முதஷாபிஹாத்
“முதஷாபிஹ்’ வசனங்களை அல்லாஹ் மட்டுமே அறிவான். மனிதர்களில் எவருக்கும் அவை விளங்காது என்ற கருத்துடையவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களையும் அதற்கான மறுப்புக்களையும் முதலில் பார்ப்போம்.
முதல் சாராரின் வாதம் – 1
எந்த வசனத்திற்குப் பொருள் செய்வதில் சர்ச்சை நடக்கின்றதோ அந்த வசனத்தின் முற்பகுதியிலேயே “முதஷாபிஹ்’ வசனங்கள் மனிதர்களுக்கு விளங்காது என்பதற்கான ஆதாரம் உள்ளது. அதாவது, அந்த வசனத்தின் முற்பகுதியில், “எவரது உள்ளங்களில் வழிகேடு இருக்கின்றதோ அவர்கள் குழப்பத்தை நாடி அதன் விளக்கத்தைத் தேடி, “முதஷாபிஹ்’களையே பின்பற்றுவர்” என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
“முதஷாபிஹ்’ வசனங்களை விளங்கிக் கொள்ள முயற்சிப்பவர்களையும், அதைப் பின்பற்றுவோரையும் இந்த வசனத்தின் முற்பகுதியில் வழிகேடர்கள் என்று இறைவன் குறிப்பிடுகின்றான். “முதஷாபிஹ்’ வசனங்கள் விளங்கிக் கொள்ள இயலாதவை என்பதற்கு இதுவே சரியான சான்றாக உள்ளது.
“முதஷாபிஹ்’ வசனங்களின் விளக்கத்தைத் தேடுவது வழிகேடு என்றால் அவை விளங்க இயலாதவை என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை என்பது முதல் சாராரின் வாதம்.
3:7 வசனத்தின் பிற்பகுதிக்கு என்ன பொருள் கொள்ள வேண்டும் என்பதை அதன் முற்பகுதி தெளிவுபடுத்துகின்றது. இதன் அடிப்படையில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் “முதஷாபிஹ்’ வசனங்களை விளங்கிட இயலாது” என்று இதற்குப் பொருள் கொள்வதே சரியாகும் என்று இவர்கள் வாதிக்கின்றனர்.
இரண்டாம் சாராரின் மறுப்பு
இந்த வாதம் மேலோட்டமாகப் பார்க்கும் போது வேண்டுமானால் அர்த்தமுள்ளது போல் தோன்றலாம். நன்கு பரிசீலனை செய்யும் போது இந்த வாதம் பொருளற்றது என்று தெளிவாவதுடன், முதல் சாராரின் கருத்துக்கு நேர் எதிரானதாகவும் அமைந்துள்ளது என்பதை உணரலாம்.
மேற்கூறிய 3:7 வசனத்தின் முற்பகுதியில், பொதுவாக “முதஷாபிஹ்’ வசனங்களின் விளக்கத்தைத் தேடுவோரை வழிகேடர்கள் என்று இறைவன் கூறவில்லை.
குழப்பத்தை நாடி “முதஷாபிஹ்’ வசனங்களின் விளக்கத்தைத் தேடுவோரையே வழிகேடர்கள் என்று சித்தரிக்கின்றான். இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள (இப்திகாஅல் ஃபித்னதி) “குழப்பத்தை நாடி” என்ற வாசகம் இங்கு நன்கு கவனிக்கத்தக்கது.
“முதஷாபிஹ்’ வசனங்களில் விளக்கத்தைத் தேடுவது தவறு என்றால் “குழப்பத்தை நாடி’ என்று இறைவன் கூறியிருக்க மாட்டான்.
குழப்பத்தை நாடி “முதஷாபிஹ்’ வசனங்களின் விளக்கத்தைத் தேடுவது தான் கூடாது என்றால், குழப்பத்தை நாடாது – நல்ல எண்ணத்துடன் “முதஷாபிஹ்’ வசனங்களின் விளக்கத்தைத் தேடுவது தவறில்லை என்பது தெளிவு.
“முதஷாபிஹ்’ வசனங்கள் மனிதர்களுக்கும் விளங்கும் என்பதற்குத் தான் இதில் ஆதாரம் உள்ளதே தவிர “மனிதர்களில் எவருக்கும் விளங்காது’ என்பதற்கு இதில் ஒரு ஆதாரமும் இல்லை. இவ்வாறு இரண்டாம் சாரார் மறுப்பு தெரிவிக்கின்றனர்.
