மறுவுலக நம்பிக்கை

மறுவுலக நம்பிக்கை

மாபெரும் சக்தியான அந்த அல்லாஹ், மனிதனை மறுமை உலகில் மறுபடியும் எழுப்புவான் என்ற கொள்கையையும் உள்ளத்தில் பதிய வைக்கின்றது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன் முதலில் இந்த நம்பிக்கையைப் போதிக்கும் போது அம்மக்கள் அதை ஏற்க மறுத்தனர். அப்போது தான் அல்குர்ஆன் ஓர் அறிவார்ந்த அறிவியல் வாதத்தை வைத்தது.

பூமியை வறண்டதாக நீர் காண்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. அதன் மீது தண்ணீரை நாம் இறக்கும் போது அது செழித்து வளர்கிறது. இதை உயிர்ப்பிப்பவன் இறந்தோரை உயிர்ப்பிப்பவன். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 41:39

காய்ந்து போன ஒரு மாங்கொட்டையை மண்ணில் பதிக்கும் போது, அதற்கு உயிர் கொடுத்து, மரமாகத் தழைக்கச் செய்யும் அந்த இறைவன், மனிதனை மீண்டும் தழைக்கச் செய்ய மாட்டானா? என்ற கேள்வியை முன்வைத்தது.

மறுமையை மறுக்கும் மனிதனை நோக்கி மற்றொரு கேள்வியையும் எழுப்பியது.

மறு உலகு உண்டா? என்று வாதம் புரியும் மனிதனே! ஒரு நூறாண்டு காலத்திற்கு முன்னால் உன் வரலாறு என்ன? உனது ஊர் என்ன? உன் பெயர் என்ன? நீ எங்கிருந்து வந்தாய்?

குறிப்பிட்டுச் சொல்லப்படும் ஒரு பொருளாக (கூட) இல்லாத ஒரு காலம் மனிதனுக்கு இருந்ததில்லையா?

அல்குர்ஆன் 76:1

இல்லாமையிலிருந்து வெளிவந்து, இப்போது ஒரு பொருளாகக் காட்சியளிக்கின்றாயா? அப்படிப்பட்ட உன்னை மரணிக்கச் செய்து, மீண்டும் உனக்கு உயிர் கொடுத்து எழுப்புவது எனக்குச் சிரமமா? என்ற கேள்வியைத் தான் அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் எழுப்புகின்றான்.

இதை இன்னொரு வசனத்தில் தெளிவாகக் குறிப்பிடுகின்றான்.

நான் இறந்து விட்டால் இனி மேல் உயிருள்ளவனாக எழுப்பப் படுவேனா?” என்று மனிதன் கேட்கிறான். “முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் அவனைப் படைத்தோம்என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா?

அல்குர்ஆன் 19:66, 67

எவராலும் பதிலளிக்க முடியாத இந்தக் கேள்விக் கணைகள் அன்றைய அரபக மக்கள் மத்தியில், மறுமை உலகம் உண்டு என்ற நம்பிக்கையைப் பதித்தது.

தூதரின் தூய வாழ்க்கை

அத்துடன் முஹம்மது என்ற தூதரின் வாழ்க்கையும் மறுமையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது. உலக வாழ்வில் பொய் சொல்லாத ஓர் உத்தமர் மறுமை வாழ்வு விஷயத்தில் ஏன் பொய் சொல்லப் போகின்றார்? என்ற நல்லெண்ணமும் அவர்களிடத்தில் மறு உலக நம்பிக்கையை ஏற்படுத்தியது.

மறுமை என்றால் என்ன?

மறுமை நம்பிக்கை என்று சொல்லும் போது அப்படியென்றால் என்ன? என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த உலகம் முழுவதும் அழிக்கப்பட்டு இன்னொரு உலகம் உருவாகும். அது தான் மறு உலகமாகும். அங்கு, இவ்வுலகில் தோன்றிய முதல் மனிதரிலிருந்து கடைசி மனிதர் வரை அனைவரும் எழுப்பப்பட்டு அவர்கள் அனைவரும் விசாரிக்கப்படுவர். அந்த விசாரணை இரு வகையில் அமைந்திருக்கும்.

