ரமளானில் 60 முறை குர்ஆன் ஓதி முடித்தல்

 நபிவழிக்கு முரணாண மத்ஹபுகள்     தொடர்: 5

ரமளானில் 60 முறை குர்ஆன் ஓதி முடித்தல்

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.

மத்ஹபு வழி

ஒருவர் குர்ஆனை ஒவ்வொரு நாளும் ஒரு தடவை ஓதி முடிக்க வேண்டும். ரமளானில் அறுபது தடவை ஓதி முடிக்க வேண்டும். இவை அனைத்தையும் தொழுகையிலேயே (இவ்வாறு ஓதி முடிக்க வேண்டும்.)

நூல்: இஆனா, பாகம் 1, பக்கம் 24

ரமளான் அல்லாத நாட்களில் தொழுகையில் ஒரு நாளைக்கு ஒரு தடவை குர்ஆன் ஓதி முடிக்க வேண்டும், ரமளான் மாதத்தில் ஒரு நாளில் இரண்டு முறை குர்ஆன் ஓதி முடிக்க வேண்டும் (அதுவும் தொழுகையில் தானாம்?) என்று மத்ஹபு கூறுகின்றது. இது தான் நபிகள் நாயகம் போதித்த வழிமுறையா என்பதை அலசுவோம்.

மாநபி வழி

சாத்தியமற்றது

இது நபிவழியா என்பதைப் பார்ப்பதற்கு முன் இது சாத்தியமா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மத்ஹபு கூறும் இச்சட்டத்தை, போதனையை யாராலும் நடைமுறைப்படுத்த இயலாது. ரமலான் அல்லாத நாட்களில் தொழுகையில் ஒரு நாளில் ஒரு குர்ஆன் முழுவதையும் ஓத வேண்டும் என்பதை மத்ஹபைச் சார்ந்தவர்கள் கூட தங்கள் பள்ளிகளில் நிறைவேற்றுவதில்லை.  இதிலிருந்து இது சாத்தியமற்றது என அறியலாம்.

அதுவும் நோன்பு நோற்ற நிலையில் தொழுகையில் ஒரு நாளைக்கு இரண்டு தடவை குர்ஆன் முழுவதையும் ஓதி முடிப்பதற்குள் அவருக்கு பல பாட்டில்கள் குளுக்கோஸ் ஏற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு விடுமே! இதைத் தான் நபிகள் நாயகம் போதித்தார்களா?

புறக்கணிக்கப்படும் கடமைகள்

ஒரு வாதத்திற்கு முடியும் என்றாலும் அவர் ஒரு நாளில் தனது வேலைகள் அத்தனையையும் புறக்கணித்து விட்டு முழு மூச்சாக, தொழுகை ஒன்றே கதி என்று கிடந்தால் மாத்திரமே இது சாத்தியம்.

தன் மீதிருக்கும் பிற கடமைகளை புறக்கணித்து விட்டு இவ்வாறு செய்தால் அதை இறைவன் விரும்புவானா? இறைவன் இதை விரும்ப மாட்டான் என்று மாநபி வழி நமக்கு மகத்தான வழிகாட்டுகின்றது.

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!என்று கேட்டார்கள். நான் “ஆம்! அல்லாஹ்வின் தூதரே!என்றேன். நபி (ஸல்) அவர்கள் “இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது! “அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம்!என்றார்கள். “தாவூத் நபியின் நோன்பு எது?’ என்று நான் கேட்டேன். “வருடத்தில் பாதி நாட்கள்!என்றார்கள்.

நூல்: புகாரி 1975

குர்ஆன் ஓதி முடிப்பதன் எல்லை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதி முடிப்பதற்கு ஒரு கால அவகாசத்தை, ஒரு எல்லையை வரையறுத்துள்ளார்கள். நபிகளார் கூறிய எல்லைக்குக் கட்டுப்பட்டுத் தான் முஸ்லிம்கள் குர்ஆனை ஓத வேண்டும். பின்வரும் ஹதீஸ்களில் அந்த எல்லை விளக்கப்படுகின்றது.

