பைபிளைப் பற்றி முஸ்லிம்களின் நிலைப்பாடு

பைபிளைப் பற்றி முஸ்லிம்களின் நிலைப்பாடு

கத்தோலிக்கராக இருக்கட்டும்! அல்லது புராட்டஸ்டன்ட்டாக இருக்கட்டும். நம்மிடம் வருகின்ற கிறித்தவ அழைப்பாளர் முதலில் முடிவு செய்து விட்டுத் தான் வருவார். அந்த முடிவு என்ன?

நாம் அழைக்கும் இந்த நபர் பைபிளை இறுதி வேதமாகக் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார் என்பது தான் அந்த முடிவு!

வரக் கூடிய அவர்களிடம் நாம் செய்ய வேண்டிய பணி, ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கும் பைபிள் வசனங்களை அவர்களிடம் எடுத்துக் காட்ட வேண்டும். அல்லது பைபிள் வசனங்களுக்கு அவர்கள் கூறும் விளக்கங்களை எதிர்த்து வாதிக்க வேண்டும். இவ்விரண்டு தான் சரியான வழிமுறையாகும்.

கிறித்தவர்களின் குருட்டுத் தனமான கேள்வி

மேற்கண்டவாறு நாம் அவர்களிடம் அணுகும் போது அவர்கள் நம்மை நோக்கிக் கேட்கின்ற முக்கியக் கேள்வி!

நீங்கள் பைபிளை இறை வேதமாக ஏற்கின்றீர்களா? இல்லையா என்பது தான். ஆம் என்று சொன்னாலும் தவறிழைத்து விடுவோம். இல்லை என்று சொன்னாலும் தவறிழைத்து விடுவோம்.

கேள்வி கேட்கும் கிறித்தவ அழைப்பாளர்கள் நம்மை நிதானிக்க விட மாட்டார்கள். அவசரப்படுத்துவார்கள். நாம் அவசரப்படக் கூடாது; ஆத்திரமும் படக்கூடாது.

வெள்ளையா? கருப்பா என்று கேட்டால் வெள்ளை என்றோ, இல்லை என்றோ சொல்வதற்கு முடியாத இரண்டிற்கும் இடைப்பட்ட சாம்பல் நிறமும் இருப்பது போன்று தான் இந்த விவகாரம்.

“ஆம்’ என்று கூறினால் பைபிளின் ஆதியாகாமத்திலிருந்து வெளிப்படுத்தின சுவிஷேசங்கள் வரை அனைத்தையும் ஏற்றுக் கொண்டதாக ஆகும்.

“இல்லை’ என்று சொன்னால் பைபிளை விமர்சிக்க இவருக்கு என்ன தகுதியிருக்கின்றது என்று கூறி விட்டு நழுவி ஓட முயற்சிப்பார்.

இப்போது ஓர் இஸ்லாமிய அழைப்பாளன் முன்னால் உள்ள கடமை என்ன? அந்தக் கிறித்தவரிடம், பைபிளைப் பற்றிய நமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியாக வேண்டும். இதற்காகத் தனிப் பயிற்சி தேவையில்லை. பைபிளைப் பற்றிய சாதாரண ஞானமே போதும். அதன் அடிப்படையில் பைபிளை சற்று பார்ப்போம்.

பெரிய ஆய்வு ஏதுமின்றி பைபிளை வாசித்தால் அதில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

  1. கடவுளின் வார்த்தை
  2. இறைத் தூதரின் வார்த்தை
  3. கண்ணால் கண்டோர், காதால் கேட்டோரின் நேரடி சாட்சியங்கள், அவர்கள் வழியாக வந்த செவி வழிச் செய்திகள், அதாவது வரலாற்றுத் தொகுப்புகள்.

முதல் வகை

உன்னைப்போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான்.

உபாகமம் 18:18

நான், ஆம், நானே ஆண்டவர்; என்னையன்றி வேறு மீட்பர் இல்லை.

ஏசாயா 43:11

மண்ணுலகின் அனைத்து எல்லை நாட்டோரே! என்னிடம் திரும்பி வாருங்கள்; விடுதலை பெறுங்கள்; ஏனெனில் நானே இறைவன்; என்னையன்றி வேறு எவருமில்லை.

ஏசாயா 45:22

இவற்றில் வரும் “நான்’, “என்னை’ என்ற பிரதிச் சொல் இறைவனைக் குறிக்கிறது என்பதை விளக்கத் தேவையில்லை.