  1. மனிதன் இறைவனுக்கு எதிராகச் செய்த பாவங்கள்.
  2. மனிதன், தனது சக மனிதனுக்கு எதிராகவும் இதர பிராணிகளுக்கு எதிராகவும் செய்த பாவங்கள்.

சுவனம்

மனிதன் இறைவன் இட்ட கட்டளைப்படி நடந்திருந்தால், சக மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் நன்மை செய்திருந்தால் அவனுக்குச் சுவனம்! அது நிரந்தரமான, அழியாத பெரு வாழ்வு! அங்கு மரணமே கிடையாது. அவன் என்றென்றும் அங்கு தங்கியிருப்பான்.

இவ்வுலகில் சக மனிதர்களுக்கும், பிராணிகளுக்கும் நன்மை செய்ததற்குப் பரிசாக அங்கு உணவு, உடை, அழகிய மனைவிகள் என அனைத்து வசதிகளையும் அந்தச் சுவனத்தில் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறான்.

நரகம்

இறைவனின் கட்டளைக்கு மாற்றமாக மனிதன் நடந்திருந்தால், சக மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் தீமைகள் செய்திருந்தால் அவனுக்கு நரகம் தண்டனையாக அளிக்கப்படும். அதில் என்றென்றும் நிலைத்திருப்பான். அங்கு அவனுக்கு அழிவே கிடையாது. காலம் காலமாக அந்த நரகத் தீயில் வெந்து பொசுங்கிக் கொண்டிருப்பான். அங்கு அவனுக்கு மரணம் கிடையாது.

இது தான் மறுமை நம்பிக்கை!

இந்த நம்பிக்கையை முஹம்மது (ஸல்) அவர்கள் அந்த மக்களுக்கு மத்தியில் ஊட்டினார்கள். மிருகமாய் வாழ்ந்த அந்த மனிதர்கள் மனிதர்களாக மாறினார்கள்.

இன்றளவும் சவூதியில் குற்றங்கள் குறைவாக நடப்பதற்கு அடிப்படைக் காரணம் மறுமை நம்பிக்கை தான். அந்த நாட்டில் உள்ள சட்டங்கள் ஒரு காரணம் என்றாலும் அதை விட வலிமையான காரணம் இந்த மறுமை நம்பிக்கை தான்.

ஏற்கனவே கூறியது போன்று சட்டங்கள் சாட்சியங்களை வைத்துத் தான் செயல்பட முடியும். இது சட்டத்திற்கே உரிய பலவீனம்!

அதனால் சட்டத்தை மட்டும் கொண்டு மனித வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் திருக்குர்ஆன் முனையவில்லை.

மக்களின் உள்ளங்களை மாற்றுவதைத் தான் அது முதல் இலக்காகக் கொண்டிருக்கின்றது.

மறுமையில் கிடைக்கும் தண்டனையைத் தான் மக்களிடத்தில் மாறி மாறி எடுத்துக் கூறுகின்றது. இன்னின்ன பாவத்திற்கு, குற்றத்திற்கு இன்னின்ன தண்டனை என்று குற்ற அட்டவணையை வகைப்படுத்தி அதற்குரிய தண்டனையைக் குறிப்பிட்டு விட்டது.

அந்தக் குற்றப் பட்டியலில் இறைவனுக்கு எதிரான பாவங்கள், மனிதனுக்கு எதிரான பாவங்கள் என்ற இரு வகைகள் உள்ளன. அவற்றில் முதல் வகையைப் பார்ப்போம்.

  1. இணை வைப்பு, 2. கொலை, 3. வட்டி.

இந்த மூன்று பாவங்களும் கடவுளுக்கு எதிராகக் கொள்ளப்படும் மிகப் பெரும் பாவங்களாகும். இந்தப் பாவங்களுக்கு, குற்றங்களுக்கு மறுமை உலகில் நிரந்தர நரகம் என்று திருக்குர்ஆன் குறிப்பிட்டு விட்டது.

  1. இணை வைப்பு

குர்ஆனின் பார்வையில் இணை வைப்பு தான் மிகக் கொடிய பாவம்!

லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது “என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!

அல்குர்ஆன் 31:13

இணை வைப்பு என்றால், உயிருள்ள, மரணித்த மனிதர்களையோ, வானவர்களையோ, ஜின், சூரியன், சந்திரன் இன்னபிற பொருட்களையோ கடவுளாக ஆக்கி, இறைவனை வணங்குவது போன்று அவர்களை வணங்குவதாகும்.

கொலை, வட்டி ஆகிய பாவங்களை இறைவன் நினைத்தால் மன்னிப்பான். ஆனால் இணை வைப்புக்கு அந்த மன்னிப்பும் கிடையாது என்று அல்லாஹ் உறுதியாகக் கூறிவிட்டான்.

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

அல்குர்ஆன் 4:48

அல்லாஹ்வின் படைப்புகளை அவனுக்குச் சமமாக ஆக்குகின்ற அந்த இணை வைப்பு எனும் பாவத்தை ஒருவன் செய்து விட்டால் அவனை இறைவன் மன்னிக்கவே மாட்டான் என்று இந்த வசனம் கூறுகின்றது.

நல்வழியும் தீய வழியும்

படைத்த அந்த ஓர் இறைவனை வணங்குவது தான் நல்வழியும் நேர்வழியும் ஆகும். படைத்தவனை விட்டு விட்டு, படைப்பினங்களை வணங்குவது தீய வழியாகும்; அதாவது சாத்தானிய வழியாகும்.

ஷைத்தான் என்பவன் தீய பாதைக்கு அழைக்கின்ற ஒரு சக்தி! அந்தத் தீய சக்தி மனிதனை உண்மையான ஏக இறைவனை வணங்காமல் மற்றவற்றை வணங்கச் செய்கிறான். அதனைத் தொடர்ந்து கொலை, கொள்ளை, மது, சூதாட்டம், விபச்சாரம் என்று எல்லா தீமைகளையும் செய்யுமாறு மனிதனைத் தூண்டுகிறான். அதனால் ஒரே இறைவனை வணங்காத, பல தெய்வங்களை வணங்குகின்ற நாடுகளில் எந்த நாட்டிலும் மது தடுக்கப்படவில்லை. ஆனால் ஒரே இறைவனை வணங்க வேண்டும்; சிலைகளை வணங்கக் கூடாது; நினைவுச் சின்னங்கள் எழுப்பக் கூடாது; சமாதிகள் கட்டப்படக் கூடாது என்ற சட்டங்களைக் கொண்ட சவூதியில் மது இன்று வரை தடுக்கப்பட்டுள்ளது. விபச்சாரத்தைத் தூண்டுகின்ற ஆபாச நடனங்கள், சினிமாக்கள் தடை செய்யப்பட்டுள்ளன

மற்ற நாடுகளில் இது போன்ற பாவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. மது ஆறாக ஓடுகின்றது. அதற்கு அடிப்படைக் காரணமே அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குவது தான். அதனால் தான் எல்லா தீமைகளும் ஒழிக்கப்பட வேண்டும் எனில் முதன் முதலில் இந்த இணை வைப்பு எனும் தீமை அழிக்கப்பட வேண்டும். எல்லா நன்மைகளும் ஏற்பட வேண்டுமானால், அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குகின்ற நன்மை முதலில் நிலை நாட்டப்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் குறியாகவும், நெறியாகவும் கொண்டுள்ளது.

அந்த அடிப்படையில் அது சவூதியில் தன் ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றது. சவூதி ஆட்சியாளர்கள் புனிதர்கள் அல்லர்! எனினும் அவர்கள் இந்த இணை வைப்புப் பாவத்தைச் செய்யாததற்கு ஒரேயொரு காரணம், நாளை மறு உலகத்தில் குற்ற அட்டவணைப் பட்டியலில் முதலாவதாக இடம் பெற்றிருக்கும் இந்தப் பாவத்திற்கு நிரந்தர நரகம் என்பதால் தான்.

