நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டதா?

ஹதீஸ் கலை ஆய்வு            தொடர்: 16

நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டதா?

“சூனியம் என்பது கற்பனையல்ல; மெய்யான அதிசயமே! அதன் மூலம் ஒரு மனிதனின் கை கால்களை முடக்கலாம். படுத்த படுக்கையில் தள்ளலாம்’ என்றெல்லாம் பல அறிஞர்கள் கூறுகின்றனர். அவர்கள் தங்கள் கூற்றை நிரூபிக்கச் சில ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுகிறார்கள்.

புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு நபிமொழித் தொகுப்புக்களில் நபி (ஸல்) அவர்களுக்கு யூதன் ஒருவன் சூனியம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. தங்களின் கருத்தை மெய்யாக்குவதற்கு இவற்றை ஆதாரமாக இவர்கள் காட்டுகிறார்கள். அந்த ஹதீஸ்கள் வருமாறு:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. தாம் செய்யாத ஒன்றைச் செய்ததாக நினைக்கும் அளவிற்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள். ஒரு நாள் என்னை அழைத்தார்கள். “எனக்கு நிவாரணம் கிடைக்கும் வழியை இறைவன் காட்டி விட்டான் என்பது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். “இரண்டு மனிதர்கள் என்னிடம் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைப் பகுதியில் அமர்ந்து கொண்டார். மற்றொருவர் என் கால் பகுதியில் அமர்ந்து கொண்டார். “இந்த மனிதருக்கு ஏற்பட்ட நோய் என்ன?’ என்று ஒருவர் மற்றவரிடம் கேட்டார். “இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளதுஎன்று மற்றவர் விடையளித்தார். “இவருக்குச் சூனியம் செய்தவர் யார்?’ என்று முதலாமவர் கேட்டார். “லபீத் பின் அல்அஃஸம் என்பவன் சூனியம் வைத்துள்ளான்என்று இரண்டாமவர் கூறினார். “எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது?’ என்று முதலாமவர் கேட்டார். அதற்கு இரண்டாமவர், “சீப்பிலும் உதிர்ந்த முடியிலும் பேரீச்சை மரத்தின் பாளையிலும் சூனியம் வைக்கப்பட்டுள்ளதுஎன்று விடையளித்தார். “எந்த இடத்தில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது?’ என்று முதலாமவர் கேட்டார். “தர்வான் என்ற கிணற்றில் வைக்கப்பட்டுள்ளதுஎன்று இரண்டாமவர் கூறினார்என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். பின்னர் அந்தக் கிணற்றுக்குச் சென்று விட்டு திரும்பி வந்தார்கள். “அங்குள்ள பேரீச்சை மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று இருந்ததுஎன்று என்னிடம் கூறினார்கள். “அதை அப்புறப்படுத்திவிட்டீர்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு நபியவர்கள், “இல்லை! அல்லாஹ் எனக்கு நிவாரணம் அளித்து விட்டான். மக்கள் மத்தியில் தீமையைப் பரப்பக்கூடாது என்று நான் அஞ்சுகிறேன்என்று கூறினார்கள். பின்னர் அந்தக் கிணறு மூடப்பட்டது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 3268

தம் மனைவியிடத்தில் தாம்பத்தியம் நடத்தாமல் தாம்பத்தியம் நடத்தியதாக நினைக்கும் அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நூல்: புகாரி 5765

நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட இந்த நிலை ஆறு மாதங்கள் நீடித்ததாக ஒரு செய்தி கூறுகிறது.

நூல்: அஹ்மத் 23211

நபி (ஸல்) அவர்களே தன்னிலை மறக்கும் அளவிற்கு ஆறு மாத காலம் சூனியத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் மற்றவர்களுக்கு ஏன் சூனியம் செய்ய முடியாது என்று இவர்கள் வாதிடுகிறார்கள். மேற்கண்ட ஹதீஸைப் பார்க்கும் போது இது சரியான கருத்து போன்று தோன்றலாம். ஆனால் ஆழமாகப் பரிசீலனை செய்யும் போது நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டிருக்கவோ அதனால் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கவோ முடியாது என்ற கருத்திற்குத் தான் வந்தாக வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட இறை வேதம்

நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதன் காரணமாக அவர்களது மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது; அந்தப் பாதிப்பு ஆறு மாதம் நீடித்தது; தான் செய்யாததைச் செய்ததாகக் கருதும் அளவுக்கு அந்தப் பாதிப்பு அமைந்திருந்தது என்று மேற்கண்ட ஹதீஸ்களில் கூறப்படுவதை நாம் அப்படியே ஏற்பதாக இருந்தால் அதனால் ஏராளமான விபரீதங்கள் ஏற்படுகின்றன.

