ஹதீஸ் கலை ஆய்வு – தொடர் 8
மதம் மாறியவனைக் கொல்ல வேண்டுமா?
சரியான அறிவிப்பாளர் தொடருடன் பதிவு செய்யப்பட்ட ஹதீஸ்களில் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களையும், அவை எவ்வாறு குர்ஆனுடன் மோதுகின்றன என்பதைப் பற்றியும், மாற்றுக் கருத்தில் உள்ளவர்கள் இச்செய்திகளுக்குக் கொடுக்கும் விளக்கத்தைப் பற்றியும், எது சரியான விளக்கம் என்பதைப் பற்றியும் இத்தொடரில் பார்த்து வருகிறோம்.
இதில் முதலாவதாக, “பருவ வயதை அடைந்தவருக்குப் பால் புகட்டுதல்’ தொடர்பாக இடம் பெற்ற ஹதீஸின் தரத்தைப் பார்த்தோம்.
அடுத்ததாக, மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்ற கருத்தில் கூறப்படும் ஒரு ஹதீஸை ஆய்வு செய்வோம்.
இஸ்லாத்தை விட்டு விட்டு வேறொரு மதத்தைத் தழுவியன் இஸ்லாமிய அரசாங்கத்தால் கொல்லப்பட வேண்டும் என்ற கருத்தை பல அறிஞர்கள் தவறுதலாகக் கூறி வருகிறார்கள். இதற்கு அவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
“எவன் தன் மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறானோ அவனைக் கொன்று விடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3017
இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான செய்தி என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. இந்த ஹதீஸை நாம் மறுக்கவுமில்லை. எதிர் தரப்பினர் ஆதாரமாகக் காட்டும் இந்த ஹதீஸ் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவனைக் கொல்ல வேண்டும் என்ற ஒரு கருத்தை மட்டும் தராமல் பல கருத்துக்களைத் தரக் கூடிய விதத்தில் அமைந்துள்ளது.
இவற்றில் எது குர்ஆனுக்கு முரணாக உள்ளதோ அந்த அர்த்தத்தைக் கொடுக்காமல் குர்ஆனுடன் ஒத்துப் போகின்ற பொருளைக் கொடுக்க வேண்டும் என்று நாம் கூறுகிறோம்.
எதிர் தரப்பினர் இந்த ஹதீஸிலிருந்து விளங்கிய தவறான கருத்தை நாம் மறுப்பதால் இந்த ஹதீஸையே நாம் மறுப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் உண்மையில் இந்த ஹதீஸை நாம் மறுக்கவில்லை. முரண்படாத விதத்தில் விளக்கம் தான் தருகிறோம். இந்த ஹதீஸ் பின்வரும் பொருள்களைத் தருகின்றது.
- இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்து கொண்டே இஸ்லாமிய கோட்பாடுகளை மாற்ற நினைப்பவனைக் கொல்ல வேண்டும்.
- முஸ்லிமாக இருந்தவன் வேறொரு மதத்தைத் தழுவியதோடு இஸ்லாமிய அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்பட்டால் அவனைக் கொல்ல வேண்டும்.
- முஸ்லிமாக இருந்தவன் வேறொரு மதத்தைத் தழுவினால் அவன் இஸ்லாமிய அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படாவிட்டாலும் அவனைக் கொல்ல வேண்டும்.
- ஒரு மதத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவன் அவன் ஏற்றுக் கொண்ட மதம் எதுவாக இருந்தாலும் அந்த மதத்தில் இருந்து கொண்டே அதன் கொள்கையை மாற்றம் செய்து குழப்பத்தை ஏற்படுத்தினால் அவன் கொல்லப்பட வேண்டும்.
- ஒருவனுடைய மார்க்கம் எதுவாக இருந்தாலும் அவன் எதை மார்க்கம் என்று கடைப்பிடிக்கிறானோ அதை விட்டும் விலகி இன்னொரு மார்க்கத்திற்குச் சென்று விட்டால் அவனைக் கொல்ல வேண்டும். இந்த அடிப்படையில் இந்து மதத்தைக் கடைப்பிடிப்பவன் இஸ்லாத்திற்கு வந்தாலோ அல்லது இந்து மதம் அல்லாத வேறு மதங்களுக்குச் சென்றாலோ அவனைக் கொல்ல வேண்டும்.
மேற்கண்ட ஐந்து கருத்துக்களில் நான்காவது மற்றும் ஐந்தாவது கருத்தை இந்த ஹதீஸ் தரவில்லை என்பதில் நாமும் எதிர் தரப்பினரும் ஒன்றுபட்டுள்ளோம். முதல் இரண்டு கருத்தையும் இந்த ஹதீஸ் கொடுக்கும் என்பதில் நாமும் எதிர் தரப்பினரும் ஒத்துப் போகிறோம். ஏனென்றால் முதலாவது மற்றும் இரண்டாவது வகையினர் இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்படுவதால் தான் கொல்லப் படுகிறார்கள். மதம் மாறியதற்காக அல்ல!