  1. கொலை

இது மனிதன், சக மனிதனுக்கு எதிராகச் செய்யும் பாவம் என்ற பட்டியலிலும், இறைவனுக்கு எதிராகச் செய்யப்படும் பாவம் என்ற பட்டியலிலும் இடம் பெற்றுள்ள பெரும் பாவம் ஆகும். இந்தப் பாவத்திற்கும் நிரந்தரத் தண்டனை தான்.

நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அவனைச் சபிக்கிறான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.

அல்குர்ஆன் 4:93

சவூதியில் குற்றங்கள் குறைவாக இருப்பதற்கு சட்டங்கள் ஒரு காரணம் என்றாலும் அதை விட முக்கியமான காரணம் மறுமை நம்பிக்கை தான். கொலை செய்தால் இந்த உலகத்தில் தண்டனை கிடைக்கும் என்பதை விட, மறு உலகத்தில் நிரந்தரத் தண்டனை கிடைக்கும் என்று ஒருவன் பயப்பட ஆரம்பித்தால் நிச்சயமாக இந்தப் பாவத்தைச் செய்யத் துணிய மாட்டான்.

தற்கொலை

பிறரை ஒருவர் கொலை செய்யக் கூடாது என்றால் ஒருவர் தன்னைத் தானே கொலை செய்வதும் கூடாது.

உங்களையே கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:29)

இன்று உலகிலேயே முஸ்லிம்களிடத்தில் தான் தற்கொலை விகிதாச்சாரம் மிக மிகக் குறைவு.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலில் “கால் அப்’ என்ற அமைப்பு தற்கொலை விகிதம் பற்றி 67 நாடுகளில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்துகின்றது.

அந்தக் கருத்துக்கணிப்பில் அது சந்திக்கின்ற ஆள் அந்த வாரத்தில் பள்ளிவாசலுக்கு, சர்ச்சுக்கு வணங்கச் சென்றாரா? என்று அவருடைய மதப்பற்றை மதிப்பீடு செய்கின்றது. அவர் மத சம்பந்தப்பட்ட அமைப்புகளில் தொடர்பு கொண்டிருக்கிறாரா? என்பதையும் விசாரித்து வெளியிட்ட புள்ளி விபர அறிக்கை இங்கு வெளியிடப் பட்டுள்ளது.

 இங்கு இந்த ஆய்வு, குவைத் என்று குறிப்பிட்டிருப்பது அதை ஒரு இஸ்லாமிய நாடாகக் கருதித் தான். அந்தந்த நாட்டு மக்களின் மத நம்பிக்கையின் விகிதாச்சாரமும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

2005-2006ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த ஆய்வின் போது முஸ்லிம்களிடம் தற்கொலை விகிதம் மிக மிகக் குறைவு என்பதைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. இதுபோன்ற ஏராளமான புள்ளி விபரங்கள் உள்ளன. அவை அனைத்தையும் வெளியிட இந்த இதழ் தாங்காது. இவ்வாறு முஸ்லிம்களிடம் தற்கொலை விகிதம் குறைவாக இருப்பதற்குக் காரணம் மறுவுலக நம்பிக்கை தான்.

கொலையைப் போன்றே தற்கொலை என்ற கொடிய பாவத்திற்கும் நிரந்தர நரகம் தான்.

தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்.

யார் ஒரு (கூரான) ஆயுதத்தால் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் தமது கையில் அந்த கூராயுதத்தை வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக்கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் (விஷத்தை கையில் வைத்துக் கொண்டு) நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக அதைக் குடித்துக் கொண்டேயிருப்பார். யார் மலையின் மீதிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டேயிருப்பார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 157

ஒரு முஸ்லிமுக்கு இவ்வுலகில் என்ன சோதனை ஏற்பட்டாலும் தாங்கிக் கொள்கிறான். அவன் தற்கொலை என்ற எல்லைக்கு ஒருபோதும் செல்வதில்லை.

“மகாராஷ்ட்ரா – விவசாயிகளின் மயானம்’ என்ற தலைப்பில் பி.சயினாத் என்பவர், 14.11.2007 அன்று ஹிந்து நாளேட்டில் எழுதிய கட்டுரையில், சென்ற பத்தாண்டில் மட்டும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 30,000 என்று குறிப்பிடுகின்றார்.

