அல்லலூயாவின் அர்த்தம் என்ன?

அல்லலூயாவின் அர்த்தம் என்ன?

இன்று உலகில் சுமார் 120 கோடி கிறித்தவர்கள் பைபிளை வேதமாக நம்பி அதன்படிச் செயல்படுகின்றனர். ஆனால் அவர்கள் நம்புகின்ற அந்த வேதம், இன்றைய நிலையில் அது உண்மையான இறை வேதமா என்று அவர்கள் சிந்திக்கத் தவறி விட்டனர்.

ஒரு நூலை வேதம் என்று நம்ப வேண்டுமென்றால், அது இறை வாக்கு என்று ஒப்புக் கொள்ள வேண்டுமென்றால் அவ்வேதத்தில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் ஒன்றுடன் மற்றொன்று மோதக் கூடாது; முரண்படக்கூடாது. இது தான் வேதத்தின் முழு முதல் இலக்கணம். அது கடவுளின் வார்த்தை என்பதற்கான அடிப்படை விதி.

இந்த இலக்கணம் அடிபட்டுப் போனால் அது மனித மூளையில் உற்பத்தியான மலிவுச் சரக்கு, மனித அறிவு பிரசவித்த ஓர் அற்பக் கருத்து என்பது உறுதியாகி விடும்.

இந்த அடிப்படை விதிக்கும் வேதியியல் பரிசோதனைக்கும் பைபிள் உள்ளாக்கப்படும் போது அது மனிதச் சொற்கள் அதிகமதிகம் கலந்த ஒரு கலப்படம்; மனிதக் கற்பனைகளின் சங்கமம்; உண்மையை விடப் பொய்கள் மிகைத்து நிற்கும் ஒரு சாதாரண புத்தகம் என்பது மிகத் தெளிவாகப் புலப்படும்.

இன்று உலகில் எந்த ஒரு வேதியியல் பரிசோதனைக்கு உட்படுத்தினாலும் உடையாமல், ஒரு சிறு காயம் கூடத் தன் மேனியில் படாமல் சிலிர்த்துக் கொண்டு வருவது திருக்குர்ஆன் மட்டுமே! அறிவியல் உலகின் சிந்தனை சக்திக்கு ஒரு சிம்ம சொப்பனமாக, சந்திக்க முடியாத சவாலாக, சாகசமாகத் திகழ்ந்து கொண்டிருப்பது அல்குர்ஆன் எனும் அற்புதம் தான்.

இறை வார்த்தைகளைத் தன்னோடு கொண்டிருக்கும் தனித்தன்மையின் காரணத்தால் தான் அது உலக மக்களை நோக்கி அறைகூவல் விடுகின்றது.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் 4:82

அபார அறிவியல் புரட்சியின் சிகரத்தில் இருக்கும் இந்த இருபத்தோறாம் நூற்றாண்டில் கூட இந்த அறைகூவலை ஏற்பவர், எதிர் கொள்பவர் எவருமில்லை என்பது நிதர்சனமான உண்மையாகும்.

இத்தகைய தூய வேதம், தனக்கு முந்தைய வேதங்கள் இறைவனிடமிருந்து வந்தவை தான் என்று சான்று கூறும் அதே வேளையில் அவற்றில் கலந்து விட்ட கலப்படத்தை, கற்பனையை, கறையை அடையாளம் காட்டி அம்பலப்படுத்துகின்றது.

என்ன தான் ஒரு வேதம் சின்னாபின்னமாக்கப்பட்டாலும், சிதைக்கப்பட்டாலும் அந்த உண்மை வேதம் உருத் தெரியாமல் ஆக்கப்பட்டாலும் அதில் ஒரு சில உண்மைகள் ஒட்டிக் கொண்டிருக்கத் தான் செய்கின்றன. அவ்வேதங்கள் இறைவனிடமிருந்து வந்தவை தான் என்று உரைக்கின்ற தடயங்கள், சான்றுகள் உடைக்கப்படாமல் ஒழிக்கப்படாமல் இருக்கின்றன. அதில் ஒன்று தான் இன்று கிறித்தவர்கள் தங்கள் திருச்சபைகளிலும் தெருச் சபைகளிலும் உரத்தக் குரல்களில் ஒலி பெருக்கிகளில் ஆர்ப்பரிக்கின்ற “அல்லலூயா” என்ற முழக்கமாகும். இதனுடைய அர்த்தம் என்ன? அதைக் காண்பதற்கு இந்த ஏகத்துவத்தின் பயணம் தொடர்கின்றது.

கிறித்தவர்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அஹ்மத் தீதாத் அவர்கள் செய்த ஆய்வு, “அவனது பெயர் என்ன?” – What is his name? என்ற தலைப்பில் வெளியானது. அதன் தமிழாக்கத்தைத் தான் இந்த ஏகத்துவ இதழில் நீங்கள் நுகர்கின்றீர்கள்.

