முதஷாபிஹ் வசனங்கள் எவை?

முதஷாபிஹாத்      தொடர்: 10

முதஷாபிஹ் வசனங்கள் எவை?

முதஷாபிஹ் வசனங்களைக் கல்வியில் சிறந்தவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நாம் கூறும் போது, “முதஷாபிஹ் வசனங்கள் யாவை? அவை எத்தகைய தன்மைகளைக் கொண்டதாக அமைந்திருக்கும்?’ என்பதையும் கூறுவது அவசியமாகும்.

முதஷாபிஹ் வசனங்களைக் கல்வியில் சிறந்தவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று கூறும் போது, கல்வியில் சிறந்தவர்கள் என்றால் யார் என்பதையும் கூற வேண்டும்.

இன்னின்ன வசனங்கள் முதஷாபிஹ் வசனங்கள் என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் பட்டியல் போட்டுச் சொல்லவில்லை. எனினும் முதஷாபிஹ் வசனங்கள் எத்தகையது என்பதற்கான குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. அந்தக் குறிப்புகளைக் கொண்டு முதஷாபிஹ் வசனங்கள் யாவை என்பதை நாம் அறிய முடிகின்றது. அதன் சரியான பொருளையும் புரிந்து கொள்ள முடிகின்றது.

ஒரு சில வசனங்கள் முரண்பட்ட இரண்டு கருத்துக்களுக்கு இடம் தரும் வகையில் அமைந்திருக்கும். அந்த முரண்பாடு எத்தகையது என்றால், ஒரு கருத்தை நாம் எடுத்துக் கொள்ளும் போது அது இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கும் விதமாகவும் மற்றொரு கருத்தைக் கொள்ளும் போது அது இஸ்லாத்தின் அடிப்படையை நிலைநிறுத்துவதாகவும் அமைந்திருக்கும். முதஷாபிஹ் வசனங்களின் முக்கியமான அம்சம் இது!

இது போன்ற அம்சம் திருக்குர்ஆனில் மட்டுமல்ல! மனிதர்கள் பயன்படுத்துகின்ற சொற்களில் கூட இந்த நிலைமை இருப்பதை நாம் உணரலாம்.

உதாரணமாக, “இமாம்களைப் பின்பற்றக் கூடாது’ என்று நாம் கூறுகிறோம். இதைப் பிடித்துக் கொண்டு, இமாம்களை நாம் இழிவுபடுத்துவதாகச் சிலர் புரிந்து கொள்கின்றனர். இமாம்களைப் பற்றி நாம் கூறியுள்ள நற்சான்றுகளைக் கவனிக்கத் தவறியதால் இவ்வாறு புரிந்து கொள்கின்றனர்.

“கப்ருகளைத் தரை மட்டமாக்குங்கள்; கப்ருகளில் விழா நடத்தாதீர்கள்’ என்று நாம் கூறும் போது, இதை மட்டுமே பார்க்கக் கூடிய சிலர், “இறை நேசர்களை இழிவுபடுத்துவது தான் இதற்குப் பொருள் என்று சாதிக்கின்றனர். இவ்வாறு இவர்கள் சாதிப்பதற்குக் காரணம் என்ன? இறை நேசர்கள் பற்றி நாம் கொண்டுள்ள கருத்துக்களை இவர்கள் முழுமையாக ஆராய்வதில்லை. இறை நேசர்களை மதிப்பதற்காகவே இவ்வாறு கூறுகிறோம் என்பதை இவர்கள் விளங்கிக் கொள்வதில்லை.

“பாங்குக்கு முன்னால் ஸலவாத் கூறக் கூடாது’ என்று நாம் கூறினால், ஸலவாத்தையே நாம் மறுப்பதாகத் தவறான அர்த்தம் கற்பிக்கின்றனர். விபரமுடையவர்கள் தான் இது போன்ற கூற்றுக்களின் சரியான பொருளை அறிந்து கொள்வார்கள்.

இதை இங்கே நாம் எதற்காகக் குறிப்பிடுகின்றோம் என்றால், குர்ஆன் வசனங்களுடன் மற்ற மனிதர்களின் சொற்களை ஒப்பிடுவதற்காக அல்ல! முக்கியமான சந்தேகம் ஒன்றை நீக்குவதற்காகவே இந்த உதாரணங்களை நாம் கூறுகிறோம்.

