நபி மீது பொய்!     நரகமே தங்குமிடம்!

நபி மீது பொய்!     நரகமே தங்குமிடம்!

யார் உன் கணவர்?

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.

கடந்த செப்டம்பர் மாத அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமியா எனும் மாத இதழ் பக்கம் 47ல் நபிகளாரின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் ஒரு சம்பவம் என்ற அடைமொழியோடு, “யார் உன் கணவர்?’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்வை, ஹதீஸை (?) பதிவு செய்திருந்தார்கள்.

அந்த ஹதீஸ் (?) இஹ்யாவு உலூமித்தீன் என்ற (எரிக்கப்பட வேண்டிய) புத்தகத்தில் உள்ளதாக மொட்டையாக முழு விபரமின்றி குறிப்பிட்டிந்தார்கள். அவர்கள் வெளியிட்டிருந்த அந்தச் செய்தி எந்த அளவு நம்பகமானது என்பதைக் காண்போம்.

அவர்கள் குறிப்பிட்டிருந்த செய்தி இது தான்.

மதினாவாசியான ஒரு பெண்மணி, கண்மணி நபி (ஸல்) அவர்கள் சபைக்கு வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என் கணவர் உங்களைக் கூப்பிடுகிறார்” என்று அழைத்தார். உடனே கண்மணி நபி (ஸல்) அவர்கள் அப்பெண்மணியிடம், “யார் உன் கணவர்? கண்ணில் வெள்ளை நிறம் இருக்குமே அவரா உன் கணவர்?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்மணி, “யாரசூலல்லாஹ், இல்லை! என் கணவருக்குக் கண்ணில் வெள்ளை நிறம் கிடையாது” என்று கூறினாள் அப்பாவியாக. உன் கணவருக்கு நிச்சயம் வெள்ளை நிறம் உண்டு என கண்மணி நபி (ஸல்) அவர்கள் அடித்துப் பேசினார்கள். இல்லை நிச்சயமாக கிடையாது என்று அடித்துப் பேசினார் வந்த பெண்மணி. இதைக் கேட்டதும் கண்மணி நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். குழம்பிப் போய் நின்ற அந்த அன்சாரி பெண்மணியிடம் “எந்த மனிதனுக்கும் கண்ணில் கருமணியை சுற்றி உள்ள வெள்ளை நிறம் இருக்கத் தானம்மா செய்யும். அதைத் தான் சொன்னேன்” என்று நகைச்சுவையாகக் கூறினார்கள். வந்த பெண்மணி வெட்கம் கொண்டவராக சிரித்தார்.

தகவல்: இஹ்யா உலூமித்தீன்  (பாகம்: 4, பக்கம்: 214)

இந்த செய்தி அல் ஃபாகிஹா வல் மஜாஹ் எனும் நூலில் ஜுபைர் மற்றும் இப்னு அபீ துன்யா ஆகியோர் பதிவு செய்துள்ளதாக இந்த செய்தியை கஸ்ஸாலி குறிப்பிட்டுள்ளார்.

இது முழு அறிவிப்பாளர் தொடருடன் பதிவு செய்யப்பட்டுள்ள ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல. மாறாக இது தொடர்பு அறுந்த செய்தியாகும்.

ஜைது பின் அஸ்லம் கூறியதாக இந்தச் சம்பவத்தை நூலின் ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

ஜைது பின் அஸ்லம் என்பவர் நபித்தோழரல்ல. நபித்தோழர் காலத்தில் வாழ்ந்த மூத்த தாபியீனும் அல்ல. அதற்கு அடுத்த தரத்தில் உள்ள தாபீயீன் ஆவார்.

இத்தகைய காலத்தில் வாழ்ந்த ஒருவர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை எவ்வாறு சொல்ல முடியும்? இவருக்கு இச்சம்பவத்தைக் கூறியது யார்? அவரின் நம்பகத்தன்மை என்ன உள்ளிட்ட முழுமையான தகவல்கள் எதுவும் இவற்றில் பதிவு செய்யப்படவில்லை.

இந்தச் செய்தியைப் பதிவு செய்திருக்கின்ற எவரிடத்திலும் நாமறிந்தவரை அதற்கான முழு அறிவிப்பாளர் தொடர் இல்லை. எனவே இது தொடர்பு அறுந்த செய்தி என்பதால் இது ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல.