முதல் சாராரின் ஆதாரம் – 2
திருக்குர்ஆனின் 3:7 வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டி விட்டு, “ஆயிஷாவே! இதில் வீண் தர்க்கம் செய்பவர்களை நீ காணும் போது இவர்களைத் தான் அல்லாஹ் நாடியுள்ளான் (என்பதைப் புரிந்து கொண்டு) இவர்களைத் தவிர்த்து விடு!” என்று கூறினார்கள்.
இது புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.
“முதஷாபிஹ்’ வசனங்கள் பற்றி சர்ச்சை செய்பவர்களை நபி (ஸல்) அவர்கள் கடிந்துள்ளார்கள். “முதஷாபிஹ்’ வசனங்களை விளங்க முடியும் என்றால் அதுபற்றி சர்ச்சை செய்பவர்களை நபி (அல்) அவர்கள் கண்டித்திருக்க மாட்டார்கள். “முதஷாபிஹ்’ வசனங்கள் விளங்காது என்பதை இந்த நபிமொழி உறுதி செய்கின்றது. இது முதல் சாராரின் அடுத்த வாதம்.
இரண்டாம் சாராரின் மறுப்பு
மேற்கூறிய ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் 3:7 வசனத்தை முழுமையாக ஓதிக் காட்டிய பின்பே, “அவர்களைத் தவிர்த்து விடு’ என்று கூறுகின்றார்கள். அந்த வசனத்தில் “குழப்பத்தை நாடி’ விளக்கம் தேடுவோரே கண்டிக்கப்படுகின்றனர். அந்த வசனத்தை ஓதிக் காட்டிய பின் நபி (ஸல்) அவர்கள் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளதால், குழப்பத்தை நாடி வீண் தர்க்கம் செய்வோரையே நபி (ஸல்) அவர்களும் கண்டிக்கின்றார்கள் என்பது தெளிவு.
மேலும் அந்த நபிமொழியில் இடம் பெற்றுள்ள “வீண் தர்க்கம்’ என்ற வார்த்தையும் இதை உறுதிப்படுத்துகின்றது. திருக்குர்ஆன் வசனங்களை ஒன்றுடன் ஒன்றை மோத விட்டு வீண் தர்க்கம் செய்பவர்கள் தான் அந்த வசனத்தில் கண்டிக்கப்படுகின்றனர்.
ஏனெனில், நபி (ஸல்) இந்த நபிமொழியில், “யுஜாதிலூன’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். இது “ஜதல்’ என்ற வார்த்தையிலிருந்து பிறந்ததாகும். “ஜதல்’ என்றால் உண்மையை அறியும் நோக்கமின்றி வேறு நோக்கங்களுக்காகச் செய்யப்படும் வீண் தர்க்கம் தான். அவ்வாறு வீண் தர்க்கம் செய்வோர் தான் இங்கு கண்டிக்கப்படுகின்றனர். இதை மெய்ப்பிக்கும் வகையில் மற்றொரு நபிமொழியும் அமைந்துள்ளது.
“எந்தச் சமுதாயமும் “ஜதல்’ (வீண் தர்க்கம்) காரணமாகவே நேர்வழி பெற்ற பின் வழிதவறிப் போகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி இப்னுமாஜாவில் 48வது ஹதீஸாக இடம்பெற்றுள்ளது. இந்த இடத்தில் பயன்படுத்திய ஜதல் என்ற வார்த்தையையே நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸிலும் பயன்படுத்தியுள்ளனர்.
ஆக, இங்கே கண்டிக்கப்படுவது உண்மையை விளங்கும் நோக்கமின்றி, வீண் தர்க்கம் புரிபவர்கள் தான் என்பது தெளிவாகின்றது. இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக மற்றொரு நபிமொழியும் அமைந்துள்ளது.
ஒரு நாள் காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது இரண்டுபேர் குர்ஆனின் ஒரு வசனம் தொடர்பாகக் கருத்து முரண்பாடு கொண்டு சர்ச்சை செய்து கொள்ளும் சப்தத்தைக் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முகத்தில் கோபம் தென்பட எங்களிடம் வெளியே வந்து, “உங்களுக்கு முன்னிருந்தோர், வேதத்தில் கருத்து முரண்பாடு கொண்டதால் தான் அழிந்து போயினர்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 5180
திருக்குர்ஆன் வசனங்களை மோத விட்டு, முரண்பட்ட கருத்துக்களைக் கூறுவதையே நபி (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள் என்பதை இந்த நபிமொழியும் உறுதி செய்கின்றது.
