சமாதி வழிபாடும் முதஷாபிஹ் வசனங்களும்

முதஷாபிஹாத்         தொடர்: 11

சமாதி வழிபாடும் முதஷாபிஹ் வசனங்களும்

முதஷாபிஹ் வசனங்களின் தன்மை எத்தகையது என்பதை முன்னர் கண்டோம். அந்தத் தன்மைகளைச் சரியாகப் புரிந்து கொண்டால் எவை எவை முதஷாபிஹ் வசனங்கள் என்பதைத் தெளிவாக உணர முடியும். அதை மேலும் தெளிவுபடுத்தும் விதமாக, நடைமுறையில் தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டு வழிகேட்டுக்கு ஆதாரமாகக் காட்டப்படும் ஒரு சில முதஷாபிஹ் வசனங்களைக் காண்போம். அதன் பின்னர், புதிதாக எழுப்பப்படும் ஆட்சேபங்களுக்கான பதிலைப் பார்ப்போம்.

இறைவனை மட்டுமே வணங்கக் கடமைப்பட்டுள்ள முஸ்லிம் சமுதாயம், இறைவனல்லாதவர்களையும் வணங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளதைக் காண்கிறோம். இவர்கள் தங்களின் இணை கற்பிக்கும் செயலை நியாயப்படுத்திட திருக்குர்ஆன் வசனங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் உணர மாட்டீர்கள்.

அல்குர்ஆன் 2:154

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்.

அல்குர்ஆன் 3:169

இவ்விரு வசனங்களும் சமாதி வழிபாட்டுக்காரர்களால் அடிக்கடி எடுத்தாளப்படுகின்றன. அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று மட்டும் இறைவன் கூறவில்லை. மாறாக, அவர்களை இறந்தவர்கள் என்று எண்ணியும் பார்க்காதீர்கள்; அப்படிக் கூறவும் செய்யாதீர்கள் என்று இறைவன் தடையும் விதிக்கிறான். இதிலிருந்து நல்லடியார்கள் உயிருடனே உள்ளதால் அவர்களிடம் பிரார்த்திக்கலாம்; அல்லது இறைவனிடம் பெற்றுத் தருமாறு வேண்டலாம் என்று இவர்கள் வாதிடுவர்.

இவர்களின் உள்ளங்களில் வழிகேடு குடி கொண்டிருப்பதும், இது பற்றி ஏனைய வசனங்களில் கூறப்படுவது என்ன? இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் தந்த விளக்கம் என்ன? என்பதையெல்லாம் கண்டு கொள்ளாதிருப்பதுமே இதற்குக் காரணம். இவர்கள் தங்களது தவறான பாதையை இவ்வசனங்களின் துணை கொண்டு பலப்படுத்த எண்ணுகின்றனர்.

இவ்வசனங்களை முழுமையாக ஆராய்பவர்கள், இதற்கு நபி (ஸல்) அவர்கள் தந்துள்ள விளக்கத்தைத் தேடுபவர்கள், இதுபற்றி ஏனைய வசனங்களில் கூறப்படுவது என்ன என்று பார்ப்பவர்கள் இவ்வசனங்களின் சரியான பொருளைச் சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்து கொள்கிறார்கள். இந்த மூன்று அம்சங்களின் அடிப்படையில் இவ்வசனங்களின் சரியான பொருளைப் பார்ப்போம்.

முதல் அம்சம்

“இறைவனின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் இறந்தவர்கள் அல்லர்; நம்மைப் போன்று உயிருடன் உள்ளனர்” என்று சமாதி வழிபாட்டுக்காரர்கள் இவ்விரு வசனங்களுக்கும் கூறும் விளக்கத்தை அப்படியே ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். அப்போதும் கூட சமாதி வழிபாட்டுக்கு இவ்வசனங்களில் என்ன ஆதாரம் இருக்கிறது? ஒருவர் உயிருடன் இருக்கிறார் என்ற காரணத்தால் அவரை வணங்கலாம், அவரிடம் பிரார்த்திக்கலாம் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?

எத்தனையோ நல்லடியார்கள் உயிருடன் இன்றும் உலகில் வாழத் தான் செய்கிறார்கள். அவர்களிடம் போய் பிரார்த்திக்கலாம் என்று இவர்கள் முடிவு செய்வார்களா? மனிதர்களிலேயே மிகவும் சிறந்த நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பிரார்த்தனை செய்ததில்லை. நபி (ஸல்) அவர்களுக்காக நேர்ச்சை செய்ததுமில்லை. நபி (ஸல்) அவர்களின் பெயரால் அறுத்துப் பலியிடவுமில்லை.