என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒவ்வொரு மாதமும் (ஒரு முறை குர்ஆனை) ஓதி நிறைவுசெய்!என்று கூறினார்கள். அப்போது நான், “(அதை விடவும் குறைந்த நாட்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளதுஎன்று கூறினேன். “அப்படியானால், ஏழு நாட்களில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய்; அதைவிட (ஓதுவதை) அதிகமாக்கி விடாதேஎன்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புகாரி 5054

நபி(ஸல்) அவர்கள் என்னிடம், “ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக!என்று   கூறினார்கள். “இதைவிட அதிகமாக எனக்குச் சக்தி உள்ளது!என்று நான் கூறினேன். முடிவில், “ஒருநாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக!என்று கூறினார்கள். மேலும் “ஒவ்வொரு மாதமும் (ஒரு தடவை) குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!என்றார்கள். “இதைவிட அதிகமாக(ஓத) எனக்கு சக்தி உள்ளது!என்று நான் கூறினேன். (நான் கேட்கக் கேட்க) குறைத்துக் கொண்டே வந்து முடிவில், “மூன்று நாட்களில் ஒரு தடவை குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புகாரி 1978

அதிகபட்சம் ஏழு நாட்கள், குறைந்த பட்சம் 3 நாட்கள் ஆக இதற்குக் குறைந்து யாரும் குர்ஆனை ஓதி முடிக்க கூடாது என்று இந்த நபிமொழிகள் உத்தரவிடுகின்றன.

அதாவது ஒருவர் குர்ஆனை ஓதி முடிப்பதாக இருந்தால் குறைந்த பட்சம் மூன்று நாட்களாவது அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டும், காலம் தாழ்த்த வேண்டும். மூன்று நாட்களுக்கும் குறைவாக 2 நாட்களில் குர்ஆனை ஓதி முடிக்க கூடாது என்று இந்த ஹதீஸ்களில் சொல்லப்படுகின்றது. இதுவே நபிவழி.

இதை மீறி ஒருவர் குர்ஆனை ஓதி முடிப்பாரானால் அவர் அல்லாஹ்விடம் நல்லவராக, இறைநேசராகப் பார்க்கப்பட மாட்டார். மாறாக, மார்க்க வரம்பை மற்றும் நபிவழியை மீறிய, அவமதித்த குற்றவாளியாகவே பார்க்கப்படுவார்.

ஆனால் இதைச் சற்றும் கவனத்தில் கொள்ளாமல் இவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு தடவை குர்ஆன் ஓதி முடிக்க வேண்டும் என்று எழுதி வைத்துள்ளார்கள். இறைத்தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் மாபாதகச் செயலை செய்யத் தூண்டும் மத்ஹபை முஸ்லிம்கள் பின்பற்றலாமா? நபிகள் நாயகத்தை மதிக்கும் உண்மை முஸ்லிம்கள், பாவத்தைத் தூண்டும் இந்த மத்ஹபை ஒரு போதும் பின்பற்ற மாட்டார்கள். அதிலிருந்து விலகிவிடுவார்கள்.

ஜமாஅத் தொழுகைக்கு எத்தனை பேர்?

மத்ஹபு வழி

ஒருவர் இமாமாக நின்று மற்றவர்கள் அவரைப் பின்பற்றித் தொழும் முறைக்கு ஜமாஅத் தொழுகை என்று குறிப்பிடுகிறோம். ஜும்ஆ தொழுகையை இவ்வாறு ஜமாஅத்தாகத் தொழுவதற்கு குறைந்தபட்சம் எத்தனை பேர் அவசியம் தேவை? முதலில் மத்ஹபு கூறுவதைப் பாருங்கள்.

(ஜமாஅத் தொழுகைக்கு) இமாம் தவிர மூன்று பேர் அவசியம் தேவை என அபூஹனிபா கூறுகின்றார்.

நூல்: அல்இக்தியார் பாகம்1, பக்கம் 89

ஜமாஅத்தாகத் தொழுவதற்கு குறைந்தபட்சம் நான்கு பேர் தேவை என்று மத்ஹபு கூறுகின்றது.