இதன் இறுதியில் அல்லலூயா என்பதன் பொருளைச் சுவைக்கின்ற போது, அல்லாஹ்வின் வேதமாக இருந்த பைபிள் சிதைக்கப்பட்டுள்ளது என்பதை மெய்ப்படுத்தி சத்தியக் குர்ஆன் கூறுகின்ற சான்றாண்மையையும் சேர்த்தே பார்க்கலாம். அதிலும் திருக்குர்ஆன் இறங்கிய அருள்மிகு ரமளான் மாதத்தில் இதைப் பார்ப்பது மிகவும் சாலப் பொருத்தமான ஒன்று!

அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் தன் ஆயுள் முழுவதும் கிறித்தவத்தை மட்டுமே குறியாகக் கொண்டு விவாதம் மற்றும் எழுத்து ரீதியான ஆயுதங்கள் தாங்கி இறுதி வரை அதை எதிர்த்துப் போரிட்டவர். அதன் காரணமாக அவர்களது ஆய்வுகள் அனைத்துமே கிறித்தவத்தை மையமாகக் கொண்டு அமைந்திருந்தன. அதற்காக அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக! அவரது ஆய்வு அந்தத் திசையை நோக்கி மட்டும் சென்றதற்கு மற்றொரு காரணம், அவர் வாழ்ந்த தென்னாப்பிரிக்கப் பகுதி, சூழல் அனைத்தும் கிறித்தவ வயமாக இருந்தது தான்.

கிறித்தவ அழைப்பாளர்கள் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது ஓர் அவதூறு யுத்தத்தையே துவக்கியிருந்தனர். எனவே அவர்களின் ஆதிக்கம் அஹ்மத் தீதாதின் முழுக் கவனத்தையும் ஈர்த்தது. அவரது மொத்த உழைப்பையும் அது உறிஞ்சி விட்டது. அதனால் முஸ்லிம் சமூகத்திலேயே மலிந்து கிடக்கும் இணை வைப்பை நோக்கி அவரது கவனம் திரும்ப வாய்ப்பில்லை. அல்லது அவர் வாழ்ந்த அந்தப் பகுதியில் அதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை.

இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், தமிழகத்திலுள்ள ஏகத்துவவாதிகள் இங்கு இணை வைப்பாளர்களை எதிர்த்துப் பல்வேறு களங்களைக் கண்டிருக்கின்றனர். இங்குள்ள அறிஞர்கள் அந்த ஆய்வில் ஒரு கரையும் கண்டிருக்கிறார்கள். எனவே இணை வைப்பு தொடர்பாக அஹ்மத் தீதாதின் ஆய்வு ஏகத்துவவாதிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையாமல் இருக்கலாம். அதே நேரத்தில் அவரது துறை கிறித்தவத்திற்கு எதிரானது மட்டுமே என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவரது ஆய்வுகள், ஒப்பீடுகள் போன்றவை நமது சிந்தனைக்குச் சற்று அந்நியமாகத் தெரிந்தால் அது மனித அறிவுக்குட்பட்டது என்று பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அவரது ஆய்வுகள், கொள்கைகள் அனைத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாட்டுக்கு உட்பட்டது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. இதனால் தான் இதை ஒரு மொழி பெயர்ப்பாக அல்லாமல், இயன்ற வரை ஜமாஅத்தின் தூய கடவுள் கொள்கை நிலைபாட்டுக்கு எதிராக உள்ளவற்றைத் தணிக்கை செய்து, இந்நூலை ஒரு கருத்தாக்கத் தழுவலாக அளித்திருக்கிறோம்.

காரணம், கிறித்தவத்திற்கு எதிராக மாபெரும் போர்க்கொடி தூக்கி புரட்சி செய்த அவர் மீலாத் விழாவை ஆதரிக்கின்றார். இது குறித்து அவரிடம் ஒரு சகோதரர் கேள்வி எழுப்பும் போது, மில்லியன் கணக்கான மக்கள் மீலாது கொண்டாடுகின்றனர் என்று காரணம் கூறுகின்றார். இதே காரணம் கிறித்தவத்திற்கும் பொருந்துமல்லவா? “இயேசு கிறிஸ்துவை ஏன் வணங்குகிறீர்கள்?’ என்று கிறித்தவர்களிடம் கேட்டால் அவர்கள் இதே பதிலைத் தான் கூறுகிறார்கள். இதை அஹ்மத் தீதாத் ஏற்றுக் கொள்வாரா?

இந்த அளவுக்குத் தான் பித்அத்துக்கள் விஷயத்தில் அஹ்மத் தீதாத் அவர்களின் நிலைப்பாடு அமைந்துள்ளது என்பதை இங்கே வாசகர்களின் பார்வைக்குத் தருகிறோம்.

எனினும் நாம் இந்த ஆய்வின் கருத்தாக்கத்தை இங்கு தருவதற்குக் காரணம், ஒரு ஏகத்துவவாதி கிறித்துவத்தைப் பற்றி எதையும் அறியாமல் இருக்கக் கூடாது. அவர்கள் எடுத்து வைக்கும் வாதத்திற்குப் பதில் சொல்லாமல் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் அஹ்மத் தீதாத் அவர்களின் ஆய்வை எடுத்துக் கொள்வோமாக!