இரண்டாவது வகை

அதற்கு இயேசு, “இஸ்ரவேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்” என்றார்.

மாற்கு 12:29

அதற்கு இயேசு அவரிடம், “நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே” என்றார்.

மாற்கு 10:18

இவை ஏசுவின் வார்த்தைகள் என்று சிறு பிள்ளைகளும் விளங்கிக் கொள்வர்.

மூன்றாவது வகை

இலையடர்ந்த ஓர் அத்திமரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்ற போது இலைகளைத் தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில் அது அத்திப் பழக் காலம் அல்ல.

மாற்கு 11:13

இவை மூன்றாம் நபர் பேசுவது போல் அமைந்தவை. பைபிளின் அதிகமான பகுதி இந்த வகையைச் சார்ந்தது தான். இவை அல்லாஹ்வுடைய அல்லது அவனது தூதர் ஈஸா (அலை) அவர்களுடைய வார்த்தைகள் அல்ல. வரலாற்று ஆசிரியர்களின் வார்த்தைகளாகும்.

இம்மூன்று வகைகளின் மொத்தத் தொகுப்புகள் தான் பைபிள். அதனால் தான் இவ்வேதத்தில் இந்தக் குழப்பங்கள்; குளறுபடிகள்.

முஸ்லிம்களின் பாக்கியம்

ஆனால் அல்லாஹ் முஸ்லிம்களுக்குப் பெரும் பாக்கியம் செய்திருக்கிறான்.

  1. அல்லாஹ் அருளிய வார்த்தைகள் அல்குர்ஆன் என்ற பெயரில் தனி ஓர் ஆவணமாக,
  2. நபி (ஸல்) அவர்கள் சொன்னது, செய்தது, அனுமதித்தது ஆகியவை அல்ஹதீஸ் என்ற பெயரில் தனி ஆவணமாக,
  3. நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை அறிவிக்கும் நபித்தோழர்கள், அவர்களிடமிருந்து அறிவிக்கும் அடுத்த தலைமுறையினர், அதற்கடுத்த தலைமுறையினர் என ஐந்தாறு தலைமுறையினரின் வாழ்க்கை வரலாறுகள், இன்னபிற இஸ்லாமிய அறிஞர்கள், சிந்தனையாளர்கள், புரட்சியாளர்கள் ஆகியோரின் வரலாறுகள், கருத்துக்கள் ஆகியவை பல்வேறு பெயர்களில் தனி ஆவணங்களாக இதுவரை முஸ்லிம் சமுதாயத்திடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அல்லாஹ்வின் கிருபையால் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் என்ற ஹதீஸ் நூற்களில் கூட ஒரு வார்த்தை மாற்றப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்ற போது அல்லாஹ்வின் வார்த்தையான அல்குர்ஆனில் எந்த ஒரு மாற்றத்தையும் திருத்தத்தையும் கனவில் கூடக் கற்பனை செய்ய முடியாது. அவ்வளவு பெரிய பாதுகாப்பை அல்குர்ஆன் என்ற இறை வேதம் பெற்று, தகர்க்க முடியாத தனிப் பெரும் ஆவணமாகத் திகழ்கின்றது.

இதற்கு நேர் மாற்றமாக பைபிளில் அனைவரது வார்த்தைகளும் ஒன்று சேர்ந்து குவிந்து கிடக்கின்றன.

இங்கு நாம் ஒரு வித்தியாசத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய வரலாற்று நூல்கள் கூட வரலாற்றைச் சொல்லும் போது அதற்கான ஆதாரத்தைச் சங்கிலித் தொடருடன் தெரிவிக்கின்றன.

வரலாற்றுக் காலத்திலிருந்து நூலாசிரியர் வரையுள்ள ஆதாரத் தொடரை அப்படியே சமர்ப்பித்துத் தான் ஒரு வரலாற்றுச் செய்தியை நூலாசிரியர் தெரிவிப்பார்.

இப்படி ஒரு ஆதார வழியை பைபிள் சமர்ப்பிப்பது கிடையாது. அந்த வகையில் பைபிள், நமது வரலாற்று நூற்களுக்குக் கூட நிகரானது அல்ல. இத்தகைய குறைபாடுகளைக் கொண்ட பைபிளை ஓர் இறை வேத நூல் என்று நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த நிலைப்பாட்டை, கிறித்தவ அழைப்பாளரிடம் நாம் முதலில் பதிய வைத்து விட வேண்டும்.