அழகிய முறையில் ஜதல் செய்! சிறந்த முறையில் ஜதல் செய்! என்று கூறப்படும் போது மட்டும், இந்த வார்த்தை முறையான விவாதத்தைக் குறிக்கும். அழகிய முறையில், சிறந்த முறையில் என்று கூறப்படாமல், ஜதல் என்ற வார்த்தை மட்டும் தனித்துக் கூறப்படுமானால் அது வீண் தர்க்கத்தையும், விதண்டாவாதத்தையும் குறிக்கும்.
ஆக, நபி (ஸல்) அவர்கள் கண்டித்தது, வீண் தர்க்கம் செய்வோரையும், குழப்பத்தை நாடுவோரையும் தான் என்பதை விளங்கலாம். உண்மையை விளங்கும் எண்ணத்தில் ஆராய்வதற்குத் தடை ஏதும் இல்லை என்பது இரண்டாவது சாராரின் மறுப்பாகும்.
முதல் சாராரின் வாதம் – 3
திருக்குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் சொல்வதில் தன்னிகரற்றவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) ஆவார். அவர்களின் கூற்றும், “முதஷாபிஹ்’ வசனங்களை விளங்க முடியாது என்பதையே உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்று இது தான்:
- எவருக்கும் எளிதில் விளங்கக் கூடியவை.
- அரபு மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்கள் மட்டும் அறிந்து கொள்ளக் கூடியவை.
- கல்வியில் உறுதிப்பாடு கொண்டவர்கள் மட்டும் அறிந்து கொள்ளக் கூடியவை.
- அல்லாஹ்வுக்கு மட்டும் தெரிந்தவை.
ஆகிய நான்கு வகையான விளக்கங்கள் குர்ஆனுக்கு உள்ளன என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இந்த நான்கு வகையான கூற்றில், அல்லாஹ்வுக்கு மட்டும் தெரிந்த விளக்கங்கள் உள்ளன என்று கூறப்படுவதால், மனிதர்களால் அறிய முடியாத வசனங்களும் குர்ஆனில் உள்ளன என்பதில் ஐயமில்லை. இது முதல் சாராரின் மூன்றாவது ஆதாரம்.
இரண்டாவது சாராரின் மறுப்பு
இவர்களின் இந்த வாதமும் சரியானதல்ல! ஏனெனில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் இந்த விளக்கம் முதஷாபிஹ் வசனங்களைப் பற்றியது அல்ல! பொதுவாக (முஹ்கம், முதஷாபிஹ் உள்ளிட்ட) குர்ஆன் வசனங்களின் விரிவுரை பற்றிய அம்சங்களையே அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
முஹ்கம் வசனங்களின் விளக்கங்களை மனிதர்கள் விளங்குவது போன்ற அர்த்தத்தில் தான் அல்லாஹ்வும் அருளியுள்ளான் என்று கூற முடியாது. முஹ்கம் வசனங்களையும் அல்லாஹ் என்ன விளக்கத்தை நாடி அருளினானோ அதை அப்படியே மனிதன் விளங்குவான் என்று கூற முடியாது. இதனால் முஹ்கமான வசனங்களையும் மனிதர்களால் விளங்க முடியாது என்று கூற முடியுமா?
மேலும் “முதாஷாபிஹ்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்தக் கூற்றில் குறிப்பிடவேயில்லை. பொதுவாக, திருக்குர்ஆன் விரிவுரை என்று தான் கூறுகின்றார்கள் என்று இரண்டாம் சாரார் இதை மறுப்பதுடன், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மற்றொரு கூற்றையும் இதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.
3:7 வசனத்தைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிடும் போது, “முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தை அறிந்து கொள்வார்கள் என்று இறைவன் குறிப்பிடுகின்ற, கல்வியில் சிறந்தவர்களில் நானும் ஒருவன்” என்று கூறினார்கள்.
முதல் சாரார் எடுத்துக் காட்டிய, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்று எந்த நூற்களில் இடம் பெற்றுள்ளதோ அதே நூற்களில் தான் இந்தக் கூற்றும் இடம் பெற்றுள்ளது.
முதல் சாரார் எடுத்து வைத்த கூற்று, பொதுவாகக் குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் பற்றியது. ஆனால் இந்தக் கூற்றில், முதஷாபிஹ் வசனங்களைக் குறிப்பிட்டுச் சொல்லப்படுகின்றது.
