மதியாத ஆலயம் மிதியாதீர்

மதியாத ஆலயம் மிதியாதீர்

சேலம் மாவட்டம் கண்டாம்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த திரவ்பதி கோயிலில் தலித்துக்கள் நுழைவதற்கு அனுமதிப்பதில்லை. இதை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இது நடந்தது 2007ல்!

அண்மையில் 30.09.2009 அன்று நாகை மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம்: வேதாரண்யம் அருகிலுள்ள செட்டிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தலித்துகளுக்கு நுழைவதற்கு அனுமதியில்லை.

இந்த அநீதியைக் கண்டித்து நாகை சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டைச் சேர்ந்த 300 பேர்களுடன் ஆலயத்துக்குள் பிரவேசிக்க முயன்றார். இறுதியில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விடுதலையானார்கள்.

மீண்டும் ஆலயப் பிரவேசம் செய்வேன்; ஆலயத்தில் நுழையும் வரை என் போராட்டம் ஓயாது என்று சட்டமன்ற உறுப்பினர் அறிவித்திருந்தார்.

ஆலயப் பிரவேசம் பிரச்சனைகளைப் பிரசவித்து விடக் கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டு வருவாய் வட்டாட்சி அலுவலர் ராஜேந்திரன், தலித் மக்களை அழைத்துச் செல்ல முடிவு செய்து, அழைத்துச் சென்ற போது எதிர்ப்பாளர்கள் அவரையும் விட்டு வைக்கவில்லை. ஆர்.டி.ஓ. ராஜேந்திரன் தடுத்து நிறுத்தப்படுகின்றார். வணக்கப் பயணம் வன்முறைப் பயணமாக மாறியது.

இங்கு நாம் தலித் மக்களை நோக்கி அன்புடன் கேட்க விரும்புகின்ற ஒரு கேள்வி, மறுக்கின்ற ஆலயத்தில் மறுபடியும், மறுபடியும் நுழைய முயற்சி செய்வதில் என்ன பயன்? மதியாத வாசலை ஏன் மீண்டும் மீண்டும் மிதிக்க வேண்டும்?

இது தான் நாம் அவர்களிடம் முன்வைக்கின்ற கேள்வி. உங்களை மதித்து அழைக்கும் ஆலயத்தை நோக்கிப் பயணம் செய்ய வேண்டியது தானே!

பள்ளிவாசல்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன. மனிதன் தன்மானம் மிக்கவன். அழையா விருந்தாளியாக, பிழையாகக் கூடப் பிற இடங்களுக்குச் செல்ல மாட்டான்.

அப்படிப்பட்ட மனிதனின் தன்மானத்தை மதிக்கும் வகையில் இந்தப் பள்ளிவாசல்கள், “தொழுகையை நோக்கி வாருங்கள்; வெற்றியை நோக்கி வாருங்கள்” என்று எழுப்புகின்ற பாங்கோசை மூலம், மனிதனை – தன் பக்தனை இறைவன் அழைக்கிறான்.

கட்டியணைக்கக் காத்திருக்கிறேன் என்று அழைக்கின்ற ஆலயத்தின் அன்பு அழைப்பை விட்டு விட்டு, எட்டி உதைக்கின்ற ஆலயத்தை நோக்கிப் பயணம் செய்யலாமா? இது தலித் மக்களிடம் நாம் முன்வைக்கின்ற கனிவான கேள்வி!

மணியடித்து மக்களை அழைக்கும் ஆலயங்கள் உண்டு. முரசு கொட்டி மக்களை அழைக்கும் ஆலயங்கள் உண்டு.

ஆனால் பாசப் பெருக்குடன், அன்பு இழையோட, பதமான வார்த்தைகளில் பக்தனை தன் பக்கம் அழைக்கின்ற அழகிய பாங்கு அழைப்பு முறை இஸ்லாமிய ஆலயங்களான பள்ளிவாசல்களில் மட்டுமே உண்டு.

ஒரு வேளை, இரு வேளை என்றில்லாமல் ஐவேளைகள் அழைக்கும் இந்த ஆலயங்களுக்கு வாருங்கள் என்று தலித் மக்களை அன்புடன் அழைக்கிறோம்.

