ஹதீஸ் கலை ஆய்வு தொடர்: 9
மதம் மாறியவனைக் கொல்ல வேண்டுமா?
குர்ஆனுடன் ஒத்துப் போகாத விளக்கம்
மதம் மாறிகளைப் பற்றி குர்ஆன் பல இடங்களில் பேசுகிறது. இந்த இடங்களில் மதம் மாறிகளைக் கொல்ல வேண்டும் என்ற சட்டத்தைப் பொருத்திப் பார்த்தால் அசாத்தியமான விஷயங்களைக் குர்ஆன் சொல்கிறது என்ற முடிவுக்கு வர வேண்டி வரும். எந்த வகையிலும் இவர்கள் கூறும் சட்டத்தை வசனங்களுடன் பொருத்த முடியாது.
நம்பிக்கை கொண்டு, பின்னர் (ஏக இறைவனை) மறுத்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பின்னர் மறுத்து, பிறகு (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. அவர்களுக்கு வழி காட்டுபவனாகவும் இல்லை.
அல்குர்ஆன் 4:137
இஸ்லாத்தை ஏற்றுவிட்டு பின்னர் மறுத்தவனைக் கொல்ல வேண்டும் என்பது இஸ்லாமியச் சட்டமாக இருந்தால் இஸ்லாத்தை ஏற்று விட்டு மறுத்தவுடன் மதம் மாறியவன் கொல்லப்பட்டு விடுவான். மீண்டும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கான அவகாசம் அவனுக்குக் கிடைக்காது. ஆனால் இந்த வசனத்தில் இஸ்லாத்தை ஏற்று மறுத்த பிறகும் இஸ்லாத்தை ஏற்பதைப் பற்றிச் சொல்லப்படுகிறது.
மதம் மாறியவன் கொல்லப்பட வேண்டும் என்ற சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் செயல்படுத்தியிருந்தால் இரண்டாவது தடவையும் ஒருவனால் எப்படி இஸ்லாத்தில் நுழைந்திருக்க முடியும்? இதன் பின்பு அவன் எப்படி மீண்டும் மறுத்திருக்க முடியும்? மதம் மாறியவர்கள் கொல்லப்படாமல் இருந்தால் தான் இது சாத்தியம்.
உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும், மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
அல்குர்ஆன் 2:217
மதம் மாறியவர்களைக் கொல்வது சட்டமாக இருந்திருந்தால் “உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக கொல்லப்பட்டவர்களின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விடும்’ என்று அல்லாஹ் கூறியிருப்பான். பொதுவாக எல்லோரும் எப்படி மரணிக்கிறார்களோ அது போன்ற மரணத்தையே மதம் மாறியவர்கள் குறித்து அல்லாஹ் கூறுகிறான்.
மதம் மாறியவர்கள் திருந்துவதற்கு அவர்கள் மரணிக்கும் வரை அல்லாஹ் கால அவகாசம் கொடுக்கிறான். அதற்குள் அவர்கள் திருந்தி விட்டால் அவர்கள் செய்த செயல்கள் பாதுகாக்கப்படும். அவர்கள் நரகிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். மரணிக்கும் வரை திருந்துவதற்கு அவகாசம் அல்லாஹ்வால் தரப்பட்டிருக்கும் போது மதம் மாறியவுடன் அவர்களைக் கொல்லுவது என்பது இறை வாக்கிற்கு எதிரான செயல்.
தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்து, இத்தூதர் (முஹம்மத்) உண்மையாளர் என்று விளங்கி, நம்பிக்கை கொண்டு விட்டு பிறகு மறுத்த கூட்டத்திற்கு அல்லாஹ் எவ்வாறு நேர் வழி காட்டுவான்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் ஏனைய (நன்) மக்களின் சாபமும் உள்ளது என்பதே அவர்களுக்கான தண்டனை. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதன் பின்னர் திருந்தி சீர்திருத்திக் கொண்டோரைத் தவிர (மற்றவர்களுக்கு) வேதனை இலேசாக்கப் படாது. அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 3:86
இந்த வசனத்தை நன்கு கவனித்துப் பார்த்தால் மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்ற சட்டத்தை அல்லாஹ்வும். அவனது தூதரும் சொல்லவேயில்லை என்று முடிவு செய்து விடலாம். மதம் மாறியவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான் என்று இவ்வசனம் கூறுகிறது. மதம் மாறியதற்காகக் கொல்லப்பட்டு விட்டவர்களுக்கு நான் நேர்வழி காட்ட மாட்டேன் என்று அல்லாஹ் சொன்னால் அது பொருத்தமாக அமையாது. மாறாக அவர்கள் உயிருடன் இருந்தால் தான் இந்த வாசகத்தைக் கூற முடியும்.
