முதஷாபிஹாத்

முதஷாபிஹாத்

முதல் சாராரின் ஐந்தாவது ஆதாரம்

அல்லாஹ் தன் திருமறையில் சுவர்க்கம், நரகம், அர்ஷ், கியாமத், நீதி விசாரணை, துலாக்கோல் இன்னும் இது போன்ற பல விஷயங்களைக் கூறுகிறான். இவை எப்படி இருக்கும் என்ற சரியான விளக்கத்தைக் கல்வியில் சிறந்தவர்கள் உட்பட எவருமே அறிய முடிவதில்லை. அல்லாஹ் ஒருவன் மட்டுமே இவற்றை அறிவான்.

மனிதரில் எவருமே அறிந்து கொள்ள இயலாதவையும் குர்ஆனில் உள்ளன என்பதற்கு இது போதுமான சான்றாகும். முதஷாபிஹ் வசனங்களை எவருமே விளங்க முடியாது என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் தேவையில்லை என்பது இவர்களின் ஐந்தாவது ஆதாரம்.

இரண்டாம் சாராரின் மறுப்பு

இந்த வாதம் இரண்டு வகையில் தவறானதாகும். “சுவர்க்கம், நரகம், இது போன்ற இன்ன பிற விஷயங்களைக் கூறும் வசனங்கள் தான் முதஷாபிஹாத் வசனங்கள்” என்று இந்த சாரார் விளங்கிக்     கொண்டதற்கு ஒரு ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. “சுவர்க்கம், நரகம் போன்றவற்றைக் கூறும் வசனங்களே முதஷாபிஹ் ஆகும்” என்பதை திருக்குர்ஆனின் ஏனைய வசனங்களின் அடிப்படையிலோ, ஹதீஸ்களின் அடிப்படையிலோ நிரூபிக்காமல் அவர்களது யூகத்தின் அடிப்படையில் இவை தான் முதஷாபிஹ் என்ற முடிவுக்கு வருவது ஏற்க முடியாததாகும். முதலில் இவர்கள் இதை நிரூபித்து விட்டுத் தான் இதனடிப்படையில் தங்கள் வாதத்தை எடுத்து வைக்க வேண்டும்.

இவை தான் முதஷாபிஹ் என்று ஒரு வாதத்துக்காக ஏற்றுக் கொண்டாலும் இவர்களின் வாதம் பொருளற்றதாகும். எப்படி என்று பார்ப்போம்.

முதஷாபிஹ் வசனங்களை விளங்க முடியுமா? என்பதே இன்றுள்ள பிரச்சனை. ஒரு வசனம் விளங்கி விட்டது என்றோ, விளங்கவில்லை என்றோ எப்போது கூற முடியும்? ஒரு வசனத்தில் ஒரு விஷயம் எந்த அளவு கூறப்படுகிறதோ அந்த விஷயத்தை அந்த அளவுக்கு விளங்கி விட்டால் அந்த வசனம் விளங்கி விட்டது என்றே பொருளாகும்.

அந்த வசனத்தில் கூறப்படாதது, இறைவன் கூற விரும்பாதது விளங்கவில்லை என்பதற்காக, அந்த வசனமே விளங்கவில்லை என்று கூறுவது அறிவுடைமையாகாது.

“நீ இந்தக் காரியத்தைச் செய்தால் உனக்கு விலைமதிப்பற்ற ஒரு பொருளைத் தருவேன்” இது ஒரு வசனம். (குர்ஆன் வசனமல்ல) இந்த வசனத்தை நீங்கள் எவரிடமாவது கூறுகின்றீர்கள். நீங்கள் தருவதாகக் கூறும் பொருள் எதுவென்று அவனுக்குக் தெரியாமலிருக்கலாம். ஏனெனில் என்ன பொருள் என்பதை நீங்கள் சொல்லவில்லை. அதற்காக, “நீங்கள் சொன்ன வசனமே விளங்கவில்லை” என்று அவன் சொல்வானா?

அந்த வசனத்தில் நீங்கள் சொல்ல வருவது “ஏதோ ஒரு பொருளைத் தருவேன்” என்பது மட்டுமே! ஏதோ ஒரு பொருளை நீங்கள் அவனுக்குத் தரப் போகிறீர்கள் என்பதை அவனும் விளங்கிக் கொள்வான். அதாவது நீங்கள் கூறிய வசனத்தை விளங்கிக் கொள்வான்.