பைபிள் மீதான நமது நம்பிக்கை

அடுத்ததாக, பைபிள் மீதான நமது நம்பிக்கையைப் பற்றிய தெளிவும் நமக்கு வேண்டும்.

தவ்ராத், ஸபூர், இன்ஜீல், குர்ஆன் ஆகிய வேதங்களை நம்புகிறோம். இதன் பொருள் என்ன?

எள்ளளவு, எள் முனையளவு கூடப் பிழையில்லாத வார்த்தை தான் அல்லாஹ்வுடைய குர்ஆன் என்றும், அது, வானவர் ஜிப்ரயீல் வழியாக நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது என்றும் நம்புகிறோம். அது மனிதக் கைவரிசையிலிருந்து பாதுகாக்கப்பட்ட ஓர் அற்புத வேதம் என்றும் நம்புகிறோம்.

இஸ்லாத்தை மிகக் கடுமையாக விமர்சனம் செய்வோர் கூட அல்குர்ஆனின் இந்த அதி அற்புதத்தைப் பாராட்டுகின்றனர்.

THERE IS PROBABLY IN THE WORLD NO OTHER BOOK WHICH HAS REMAINED TWELVE CENTURIES WITH SO PURE A TEXT. — (Sir William Muir)

“உலகில் சுமார் 12 நூற்றாண்டுகளாக அவ்வளவு தூய்மையான மூலத்துடன் இந்நூலை (திருக்குர்ஆனை) தவிர வேறு எந்த வேதமும் நிலைத்திருக்கவில்லை” என்று சர் வில்லியம் மூர் தெரிவிக்கின்றார்.

சர். வில்லியம் மூர் என்பார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் தெரிவித்த கருத்து இது. தற்போது சொல்வதாக இருந்தால் 14 நூற்றாண்டுகள் என்று கூறியிருப்பார்.

உண்மையில் குர்ஆனின் “மூலம்’ இதுவரை மாறாமல், மாயமாகாமல் அப்படியே நீடித்து நிற்கின்றது. இது தான் குர்ஆன் மீதுள்ள நமது அசைக்க முடியாத நம்பிக்கை என்பது மட்டுமல்ல! உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையும் கூட!

தவ்ராத்தைப் பொறுத்த வரை யூதர்கள் குறிப்பிடுகின்ற, கிறித்தவர்கள் குறிப்பிடுகின்ற தவ்ராத்தை நாம் நம்பவில்லை.

“தவ்ராத் வேதம் தான் பழைய ஏற்பாடு என்ற பெயரில் பைபிளில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பழைய ஏற்பாட்டில் 5 புத்தகங்களை மூஸா நபி இயற்றினார்’ என்று கிறித்தவர்கள் கூறுகின்றார்கள். இந்தக் காரணத்தாலும், இதர காரணங்களாலும் நாம் இந்தப் பழைய ஏற்பாட்டை தவ்ராத் வேதம் என்று ஒருக்காலும் நம்ப முடியாது.

நாம் எப்படி நம்புகிறோம்? மூஸா நபிக்கு அல்லாஹ் அருளிய வார்த்தைகள் தான் தவ்ராத்! அதை மூஸா நபி மக்களுக்குப் போதித்தார்கள். தவ்ராத்தை மூஸா நபி இயற்றவில்லை என்று தான் நாம் நம்புகிறோம்.

தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட ஸபூர் வேதத்தையும் இவ்வாறு தான் நாம் நம்புகிறோம்.

சங்கீதம் என்ற பெயரில் பழைய ஏற்பாட்டில் இடம் பெறுவது ஸபூர் வேதமல்ல! இதை நாம் ஸபூர் என்று நம்பவில்லை.

இன்ஜீலை எவ்வாறு நம்புகிறோம்?

இன்ஜீல் என்று அழைக்கப்படும் இவ்வேதம் ஈஸா நபிக்கு இறைவனால் அருளப்பட்டது. அதை நாம் அல்லாஹ்வின் வேதம் என்று நம்புகிறோம். பைபிள் என்ற பெயரில் உள்ள நூலை நாம் இன்ஜீல் என்று நம்பவில்லை.

ஈஸா நபி, தமது கைப்படவோ அல்லது பிறருக்கு அவ்வாறு எழுதும்படியோ கட்டளையிட்டதாக எந்த ஆதாரமும் இல்லை.