மூன்றாவது கருத்தான, “மதம் மாறியவன் இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்படாவிட்டாலும் அவனைக் கொல்ல வேண்டும்’ என்பதில் தான் நமக்கும் அவர்களுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.
எதிர் தரப்பினர் கூறும் மூன்றாவது கருத்தை ஏற்றுக் கொண்டால் இஸ்லாத்தில் நிர்பந்தம் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் திருக்குர்ஆன், இஸ்லாத்தை ஏற்கும் விஷயத்தில் மக்களுக்குச் சுதந்திரத்தை வழங்கியுள்ளது.
மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை
இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் 2:256
மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை என்று அல்லாஹ் கூறிவிட்டு, அதற்கான காரணத்தையும் இணைத்தே சொல்கிறான். வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது என்பதே அந்தக் காரணம்.
சத்தியம் எது? அசத்தியம் எது? என்று தெளிவாகச் சொல்லப்பட்டு விட்டது. ஆகையால் இஸ்லாம் என்ற சத்தியத்தை யாருடைய நிர்பந்தமும் இல்லாமல் இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
இவ்வளவு தெளிவான மார்க்கத்தில் நிர்பந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குர்ஆன் கூறுகிறது.
“இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது” என்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும். அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதி நீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம்.
அல்குர்ஆன் 18:29
(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திப்பீரா?
அல்குர்ஆன் 10:99
இஸ்லாத்தை ஏற்கும் படி யாரும் யாரையும் நிர்பந்திக்க முடியாது. ஏனென்றால் நேர்வழி காட்டுதல் என்பது அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது. அப்படியிருக்க நாம் ஒருவரை நிர்பந்தித்தால் அவர் நேர்வழி பெற்றுவிட முடியாது. எனவே இஸ்லாத்தைக் கட்டாயமாக ஒருவன் மீது திணிப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் இஸ்லாம் அனுமதி தரவில்லை.
அறிவுரை கூறுவீராக! (முஹம்மதே!) நீர் அறிவுரை கூறுபவரே. அவர்களுக்கு நீர் பொறுப்பாளி அல்லர். புறக்கணித்து (ஏக இறைவனை) மறுப்பவன் தவிர. அவனை மிகக் கடுமையாக அல்லாஹ் தண்டிப்பான். அவர்களுடைய மீளுதல் நம்மிடமே உள்ளது. பின்னர் அவர்களை விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது.
அல்குர்ஆன் 88:21
நபி (ஸல்) அவர்களுக்கும். மக்களுக்கும் உள்ள தொடர்பை இந்த வசனம் தெளிவாக எடுத்துரைக்கிறது. இஸ்லாம் உண்மைக் கொள்கை என்பதை அந்த மக்களுக்கு எடுத்துச் சொல்வது தான் நபி (ஸல்) அவர்களின் மீது கடமை. அவர்களை அடக்கி இஸ்லாத்தைப் பின்பற்றச் செய்யும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை.
நபியவர்களின் உபதேசத்தை ஏற்காமல் ஒருவன் புறக்கணித்தால் அவனை இந்த உலகத்தில் எதுவும் செய்ய இயலாது. மாறாக அவனை விசாரித்து அவனுக்குத் தண்டனை தருகின்ற அதிகாரம் தனக்கு மட்டும் இருப்பதாக இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
“(ஏக இறைவனை) மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு” என (முஹம்மதே!) கூறுவீராக!
அல்குர்ஆன் 108வது அத்தியாயம்
நபி (ஸல்) அவர்கள் கூறும் கொள்கையும் இணை வைப்பாளர்களின் கொள்கையும் ஒன்றல்ல. இரண்டுக்கும் மாபெரும் வித்தியாசம் உள்ளது. எனவே நான் உங்கள் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் படி என்னை நீங்கள் நிர்பந்திக்காதீர்கள். என் கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி நான் உங்களை நிர்பந்திக்க மாட்டேன் என்று கூறுமாறு நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான்.
இணை கற்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுபவர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.
அல்குர்ஆன் 9:6
இணை வைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களிடத்தில் அடைக்கலத்தை எதிர்பார்த்து வரும் நேரத்தில் அவர்கள் இஸ்லாத்தில் நுழைந்தால் தான் அடைக்கலம் கிடைக்கும் என்று நிர்பந்திக்குமாறு அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடவில்லை.
இணை வைப்பாளர்களை நிர்பந்திப்பதற்குரிய சூழ்நிலைகள் அமைந்தாலும் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வார்த்தையைக் கேட்கச் செய்ய வேண்டுமே தவிர இஸ்லாத்தில் இணையும் படி வற்புறுத்தக் கூடாது என்பதே அல்லாஹ்வின் கட்டளை.
வளரும் இன்ஷா அல்லாஹ்