திருக்குர்ஆனின் நம்பகத்தன்மைக்கு ஏற்படும் பாதிப்பு முதலாவது பாதிப்பாகும். சூனியம் வைக்கப்பட்டதன் காரணமாக, தான் செய்யாததைச் செய்ததாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றால் அந்த ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட வஹீ (இறைச் செய்தி) சந்தேகத்திற்குரியதாக ஆகிவிடும்.

தம் மனைவியிடத்தில் இல்லறத்தில் ஈடுபட்டதை அல்லது ஈடுபடாமல் இருந்ததைக் கூட நபி (ஸல்) அவர்களால் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லையென்றால் இறைவனிடம் வஹீ வராமலேயே வஹீ வந்ததாகவும் அவர்கள் கூறியிருக்கலாம். தமக்கு வஹீ வந்திருந்தும் வரவில்லை என்று அவர்கள் நினைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தும். ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட அனைத்துமே சந்தேகத்திற்குரியதாக ஆகி விடும்.

எந்த ஆறு மாதம் என்று தெளிவாக விபரம் கிடைக்காததால் மதீனாவில் அருளப்பட்ட ஒவ்வொரு வசனமும் இந்த ஆறு மாதத்தில் அருளப்பட்டதாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்திவிடும்.

இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு இன்று நம்மிடம் இருக்கும் ஒரே அற்புதம் திருக்குர்ஆன் தான். திருக்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் அனைத்தையும் நாம் நிராகரித்துத் தான் ஆக வேண்டும். திருக்குர்ஆனில் பொய்யோ கலப்படமோ கிடையாது. முழுக்க முழுக்க அது இறைவனின் வார்த்தை தான் என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் நற்சான்று கூறுகிறது.

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

அல்குர்ஆன் 15:9

அவர்கள் (நம்மை) அஞ்சுவதற்காக அரபு மொழியில் எவ்விதக் கோணலும் இல்லாத குர்ஆனை (அருளினோம்.)

அல்குர்ஆன் 39:28

இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது.

அல்குர்ஆன் 41:42

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் 4:82

பாதுகாப்பு ஏற்பாடுகள்

குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் அனைத்து வாசல்களையும் இறைவன் அடைத்து விட்டான். இது இறை வேதமாக இருக்காது என்ற சந்தேகம் எள் முனையளவும் ஏற்படக் கூடாது என்பதற்காகப் பலவிதமான ஏற்பாடுகளையும் செய்தான்.

நபி (ஸல்) அவர்கள் எழுதப்படிக்கத் தெரிந்தவராக இருந்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது மக்கள் திருக்குர்ஆனை இறைவனுடைய வேதம் என்று நம்பியிருக்க மாட்டார்கள். முஹம்மது தனது புலமையைப் பயன்படுத்தி உயர்ந்த நடையில் இதைத் தயாரித்து இறை வேதம் என்று ஏமாற்றுகிறார் என்று அந்த மக்கள் நினைத்திருப்பார்கள். இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே முஹம்மது நபிக்கு இறைவன் எழுத்தறிவை வழங்கவில்லை என்று கூறுகிறான்.

(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. இனியும் உமது வலது கையால் எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் 29:48

எழுத்தறிவு வழங்குவது பெரும் பாக்கியமாக இருந்தும் அந்தப் பாக்கியத்தை வேண்டுமென்றே நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் வழங்கவில்லை. திருக்குர்ஆனில் சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்துள்ளான் என்று மேலுள்ள வசனம் கூறுகிறது.

திருக்குர்ஆன் இறைவனுடைய வார்த்தையா? அல்லது மனிதனின் கற்பனையா? என்ற சந்தேகம் வரக் கூடாது என்றால் நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

அவர்கள் செய்யாததைச் செய்ததாகச் சொன்னாலோ அல்லது செய்ததைச் செய்யவில்லை என்று சொன்னாலோ அவர்கள் கூறியது அனைத்தும் சந்தேகத்திற்குரியதாக ஆகிவிடும். நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்று நம்புவதால் குர்ஆனைப் பாதுகாப்பதாகக் கூறும் குர்ஆன் வசனங்களை மறுக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே நபி (ஸல்) அவர்களின் மன நிலை பாதிக்கப்பட்டது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணியை முடக்குவதற்குப் பலர் முயற்சித்த போதும் அவர்களால் இதைச் செய்ய முடியவில்லை. அழைப்புப் பணிக்கு எந்த விதமான குந்தகமும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக மக்கள் செய்யும் தீமைகளிலிருந்து நபி (ஸல்) அவர்களைக் காத்துக் கொள்வதாக அல்லாஹ் உத்தரவாதம் தருகிறான். எனவே நபியவர்களின் தூதுத்துவத்தை சந்தேகத்திற்குரியதாக ஆக்கும் சூனியத்தை எந்த முஸ்லிமும் நம்பிவிடக் கூடாது.

தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 5:67

வளரும் இன்ஷா அல்லாஹ்