“இந்தக் காரியத்தை நீ செய்தால் உனக்கு நான் திருமணம் செய்து வைக்கிறேன்” என்று ஒருவனிடம் நீங்கள் கூறுகிறீர்கள். அவனும் நீங்கள் சொல்ல வருவதை விளங்கிக் கொள்வான். நீங்கள் எப்போது திருமணம் செய்து வைப்பீர்கள் என்பதையோ, மணப் பெண் கருப்பா? சிவப்பா? என்பதையோ நீங்கள் குறிப்பிட்ட வசனத்திலிருந்து அவனால் விளங்க முடியாது. எவனாலும் விளங்க முடியாது. நீங்கள் சொல்லாத இந்த விபரங்கள் அவனுக்கு விளங்கவில்லை என்பதற்காக நீங்கள் கூறிய வசனமே விளங்கவில்லை என்று கூற மாட்டான்.

இதே போலத் தான் “கியாமத் நாள் உண்டு; அது எப்போது வருமென்று எவருக்கும் தெரியாது” என்று இறைவன் கூறுகிறான். இந்த வசனம் நமக்கு நன்றாகவே விளங்குகிறது. விளங்கியதால் தான் கியாமத் நாள் உண்டு என்று நம்புகிறோம். அது எப்போது வருமென்று எவருக்கும் தெரியாது என்றும் நம்புகிறோம்.    ஆக இந்த வசனத்தில் என்ன கூறப்படுகிறதோ அது நன்றாகவே விளங்குகிறது. என்ன கூறப்படவில்லையோ அது தான் விளங்கவில்லை. கூறப்படாத ஒன்று விளங்காததால் அந்த வசனமே விளங்கவில்லை என்று எப்படிக் கூற முடியும்?

நாம் திருக்குர்ஆனில் கூறப்பட்ட முதஷாபிஹ் வசனங்களைப் பற்றியே சர்ச்சை செய்கிறோம். குர்ஆனில் கூறப்படாத, இறைவன் சொல்ல விரும்பாதவற்றைப் பற்றியல்ல!

முதல் சாராரின் இந்த வாதப்படிப் பார்த்தால் முதஷாபிஹ் மட்டுல்ல; முஹ்கமான வசனங்களையும் கூட விளங்க முடியாது என்று கூற வேண்டிய நிலை ஏற்படும். “பன்றி உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது” என்ற வசனத்தை எடுத்துக் கொள்வோம். முதல் சாராரின் கருத்துப்படியும் இது முஹ்கமான வசனம். பன்றியை உண்ண இறைவன் தடுக்கிறான் என்பது இதிலிருந்து புரிகிறது. ஆனால் இறைவன் கூறாத, ஏன் தடுத்தான் என்ற விபரமோ, அது மட்டும் தடுக்கப்படுவதற்கான காரணமோ என்ன என்பது திட்டவட்டமாக நமக்கு விளங்கவில்லை.

இறைவன் கூறாத இந்தக் காரணம் விளங்கவில்லை என்பதற்காக அந்த வசனமே விளங்காது என்று எவருமே கூறத் துணிய மாட்டார்கள். இறைவன் எந்த அளவுக்குக் கூறுகிறானோ அந்த அளவுக்கு விளங்கி விட்டால் அந்த வசனம் விளங்கி விட்டது என்று முடிவு செய்து, அதனடிப்படையில் “பன்றி ஹராம்’ என்று சட்டங்கள் வகுக்கத்தானே செய்கிறோம்.

சுவர்க்கம், நரகம், கியாமத், இன்னபிற விஷயங்கள் பற்றிக் கூறும் எல்லா வசனங்களுமே இறைவன் கூறக்கூடிய அளவுக்கு விளங்கத்தான் செய்கிறது. அதனால் தான் அதை நாம் விசுவாசம் கொண்டிருக்கிறோம். இந்த வசனங்கள் விளங்கவில்லை என்று கூறுவது ஏற்க இயலாத வாதம். இவை தான் முதஷாபிஹ் என்று வாதிடுவதும் அடிப்படையற்றதாகும் என்று இரண்டாம் சாரார் இதை மறுத்து விடுகின்றனர்.

முதல் சாராரின் ஆறாவது ஆதாரம்

திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் விஞ்ஞான அறிவு வளர்ந்திருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட சில விஷயங்களைத் திருக்குர்ஆன் கூறும் போது அன்றைய மக்கள் ஒருவிதமாகப் புரிந்து கொண்டார்கள். விஞ்ஞானம் வளர்ச்சி பெற்ற இந்தக் காலத்தில் கண்டுபிடிக்கப்படும் உண்மைகளுக்கு ஏற்றவாறு வேறு அர்த்தம் செய்கின்றனர். இதற்காகவே இறைவன் முதஷாபிஹ் வசனங்களை அருளினான். முதஷாபிஹ் வசனங்களின் உண்மைப் பொருளை அறிய முடியாது என்பதற்கு இதுவும் சரியான ஆதாரமாகும் என்று நூதனமான வாதத்தை இவர்கள் எடுத்து வைக்கின்றனர்.