அதாவது திருக்குர்ஆனில் முரண்பட்ட இரண்டு அர்த்தங்களுக்கு இடமளிக்கும் வகையில் சில வசனங்கள் அமைந்திருப்பது திருக்குர்ஆனுக்குப் பலவீனம் அல்லவா? யாவும் அறிந்த வல்ல இறைவனால் அருளப்பட்ட வசனங்களிலேயே இப்படி முரண்பட்ட இரு கருத்துக்களுக்கு இடமிருப்பது எந்த வகையில் நியாயமாகும்? இப்படி ஓர் ஐயம் சிலரது உள்ளங்களில் உருவாகலாம்.

முரண்பட்ட இரு கருத்துக்களையும் தெரிவிப்பதற்காக இறைவன் அவ்வசனங்களை அருளவில்லை. குறிப்பிட்ட ஒரு கருத்தைச் சொல்வதற்கே அருளினான். ஆனாலும் மூடர்கள் தங்கள் அறியாமையினாலும், வழிகேடர்கள் குழப்பம் விளைவிப்பதற்காகவும் அல்லாஹ் கூறாத பொருளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். கோளாறு வசனங்களில் இல்லை. சிலரது உள்ளங்களில் தான் உள்ளது.

இமாம்களைப் பின்பற்றக் கூடாது என்று நாம் கூறும் வாசகத்தில் இமாம்களை இழிவுபடுத்தும் எந்த அம்சமும் இல்லை. இதன் கருத்து, சிந்தனையாளர்களால் தெளிவாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. இவ்வளவு தெளிவான வாசகத்தைக் கூட அறிவீனர்கள் தங்கள் அறியாமையினால் தவறான கருத்தைக் கொண்டதாக எண்ணுகிறார்கள். அறிந்து கொண்டே வழிகேட்டில் இருப்பவர்கள் வேண்டுமென்றே இதன் அர்த்தத்தை அனர்த்தமாக்கி விடுகின்றனர்.

மனிதனால் பேசப்படும் எந்த மொழியானாலும் ஒரு சில வார்த்தைப் பிரயோகங்களைத் தவறாகப் புரிந்து கொள்வது சகஜமானது தான். திருக்குர்ஆனில் இவ்வாறு இடம் பெற்றிருப்பது ஆச்சரியப்பட வேண்டிய விஷயமில்லை. ஏனெனில் அன்றைய மனிதர்கள் பேசிக் கொண்டிருந்த அரபு மொழியிலேயே திருக்குர்ஆன் அருளப்பட்டது.

உண்மையில் முதஷாபிஹ் வசனங்களும் குறிப்பிட்ட ஒரு கருத்தைச் சொல்வதற்காகவே இறைவனால் அருளப்பட்டன. இன்றளவும் அந்த ஒரு கருத்தைத் தான் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அந்த வசனம் சொல்லாத ஒரு கருத்தை அதற்குக் கற்பித்துக் கொண்டு வழிகேடும், அறியாமையும் நிறைந்த உள்ளங்கள் திசைமாறிச் சென்று விடுகின்றன.

திருக்குர்ஆனின் எல்லா வசனங்களும் குறிப்பிட்ட ஒரு கருத்தைச் சொல்வதற்காகவே வல்ல இறைவனால் அருளப்பட்டன. அவற்றில் பல வசனங்கள் அந்த ஒரு கருத்தைத் தெளிவாகச் சொல்வதுடன் அதில் விஷமம் செய்வதற்கு அறவே இடமளிக்காமல் இருக்கும்.

மற்றும் சில வசனங்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தைச் சொல்வதற்காகவே அருளப்படடிருந்தாலும் மாற்றுக் கருத்துக்கு அதில் இடமில்லாவிட்டாலும், விஷமிகள் அதற்குத் தப்பர்த்தம் செய்து கொள்வதற்கு இடமிருக்கும். அவர்கள் செய்யும் அர்த்தம் விஷமத்தனமானது; அந்த வசனத்தில் சொல்லப்படாத அர்த்தம் அது என்பதைச் சிந்தனையாளர்கள் புரிந்து கொள்வர்.

உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் முதஷாபிஹ் வசனங்களைப் பின்பற்றுகின்றனர்.

அல்குர்ஆன் 3:7

இறைவனின் இந்த ரத்தினச் சுருக்கமான வார்த்தைப் பிரயோகம் இதனை நமக்கு நன்றாகப் புரிய வைக்கின்றது. எவரது உள்ளத்தில் வழிகேடு ஆழமாகப் பதிந்து விட்டதோ அவர்கள் தங்களின் வழிகேட்டை நியாயப்படுத்துவதற்கும் அதன் மூலம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் இத்தகைய வசனங்களைத் தங்களின் தவறான கொள்கைக்குச் சான்றாக ஆக்க முயற்சிப்பர்.