இன்ஜீல் என்ற பெயரில் அதாவது பைபிள் என்ற பெயரில் தற்போது உலா வருகின்ற அனைத்துமே அனாமதேய ஆசிரியர்களின் பெயர்களில் தான். மத்தேயு, மாற்கு, ஜான், லூக்கா என்ற பெயர் தாங்கிகளின் பெயர்களில் தான் பைபிள் என்ற வேதம் உலா வருகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் புதிய ஏற்பாட்டில் இடம் பெற்ற 27 நூல்களில் ஏசு என்ற பெயரில் ஒரு புத்தகம் கூட இடம் பெறவில்லை.

ஏசு எதையும் எழுதவில்லை என்று வாதிடும் நாம், ஏசுவின் பெயரால் ஒரு புத்தகம் கூட இல்லையே என்று குறைபடக் காரணம், கண்ட கண்ட நபர்களின் பெயர்களில் பைபளில் நூல்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் ஏசுவின் வார்த்தைகள் என்று சொல்லப்படுகின்ற இந்த வேதத்தில் அவரது பேச்சுக்களுக்குக் கிடைத்த இடம் சொற்பத்திலும் சொற்பம் என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத் தான்.

இப்படி, கண்டவர்களின் கைச்சரக்கு கிட்டங்கியான இந்த பைபிளை இறை வேதம் என்று ஒரு முஸ்லிம் நம்ப மாட்டான். நபி (ஸல்) அவர்கள் இதற்கு ஒரு தெளிவான தீர்வைத் தருகின்றார்கள்.

வேதக்காரர்(களான யூதர்)கள், தவ்ராத்தை ஹீப்ரூ மொழியில் ஓதி, அதை இஸ்லாமியர்களுக்கு அரபு மொழியில் விளக்கம் கொடுத்து வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக, முஸ்லிம்களே!) நீங்கள் சொல்லுங்கள்: நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்றதையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும், யஅகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளப்பெற்றதையும் மற்றும் மூசாவுக்கும் ஈசாவுக்கும் வழங்கப் பெற்றதையும் மேலும் இறைத்தூதர்கள் அனைவருக்கும் அவர்கüன் இறைவனிடமிருந்து வழங்கப் பெற்றவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்கüல் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை. இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறோம்” (2:136) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4485, 7362

இந்த ஹதீஸை கீழ்க்கண்ட வசனத்திற்கேற்ப விளங்கிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்!என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 2:111

வேதக்காரர்களிடமிருந்து ஏதேனும் வந்தால் ஆதாரத்துடன் நம்ப வேண்டும். ஆதாரம் இல்லையெனில் தெளிவாக மறுத்து விட வேண்டும்.

அதாவது, வேதக்காரர்களின் கருத்து குர்ஆனுக்கும் ஹதீசுக்கும் ஒத்திருந்தால் அதை நாம் நம்ப வேண்டும். குர்ஆனுக்கும் ஹதீசுக்கும் முரணாக இருந்தால் அதை மறுத்து விட வேண்டும்.

பைபிள் மீதான நம்பிக்கைக்கு மார்க்கம் இப்படியொரு தெளிவைத் தந்திருக்கின்றது. இந்த அடிப்படையிலேயே நம்முடைய நம்பிக்கை தவ்ராத், ஸபூர், இன்ஜீல் ஆகிய வேதங்களின் மீது அமைந்திருக்கின்றது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது கிறித்தவர்கள் எழுப்புகின்ற கேள்விக்கு வருவோம்.

நீங்கள் பைபிளை இறை வேதம் என்று ஒப்புக் கொள்கிறீர்களா? இது தான் அவர்களது கேள்வி!

பல்வேறு பைபிள்கள்

இந்தக் கேள்வியைக் கேட்கும் கிறித்தவர்களிடம் நாம் திரும்பக் கேட்க வேண்டியது இது தான்.

எந்த பைபிளை ஏற்கச் சொல்கிறீர்கள்?

அஹ்மத் தீதாத், ஒரு பைபிளை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு, “இந்த பைபிளை இறை வேதம் என்று நம்புகிறீர்களா?” என்று ஒரு கிறித்தவ அழைப்பாளரை நோக்கி வினவுகின்றார். அந்தக் கிறித்தவர் அதிர்ச்சிக்குள்ளாகி, “அது என்ன பைபிள்?” என்று கேட்கின்றார்.

“ஏன்? இது வரை ஒரேயொரு பைபிள் தான் என்று நீங்கள் நினைத்திருக்கிறீர்கள். அப்படித் தானே?” என்று தீதாத் கேட்க, அவர் தயக்கத்துடன் ஆம் என்று சொல்கிறார்.