மாநபி வழி

ஆனால் நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல் முற்றிலும் இதற்கு மாற்றமானதாக உள்ளது. ஜமாஅத் தொழுகைக்கு குறைந்தபட்சம் இரண்டு பேர் போதுமானது என்பதே நபிகள் நாயகம் கற்றுத் தந்த வழிமுறை. இதைப் பல்வேறு ஹதீஸ்களில் அறிந்து கொள்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி ஸல் அவர்கள், “(இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக்கூடியவர் யார்?” என்று கேட்டனர். ஒரு மனிதர் முன்வந்தார். அவருடன் வந்த மனிதர் சேர்ந்து தொழுதார்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: அபூதாவூத் 487

இந்தச் செய்தியில் நபிகள் நாயகத்தின் தூண்டுலின் பேரில், அவர்களின் அங்கீகாரத்துடன் இருவர் ஜமாஅத்தாகத் தொழுகின்றனர். தொழுவிக்க ஒருவர், (இமாம்) பின்பற்றித் தொழ ஒருவர் என இரண்டு பேர் ஜமாஅத் தொழுகைக்குப் போதுமானவர்கள் என்பதைத் தெளிவாக இச்செய்தி தெரிவிக்கின்றது. இதைப் பின்வரும் செய்தியிலிருந்தும் அறியலாம்.

ஒருவர் மற்றொருவரோடு சேர்ந்து தொழுவது அவர் தனியாக தொழுவதை விட மிகப் பரிசுத்தமானதாகும். ஒருவர் இருவரோடு சேர்ந்து தொழுவது ஒருவரோடு சேர்ந்து தொழுவதை விட மிகப் பரிசுத்தமானதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: உபை பின் கஃப் (ரலி)

நூல்: அபூதாவூத் 467

இரண்டு நபர்கள் இருந்தாலே எந்தத் தொழுகையையும் ஜமாஅத்தாகத் தொழ முடியும் என்பதை இந்த ஹதீஸ்கள் வாயிலாக அல்லாஹ்வின் தூதர் வழிகாட்டியுள்ளார்கள்.

இறைத்தூதரின் இத்தூய வழிகாட்டுதலைப் புறக்கணித்து விட்டு ஜும்ஆ தொழுகைக்கு நான்கு பேர் அவசியம் என இமாம் அபூஹனிபா சட்டம் வகுத்திருப்பது எதைக் காட்டுகின்றது? நபிவழிகளை, நபிமொழிகளை கவனத்தில் கொண்டு மத்ஹபு சட்டங்கள் வகுக்கப்படவில்லை என்பதைத் தான்.

பொறுப்பாளர் இல்லாமல் திருமணம்

மாநபி வழி

இஸ்லாமியர்கள் தங்கள் திருமணத்தில் வரதட்சணை, வீண் விரையம் போன்றவைகளைத் தவிர்க்க வேண்டும்; எளிமை, சிக்கனம் போன்றவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், திருமணம் நடைபெறுவதற்கு ஒரு முக்கிய நிபந்தனையையும் விதித்துள்ளார்கள்.  அது பெண்ணுக்கு வலீ எனும் பொறுப்பாளர் இருந்து, அவர் முன்னிலையில் திருமணம் நடைபெற வேண்டும் என்பது தான்.

திருமணத்தில் பெண்களின் விருப்பம் முக்கியம் என்றாலும் பெண்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு திருமண விவகாரத்தில் யாரும் அவர்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காக குடும்ப உறவினர்களில் தந்தை, சகோதரன் போன்ற ஆண்களை பெண்களுக்குப் பொறுப்பாளர்களாக இஸ்லாம் நியமிக்கின்றது. ஒரு பெண்ணுக்குத் திருமணம் நடைபெறுவதாக இருந்தால் அது அவளது கார்டியன் முன்னிலையில் நடைபெற வேண்டும் என்பதே இஸ்லாத்தின் வழிகாட்டுதல் ஆகும்.

பொறுப்பாளர் இன்றி திருமணம் கிடையாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்: அபுதாவூத் 1785

பின்வரும் வசனத்தை சிந்தித்துப் பார்த்தால் பெண்களுக்கு திருமண விவகாரத்தில் பொறுப்பாளர் அவசியம் என இறைவன் கட்டளையிடுவதை அறியலாம்.