உண்மையில் இப்படி விஷமத்தனமான அர்த்தத்திற்கு அந்த வசனத்தில் இடமே இல்லை. அப்படியானால் அவர்கள் செய்யும் அர்த்தம் விஷமத்தனமானது என்பதை எப்படி அறிந்து கொள்வது?

இது ஒன்றும் சிரமமானதல்ல! “இமாம்களைப் பின்பற்றக் கூடாது’ என்று நாம் கூறுவதற்குத் தவறான பொருள் கற்பிக்கச் சிலர் முயலும் போது என்ன செய்கிறோம்?

“இமாம்களைப் பின்பற்றக் கூடாது’ என்று சொல்பவர்கள் இவ்வாறு சொல்வதற்குக் காரணம் என்ன? இந்தக் கருத்தைச் சொல்பவர்கள் பேசியவை, எழுதியவை, அதில் அவர்கள் எடுத்து வைத்த வாதங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்ப்பவர்களுக்கு இந்த வாசகத்தின் உண்மையான பொருள் தெளிவாகத் தெரிந்து விடும்.

இது போலவே திருக்குர்ஆனின் குறிப்பிட்ட ஒரு வசனத்தை மட்டும் பிடித்துக் கொண்டு தங்கள் தவறான கருத்தை நிலைநாட்ட சிலர் முயன்றால், இவர்களின் கருத்து சரியா? தவறா என்பதைப் புரிந்து கொள்வதற்குத் திருக்குர்ஆன் இது பற்றி மற்ற இடங்களில் கூறியிருப்பவை என்ன? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது பற்றி அளித்துள்ள விளக்கம் என்ன என்று ஆராய வேண்டும்.

ஏனைய வசனங்களின் கருத்துக்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விளக்கத்திற்கு முரணாக இவர்கள் கொடுக்கும் அர்த்தம் இருந்தால் இந்தக் கருத்தைத் தள்ளி விட வேண்டும்.

ஆக, முதஷாபிஹ் வசனங்களின் சரியான பொருளை அறிந்து கொண்டு, தவறான கருத்தை நிராகரிப்பதற்கு முக்கியமான தகுதி என்னவென்றால், திருக்குர்ஆன் அந்த விஷயத்தைப் பற்றி மற்ற இடங்களில் என்ன கூறுகின்றது என்பதைப் பற்றிய தெளிவேயாகும். இதை அரபு மொழியில் தான் அறிந்திருக்க வேண்டும் என்பதில்லை. அவரவர் மொழியிலேயே திருக்குர்ஆன் கூறும் அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொண்டாலே போதும். இத்தகைய வசனங்களின் சரியான பொருளைப் புரிந்து கொள்ளலாம்.

முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தை அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர (மற்றவர்கள்) அறிய மாட்டார்கள். அவர்கள் “இதை நம்பினோம்; அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையேஎனக் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 3:7

கல்வியில் சிறந்தவர்கள் கூறும் வார்த்தைகளைக் கவனியுங்கள். முதஷாபிஹ் பற்றிய பிரச்சனை ஏற்படும் போது, “இவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே” என்பார்கள். “இவை அனைத்தையும் நம்பினோம்” என்பார்கள்.

“இந்த ஒரு வசனத்தை மட்டும் பிடித்துக் கொண்டு தப்பான அர்த்தம் செய்யாதீர்கள். இந்த முழுக் குர்ஆனும் இறைவனிடமிருந்து தான் வந்துள்ளது. முழுக் குர்ஆனும் என்ன போதனையை வலியுறுத்துகின்றதோ அதற்கு மாற்றமான ஒரு கருத்தை நீங்கள் கூறாதீர்கள். குர்ஆனின் மற்ற சில வசனங்கள் கூறும் ஒரு கருத்துக்கு நேர் மாற்றமான ஒரு கருத்தை இந்த வசனத்திற்குக் கொடுப்பதன் மூலம், குர்ஆனில் சிலதை ஏற்று சிலதை மறுக்காதீர்கள். நாங்கள் அனைத்தையும் நம்பினோம். எந்த வசனத்துடனும் எந்த வசனத்தையும் மோதச் செய்ய மாட்டோம்”

கல்வியாளர்களின் கூற்றில் இத்தனையும் அடங்கியிருப்பதைச் சிந்திக்கும் எவருமே உணர முடியும்.