மதம் மாறிய பிறகு திருந்தியவர்களை மன்னிப்பதாக அல்லாஹ் கூறுகிறான். இறைவனுடைய இந்த மன்னிப்பு மனிதன் மரணிக்கும் வரை இருக்கிறது. மதம் மாறியவர்கள் கொல்லப்பட்டு விட்டால் அவர்களால் எப்படித் திருந்த முடியும்? அல்லாஹ் அவர்களை எப்படி மன்னிப்பான்?
விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன்.
அல்குர்ஆன் 16:125
இந்த வசனத்தில் எவ்வாறு அழைப்புப் பணியைச் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுக்கிறான். விவேகம், அழகிய அறிவுரை, அழகான வாதம் இவற்றின் மூலம் அழைப்புப் பணியைச் செய்யுமாறு கட்டளையிடுகிறான். ஒருவரை நிர்பந்தித்து இஸ்லாத்திற்கு இழுத்து வருவது விவேகமாகுமா? அழகிய அறிவுரையாகுமா? அல்லது அழகிய விவாதமாகுமா?
நிர்பந்தம் இருந்தால் விவாதம் எதற்கு?
இணை வைப்பாளர்கள் வைத்த வாதங்களை திருக்குர்ஆன் குறிப்பிட்டுக் கூறி அதற்கான பதிலையும் தருகிறது. சிந்தித்துப் பார்த்து இம்மார்க்கத்தைக் கடைப்பிடிக்கும் படி கூறுகிறது.
முஸ்லிம்கள் கூட அல்லாஹ்வுடைய வசனங்களைக் கேட்கும் போது செவிடர்கள், குருடர்களைப் போன்று அதை ஏற்கக் கூடாது என்று உபதேசம் செய்கிறது.
இஸ்லாம் நிர்பந்தத்தைப் போதிக்கின்ற மார்க்கமாக இருந்தால் கண்மூடித்தனமாக அனைத்தையும் ஏற்றுக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்வதற்குப் பதிலாக சிந்திக்கும் படி ஏன் சொல்கிறது? நிர்பந்தம் உள்ள இடத்தில் சிந்தனைக்கு வேலை இல்லை.
மாற்றார்களிடத்தில் அழகிய முறையில் விவாதம் செய்யும் வழிமுறையை இஸ்லாம் கற்றுக் கொடுப்பதாலும், மனிதர்களைச் சிந்திக்கத் தூண்டுவதாலும் இஸ்லாம் என்பது சிந்தித்து மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய மார்க்கம் தான்; யாரையும் நிர்பந்தமாக இஸ்லாத்தில் இணையச் சொல்கின்ற மார்க்கம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
வேதமுடையோரில் அநீதி இழைத்தோரைத் தவிர மற்றவர்களிடம் அழகிய முறையில் தவிர வாதம் செய்யாதீர்கள்! “எங்களுக்கு அருளப்பட்டதையும், உங்களுக்கு அருளப்பட்டதையும் நம்புகிறோம். எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஒருவனே! நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்” என்று கூறுங்கள்!
அல்குர்ஆன் 29:46
குôஆனை வைத்து இணை வைப்பாளர்களிடத்தில் ஜிஹாத் செய்யுமாறு குர்ஆன் கட்டளையிடுகிறது. கொலை மிரட்டல் விடுத்து நிர்பந்திக்கும் மார்க்கமாக இஸ்லாம் இருந்தால் குர்ஆனை வைத்து இணை வைப்பாளர்களிடத்தில் தர்க்கம் செய்யுங்கள் என்று கட்டளையிடாது. ஏனென்றால் விவாதம் செய்து அவர்களை இஸ்லாத்திற்குக் கொண்டு வருவதை விட நிர்பந்தம் செய்தால் பயந்து கொண்டு எளிதில் இஸ்லாத்தில் நுழைந்து விடுவார்கள். ஆனால் இதை அல்லாஹ்வோ. அவனது தூதரோ விரும்பாததால் விவாதம் செய்வதையே கற்றுத் தந்துள்ளார்கள்.
எனவே (ஏக இறைவனை) மறுப்போருக்கு நீர் கட்டுப்படாதீர்! இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் கடுமையாகப் போரிடுவீராக!