உள்ளூர் பள்ளிகள் மட்டும் இம்மக்களை அன்பு கூர்ந்து அழைக்கவில்லை. உலக முஸ்லிம்களின் உன்னத உயர் பள்ளியான புனித மக்கா ஆலயமும் அவர்களை அழைக்கின்றது.

அகிலத்தின் நேர்வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.

அல்குர்ஆன் 3:96

தீண்டாமை தடுப்புச் சுவர்கள்

கோவை நகரின் முக்கியப் பகுதிகளில் ஒன்று ஜீவா நகர். இதற்கு அருகில் உள்ளது பெரியார் நகர். இந்த இரு பகுதிகளுக்கும் அருகில் உள்ள முக்கியமான காமராஜர் சாலை.

காமராஜர் சாலைக்கு பெரியார் நகரைச் சேர்ந்தவர்கள் வர வேண்டும் என்றால் ஜீவா நகர் வழியாக வருவது தான் சுருக்கமான பாதையாகும். இல்லாவிட்டால் சுற்றிக் கொண்டு சாலையை அடைய வேண்டும்.

இந்த நிலையில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஜீவா நகரைச் சேர்ந்தவர்கள், அங்குள்ள மாநகராட்சி இடத்தில், ஒரு விநாயகர் கோவிலைக் கட்டினார்கள். பின்னர் அதற்கு அருகில் பெரியார் நகர் தலித் மக்கள் வர முடியாத அளவுக்கு 6 அடிக்கு 3 அடி என்ற கணக்கில் தடுப்புச் சுவரையும் கட்டி விட்டனர்.

இதனால் பெரியார் நகர் ஆதி திராவிடர் காலனியில் வசித்து வரும் 58 குடும்பங்களைச் சேர்ந்தவர்களால் ஜீவா நகர் வழியாக வர முடியாத நிலை ஏற்பட்டது.

இந்தச் சுவரை இடிக்கக் கோரி பல விதங்களில் போராடி வந்தனர் பெரியார் நகர் மக்கள்.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.உமாநாத்துக்கு தலித் மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவைப் பார்த்த ஆட்சித் தலைவர் அந்தச் சுவரை இடித்துத் தள்ளுமாறு மாநகராட்சி ஆணையர், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அங்கு சென்று சம்பந்தப்பட்ட சுவரை இடித்துத் தள்ளினர். இதன் மூலம் பெரியார் நகர் தலித் மக்கள் ஜீவா நகர் வழியாக செல்ல இருந்து வந்த தடை விலகியது.

ஏற்கனவே மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் பல வருடங்களாக தலித் மக்களையும், இன்னொரு பிரிவு மக்களையும் பிரிக்கும் வகையில் இருந்து வந்த நீண்ட சுவரின் ஒரு பகுதியை சில மாதங்களுக்கு முன்பு போலீஸார் இடித்துத் தள்ளினர் என்பது நினைவிருக்கலாம்.

மதுரை உத்தமபுரம், கோவை ஜீவா நகர் சாதிய தடுப்புச் சுவர்களை, தீண்டாமை தடைக் கற்களை தகர்த்தெறிய, தலித் மக்கள் விடுதலையும் விமோசனமும் பெறுவதற்கு வழி ஆலயப் பிரவேசம் தான். அந்த ஆலயப் பிரவேசத்திற்குத் தான் தலித் மக்களை அழைக்கின்றோம்.

இதற்கு ஒரே நிபந்தனை, யாராலும் படைக்கப்படாத, யாராலும் பெறப்படாத, யாரையும் பெறாத, இணையில்லாத, உணவு – தாம்பத்திய உறவு என்ற தேவைகள் அற்ற அந்த ஒரே ஒரு இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். முஹம்மது நபியை அந்த ஒரே இறைவனின் தூதர் என்று நம்ப வேண்டும்.

இந்த ஒரு நிபந்தனை தான்! சாதிகள் பறந்து விடும்; சகோதரத்துவம் மலர்ந்து விடும்