உண்மையில் இவர்கள் கருதக்கூடிய அர்த்தத்தில், அவர்கள் உயிருடன் உள்ளனர் என்றாலும் கூட அவர்களை வணங்குவதற்கு இதில் என்ன ஆதாரம் இருக்கிறது? இவர்களின் உள்ளங்களில் குடிகொண்டுள்ள வழிகேடு இவர்களை இவ்வாறு பேச வைக்கின்றது.

“இறந்தவர்கள் அல்லர்; உயிருடன் உள்ளனர்” என்பதற்கு இவர்கள் கூறக்கூடிய அர்த்தம் தானா என்றால் அதுவுமில்லை. ஏனெனில் இவ்விரு வசனங்களில் முதல் வசனத்தில், “எனினும் (அதை) நீங்கள் உணர மாட்டீர்கள்” என்றும் சேர்த்தே இறைவன் சொல்கிறான்.

உயிருடன் உள்ளனர் என்பதற்கு இவர்கள் என்ன விளக்கம் கொள்கிறார்களோ அந்தப் பொருளில் அவர்கள் உயிருடன் இல்லை. மாறாக அதை நீங்கள் உணர முடியாது. உங்களால் உணர்ந்து கொள்ள முடியாத வகையில் வேறு விதமாக உயிருடன் உள்ளனர். இதனால் தான் “அதை நீங்கள் உணர மாட்டீர்கள்” என்று இறைவன் சேர்த்துச் சொல்கிறான்.

இரண்டாவது வசனத்தில், “தங்கள் இறைவனிடம் உயிருடன் இருக்கிறார்கள்” என்று இறைவன் குறிப்பிடுகிறான். “உயிருடன் இருக்கிறார்கள்” என்பதைக் கேட்டதும் சாதாரணமாக எந்த அர்த்தத்தை நாம் விளங்குவோமோ அந்த அர்த்தத்தில் அவர்கள் உயிருடன் இருப்பதாக எண்ணாதீர்கள்; தங்கள் இறைவனிடம் தான் அவர்கள் உயிருடன் உள்ளனர் என்று ஆணி அறைந்தாற்போல் இறைவன் தெளிவாக்குகின்றான்.

இந்தக் கருத்து இல்லையென்றால், “தம் இறைவனிடம்” என்று இறைவன் சொன்னதற்கு அர்த்தம் எதுவுமில்லாமல் போய் விடும். அந்த வசனத்தையே சரியாகச் சிந்தித்துப் பார்க்கும் போது இவர்களுக்கு எந்த ஆதாரமும் இல்லாமல் போய் விடுகின்றது.

இரண்டாவது அம்சம்

இதன் பிறகும் கூட, தங்கள் விளக்கமே சரி என இவர்கள் சாதிக்க முயன்றால், திருக்குர்ஆனுக்கு விளக்கம் அளிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்பதைச் சிந்திப்பார்களானால் அதில் இவர்களுக்குப் பரிபூரண விளக்கம் கிடைக்கும்.

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்எனும் இந்த (3:169) இறை வசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டு விட்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென அர்ஷின் கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.

அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, “நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள், “நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள் தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே!என்று கூறுவர்.

இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்பட மாட்டோம் என்பதை அவர்கள் காணும் போது, “இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட வேண்டும்என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும் போது, அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ

நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 3834)

“உயிருடன் இருக்கிறார்கள்” என்பதற்கு சமாதி வழிபாட்டுக்காரர்கள் கொண்ட பொருள் தவறு; அவர்கள் நினைத்திருக்கின்ற பொருளில் உயிருடன் இல்லை. மாறாக, சுவனத்தில் வேறு வடிவில் அவர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே இதன் பொருள் என்று மிகவும் தெளிவாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கம் தருகிறார்கள். “தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்” என்று இறைவன் குறிப்பிடுவது எதைப் பற்றி என்பது இதிலிருந்து தெளிவாகவே விளங்குகின்றது. எனவே சமாதி வழிபாட்டுக்காரர்களின் தவறான கொள்கைக்கு இவ்வசனங்களில் அறவே ஆதாரம் இல்லை. ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் இவர்களின் நம்பிக்கையை மறுக்கும் விதமாகவே இவ்வசனங்கள் அமைந்துள்ளன.

