மறைவழியில் பிறை பார்ப்போம்

மறைவழியில் பிறை பார்ப்போம்

கே.எம். அப்துந் நாசிர்

ரமளான் மாதம் வந்து விட்டாலே பிறை விஷயத்தில் குழம்பிய கூட்டத்தினர் குழப்பம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாகக் குழப்ப ஆரம்பித்து விடுகின்றனர். அந்த வரிசையில் இந்த வருடம் புதிதாக ஒரு வழிகெட்ட பிரிவினர் தோன்றியுள்ளனர். குர்ஆன், சுன்னா அடிப்படையில் நாம் எடுத்து வைக்கும் வாதங்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் முன்னோர்கள் கூறியுள்ளார்களா? இமாம்கள் கூறியுள்ளார்களா? எனக் கேட்டு மீண்டும் வந்த வழியே திரும்பிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் மார்க்கம். இந்த இஸ்லாத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் சட்டம் கூற முடியாது. மார்க்கம் என்ற அடிப்படையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் இறை வழிகாட்டுதல்களின் பிரகாரம் உள்ளதாகும். இறைவனுடைய வஹீ செய்தியைத் தவிர ஸஹாபாக்கள், இமாம்கள், அறிஞர்களின் சொந்தக் கூற்றுகளை மார்க்கம் எனக் கருதுபவர்கள் இஸ்லாத்தில் இல்லாத மூன்றாவது ஒரு அடிப்படையை உருவாக்கிவிட்டனர் என்பதே உண்மையாகும். இதோ இறைவன் கூறுவதைப் பாருங்கள்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!

அல்குர்ஆன் 7:3

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (ஏக இறைவனை) மறுப்பவர்கள்.

அல்குர்ஆன் 5:44

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்

அல்குர்ஆன் 5:45

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள்.

அல்குர்ஆன் 5:47

மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் இறைவனிடமிருந்து வந்த வஹீ செய்தி மட்டும் தான் இஸ்லாம் என்பதை நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன. குர்ஆன் ஹதீஸ் மட்டும் போதாது. முந்தைய கால அறிஞர்கள் கூறியிருந்தால் தான் மார்க்கமாக ஏற்றுக் கொள்வோம் என்று ஒருவன் கூறினால் அவன் இறைச் செய்தி மட்டும் தான் இஸ்லாம் என்பதை மறுத்தவனாவான். இது நம்மை இறைவனுக்கு இணை வைக்கும் பெரும்பாவத்தின் பக்கம் கொண்டு போய் சேர்த்து விடும்.

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர்.

அல்குர்ஆன் 9:31

யூத, கிறித்தவர்கள் இறைச் செய்தியை மட்டும் பின்பற்றாமல் இறைச் செய்தியை மறுத்து தங்களுடைய அறிஞர்கள் மற்றம் மதபோதகர்களின் கருத்தைப் பின்பற்றிய காரணத்தினால் அவர்கள் காஃபிர்களாகி விட்டார்கள் என்பதை மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் எச்சரிக்கை செய்கின்றான். இத்தகைய நிலைக்குச் செல்வதை விட்டும் அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக. இறைச் செய்தியாகிய குர்ஆன் மட்டும் நபிவழியில் நாம் நம்முடைய வணக்க வழிபாடுகளுக்காக பிறையை எவ்வாறு தீர்மானிக்க வேண்டும் என்பது தெளிவாக வழிகாட்டப்பட்டுள்ளது. இதைத் தவிர வேறு யாரின் பக்கமும் நாம் தேவையாக வேண்டிய அவசியமில்லை.

ரமளானை அடைதல்

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்

அல்குர்ஆன் 2:185

பிறை சம்பந்தமான முக்கியமான ஆதாரமாக இந்த வசனம் அமைந்துள்ளது.

உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். என்று அல்லாஹ் கூறுகிறான்.

*              அம்மாதத்தை ஒருவர் அடைந்திருக்கும் போது மற்றவர் அடைந்திருக்க மாட்டார்.

*              ஒருவர் ரமளானை அடைந்த பின் இன்னொருவர் ரமளானை அடைவார்.

இப்படி இருந்தால் மட்டுமே யார் ரமளானை அடைகிறாரோ என்று கூற முடியும்.