தற்கொலையைத் தடுக்க சட்டம் ஏது?

உலகில் எந்த அரசாலும் தற்கொலையை, சட்டத்தின் மூலம் தடுக்க முடியுமா? எவராலும் முடியாது. குர்ஆன் ஊட்டுகின்ற இந்த மறுமைச் சிந்தனையைத் தவிர வேறு எந்தவொரு சிந்தனையாலும் தடுக்கவே முடியாது.

இங்கு தான் குர்ஆன், தன்னை ஓர் இறைவேதம் என்பதை நிரூபித்துக் காட்டுகின்றது.

இறந்தவருக்காக மற்றவர்கள் பிரார்த்தனை செய்யும் விதமாக ஒரு தொழுகை இஸ்லாத்தில் உண்டு. அந்தத் தொழுகையைக் கூட, தற்கொலை செய்தவனுக்காக நடத்தக் கூடாது என்று முஹம்மது (ஸல்) அவர்கள் ரத்துச் செய்து விட்டார்கள். தற்கொலை என்பது இஸ்லாத்தில் எவ்வளவு பெரிய கொடிய பாவம் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

உலகில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு கட்டத்தில் தனக்கு ஏற்பட்ட சோதனையின் சோகத்தின் காரணமாக நொறுங்குவான். அப்போதெல்லாம் அவனுக்கு ஓர் ஆறுதல் அவசியம் தேவை. அந்தத் தேவையை இந்த அல்குர்ஆன் நிறைவேற்றுகின்றது.

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.

அல்குர்ஆன் 13:28

வேதம் என்பது மனிதனை கவலையிலிருந்து காக்க வேண்டும். அந்தப் பணியைச் செய்வதற்குரிய ஒரே தகுதி அல்குர்ஆனுக்கு மட்டும் தான் உள்ளது. அது மட்டும் தான் உலகில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வாகத் திகழ்கின்றது என்பதற்கு தற்கொலைத் தடை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பயங்கரவாதம்

இன்று உலகம் சந்திக்கின்ற மிகப் பெரிய சோதனை, தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலாகும்.

நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அவர்களுக்குப் பின்னால் உள்ள காலத்திலும் நடத்திய இஸ்லாமியப் போர்களில் ஒரு போதும் தற்கொலை முறையைக் கையாண்டதில்லை. காரணம், தற்கொலை இஸ்லாத்தில் மன்னிக்க முடியாத குற்றம் என்பதால் தான்.

இந்தத் தற்கொலைத் தாக்குதல் படலம் தொடங்கியது நமக்குத் தெரிந்த வரையில் 20ம் நூற்றாண்டிலிருந்து தான்.

இந்தத் தற்கொலைத் தாக்குதலைத் தொடங்கி வைத்தது முஸ்லிமல்லாத தீவிரவாதிகள் தான். அவர்களைப் பார்த்து முஸ்லிம் பெயர் தாங்கிகளும் தற்கொலைத் தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்தனர். இதற்கு இஸ்லாமிய ஜிஹாத் என்றும் இவர்கள் பெயர் வைத்துக் கொண்டனர்.

சரியான இஸ்லாமியப் பார்வை, தற்கொலை இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று என்பது தான். இஸ்லாத்திற்கும் தற்கொலைத் தாக்குதல்களுக்கும் கடுகளவு கூட சம்பந்தம் கிடையாது.

இரண்டு நாடுகள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் போரில் கூட, பெண்களையும், குழந்தைகளையும், மதத் தலைவர்களையும் கொல்லக் கூடாது என்று கூறுவது இஸ்லாமிய மார்க்கம். அப்படிப்பட்ட தூய மார்க்கத்தை, அப்பாவிப் பொதுமக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்தி, குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவிக்கும் இந்தக் கோரச் செயலுடன் தொடர்புபடுத்தி ஊடகங்கள் சித்தரிப்பது கொடுமையிலும் கொடுமை!

தற்கொலைத் தாக்குதல் நடத்துபவர்கள் ஒரு போதும் முஸ்லிம்கள் கிடையாது. அதனால் இதை இஸ்லாமிய பயங்கரவாதம் என்று அழைப்பது அநியாயமும் அக்கிரமும் ஆகும். இஸ்லாம் தற்கொலையை ஆதரிக்கவில்லை. மற்ற மதங்கள் தான் ஆதரிக்கின்றன.