மூன்றாவது அம்சம்

இதன் பின்னரும் தங்களின் சமாதி வழிபாட்டுக்கே இவ்வசனங்கள் பாதை போட்டுத் தருகின்றன என்று இவர்கள் சாதிக்க முற்பட்டால், இந்தப் பிரச்சனை பற்றி ஏனைய வசனங்கள் கூறுவதென்ன என்பதையாவது இவர்கள் கவனிக்க வேண்டும்.

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். “எப்போது உயிர்ப்பிக்கப் படுவார்கள்என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 16:20, 21

இவ்வசனத்தில் இரண்டு உண்மைகளை அல்லாஹ் நமக்குக் கூறுகின்றான். யாரையாவது பிரார்த்திக்க வேண்டுமென்றால் அவர் படைக்கக் கூடியவராக இருக்க வேண்டும். அது மட்டுமின்றி அவர்கள் யாராலும் படைக்கப் பட்டிருக்கக்கூடாது என்று இறைவன் கூறுகின்றான்.

ஒருவர் உயிருடன் இருப்பதால் மட்டுமே அவரைப் பிரார்த்திக்க முடியாது. உயிருடன் இருப்பதுடன், அவர்கள் படைப்பவர்களாக, எவராலும் படைக்கப்படாதவர்களாக, சுயம்புவாக, தான்தோன்றியாக இருக்க வேண்டும். இவர்கள் பிரார்த்திக்கும் நல்லடியார்களுக்கு இந்தத் தகுதிகள் உண்டா? இதைச் சிந்தித்தால் மேற்கூறிய வசனங்களைத் தங்களின் தவறான கொள்கைக்குச் சான்றாக்க முன்வருவார்களா?

மேலும் இந்த வசனத்தில், “அவர்கள் இறந்தவர்கள்; உயிருள்ளவர்கள் அல்லர்” என்றும் ஆணித்தரமாக இறைவன் கூறுகின்றான். இதற்கு முரண்படாத வகையில் தானே மேற்கண்ட 2:154, 3:169 வசனங்களை விளங்க வேண்டும்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள், இவர்கள் நினைக்கும் பொருளில் உயிருடன் உள்ளனர் என்றால் அதை அவர்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும். எப்படி நிரூபிக்க வேண்டும் என்பதையும் அல்லாஹ்வே சொல்கிறான்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 7:194, 195

இவ்வசனங்கள் கூறுகின்றபடி சமாதிகளில் உள்ளவர்களை எழுப்பி நடக்க வைக்க வேண்டும்; அவர்களது கைகளால் பிடிக்க வைக்க வேண்டும்; அவர்களைப் பார்க்க, கேட்கச் செய்ய வேண்டும். அந்தச் சமாதிகளில் போய் கூப்பிட்டுப் பார்க்க வேண்டும். அங்கிருந்து எந்தப் பதிலும் வரவில்லையானால் அவர்கள் உயிருடன் – அதாவது இவர்கள் நினைக்கின்ற அர்த்தத்தில் உயிருடன் – இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இன்னும் திருக்குர்ஆனில் 2:186, 3:38, 7:29, 7:55, 7:56, 7:180, 7:197, 10:12, 10:106, 13:14, 14:39, 14:40, 16:20, 17:56, 17:110, 19:4, 21:90, 22:12, 22:13, 22:62, 22:73, 23:117, 27:62, 31:30, 35:13, 35:14, 35:40, 39:38, 40:12, 40:20, 40:60, 40:66, 46:4, 46:5 இது போன்ற ஏராளமான வசனங்கள் இவர்களின் நம்பிக்கையைத் தரைமட்டமாக்கும் போது, 2:154, 3:169 ஆகிய முதஷாபிஹான வசனங்களுக்குத் தவறான பொருள் தந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த இரு வசனங்கள் குறித்துப் பல முறை விளக்கம் தரப்பட்டுள்ளதால் சுருக்கமாகவே தந்துள்ளோம். முந்தைய தொடரை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தால் அதில் குறிப்பிடப்பட்ட கிறித்தவர்களின் அதே போக்கு இவர்களிடமும் உள்ளதை உணரலாம்.

இன்னும் சில முதஷாபிஹ் வசனங்களை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.