எல்லோரும் ஒரே நேரத்தில் மாதத்தை அடைகிறார்கள் என்பது சிலரது வாதம். ஆனால் எல்லோரும் ஒரே நேரத்தில் அடைய மாட்டார்கள் என்பது திருக்குர்ஆன் கருத்து. யார் அடைகிறாரோ என்று நாம் மொழியாக்கம் செய்த இடத்தில் ஷஹித என்ற அரபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் ஷஹித என்பதற்கு நாம் செய்த மொழியாக்கம் தவறானதா என்றால் நிச்சயமாக இல்லை. இதற்கு முன் யாரும் செய்யாத ஒன்றா என்றால் அதுவுமில்லை என்பது தான் இதற்கு நமது விடையாகும்.

ஜான் டிரஸ்ட் வெளியிட்ட தமிழாக்கத்தில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்று தான் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே யாரும் செய்யாத தமிழாக்கம் அல்ல இது.

தமிழில் வெளியான எல்லா தர்ஜுமாக்களிலும் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்றே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஷஹித என்பதன் நேரடியான பொருள் அடைந்தான் என்பது தான். யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்று தான் எல்லா விரிவுரையாளர்களும் விளக்கம் அளித்துள்ளனர்.

ஆக ஷஹித என்பதற்கு யார் அடைகிறாரோ என்று நாம் பொருள் செய்திருப்பது நூறு சதவிகிதம் சரியானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நேரடியான பொருளைக் கொடுத்து அது பொருந்தியும் போகிறதென்றால் வேறு எந்த விளக்கவுரையும் தேவையில்லை. இன்னும் சிலர் வேறு விதமாக ஆட்சேபிக்கின்றனர். யார் அம்மாதத்திற்கு சாட்சியாக இருக்கிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்பது தான் இதன் பொருள் என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஷஹித என்பதற்கு அடைகிறாரோ என்று பொருள் உள்ளது போல் சாட்சி கூறுதல் என்ற பொருளும் உண்டு என்பதில் சந்தேகமில்லை. இந்த வசனத்தில் இவ்வாறு பொருள் கொள்ள முடியாது. பொருள் கொள்ளக் கூடாது என்பது தான் நமது வாதம். பல அர்த்தங்களைக் கொண்ட சொற்கள் எல்லா மொழிகளிலும் உண்டு. அதற்காக அந்த அர்த்தங்களில் எதை நாம் விரும்புகிறோமோ அதைச் செய்து விட முடியாது. அச்சொல் பயன்படுத்தப்பட்ட இடத்தைக் கவனித்து, எந்த அர்த்தம் பொருத்தமாக இருக்கிறது என்பதையும் கவனித்துத் தான் பொருள் செய்ய வேண்டும்.

யார் சாட்சியாக உள்ளாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்று பொருள் கொண்டால் ஊரில் நாலைந்து பேர் தான் நோன்பு நோற்க வேண்டும். ஏனெனில் ஊரில் உள்ள எல்லா மக்களும் பிறை பார்த்ததாக சாட்சி கூற மாட்டார்கள். ஏனெனில் எல்லா மக்களும் பிறை பார்க்க மாட்டார்கள். எனவே, “யார் சாட்சியாக இருக்கிறாரோ’ என்ற அர்த்தத்தைச் செய்தால் 99 சதவிகிதம் பேர் நோன்பு நோற்கத் தேவையில்லை என்ற விபரீதமான கருத்து வந்து விடும்.

எனவே இவ்வசனத்தைக் கவனமாகச் சிந்தித்தால் அனைவரும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ரமளானை அடைவார்கள் என்ற கருத்தைத் தரும் அனைத்து வாதங்களும் தவறானவை என்பது தெளிவாகும். சிலர் ஃபமன் ஷஹித என்ற வார்த்தைக்கு யார் சாட்சி பெற்றுக் கொள்கிறார்களோ என்று பொருள் செய்கின்றனர். இப்படி ஒரு அர்த்தம் அந்த வார்த்தைக்குக் கிடையாது.

மேக மூட்டத்தின் போது…

அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1909

உலகில் எங்காவது பார்த்தால் போதும் என்று பொருள் கொள்ள இந்த ஹதீஸின் பிற்பகுதியே தடையாக நிற்கிறது.

உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள் என்ற வாசகமே அது.