  1. வட்டி

குர்ஆனின் பார்வையில் இதுவும் ஒரு கொடிய பாவமும், குற்றமும் ஆகும். கடவுளுக்கு எதிரான பாவங்கள், மனிதனுக்கு எதிரான பாவங்கள் என்ற இரண்டு பட்டியலிலும் இடம் பெறும் பாவங்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாவத்தைச் செய்பவர்களுக்கு நிரந்தர நரகம் என்று குர்ஆன் பிரகடனப்படுத்துகின்றது.

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதேஎன்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்குர்ஆன் 2:275

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கந்து வட்டியை ஒழிப்பதற்கு ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் வட்டியை வைத்தே வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சமுதாயத்திற்கு எதிராக அந்தச் சட்டம் பாய்ந்ததால் அந்தச் சமுதாயம் அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்து, அந்தக் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுத்தது. அந்த அளவுக்கு வட்டிக்காரர்களின் ஆதிக்கம் உள்ளது.

ஆனால் இங்கு இருப்பதைப் போன்று சவூதியில் வட்டிக் கடைகளோ, தனி நபர்களின் கந்து வட்டிகளோ நடத்தப்படவில்லை. இதற்குக் காரணம் அந்தப் பாவம் இறைவனால் மன்னிக்கப்படாது என்ற நம்பிக்கை தான்.

மற்ற பாவங்கள்

மது அருந்துதல்

இப்படி மறுமை நம்பிக்கை மூலமாக இந்த மூன்று பாவங்களை மட்டும் குர்ஆன் அகற்றியுள்ளது என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இந்த மூன்று பாவங்களுக்கும் நிரந்தர நரகம் என்பதால் அவை மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இவையல்லாமல் வேறு பாவங்களும் உள்ளன. அவற்றுக்கு நிரந்தர நரகம் என்று சொல்லப்படவில்லையே தவிர மற்றபடி நரகத் தண்டனை உண்டு. அவற்றில் ஒன்று மது அருந்துதல்.

மது அருந்தும் பாவம் சவூதியில் சட்டத்தின் மூலம் தடுக்கப் பட்டிருந்தாலும், மது வெள்ளமாகப் பாயும் மற்ற நாடுகளில் கூட முஸ்லிம்கள் மற்றவர்களைப் போன்று மது அருந்துவதில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் மறுமை அச்சம் தான்.

விபச்சாரம் செய்தல்

இதே போன்று தான் விபச்சாரம்!

சவூதியில் விபச்சாரத்திற்கு மரண தண்டனை! ஆனால் மற்ற நாடுகளில் அரசு அங்கீகாரத்துடன் விபச்சாரம் நடைபெறுகின்றது. விபச்சாரத்திற்கான அனைத்து வாசல்களும் திறந்து விடப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் விபச்சாரத்தின் பக்கம் செல்வதில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் மறுமை நம்பிக்கை தான்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை இங்கு எடுத்துக் காட்டுவது மிகவும் பொருத்தமாகும்.

புரைதா பின் அல்ஹசீப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மாஇஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (விபசாரக் குற்றத்திற்குரிய தண்டனையை நிறைவேற்றி) என்னைத் தூய்மைப்படுத்துங்கள்என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடு தான்! நீர் திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவனிடம் மீளுவாயாகஎன்று கூறினார்கள்.

