மதம் பிளிறும் மராத்திய வெறி

மதம் பிளிறும் மராத்திய வெறி

இந்தியர்களை அடித்துத் தாக்கிக் கொலை செய்வது ஆஸ்திரேலியாவில் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதை இனவெறித் தாக்குதல் என்று குறிப்பிட்டு இந்திய அரசும், இந்திய ஊடகங்களும், பல்வேறுபட்ட அமைப்புகளும் இந்த அக்கிரமத்தைக் கண்டித்தன. இதனை நாம் வரவேற்கிறோம்.

அதே வேளையில், இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய அமைப்புகளுக்கும், ஊடகங்களுக்கும் இந்த இனவெறியைக் கண்டிப்பதற்குத் தார்மீக உரிமை இருக்கின்றதா? என்ற ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகின்றோம். இவ்வாறு கேள்வி எழுப்புவதற்கு சில அடிப்படைக் காரணங்கள் இருக்கின்றன. அந்தக் காரணங்கள் எவை?

இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் பாகிஸ்தான் பங்கெடுக்காதது குறித்து இந்தி நடிகர் ஷாரூக் கான் வருத்தம் தெரிவித்திருந்தார். இவர் ஒரு கடைந்தெடுத்த இறை மறுப்பாளர். பெயரளவில் தன்னை முஸ்லிம் என்று அடையாளப்படுத்திக் கொள்வதால் ஷாரூக் கானை தேசத் துரோகி என்று சித்தரிக்கின்றான் பால் தாக்கரே!

பால் தாக்கரேயும் அவனது பரிவாரமும் ஷாரூக் கான் நடித்த, “மை நேம் இஸ் கான்’ என்ற படத்தை மும்பையில் திரையிட விட மாட்டோம் என்று கொக்கரித்தது. கானின் அந்தப் பேச்சில் எந்தத் துரோகமும் தொனிக்கவில்லை என்பதை இந்த நாடே அறிந்திருக்கின்றது.

பாகிஸ்தான் ஒரு முஸ்லிம் நாடு என்பதற்காகவோ, தான் ஒரு முஸ்லிம் என்ற எண்ணத்திலோ ஷாரூக் கான் வருந்தவில்லை. ஐ.பி.எல். சூதாட்டத்தில் இவர் ஒரு அணியின் உரிமையாளர் என்ற அடிப்படையில் பாகிஸ்தான் பங்கெடுக்காதது கானுக்கு நஷ்டம். அதற்காகத் தான் இந்த வருத்தம்.

ஆனால் பால் தாக்கரே இதை ஒரு விவகாரமாக்கி, ஷாரூக்கானுக்கு எதிராக துவேஷப் பிரச்சாரம் செய்வது இந்திய அரசியல் சட்டத்தின்படி கருத்துச் சுதந்திரத்தைப் பறித்தல் என்பது ஒரு புறமிருக்க, “மராட்டியம் மராட்டியருக்கே! அங்கே பிற மாநிலத்திலுள்ளவர்கள் வாழவும், பிழைக்கவும், சொத்துக்கள் வாங்கவும் உரிமையில்லை’ என்று முழங்கி தனி நாடு கோரிக்கையை முன்வைப்பவன் பால் தாக்கரே!

இது இந்திய அரசு மற்றும் ஊடகங்களின் பார்வையில் மாபெரும் தேசத் துரோகச் செயலாகும்.

ஏனெனில் ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கு மட்டும் தான் அந்த மாநிலம் என்று வாதிட ஆரம்பித்தால் நாடு துண்டு துண்டாகிச் சிதறி விடும். இந்த அடிப்படையில் இது தேச விரோதச் செயலாக இருந்தாலும் சிவசேனாவைப் பொறுத்த வரை இதை தேச பக்தி என்று கூறிக் கொள்கிறது.

சொந்த நாட்டிலேயே மராத்தி அல்லாத பிற மொழி பேசுவோர் மீது மராத்திய நவநிர்மாண் சேனாவின் வெறியர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு அடிப்படைக் காரணம் மராத்திய இனவெறி தான். இப்படி ஒரு இனவெறியைத் தன்னிடம் வைத்துக் கொண்டு ஆஸ்திரேலியாவின் இனவெறியை எப்படி இவர்கள் கண்டிக்க முடியும்?

இந்த இனவெறியைக் கண்டிப்பதற்கு ஒரே தகுதி, அருகதை, உரிமை இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் முஸ்லிம்களுக்கு மட்டுமே உள்ளது.

காரணம், இஸ்லாம் மட்டும் தான் இனவெறி, மொழி வெறி, குலவெறி, நாட்டு வெறி (இதற்கு மறு பெயர் தான் தேச பக்தி) அனைத்தையும் அறுத்தெறிந்து உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று முழங்குகின்றது; மனிதம் காக்கின்றது; சகோதரத்துவம் பேணுகின்றது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

அல்குர்ஆன் 49:13

இஸ்லாத்தின் இந்தக் கொள்கை, இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டால் இங்குள்ள தீண்டாமை ஒரு நொடியில் ஒரேயடியாக மறையும்.

முல்லைப் பெரியாறு பிரச்சனை இல்லை! காவிரி நதி நீர் பிரச்சனை இல்லை! கிருஷ்ணா நதி நீர் பிரச்சனை இல்லை! மராத்திய இனவெறி இல்லை! தமிழ் இனவெறி இல்லை! ஆஸ்திரேலிய இனவெறி இல்லை!

உலகெங்கிலும் இனவெறி இருக்காது. வெள்ளையன், கருப்பன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இருக்காது. அமைதியே உலகின் எல்லை என்றாகி விடும். அதற்குத் தேவை உலகெங்கும் இஸ்லாமிய மயமாவதே!