உலகில் எங்காவது பார்த்தால் போதும் என்றால் இந்த பிற்பகுதி தேவையில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் எப்போதும் மேகமாக இருக்காது. எங்காவது மேகமில்லாத பகுதி இருக்கும். அங்கே பார்த்து உலகுக்கு அறிவிக்கலாம். உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் என்ற வாசகம் ஒவ்வொரு பகுதியிலும் பிறை பார்க்க வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கியே நிற்கிறது.

எனவே மேற்கண்ட ஹதீஸின் பொருள் இது தான். ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்த்து நோன்பு வைக்க வேண்டும். பிறை பார்த்து நோன்பை விட வேண்டும். மேகமூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ள வேண்டும்.

மதீனாவைச் சுற்றிலும் உஹது போன்ற பெரும் மலைகள் இருந்தன. அம்மலைகளின் உச்சியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டும் வந்தது. அப்படியிருந்தும் மேகமூட்டம் ஏற்படும் நாட்களில் பிறை தென்படுகிறதா என்று மலையின் மீது ஏறி தேடிப் பார்க்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. கட்டளையும் இடவில்லை; ஆர்வமூட்டவுமில்லை.

மேக மூட்டமாக இருந்தால் அந்த நாளை முப்பதாவது நாளாகக் கருதிக் கொள்ளுங்கள் என்று எளிமையான தீர்வை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டார்கள்.

சிரியாவில் பார்ப்பது மதீனாவுக்குப் பொருந்தாது

உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் என்னை சிரியாவிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமளானின் தலைப்பிறை தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள். பின்னர் பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். “நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்?” என்று (என்னிடம்) கேட்டார்கள். “நாங்கள் வெள்ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம்” என்று கூறினேன். “நீயே பிறையைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். “ஆம், (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள்” என்று கூறினேன். அதற்கவர்கள் “ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில் தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம்” என்றார்கள். “முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப் போதாதா?” என்று கேட்டேன். அதற்கவர்கள், “போதாது! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: குரைப்

நூல்: முஸ்லிம்

தானும் பிறை பார்த்து முஆவியாவும் பார்த்து மக்களும் பார்த்த விபரத்தை குரைப் கூறுகிறார். இதற்குப் பிறகும் இப்னு அப்பாஸ் (ரலி) ஏற்க மறுக்கிறார்கள். எங்கள் பகுதியில் பிறையை நாங்கள் காண வேண்டும். இல்லாவிட்டால் முப்பது நாட்கள் என்று முடிவு செய்து கொள்வோம் என்று விடையளிக்கிறார்கள்.

இவ்வளவு பேர் பார்த்திருக்கிறோமே அது போதாதா என்று கேட்டதற்கு போதாது என்று விடையளித்து விட்டு இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர் எனக் காரணத்தைக் கூறுகிறார்கள்.

சிரியாவில் முப்பது நாட்கள் முழுமையாகி விட்டது என்று குரைப் வந்து நேரடியாகக் கூறுவது தொலைத் தொடர்பு சாதனங்களில் கேட்பதை விட உறுதியான விஷயம். அதை இப்னு அப்பாஸ் (ரலி) மறுக்கின்றார் என்றால் தெலை தூரத்தில் பிறை பார்க்கப்பட்டால் அதை ஏற்கக் கூடாது என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரியவில்லையா?

கிராமமும் நகரமும்

ரமளானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டனர். பெருநாள் தொழுகை தொழும் திடலுக்குச் செல்லுமாறும் கட்டளையிட்டனர். 

அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ், நூல்: அபூதாவூத் (1992)

கிராமப்புறங்கள் அந்தந்த நகர்ப்புறங்களின் ஒரு பகுதியாகும். எனவே நகரத்தில் காணப்படும் பிறை சுற்றியுள்ள கிராமங்களையும், சுற்றியுள்ள கிராமங்களில் காணப்படும் பிறை நகரத்தையும் கட்டுப்படுத்தும்.

இவ்வாறு பொருள் கொண்டால் இரண்டுக்கும் எந்த முரண்பாடும் இல்லை.