அவ்வாறே மாஇஸ் (ரலி) அவர்கள் திரும்பிச் சென்று விட்டு, அதிக நாள் தாமதிக்காமல் திரும்பி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடு தான். நீர் திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி மீளுவீராகஎன்று கூறினார்கள். மாஇஸ் (ரலி) அவர்கள் மறுபடியும் திரும்பிச் சென்று விட்டு அதிக நாள் தாமதிக்காமல் திரும்பி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் முன்பு போன்றே பதிலுரைத்தார்கள். நான்காவது முறை அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எதிலிருந்து உம்மைத் தூய்மைப்படுத்த வேண்டும்?” என்று கேட்டார்கள். அவர், “விபச்சாரக் குற்றத்திலிருந்துஎன்று விடையளித்தார். அப்போது அவர்கள், “இவருக்குப் பைத்தியம் பிடித்துள்ளதா?” என்று கேட்டார்கள். அவர் பைத்தியக்காரர் அல்லர் எனத் தெரிவிக்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள், “இவர் மது அருந்தியுள்ளாரா?” என்று கேட்டார்கள். உடனே ஒரு மனிதர் எழுந்து, அவரது வாயை (ஊதச் சொல்லி) முகர்ந்து பார்த்தார். மதுவின் வாடை வரவில்லை.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீர் விபச்சாரம் செய்தீரா?” என்று கேட்டார்கள். அவர் “ஆம்என்று (வாக்குமூலம்) கூறினார். அவரைக் கொண்டு சென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அவர் தொடர்பாக மக்கள் இரு பிரிவினராக ஆயினர். சிலர், “அவர் அழிந்தார். அவரை அவருடைய குற்றம் சுற்றி வளைத்துக் கொண்டு விட்டதுஎன்று கூறினர். வேறு சிலர், “மாஇஸின் பாவமன்னிப்பை விஞ்சிய பாவ மன்னிப்பு இல்லை. அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தமது கையை நபியின் கையில் வைத்து, “என்னைக் கல்லால் அடித்துக் கொல்லுங்கள்என்று கூறினார்என்றனர். இவ்வாறே இரண்டு அல்லது மூன்று நாட்கள் நகர்ந்தன.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த போது மக்கள் வந்து, சலாம் சொல்லிவிட்டு அமர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) “மாஇஸ் பின் மாலிக்குக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ், மாஇஸ் பின் மாலிக்கின் பிழையைப் பொறுப்பானாக!என்று வேண்டினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரினார். அது ஒரு சமுதாயத்துக்கே பங்கிடப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் அது போதுமானதாகும்என்று கூறினார்கள்.

பிறகு “அஸ்த்குலத்தின் ஒரு கிளையான “ஃகாமித்கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “உனக்குக் கேடு தான்! நீ திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி மீளுவாயாகஎன்று கூறினார்கள்.

அதற்கு அப்பெண், “மாஇஸ் பின் மாலிக்கைத் திருப்பி அனுப்பியதைப் போன்று என்னையும் திருப்பி அனுப்பப் பார்க்கிறீர்கள் என்றே நான் கருதுகிறேன்என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் “என்ன அது?” என்று கேட்டார்கள். அப்பெண், “நான் விபச்சாரத்தால் கர்ப்பமுற்றவள்என்றார்.

நபி (ஸல்) அவர்கள், “நீயா (அது)?” என்று கேட்டார்கள். அப்பெண் “ஆம்என்றார். நபி (ஸல்) அவர்கள், “உமது வயிற்றிலுள்ள மகவைப் பெற்றெடுக்கும் வரை (பொறுமையாக இரு; பிறகு வா!)என்றார்கள். பிரசவிக்கும் வரை அவளைப் பராமரிக்கும் பொறுப்பை அன்சாரிகளில் ஒருவர் ஏற்றுக் கொண்டார்.

பிறகு அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “ஃகாமிதிய்யா குலத்தாளுக்குக் குழுந்தை பிறந்து விட்டதுஎன்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நாம் இப்போது அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப் போவதில்லை. பாலூட்டும் அன்னையின்றி நிற்கும் சிறு வயதுக் குழந்தையாக அவளது பிள்ளையை விட்டு விடவும் நாம் விரும்பவில்லைஎன்று கூறினார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர் எழுந்து, “அவனுக்குப் பாலூட்டும் பொறுப்பு என்னைச் சேர்ந்தது, அல்லாஹ்வின் தூதரே!என்றார். பின்னர் அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

நூல்: முஸ்லிம்

இவ்விருவரும் தப்பு செய்ததை யாரும் அறிந்திருக்கவில்லை. இருப்பினும் இவ்விருவரும் நபியவர்களிடம் வந்து, தாங்கள் குற்றம் செய்ததை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் கொடுத்து, தண்டனையைப் பெற்றதற்குக் காரணம் என்ன? குர்ஆன் ஊட்டிய அந்த மறுமை நம்பிக்கை தான்.