ஒரேயொரு இறை வேதம் தான். அது பைபிள் தான் என்று பொய் சொல்லிக் கொண்டு திரியும் நற்செய்தி(?)யாளர்களின் முகங்களை தீதாத் தோலுரித்துக் காட்டுகின்றார்.

கத்தோலிக்க பைபிள்

அஹ்மத் தீதாத் தூக்கிப் பிடித்திருந்தது கத்தோலிக்க பைபிள் (தர்ம்ஹய் ஈஹற்ட்ர்ப்ண்ஸ்ரீ யங்ழ்ள்ண்ர்ய்).

லத்தீன் வல்கேட்டிலிருந்து இது ரோமன் கத்தோலிக்கர்களால் 1582ல் மொழி பெயர்க்கப்பட்டு ரெய்ம் நகரில் வெளியிடப்பட்டது. மீண்டும் டவோ நகரில் மறுபடியும் வெளியிடப்பட்டது. இது மிக மிகப் பழமையான மொழிபெயர்ப்பாகும்.

16ஆம் நூற்றாண்டில் வெளியான ஒரு பழமையான மொழிபெயர்ப்பு என்ற பெயரையும் புகழையும் இந்தக் கத்தோலிக்க பைபிள் பெற்றிருந்தாலும் இது புராட்டஸ்டண்ட் கிறித்தவர்களின் பெரும் அதிருப்தியைச் சம்பாதித்தது. காரணம், அதில் அதிகப்படியாக ஏழு ஏடுகள் இடம் பெற்றிருந்தன. இந்த ஏழு ஏடுகளும் ஐயத்திற்குரியவை! கடவுளுடைய வார்த்தைகள் தாமா என்ற சந்தேகத்திற்குரியவை. இதனால் இந்த ஏழு ஏடுகளும் புராட்டஸ்டண்ட் பைபிளில் சேர்க்கப்படவில்லை; நீக்கப்பட்டுள்ளன.

என்ன வேதம்? கத்தோலிக்கர்கள் ஏழு ஏடுகளை இறை வார்த்தைகள் என்று சொல்கின்றனர். அதை புராட்டஸ்டண்டுகள் இறை வார்த்தைகள் அல்ல என்று சொல்கின்றனர்.

இவ்வாறு கூட்டுவதையும், குறைப்பதையும் கண்டித்து பைபிளின் இறுதி ஏடான வெளிப்படுத்தின விஷேசத்தில் ஓர் எச்சரிக்கையே விடப்பட்டுள்ளது.

திருவேதத்தில் தணிக்கை?

இந்த எச்சரிக்கையை கத்தோலிக்கர்களும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. புராட்டஸ்டுகளும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. சேர்த்தலும் நீக்குதலும் இரு அணியினருக்கும் சர்வ சாதாரணமான விஷயம்.

புராட்டஸ்டுகள் துணிச்சலாகவே இந்த ஏழு ஏடுகளையும் தணிக்கை செய்து விட்டனர்.

அந்த அத்தியாயங்கள் இதோ:

  1. தோபித்து, 2. யூதித்து, 3. எஸ்தர்,
  2. ஸாலமோனின் ஞானம், 5. சீராக்கின் ஞானம்,
  3. பாரூக்கு, 7. தானியேல்

புராட்டஸ்டண்ட் மொழி பெயர்ப்பு

புராட்டஸ்டண்ட் பைபிளின் மொழி பெயர்ப்பை AV (Authorised version) அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பு என்று அழைக்கின்றனர். KJV KJV (King James Version)  மன்னர் முதலாம் ஜேம்ஸின் ஆதாரப்பூர்வமான மொழி பெயர்ப்பு என்ற மறு பெயரிலும் இதனைக் குறிப்பிடுகின்றனர்.

இங்கிலாந்து மன்னர் முதலாம் ஜேம்ஸின் விருப்பத்திற்கும் ஆலோசனைக்கும் இணங்க இது வெளியிடப்பட்டது. இன்று வரை இம்மொழிபெயர்ப்பு அவரது பெயரையே தாங்கி நிற்கின்றது.