முதஷாபிஹ் வசனங்களை அறிவில் சிறந்தவர்கள் விளங்க முடியும் என்று என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் இந்தக் கூற்று சந்தேகமற அறிவிக்கின்றது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு முதல் சாரார், தங்கள் கருத்தை நிலைநாட்ட முடியாது. அவர்களின் கருத்துக்கு எதிராகவே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்று அமைந்துள்ளது. ஆக, முதஷாபிஹ் வசனங்களை அறிவில் சிறந்தவர்கள் விளங்க முடியும் என்பது தான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கருத்து என்று இரண்டாம் சாரார் வாதிக்கின்றனர்.
முதல் சாராரின் வாதம் – 4
இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் 3:7 வசனத்தை, “லா யஃலமு தஃவீலஹு இல்லல்லாஹ்; வயகூலுர் ராஸிகூன பில் இல்மி” என்று ஓதியதாக பிற்காலத் தப்ஸீர்களில் எழுதி வைத்துள்ளனர். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதியதன் அடிப்படையில் இந்த வசனத்திற்கு இரண்டு அர்த்தங்களுக்கு இடமில்லை. “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் முதஷாபிஹ் வசனங்களை விளங்க முடியாது” என்ற ஒரு கருத்து மட்டுமே இதற்கு உண்டு. எனவே அல்லாஹ்வைத் தவிர யாரும் முதஷாபிஹ் வசனங்களின் பொருளை விளங்க முடியாது என்பதே சரி என்று முதல் சாரார் தங்களது நான்காவது ஆதாரத்தை எடுத்து வைக்கின்றனர்.
இரண்டாவது சாராரின் மறுப்பு
இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் அவ்வாறு ஓதினார்கள் என்பதற்கு எந்த அறிவிப்பாளர் வரிசையும் இல்லை. ஆதாரப்பூர்வமான எந்த நூலிலும் அது இடம்பெறவில்லை. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் பெயரால் கூறப்படும் பச்சைப் பொய் தான் இது என்பதைத் தவிர வேறில்லை. இதை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் மற்றொரு கூற்றிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
“திருக்குர்ஆனின் எந்த ஒரு வசனமும் எங்கே இறங்கியது என்பதை நான் அறிவேன். எந்த வசனம் என்ன காரணத்திற்காக இறங்கியது என்பதையும் நிச்சயம் நான் அறிவேன்” என்று இப்னு மஸ்ஊத் (ரலி) கூறியுள்ளார்கள். இந்தச் செய்தி புகாரி, முஸ்லிம், நஸயீ ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.
எந்தக் காரணத்துக்காக ஒரு வசனம் இறங்கியது என்பதை அறிய முடியும் என்றால், அதன் பொருளையும் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.
“ஒருவர் இந்தக் கேள்வி கேட்ட போது இந்த வசனம் இறங்கியது’ என்றால் அந்த வசனம், அந்தக் கேள்விக்குப் பதிலாகத் தான் அமைந்திருக்கும். இப்படி ஒருவர் நடந்து கொண்டதற்காக அந்த வசனம் இறங்கியது என்றால், அவர் நடந்து கொண்டது சரியா? தவறா? என்பதை அந்த வசனம் கூறும்.
இப்படி, எந்தக் காரணத்துக்காக ஒரு வசனம் இறங்கியது என்பதை அறிய முடியும் என்றால், அதன் பொருளையும் அறிய முடியும் என்பது தெளிவாகின்றது. இது தான் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் முடிவாகும்.
இவ்வாறு எல்லா வசனங்கள் இறங்கியதற்கான காரணமும் தமக்குத் தெரியும் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுவதால், எல்லா வசனங்களின் பொருளும் தமக்குத் தெரியும் என்று கூறுகிறார்கள் என்றே அர்த்தம்.
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் விளக்கத்தின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும் என்றால், குர்ஆனில் மனிதர்களுக்கு விளங்காதது எதுவும் இல்லை என்றே முடிவு செய்ய வேண்டும். இது இரண்டாம் சாராரின் மறுப்பாகும்.
முதல் சாராரின் இன்னும் சில வாதங்களையும், அவற்றிற்கான மறுப்பையும் இன்ஷா அல்லாஹ் வரும் இதழ்களில் காண்போம்.
(குறிப்பு: இந்தத் தொடரைப் படிப்பவர்களுக்கு, முதஷாபிஹ் என்றால் என்ன? என்ற ஐயமும், கல்வியில் சிறந்தவர்கள் என்றால் யார்? என்ற ஐயமும் ஏற்படும். இரு தரப்பு வாதங்களையும் முடித்த பின் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில், முதஷாபிஹ் என்றால் எவை? என்பதையும், கல்வி அறிவில் சிறந்தவர்கள் யார்? என்பதையும் விளக்கப்படும்.)