இந்தச் செய்தி பலவீனமான செய்தி என்பதால் நபிகளாருக்கு நகைச்சுவை உணர்வு இல்லை, அவர்கள் நகைச்சுவை உணர்வு அற்றவர்கள் என்றோ இஸ்லாம் நகைச்சுவைக்கு எதிரானது என்பதோ பொருளாகாது.

இஸ்லாம் நகைச்சுவை உணர்வு இருப்பதை ஆதரிக்கவே செய்கிறது. மேலும் நபிகளார் அவர்கள் தம் தோழர்களிடம் நகைச்சுவையாகப் பேசியதற்கு ஏராளமான ஆதாரப்பூர்வமான சான்றுகள் இருக்கவே செய்கின்றன. நபிகளாரின் நகைச்சுவை என்ற பெயரில் இவர்கள் கதைகளையும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையும் எழுதுவதற்குப் பதிலாக ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலிருந்து எழுத வேண்டும் என்பதே நமது நோக்கம். இதோ ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ள நபிகளாரின் நகைச்சுவை தொடர்பான செய்திகள்:

முஸ்லிம்கள் திங்கட்கிழமை ஃபஜ்ர் தொழுது கொண்டிருந்தனர். அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். (மரணத் தறுவாயிலிருந்த) நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் அறையில் உள்ள திரையை விலக்கி அணிவகுத்து நிற்கும் மக்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே புன்னகைத்தவாறு  திடீரென அவர்களிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுவிக்க வரப்போகிறார்கள் என்று எண்ணி அபூபக்ர் (ரலி) அவர்கள் திரும்பாமல் பின்புறமாக விலகலானார்கள். நபி (ஸல்) அவர்களைக் கண்ட மகிழ்ச்சியினால் மக்களுக்குத் தொழுகையின் கவனம் மாறியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் “நீங்கள் தொழுதுமுடியுங்கள்‘  என்று தமது கையால் சைகை செய்துவிட்டு அறைக்குள் நுழைந்து திரையைத் தொங்கவிட்டார்கள். அன்றைய தினமே அவர்கள் இறந்துவிட்டார்கள். 

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),  நூல்: புகாரி (1205)

சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம், அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள். (நூல்: முஸ்லிம் 1188)

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்துவிட்டேன்!என்றார். நபி (ஸல்) அவர்கள், “உமக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “நான் நோன்பு நோற்றுக்கொண்டு என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்!என்று அவர் சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை!என்றார். “தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், “இல்லை!என்றார். “அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் “இல்லை!என்றார். நபி (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள்.

நாங்கள் இவ்வாறு இருக்கும்போது, நபி (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த “அரக்எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது, நபி (ஸல்) அவர்கள் “கேள்வி கேட்டவர் எங்கே?” என்றார்கள். “நான் தான்!என்று அவர் கூறினார். “இதைப் பெற்று தர்மம் செய்வீராக!என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! என்னைவிட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (பாறைகள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தாரைவிடப் பரம ஏழைகள் யாருமில்லை!என்று கூறினார். அப்போது, நபி (ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள்; பிறகு “இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்துவிடுவீராக!என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1936, 1937, 2600, 5368, 6087, 6164

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (வாகனத்தில்) என்னை ஏற்றி விடுங்கள்என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒட்டகக் குட்டியின் மீது உம்மை நாம் ஏற்றி விடுவோம்என்று கூறினார்கள். அம்மனிதர், “ஒட்டகக் குட்டியை வைத்து நான் என்ன செய்வேன்? (அதில் பயணிக்க முடியாதே)என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(எல்லா) ஒட்டகங்களும் தாய் ஒட்டகத்திற்கு குட்டிகளாகத் தானே இருக்கின்றன?” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: அபூதாவூத் 4346

நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களைச் சந்திப்பவர்களாக இருந்தார்கள். உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்களின் மூலமாக ஒரு மகன் இருந்தார். அவர் அபூ உமைர் என்று அழைக்கப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் தமாஷ் செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூ உமைரிடம் வந்த போது அபூ உமைர் கவலையுடன் இருப்பதைப் பார்த்து, “அபூ உமைரை கவலையுடன் பார்க்கிறேனே! என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அவர் விளையாடிக் கொண்டிருந்த அவரது குருவி இறந்து விட்டதுஎன்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “அபூ உமைரே! உனது சின்னக்குருவி என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: அஹ்மத் 12389

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், கிராமவாசி ஒருவர் தன்னிடம் அமர்ந்திருக்க (பின்வரும் நிகழ்ச்சியை) எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்:

சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர், தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் அவரிடம், “நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா?” என்று கேட்பான். அதற்கு அவர், “ஆம். (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.) ஆனால், நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன்என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப் பான்.) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும்; மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய் விடும். அப்போது இறைவன், “எடுத்துக் கொள், ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாதுஎன்று கூறுவான்.

(நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்த கிராமவாசி, “அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குறைஷியாகவோ (மக்கா வாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ) தான் இருக்க முடியும். அவர்கள் தாம் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர்என்று கூறினார். இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் சிரித்து விட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: புகாரி 2348

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நரகத்திலிருந்து விடுதலை பெறும் மனிதர் குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்:

(நரகத்திலிருந்து வெளியேறி) இறுதியாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு மனிதர் சில சமயம் நடந்து வருவார். சில சமயம் தவழ்ந்தபடி வருவார். சில சமயம் நரக நெருப்பு அவரது முகத்தைத் தாக்கிக் கரித்தும்விடும். இந்நிலையில் அவர் நரகத்தைத் தாண்டியதும் அதைத் திரும்பிப் பார்த்து, “உன்னிடமிருந்து என்னைக் காப்பாற்றிய (என் இறை)வன் சுபிட்சமிக்கவன்; முன்னோர் பின்னோர் யாருக்கும் வழங்காத (பாக்கியத்)தை அல்லாஹ் எனக்கு வழங்கினான்என்று கூ(றி இறைவனைப் போற்)றுவார். அப்போது அவருக்கு ஒரு மரம் காட்டப்படும். உடனே அவர், “என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக! அதன் நிழலை நான் பெற்றுக் கொள்வேன்; அதன் (கீழே பாயும்) நீரைப் பருகிக்கொள்வேன்என்று கூறுவார். அதற்கு அல்லாஹ், “மனிதா! அதை நான் உனக்கு வழங்கினால் வேறொன்றை நீ என்னிடம் கேட்கக்கூடுமல்லவாஎன்று கூறுவான். அதற்கு அவர், “இல்லை; இறைவா! வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்என்று கூறி, வாக்குறுதி அளிப்பார். அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் காணும் அவருடைய இறைவன், அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அந்த மரத்தின் அருகே கொண்டுசெல்வான். அங்கு அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார்; அதன் நீரையும் பருகிக்கொள்வார்.

பிறகு அவருக்கு மற்றொரு மரம் காட்டப்படும். அது முதலில் காட்டப்பட்ட மரத்தைவிட மிகவும் அழகாய் இருக்கும். (அதைக் கண்ட) உடன் அவர், “என் இறைவா! இதற்கருகே என்னைக் கொண்டு செல்வாயாக! நான் அதன் நீரைப் பருகி அதன் நிழலை அடைந்து கொள்வேன்! இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்என்று கூறுவார். அதற்கு இறைவன், “மனிதா! வேறெதையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு) வாக்குறுதி அளிக்கவில்லையா? அதன் அருகில் உன்னை நான் கொண்டுசென்றால், வேறொன்றை என்னிடம் நீ கேட்கக்கூடுமல்லவாஎன்பான். உடனே அவர், வேறெதையும் கேட்கமாட்டேன் என்று வாக்குறுதி அளிப்பார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அதன் அருகே கொண்டு செல்வான். அவர் அதன் நிழலை அனுபவித்துக் கொண்டு அதன் (கீழே ஓடும்) நீரையும் அருந்துவார்.