இரண்டாம் சாராரின் மறுப்பு

இந்த வாதத்தில் அர்த்தமும் இல்லை. ஆதாரமும் இல்லை. விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட வசனங்கள் தான் முதஷாபிஹ் என்று எந்த ஆதாரமுமின்றிக் கூற இவர்களுக்கு அனுமதி வழங்கியது யார்? என்று இரண்டாம் சாரார் கேட்கின்றனர். விஞ்ஞானம் பற்றிய அறிவு காலத்திற்குக் காலம் மாறலாம். அதற்கேற்றவாறு பொருள் செய்ய ஏற்ற வகையில் திருக்குர்ஆனின் வார்த்தைப் பிரயோகம் அமைந்திருக்கலாம்.  இவை தான் முதஷாபிஹ் என்று இறைவன் கூறுவதாக எப்படிக் கூற முடியும் என்பதே கேள்வி.

உதாரணமாக ஒரு காலத்தில் “அலக்’ என்ற சொல்லுக்கு இரத்தக்கட்டி என்று பொருள் செய்தார்கள். அப்படி ஒரு நிலையே கருவுறுதலில் இல்லை என்று ஆனதும், அலக் என்பதற்கு வேறு பொருள் தருகிறார்கள். இரண்டுக்கும் ஏற்ற வகையில் அந்த வார்த்தை அமைந்திருக்கிறது என்பதெல்லாம் சரி தான். அதற்கும் முதஷாபிஹ் வசனங்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதே கேள்வி.

சர்ச்சைக்குரிய 3:7 வசனத்தில், “எவரது உள்ளங்களில் வழிகேடு உள்ளதோ அவர்கள் முதஷாபிஹ் வசனங்களைப் பின்பற்றுகிறார்கள்” என்று அல்குர்ஆன் கூறுகிறது. ஒரு காலத்தில் “அலக்’ என்ற பதத்திற்கு இரத்தக்கட்டி என்று பொருள் செய்தனர். இவ்வாறு பொருள் செய்த 1400 ஆண்டு கால மக்களும் வழிகேடர்கள் என்று ஆகிவிடாதா? அது போல் இன்றைக்கு வேறு அர்த்தம் செய்பவர்களும், முதஷாபிஹ் வசனங்களுக்குப் பொருள் செய்து விட்டதால் வழிகேடர்கள் என்று ஆக மாட்டார்களா? என்று இரண்டாம் சாரார் கேட்கின்றனர்.

“எவர்களின் உள்ளத்தில் வழிகேடு உள்ளதோ அவர்கள் குழப்பத்தை நாடி அதன் விளக்கத்தைத் தேடி முதஷாபிஹ் வசனங்களையே பின்பற்றுவர்” என்று இறைவன் கூறுவதிலிருந்து இவையெல்லாம் முதஷாபிஹ் அல்ல என்று தெளிவாகவே தெரிகின்றது.

முதஷாபிஹ் என்றால் இரண்டு விதமான பொருள் செய்ய ஏற்றதாக இருக்க வேண்டும். குழப்பத்தை நாடுவோர் அதற்கு ஒரு பொருளைச் செய்து கொண்டு அதன் வழியே செல்ல வேண்டும். குழப்பத்தை நாடாதோர் மற்றொரு விதமான பொருளைச் செய்து சரியான பாதையில் செல்ல வேண்டும். இப்படி அமைந்திருப்பவையே முதஷாபிஹ் என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது. விஞ்ஞான சமாச்சாரங்களில் இது போன்ற தன்மையெல்லாம் இல்லையே! இரண்டில் எந்தக் கருத்தைச் சொன்னவர்களும் வழிகேடர்கள் இல்லையே! இரண்டில் எந்தக் கருத்தைச் சொன்னவர்களும் குழப்பத்தை நாடுவோர் அல்லவே! என்று இரண்டாம் சாரார் மறுத்து விடுகின்றனர்.

(முதஷாபிஹ் எவை என்று இரண்டாம் சாரார் எடுத்து வைக்கும் விளக்கத்தின் போது இது விரிவாக உதாரணங்களுடன் விளக்கப்படும். முதஷாபிஹ் என்பது விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட வசனங்கள் என்று கூறுவது ஒரு ஆதாரமுமில்லாத, அடிப்படையில்லாத கற்பனை என்பதை மட்டும் இப்போது புரிந்து கொண்டால் போதுமானது.

வளரும் இன்ஷா அல்லாஹ்