மெல்லிய பிறையும் துல்லிய பார்வையும்
ஒரே குடும்பத்தில் அண்ணனுக்கு ஒரு நோன்பு, தம்பிக்கு மறு நாள் நோன்பு. பெற்றோருக்கு ஒரு நாள் நோன்பு, பிள்ளைகளுக்கு மறு நாள் நோன்பு. அண்ணனுக்கு ஒரு பெருநாள். தம்பிக்கு அடுத்த நாள் பெருநாள்.
ஏகத்துவத்தைக் கொள்கையாக ஏற்றுக் கொண்ட சகோதரர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு பிரச்சனை – பிரிவினைகள் கொள்கை விஷயத்தில் கூட ஏற்பட்டதில்லை. ஆனால் பிறை விஷயத்தில் ஏற்பட்டு விட்டது. ஆம்! பிறைக் கணிப்பு முறை இந்தப் பிரச்சனைக்கும் பிரிவினைக்கும் வித்திட்டது.
உண்மையில் இது தவ்ஹீதுக் கொள்கை மீது ஒரு வெறுப்பையே உருவாக்கி விட்டிருந்தது. ஒரே ஊரில் இரு பெருநாட்கள் நிகழ்ந்தன. ஊடகங்களுக்கு இது ஒரு விருந்தாகவும் வேடிக்கையாகவும் ஆனது. பரஸ்பரம் மனக் கசப்பையும் மனமாச்சரியத்தையும உண்டாக்கியது.
கொள்கைக்காக இப்படி ஒரு பிரச்சனை, பிரிவினை ஏற்பட்டால் கூட மனம் ஆறுதல் அடையும். ஆனால் மார்க்கம் விரிவான பாதையையும் பார்வையையும் தந்திருக்கின்ற ஒரு விஷயத்தில் ஏற்பட்ட இந்தப் பிரச்சனை ஜீரணிக்கக் கூடியதாக இல்லை. அல்லாஹ்வின் கிருபையால் ஜாக் தலைமை இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து முடிவு கண்டுள்ளது. இதில் கமாலுத்தீன் மதனி யாருடைய முகத்தாட்சண்யமும் பார்க்காமல் விமர்சனத்திற்குக் கவலைப்படாமல் 17:36 வசனத்தை மேற்கோள் காட்டி கணிப்பு நிலைப்பாட்டை உடைத்திருக்கின்றார்.
பிறையைக் கண்ணால் கண்டு நோன்பு நோற்பது, நோன்பை விடுவது என்ற அழகிய முடிவுக்கு, ஹதீஸிற்கு ஒத்த கருத்துக்கு வந்திருக்கின்றார். மார்க்கத்தைச் சரியாக விளங்காத அரைவேக்காட்டு ஆசாமிகளின் அறியாமைக்கும் அதிகப் பிரசங்கித்தனத்திற்கும் அதிரடி கொடுத்திருக்கின்றார். மேற்கு வானத்தில் பிறக்கின்ற மெல்லிய பிறையை நோக்கி ஒரு துல்லிய பார்வையை செலுத்தியிருக்கின்றார்.
இதை தவ்ஹீத் ஜமாஅத் பாராட்டுகின்றது. கணிப்பு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அலசலையும் ஏகத்துவத்தில் பிரசுரம் செய்துள்ளோம். இதுபோன்ற அலசலை, கணிப்பினால் ஏற்படும் குழப்பத்தை ஏற்கனவே பத்து வருடங்களுக்கு முன்பே தவ்ஹீத் ஜமாஅத், அல்முபீன் இதழில் வெளியிட்டுள்ளது என்பதை இங்கு நினைவுக்குத் தருகிறோம்.
எதைப் பற்றி ஞானமில்லையோ அதைப் பின்பற்றாதீர்கள்
கேள்வி:
பிறை விஷயத்தில் நீங்கள் கணிப்பை ஆதரித்து விட்டு, பின்னர் அதிலிருந்து பின்வாங்கி பிறை பார்த்துத் தான் செயல்பட வேண்டும் என்று கூறியதாகவும், இதற்கு உங்களுக்கு ஏதோ உலகாதாயம் இருக்கின்றது என்றும் சிலர் கூறி வருகின்றனரே! இது உண்மையா? தக்க விளக்கம் தரவும்.
அப்துத் தவ்வாப், மதுரை
பதில்:
அல்லாஹ் கூறுகிறான்: எதைப் பற்றி உனக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை நீர் பின் தொடராதீர். நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இதயமும், இவை ஒவ்வொன்றும் (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்.