முதஷாபிஹ் வசனங்களுக்குச் சரியான பொருளைச் செய்யத் தகுந்த கல்வியாளர்கள் யாரென்றால், அவர்களிடம் மேற்கண்ட தன்மைகள் இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட வசனத்தை மட்டும் பிடித்துக் கொண்டு சிலர் தப்பர்த்தம் செய்யும் போது கல்வியாளர்களின் பார்வை முழுக் குர்ஆனையும் அலச வேண்டும். முழுக் குர்ஆனின் போதனைகளுக்கு உட்பட்டு இந்த அர்த்தம் அமைந்துள்ளதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

முதஷாபிஹ் வசனத்திற்குச் செய்யப்படும் பொருள் ஏனைய வசனங்களின் பொருளை மறுக்கும் விதமாக இருந்தால், குர்ஆனில் சிலதை ஏற்று சிலதை மறுக்கும் நிலை ஏற்படும். இந்த நிலை ஏற்படாத வகையில், “இவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை; இவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம்’ என்று எவர்களது உள்ளத்தில் ஆழமான நம்பிக்கை உள்ளதோ அவர்களே கல்வியாளர்கள். அவர்களால் தான் இவற்றின் சரியான பொருளைப் புரிந்து கொள்ள முடியும்.

இதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்காக ஒரு எடுத்துக்காட்டைத் தருகிறோம். முதஷாபிஹ் பற்றிக் கூறும் 3:7 வசனம் எந்தச் சந்தர்ப்பத்தில் இறங்கியது என்பதே அந்த எடுத்துக்காட்டு!

திருக்குர்ஆனில் பல இடங்களில் ஈஸா (அலை) அவர்களைப் பற்றி இறைவன் கூறும் போது, “கலிமத்துல்லாஹ்’ (இறைவனின் வார்த்தை), “ரூஹுன் மின்ஹு’ (இறைவன் புறத்திலிருந்து வந்த உயிர்) என்றெல்லாம் குறிப்பிடுகின்றான். நபி (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த கிறித்தவர்களில் சிலர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “ஈஸாவை இறைவனின் வார்த்தை என்றும், இறைவனின் உயிர் என்றும் நீர் ஒப்புக் கொள்கிறீரா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “ஆம்’ என்றார்கள். அதற்கு அந்தக் கிறித்தவர்கள், “இது எங்களுக்குப் போதும்” என்று கூறி விட்டுச் சென்றனர். உடனே 3:7 வசனம் இறங்கியது. (தப்ரீ)

முதஷாபிஹ் பற்றிக் கூறும் 3:7 வசனம் இந்தச் சந்தர்ப்பத்தில் இறங்கியது என்றால் ஈஸா (அலை) அவர்களை இறைவனின் உயிர், இறைவனின் வார்த்தை என்றெல்லாம் வர்ணிக்கின்ற வசனங்கள் முதஷாபிஹ் என்பது தெளிவாகின்றது.

அதாவது, ஈஸா (அலை) அவர்களை கலிமத்துல்லாஹ், ரூஹுன் மின்ஹு என்று இறைவன் குறிப்பிடுவது உண்மையே! அன்றைய கிறித்தவர்கள் இந்த வார்த்தையை மட்டும் பிடித்துக் கொண்டு, “இறைவனின் குமாரர்’ என்பதையே இந்த வசனங்கள் குறிப்பிடுகின்றன என்று வேண்டுமென்றே வியாக்கியானம் செய்தார்கள்.

திருக்குர்ஆனில் ஏனைய வசனங்களில், “அவன் யாரையும் பெறவில்லை’ என்றும், “அவன் தனக்கென மனைவியையோ, மக்களையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை’ என்றும், “அளவற்ற அருளாளனுக்கு மகன் இருந்தால் அந்த மகனை வணங்குவதில் நான் முதன்மையானவனாக இருப்பேன் என்று கூறுவீராக’ என்றும் இறைவன் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றான்.

இறைவனுக்குப் பிள்ளைகள் இல்லை என்று தெளிவாகக் கூறக் கூடிய, இரண்டாவது கருத்துக்கு இடமின்றி ஆணித்தரமாகக் கூறக்கூடிய இந்த வசனங்களையெல்லாம் அலட்சியம் செய்து விட்டு, இறைவனின் மகன் என்ற அர்த்தத்தைத் தராத “கலிமத்தில்லாஹ்’ என்ற வார்த்தைக்கு “இறை மகன்’ என்று வழிகெட்டவர்கள் பொருள் கொண்டனர்.

“உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் முதஷாபிஹ் வசனங்களைப் பின்பற்றுகின்றனர்” என்று இறைவன் இதைக் கண்டிக்கிறான்.

கலித்துல்லாஹ், ரூஹுன் மின்ஹு என்று இறைவன் கூறுகின்ற இந்த வசனங்களின் சரியான பொருளை நபி (ஸல்) அவர்கள் அறிந்திருந்தார்கள். நபித்தோழர்கள் அனைவருமே அறிந்திருந்தார்கள். ஒரு நபித்தோழர் கூட, “கலிமத்துல்லாஹ்’ என்றால் “இறைவனின் மகன்’ என்று பொருள் கொள்ளவே இல்லை. இவர்கள் அனைவரும் இதன் சரியான பொருளை எப்படிப் புரிந்து கொண்டனர்?

“இந்த ஒரு வசனம் மட்டும் இறைவனிடமிருந்து வந்தது அல்ல! முழுக் குர்ஆனும் அந்த இறைவனிடமிருந்து தான் வந்தது’ என்று அவர்கள் நம்பினார்கள். இதற்குச் சரியான பொருளைக் கண்டு கொள்ள ஏனைய வசனங்களின் துணையை நாடினார்கள்.

இறைவனுக்கு மனைவி மக்கள் இல்லை என்று தெளிவாக இறைவன் வேறு பல இடங்களில் குறிப்பிடும் போது, அதற்கு மாற்றமாக “கலிமத்துல்லாஹ்’ என்பதற்கு இறைவனின் மகன் என்று பொருள் கொண்டால் மற்ற வசனங்களை மறுக்கும் நிலை ஏற்படும் என்று அவர்கள் அறிந்திருந்தனர். இதன் காரணமாகவே நபித்தோழர்களில் எவருமே, “இறைவனின் வார்த்தை’ என்பதற்கு இறைவனின் மகன் என்று பொருள் கொள்ளவில்லை.

ஆதம் (அலை) அவர்கள் தவிர மற்ற மனிதர்கள் அனைவரும் ஆணுடைய விந்துத் துளி மூலம் பிறந்திருக்கும் போது ஈஸா (அலை) அவர்கள் மட்டும் விஷேசமான முறையில், இறைவனின் தனிப் பெரும் ஆற்றலால் பிறந்ததால், தன்னுடைய வார்த்தை, தன்னுடைய உயிர் என்று இறைவன் சிறப்பித்துச் சொல்கிறான் என்று அவர்கள் தெளிவாகவே புரிந்திருந்தார்கள்.

தங்களுக்குச் சாதகமாக ஏதேனும் கிடைத்தால் அதை மட்டும் பிடித்துக் கொள்வோம் என்ற மனப்பான்மை கொண்ட அன்றைய கிறித்தவர்கள் மட்டுமே இப்படிக் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள்.

இன்றைக்கும் கூட இறைவனுக்கு மகன் இல்லை என்பதை அறிந்து வைத்திருக்கும் எவரும், கலிமத்துல்லாஹ் என்ற வார்த்தைக்கு இப்படி விபரீதமான பொருளைக் கொள்ள மாட்டார்கள்.

* கிறித்தவர்கள் இந்த வசனத்தில் விளையாட முற்பட்ட போது அவர்களின் போக்கை அடையாளம் காட்டும் விதமாக 3:7 வசனம் இறங்கியதால், கலிமத்துல்லாஹ், ரூஹுன் மின்ஹு என்று ஈஸா நபியைப் பற்றிக் குறிப்பிடும் வசனங்கள் அனைத்தும் முதஷாபிஹ் என்பது தெளிவு.

* அந்த முதஷாபிஹ் வசனங்களை நபித்தோழர்கள் அனைவரும் சரியாகப் புரிந்து கொண்டார்கள் என்பதும் தெளிவு.

* இஸ்லாத்தின் அடிப்படையைச் சரியாக அறிந்து வைத்திருக்கும் இன்றைய முஸ்லிம்களில் யாரும் அந்த வசனங்களைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதும் தெளிவு.

* கிறித்தவர்கள் புரிந்து கொண்ட அர்த்தத்தில் அந்த வசனம் அமைந்திருக்கவில்லை என்பதும் தெளிவு.

இந்த அம்சங்களை ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது முதஷாபிஹ் எத்தகையது? அதை விளங்கும் கல்விமான்கள் யார் என்பதை அறியலாம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்