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.  (அல்குர்ஆன் 2:221)

இணை கற்பிக்கும் பெண்கள் மற்றும் ஆண்களை முஸ்லிம்கள் திருமணம் செய்யக்கூடாது என்பதை இறைவன் கூறும் போது, ஆண்களை நோக்கி நீங்கள் திருமணம் செய்யாதீர்கள் என்றும், பெண்கள் விஷயத்தில் திருமணம் முடித்துக் கொடுக்காதீர்கள் என்றும் இறைவன் கூறுவதிலிருந்து பெண்கள் தாங்களாக தங்கள் திருமணத்தை நடத்திக் கொள்ளக்கூடாது, மாறாக தங்களுக்கு விருப்பமானவர்களை, தங்கள் பொறுப்பாளர்களிடம் தெரிவித்து அப்பொறுப்பாளர்கள் முன்னின்று திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது. எனவே திருமணத்தில் பெண் சார்பில் வலீ இருப்பது அவசியம். இதுவே நபிவழி.

மத்ஹபு வழி

ஒரு பெண் வலீ இல்லாமல் தானே திருமணம் செய்து கொண்டால் அல்லது பொறுப்பாளர் அல்லாதவரிடம் தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு கூறி, அவரும் அப்பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்தார் எனில் இந்த திருமணம் கூடும். அவள் கன்னிப் பெண்ணாகவோ, விதவையாகவோ இருந்தாலும் சரியே. இமாம் அபூஹனிஃபா இந்தக் கருத்தையே தேர்ந்தெடுத்துள்ளார்.

நூல்: அல்மப்ஸுத், பாகம் 5, பக்கம் 16

பெண்களின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு வலீ எனும் பொறுப்பாளர் இன்றி பெண்கள் திருமணம் செய்யக் கூடாது என்று இஸ்லாம் வழிகாட்டியிருக்கும் போது இமாம் அபூஹனிபா, வலீ இல்லாமல் திருமணம் செய்வது கூடும் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்குகின்றார். இது தான் நபிவழியை பின்பற்றுவதா?

காதலனுடன் ஓடிப் போய் கல்யாணம் செய்கிற கள்வர்களுக்குக் கை கொடுப்பதாகவே இச்சட்டம் உள்ளது. இவருடைய இந்த ஃபத்வா ஏமாற்றும் ஆண்களிடமிருந்து பெண்களைக் காக்கும் கேடயமாக நிற்குமா? அல்லது பெண்களை நஷ்டத்தில் ஆழ்த்துமா என்பதை சிந்தனையுள்ளோர் சிந்திக்க வேண்டும்.

தலைப்பாகையின் மீது மஸஹ்

மாநபி வழி

உளூவின் போது தலைப்பாகையின் மீது மஸஹ் செய்வது இஸ்லாம் வழங்கியுள்ள சலுகைகளில் ஒன்று. நாம் அணிந்திருக்கும் தலைப்பாகையை மஸஹ் செய்வது, தலையை முழுமையாக மஸஹ் செய்வதற்குச் சமமாகி விடும். நபிகள் நாயகம் அவர்களே இத்தகைய முறையை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (ஈரக் கையால்) தம் காலுறைகள், முன்தலை மற்றும் தலைப்பாகை ஆகியவற்றின் மீது தடவி (மஸ்ஹு செய்து) கொண்டார்கள்.

அறிவிப்பவர்: முஃகீரா பின் ஷுஅபா (ரலி), நூல்: முஸ்லிம் 462

இதுபோன்று ஏராளமான செய்திகள் தலைப்பாகையின் மீது மஸஹ் செய்வது நபிவழி என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி தெரிவிக்கின்றன.

மத்ஹபு வழி

தலைப்பாகையின் மீது மஸஹ் செய்வது கூடாது.

நூல்: ஹிதாயா, பாகம்1, பக்கம் 30)

நபிகள் நாயகம் எதைச் செய்தார்கள் என்று தெளிவான, வலுவான, ஏராளமான ஹதீஸ்களில் காண்கிறோமோ அதையே இமாம் அபூஹனிபா கூடாது என்று சொல்கிறார்.

மாநபியின் போதனைகளுடன் மத்ஹப் சட்டங்கள் தெளிவாகவே போர் தொடுக்கின்றன என்பதை இதைப் பார்த்தாவது முஸ்லிம்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? மத்ஹபு மாயையிலிருந்து விலக வேண்டாமா?

தொடரும் இன்ஷா அல்லாஹ்