அல்குர்ஆன் 25:52
குர்ஆன் கூறாத தண்டனை
குர்ஆன் பல இடங்களில் மதம் மாறியவர்களைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் ஒரு இடத்தில் கூட அவர்களைக் கொல்ல வேண்டும் என்று கூறவே இல்லை. விபச்சாரம், அவதூறு, திருட்டு போன்ற தவறான செயல்களுக்குத் தான் இஸ்லாம் இந்த உலகத்தில் தண்டனைகளைத் தருகிறது. ஆனால் தவறான நம்பிக்கைகளுக்கு மறுமையில் அவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனையைக் கூறியே எச்சரிக்கிறது.
இந்த உலகத்தில் இவர்களுக்கு இப்படி ஒரு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றால் கண்டிப்பாக இந்தத் தண்டனையைக் கூறி மனிதர்களை எச்சரித்திருக்கும். ஆனால் திருட்டு, அவதூறு, விபச்சாரம் போன்ற குற்றங்களுக்கு இந்த உலகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தண்டனையைக் கூறிய குர்ஆன் எந்த ஒரு இடத்திலும் மதம் மாறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூறவே இல்லை.
நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள்.
அல்குர்ஆன் 5:54
மதம் மாறினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். மதம் மாறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்ற சட்டம் இஸ்லாமியச் சட்டமாக இருந்தால் அதைச் சொல்ல வேண்டிய பொருத்தமான இடம் கூட இது தான். ஆனால் இந்த இடத்தில் மதம் மாறினால் நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்று அல்லாஹ் கூறாமல் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்கும் இன்னொரு கூட்டத்தை நான் கொண்டு வருவேன் என்று தான் சொல்கிறான்.
ஒரு உயிரைக் கொல்வது சம்பந்தமான இந்தப் பெரிய பிரச்சனைக்கு சரியான தெளிவான ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் குர்ஆனுடன் மோதுகின்ற விளக்கத்தைத் தான் இவர்களால் கூற முடிகிறது.
பெயரளவில் முஸ்லிமாக வேண்டுமா?
மனப்பூர்வமாக இஸ்லாத்தை ஏற்றால் தான் அவன் இறை நம்பிக்கையாளனாக இருக்க முடியும். மதம் மாறியவனுடைய உள்ளம் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறது. உள்ளம் சம்பந்தப்பட்ட இந்த நோய்க்கு மருத்துவம் காண அவனுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்வது, அவனது கேள்விகளுக்கு முறையான விளக்கங்ளைக் கொடுப்பது விவாதம் புரிவது போன்ற வழிகளைத் தான் கடைப்பிடிக்க வேண்டும்.
கொலை செய்வதாக அவனை அச்சுறுத்துவது ஒரு போதும் இந்நோய்க்குரிய மருந்தாகாது. எனவே தான் மதம் மாறியவர்களுக்கு மறுமையில் தண்டனை இருப்பதாகக் குர்ஆன் கூறுகிறது. இந்த உலகத்தில் அவர்களுக்கு எந்தத் தண்டனையையும் விதிக்கவில்லை.
உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒருவன் இஸ்லாத்திற்கு வந்தால் அவனுடைய இஸ்லாம் அல்லாஹ்விற்குத் தேவையானதல்ல. அவனது வணக்க வழிபாடுகள் நற்செயல்கள் இவை அனைத்தையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான். இதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மறுத்ததும், சோம்பலாகவே தொழுது வந்ததும், விருப்பமில்லாமல் (நல் வழியில்) செலவிட்டதுமே அவர்கள் செலவிட்டவை அவர்களிடமிருந்து ஏற்கப்படுவதற்குத் தடையாக இருக்கிறது.
அல்குர்ஆன் 9:54
எந்தக் காரியத்தில் யாருக்கும் எந்த நன்மையும் இல்லையோ அந்த வேலையைச் செய்யுமாறு இஸ்லாம் சொல்லாது. நிர்பந்தமாக இஸ்லாத்தில் தள்ளப்பட்டவனுக்கு இந்த நன்மையான காரியங்களால் எந்த விதமான நன்மையும் மறுமையில் கிடைக்காது.
மதம் மாறியவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற சட்டம் தூய இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்காது. மாறாக இஸ்லாத்தை மனதளவில் வெறுத்துக் கொண்டு, இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்படும் நயவஞ்சகர்களைத் தான் உருவாக்கும்.
வளரும் இன்ஷா அல்லாஹ்