அல்குர்ஆன் 17:36
எனக்குப் பிறைக் கணக்கை கணித்து முன்கூட்டியே சொல்லக் கூடிய ஞானம் இல்லை. அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்டுத் தான் சொல்ல வேண்டும். அது சரியா? தவறா என்று ஆய்வு செய்து தீர்மானிக்கின்ற ஞானமும் எனக்கில்லை. அப்படியிருக்க நான் பொறுப்பில் இருந்து கொண்டு கண்மூடித்தனமாக அறிவிப்புச் செய்ய முடியாது. அது இறைத்தூதரின் நேரடி சொல், செயலுக்கு எதிரானதாக ஆகி விடும்.
இது விஷயத்தில் யாருடைய கருத்தையாவது பின்பற்றி முன்கூட்டி கணிப்பின் படி அறிவிக்கும் போது, எந்த அடிப்படையில் இதை அறிவித்தாய்? இதைப் பற்றிய ஞானம் உனக்கு உண்டுமா? என்று கேட்டால் என்னால் எந்தப் பதிலும் சொல்ல முடியாத நிலை தான் ஏற்படும். இதற்கு முன்னர் ஓரிரு சந்தர்ப்பங்களில் இதுபோன்று அறிவிப்புச் செய்து அதன் மூலம் ஏற்பட்ட குழப்பங்களை மறக்க முடியாது.
ஒவ்வொரு வருடமும் பிறை அறிவிப்புச் செய்வதில் சிரமம் ஏற்படுகிறதே, அதைத் தவிர்க்க ஆங்கிலக் காலண்டரைப் போன்று நாமும் ஒரு காலண்டரைப் பின்பற்றினால் சிரமத்திலிருந்து விடுபடலாமே என்ற எண்ணத்தில் தான் அதை அறிவிப்புச் செய்தேன்.
ஆனால் இது விஷயத்தில் நம்மை விடவும் அறிவு ஞானம் உடையவர்களின் விளக்கங்களை குர்ஆன், சுன்னாவின் ஒளியில் பார்க்கும் போது, கணித்துச் சொல்வது நபி (ஸல்) அவர்களின் நேரடிக் கட்டளைக்கும் அவர்களுடைய செயல் முறைக்கும் மாற்றமாக உள்ளதை உணர முடிந்தது. மேலும் யார் சொல்லும் கணிப்பை எடுப்பது என்பதிலும் குழப்பம் இருந்தது. எனவே இது விஷயத்தில் நமது ஜமாஅத் எந்த நிலைப்பாட்டில் இருந்து வந்ததோ அதே நிலைபாட்டிலேயே செயல்படுவது என்ற முடிவுக்கு வந்தோம். இது தான் உண்மை நிலை.
ஆனால் சிலர் அவர்களாகக் கற்பனை செய்து கொண்டு ஏதோ உலக ஆதாயத்திற்காகத் தான் கணிப்பைப் பின்பற்றாமல் நபி (ஸல்) அவர்களின் கட்டளையை ஏற்றுப் பிறை பார்த்து செயல்பட வேண்டும் என்று நாம் கூறுவதாகப் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அது என்ன உலகாதாயம் என்பதை இவர்கள் விளக்கிக் கூற வேண்டும். அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களின் வெளிப்படையான கட்டளைக்கு மாற்றமாகி விடுமே என்ற அச்சத்தைத் தவிர வேறு எந்த ஆதாயமும் எங்களுக்கில்லை. இவர்கள் இதயத்தைப் பிளந்து பார்த்தது போன்று பேசுவது சில சமயம் இவர்களை இறை நிராகரிப்பின்பால் கொண்டு போய் சேர்த்து விடும்.
இவர்கள் தங்கள் மனம் சொல்கின்ற விளக்கத்தை வைத்துக் கொண்டு, கணிப்பைத் தான் பின்பற்ற வேண்டும் என்று நிர்பந்தப்படுத்துவது மட்டுமில்லாமல் தாங்கள் சொல்லும் விளக்கத்தைத் தான் ஏற்றாக வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறார்களே! இவர்கள் என்ன ஆதாயத்தை எதிர்பார்த்து இதைச் செய்கிறார்கள்? என்று நாமும் கேட்க வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளனர். பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கண்மூடித்தனமாக எதையும் பின்பற்றக் கூடாது. அப்படியிருந்தும் சிலருடைய பேச்சை அப்படியே நம்பி விடுகின்றனர். அவர்களிடத்தில் விளக்கம் கேட்டால் சொல்லத் தெரிவதில்லை. இது கண்மூடிப் பின்பற்றுவதாகாதா? இது எந்த அடிப்படையில் நியாயமானது? எனவே எது தெளிவாக இருக்கிறதோ அதையே பின்பற்ற வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளை மற்றும் வழிகாட்டுதல் தெளிவாக இருக்கிறது.
அல்ஜன்னத் ஜூலை 2010