இன்று இவ்வுலகம் விபச்சாரத்தின் பாதையைத் திறந்து விட்டதால் அதன் விளைவு ஹெச்.ஐ.வி. கிருமியின் அபாயகரமான தாக்குதல் ஆகும். இன்று எய்ட்ஸ் தாக்குதலுக்குள்ளான ஒரு தலைமுறையே தோன்றி விட்டது.

ஒன்றுமறியாத பிஞ்சுகள், பச்சிளம் குழந்தைச் செல்வங்கள் தங்களது பெற்றோர் செய்த பாவத்திற்காக இந்தக் கொடிய வைரஸைச் சுமக்கின்றனர். சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டு தவிக்கின்றனர். இப்படிப்பட்ட கொடிய பாவத்தில் எல்லா முஸ்லிம்களும் ஈடுபடாததற்கு அடிப்படைக் காரணம் மறுமை நம்பிக்கை தான். இறந்த பின்னர் நிகழவுள்ள இறைவனின் விசாரணை தான்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இருப்பினும் எடுத்துக் காட்டுக்கு இவை போதும் என்று நிறுத்திக் கொண்டு, மனிதன் சக மனிதனுக்கும் இதர உயிரினங்களுக்கும் செய்யும் தீமைகளைப் பார்ப்போம்.

மனித உரிமை மீறல்

உலகத்தில் மனித உரிமை மீறலுக்கான விசாரணை முடியும் முன்பே அந்தக் குற்றத்தைச் செய்த குற்றவாளி மரணித்து விடுவார். அதாவது, தான் செய்த குற்றத்திற்கு இந்த உலகத்தில் தண்டனை எதுவும் அனுபவிக்காமலேயே மரணித்து விடுவார். ஆனால் இஸ்லாத்தில் அப்படிக் கிடையாது. மனித உரிமை மீறலை நடத்திய குற்றவாளி மறுமையில் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். கொலை, கொள்ளை, வட்டி, பொருளாதார மோசடி, கடன் மோசடி, புறம், கோள் என்று மனித உரிமை மீறல் குற்றப் பட்டியலில் வருகின்ற அனைத்திற்கும் மறுமையில் விசாரணை உண்டு.

வாக்குறுதிக்கும் விசாரணை

சாதாரணமாக ஒருவர் மற்றொருவரிடம் உதவி கேட்கும் போது, “நாளை தருகிறேன்’ என்று சொல்லி விடுவார். அப்படிச் சொல்லும் போது ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே சொல்வார். வாக்குறுதி கொடுத்தது போன்று மறு நாள் அந்த உதவியைச் செய்வதுமில்லை. அதைப் பற்றி அவர் ஒன்றும் கண்டு கொள்வதுமில்லை. இது மனிதர்களுடைய பார்வையில் சிறு பாவம். ஆனால் அல்லாஹ் இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை.

செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.

அல்குர்ஆன் 17:36

அடுத்தவனுடைய உள்ளம் புண்படும்படி எந்த வார்த்தை பேசியிருந்தாலும் அது அல்லாஹ்வுடைய ஏட்டில் பதியப்படுகின்றது.

வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.

அல்குர்ஆன் 50:17, 18

மிருக வதைக்கும் நரக தண்டனை

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு இழைத்த கொடுமைகளுக்காக, மனித உரிமை மீறல்களுக்காக மட்டுமல்ல. மிருக வதைக்கும், மிருக உரிமை மீறலுக்கும் மறுமையில் தண்டனை வழங்கப்படும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது – அல்லாஹ்வே மிக அறிந்தவன் – “நீ அதைக் கட்டி வைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லைஎன்று அல்லாஹ் கூறினான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)

நூல்: புகாரி 2365

இப்படியொரு விசாரணை மன்றத்தை நினைவூட்டி, மக்களிடம் மனித உரிமை மீறல் ஏற்படாமல் திருக்குர்ஆன் தடுக்கின்றது.