பிறகு சொர்க்க வாசல் அருகே உள்ள மரம் அவருக்குக் காட்டப்படும். அது முதலிரண்டு மரங்களை விடவும் ரம்மியமானதாய் இருக்கும். உடனே அவர், “என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டுசெல்வாயாக! நான் அதன் நிழலைப் பெறுவேன்; அதன் நீரைப் பருகிக் கொள்வேன்; இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்க மாட்டேன்என்று கூறுவார். அதற்கு இறைவன், “மனிதா! வேறெதையும் நான் கேட்க மாட்டேன் என்று (முன்பு) என்னிடம் நீ வாக்குறுதி அளிக்கவில்லையா?” என்று கேட்பான். அதற்கு அவர், “ஆம்; என் இறைவா! இந்தத் தடவை (மட்டும்); இனி, இதன்றி வேறெதையும் உன்னிடம் கேட்க மாட்டேன்என்று கூறுவார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அதன் அருகே கொண்டு செல்வான். அவர் அந்த மரத்தை நெருங்கும்போது சொர்க்கவாசிகளின் குரல் அவருக்குக் கேட்கும். உடனே அவர், “என் இறைவா! சொர்க்கத்திற்குள் என்னை அனுப்புவாயாக!என்பார். அதற்கு இறைவன், “மனிதா! ஏன் என்னிடம் கோருவதை நிறுத்திக்கொண்டாய்? உலகத்தையும் அதைப் போன்ற இன்னொரு மடங்கையும் உனக்கு நான் வழங்கினால் உனக்கு மகிழ்ச்சி ஏற்படும்தானே?” என்று கேட்பான். அதற்கு அவர், “என் இறைவா! அகிலத்தின் அதிபதியே! நீயே என்னைப் பரிகாசம் செய்கிறாயா?” என்று கேட்பார்.

(இதை அறிவித்தபோது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் சிரித்தார்கள். பிறகு “நான் ஏன் சிரித்தேன் என்று என்னிடம் நீங்கள் கேட்கமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். அப்போது மக்கள் “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “இவ்வாறுதான் (இதை அறிவிக்கையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். அப்போது நபித் தோழர்கள், “ஏன் சிரித்தீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள் அதற்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “அகிலத்தின் அதிபதியாகிய நீயே என்னைப் பரிகாசம் செய்கிறாயா?” என்று அந்த மனிதர் கூறும்போது அதைக் கேட்டு இறைவன் சிரிப்பான். (அதனால் தான் நான் சிரித்தேன்.) மேலும், “நான் உன்னைப் பரிகாசம் செய்யவில்லை. மாறாக, நாடியதைச் செய்கின்ற ஆற்றல் உள்ளவன் நான்என இறைவன் கூறுவான் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம் 310

இத்தகைய ஆதாரப்பூர்வமான சான்றுகள் இருக்க ஏன் அடிப்படை ஆதாரமற்ற அல்லது அறிவிப்பாளர் தொடர் இல்லாத மொட்டையான செய்திகளைப் பதிவு செய்ய வேண்டும்.

அஷ் ஷரீஅதுல் இஸ்லாமிய்யாவிற்கு இது முதல் நிகழ்வல்ல. இந்த இதழைப் புரட்டினால் அதில் அதிக பக்கங்கள் நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதற்கு அறவே ஆதாரம் இல்லாத செய்திகளே நிறைந்துள்ளன. இந்த லட்சணத்தில் இந்த இதழ் விரைவில் 30 வருடத்தை பூர்த்தி செய்யவிருக்கிறதாம்.

இப்படி அண்ணலார் அவர்கள் கூறாததை எல்லாம் பொய்யாக, அடிப்படை ஆதாரமற்ற செய்திகளைக் கொண்டு பக்கங்களை நிரப்பி ஒரு இதழை 30 வருடம் என்ன? 300 வருடம் வெளியிட்டாலும் அதனால் மனித சமூகத்திற்கு வழிகேட்டைத் தவிர வேறு எந்தப் பலனும் இல்லை.

எனவே தூய இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்பும் விதத்தில் தங்களது பணியை அமைத்துக் கொள்ளுமாறும் இவ்வாறு பொய்யான ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு பாவத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டாம் என்றும் அந்த இதழை வெளியிடுபவர்களுக்கு அறிவுறுத்திக் கொள்கிறோம்.