முஹம்மது (ஸல்) அவர்களின் ஒளியைப் படைத்தான். அந்த ஒளியிலிருந்து எல்லாப் படைப்புக்களையும் படைக்கத் துவங்கினான்” என்று கூறுவது திருக்குர்ஆனின் வசனங்களுடன் நேரடியாகவே மோதுவதாகும்.
களிமண்ணிலிருந்து மனிதப் படைப்பை (அல்லாஹ்) துவக்கினான்.
அல்குர் ஆன் 32:7
இந்த வசனத்தைக் கொஞ்சம் ஆராயந்து பாருங்கள்! மனிதப் படைப்பின் துவக்கமே “களிமண் தான்” என்று எவ்வளவு தெளிவாகக் கூறுகின்றது! களிமண் தான் மனிதப் படைப்பின் துவக்கம், ஆரம்பம் என்று அல்லாஹ் கூறிக் கொண்டிருக்க, “இல்லை! முஹம்மது (ஸல்) அவர்களின் ஒளி தான் ஆரம்பம்” என்று கூறுவது அல்லாஹ்வுக்கு நாம் சொல்லிக் கொடுப்பது போலவும், அதிகப் பிரசங்கித்தனமாகவும் தோன்றவில்லையா? (நவூதுபில்லாஹ்)
அல்லாஹ் திருக்குர்ஆனின் எந்த வசனத்திலும், நபி (ஸல்) அவர்கள் “ஒளியால் படைக்கப்பட்டார்கள்” என்று கூறவே இல்லை. நபி (ஸல்) அவர்களும் “தன்னை அல்லாஹ் ஒளியிலிருந்து படைத்தான்” என்று கூறியதாக எந்த ஹதீஸ் நூலிலும் காணப்படவில்லை.
மேலும் பின்வரும் செய்தியை சிந்தித்து பார்த்தால் நபியவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளார்கள் என்று இவர்கள் கூறும் செய்தி பொய்யானது என்பதை அறியலாம்.
“இறைவா! என் உள்ளத்தில் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! என் பார்வையிலும் எனக்கு ஓளியை ஏற்படுத்துவாயாக! எனது செவியிலும் எனக்கு ஓளியை ஏற்படுத்துவாயாக! என் வலது புறத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் இடது புறத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் மேல் புறத்திலும், கீழ்ப்புறத்திலும் எனக்கு முன்னும், பின்னும் ஒளியை ஏற்படுத்துவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி துஆ செய்பவர்களாக இருந்துள்ளார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, அஹ்மத்
நபி (ஸல்) அவர்கள் ஒளியால் உருவாக்கப்பட்டிருந்தாலோ, அவர்களே ஒளியாக இருந்திருந்தாலோ, இந்தப் பிரார்த்தனையை அடிக்கடி செய்திருக்க வேண்டியதில்லை. ஒளியால் படைக்கப்பட்டார்கள் என்று கூறுவது எந்த ஹதீஸ் நூலிலும் காணப்படாத போது இதைச் சொல்பவர்களின் நிலை என்ன?
நபியவர்களின் பிறப்பை அற்புதமாக்க இவர்கள் கூறும் செய்திக்கு எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.