இந்த மொழிபெயர்ப்பு தான் உலகின் வளர்ச்சி குன்றிய நாடுகளில் சுமார் 1500 மொழிகளில் கிடைக்கின்றன. அதனால் கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டண்டுகள் ஆகிய இரு பிரிவினரும் இணைந்து இம்மொழிபெயர்ப்பைத் தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இம்மொழிபெயர்ப்பு 1611ல் வெளியிடப்பட்டது. பிறகு 1881ல் திருத்தப்பட்டு, RV (Revised Version)   திருத்தப்பட்ட பதிப்பு என்று அழைக்கப்பட்டது. மீண்டும் 1952ல் மறு திருத்தம் செய்யப்பட்டு, RSV (Revised Standard Version)  மறு திருத்தம் செய்யப்பட்ட தரமிகு பதிப்பு என்றழைக்கப்பட்டது. 1971ல் திரும்பவும் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் பெயர் மாற்றம் செய்யப்படாமல் தநய என்றே அழைக்கப்பட்டது.

மீண்டும் மீண்டும் மனிதத் திருத்தத்திற்கு உள்ளாகும் இந்தப் புனித (?) வேதத்திற்கு, 1971ல் வெளியிடப்பட்ட மறு திருத்தம் செய்யப்பட்ட தரமிகு பதிப்பின் முன்னுரையில் பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களையும் புகழ் மாலைகளையும் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் பாராட்டுக்களைக் கண்டு நாம் மெய் சிலிர்ப்பதற்குள்ளாக, மேனி புல்லரிப்பதற்குள்ளாக, அந்த வெளியீட்டு நிறுவனம் அப்படியே அந்தர் பல்டியடிப்பதைப் பாருங்கள்.

இருந்தும் KJV பெரும் குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றது. காரணம் என்ன?

அப்போதைக்குக் கிடைத்த பைபிளின் மூல கையேட்டுப் பிரதிகளின் அடிப்படையில் தான் KJV உருவாக்கப்பட்டது. KJV உருவாக்கப்பட்ட பின் 19ஆம் நூற்றாண்டில் பைபிள் ஆய்வு வளர்ச்சி கண்டது. KJV காலத்தில் கண்டுபிடிக்கப்படாத பைபிளின் பல மூல கையேட்டுப் பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தக் கையேட்டுப் பிரதிகளில் காணப்பட்ட பல விஷயங்கள் KJVயில் காணப்படவில்லை. மூலப்பிரதிகளில் உள்ளது போன்று மொழி பெயர்ப்பில் இல்லாதது சாதாரண குறைபாடல்ல! இவை ஒன்றிரண்டு குறைபாடுகளுமல்ல! அசாதாரண, மிகப் பெரிய குறைபாடுகள் ஆங்கில மொழியாக்கத் திருத்தத்தின் அவசியத்தை உணர்த்தின. அதன்படி 1870ல் இங்கிலாந்து திருச்சபை மூலம் அந்தத் திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதன் பின்னர் அம்மொழிபெயர்ப்புக்குக் காப்புரிமை செய்யப்பட்டது.

இவ்வாறு அந்த முன்னுரை முடிகின்றது.

நாம் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், மொழி பெயர்ப்பு வெளியான பின்பும் மூல நூற்கள் கண்டுபிடிக்கப்படும் அநியாயத்தைத் தான்.

அதன் பின்னரும் மாற்றம், மாற்றம் எனத் தொடர் கதையாகும் மாற்றங்கள் தான்.

குறைபாடுகள் உள்ள மொழியாக்கத்தைப் பின்பற்றிச் செயல்பட்ட மக்களின் கதி என்ன? அவர்களுக்குப் பரலோக ராஜ்யத்தில் விமோசனம் கிடைக்குமா? அல்லது அழிவு கிடைக்குமா?

பைபிள் இறைவேதம் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? என்று கேட்கும் கிறித்தவ அழைப்பாளரிடம் மேற்கண்ட கேள்விகளை எழுப்பக் கடமைப்பட்டுள்ளோம்.

அத்துடன் இத்தனை விதமான, ரகமான பைபிள்களில் எந்த பைபிளை நம்பச் சொல்கிறீர்கள்? இவற்றில் எது இறை வேதம்? கத்தோலிக்க பைபிளா? புராட்டஸ்டண்ட் பைபிளா? 1611 பதிப்பா? 1881 பதிப்பா? 1952 பதிப்பா? 1971 பதிப்பா?

குறைபாடுகள் உள்ள இறைவேதமா? குறைபாடுகள் களையப்பட்ட இறைவேதமா? எந்த இறை வேதத்தை ஒப்புக் கொள்ளச் சொல்கிறீர்கள் என்று கேட்டால் போதும். கிறித்தவ அழைப்பாளர் மறுபடி எப்படி வாய் திறக்கிறார் என்று பார்க்கலாம்.