முந்தைய நிகழ்ச்சி தத்தமது பகுதிக்கு அப்பால் இருந்துது வந்த தகவலை ஏற்கலாகாது எனக் கூறுகிறது. பிந்தைய நிகழ்ச்சி நம்முடைய பகுதியில் ஓரிடத்தில் பிறை பார்க்கப்பட்டால் அது நம்முடைய பகுதி அனைத்தையும் கட்டுப்படுத்தும் என்பதைக் கூறுகிறது.

நம்முடைய பகுதி என்பது எத்தனை கிலோ மீட்டர் என்று நபியவர்கள் கூறவில்லை. நாமே தீர்மானம் செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதைப் பின்னர் விளக்கியுள்ளோம்

முந்தைய கால அறிஞர்களின் கருத்துக்கள்

முந்தைய கால அறிஞர்கள் பிறை விஷயத்தில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட ஏராளமான கருத்துக்களைக் கூறியுள்ளனர். ஒருவன் குர்ஆன், சுன்னாவை மட்டும் பின்பற்றாமல் முந்தைய கால அறிஞர்களின் கூற்றின்படி தான் செயல்படுவேன் என்று கூறினால் நிச்சயமாக அது வழிகேடு மட்டுமில்லாமல் அவ்வாறு பின்பற்றுவது சாத்தியமற்ற ஒன்றாகும். உலகப்பிறை என்று இக்காலத்தில் கூறுபவர்கள் கூட முந்தைய கால அறிஞர்களில் தங்களுக்குச் சாதகமாகக் கூறியவர்களின் கருத்தை மட்டும் தான் எடுத்துக் கொள்கிறார்களே தவிர தங்களுக்கு எதிரான ஏராளமான அறிஞர்களின் கருத்தை மறுத்து விடுகின்றனர்.

இமாம் நவவி (ரஹ்) அவர்களின் நிலைப்பாடு

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எந்தக் கருத்தைக் கூறுகிறதோ அதுதான் சரியானது என்றே இமாம் நவவி (ரஹ்) கூறியுள்ளார்கள். ஆனால் சில இமாம் நவவீ உலகப் பிறையை ஆதரித்ததாகப் பொய் கூறியுள்ளனர். இதோ இமாம் நவவி (ரஹ்) அவர்களின் கருத்தைப் பாருங்கள்.

ஒரு ஊரில் ரமளானிலே (மக்களாகிய) அவர்கள் பிறையைப் பார்த்து விட்டார்கள். அதனை மற்றொரு ஊரார் பார்க்கவில்லை என்றால் அந்த இரண்டு ஊர்களும் மிக நெருக்கமாக இருந்தால் அந்த இரண்டுக்குரிய சட்டமும் ஒரே ஊரைப் போன்று தான். மற்றொரு ஊராரின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும். இதில் எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது.

அந்த இரண்டு ஊர்களும் மிகத் தூரமானதாக இருந்தால் பிரபலமான இரண்டு வழிமுறைகள் உள்ளன.

அந்த இரண்டில் மிகச் சரியானது: (தூரமாக) உள்ள மற்றொரு ஊரார் மீது நோன்பு கடமையாகாது.  இந்த கருத்தைத் தான் நூலாசிரியரும், ஷைஹ் அபூ ஹாமித், அல்பின்தனீஜீ, இன்னும் மற்றவர்களும் உறுதிப்படுத்துகின்றனர். இன்னும் இமாம் அப்தரீ, ராஃபிஈ, இன்னும் அதிகமானவர்கள் இதைத் தான் சரியானது எனக் கூறுகின்றனர்.

இரண்டாவது கருத்து: (தூராமாக உள்ள ஊராரும்) நோன்பு நோற்பது கடமை. இதனை அஸ்ஸய்மரீ என்பவர் கூறுகிறார். இதனை காளீ அபூ தய்யிப், தாரமீ, அபூ அலீ அஸ்ஸின்ஜீ, இன்னும் மற்றவர்களும் சரியானது எனக் கூறுகின்றனர். முதல் கருத்துதான் சரியானதாகும்  (நூல்: அல்மஜ்மூஃ   பாகம்: 6 பக்கம்: 273)

அதாவது ஒரு ஊரில் பிறை பார்க்கப்பட்டால் அதனுடைய சட்டம் மிகத் தூரமாக உள்ள மற்றொரு ஊருக்குப் பொருந்தாது என்பது தான் இமாம் நவவீ அவர்களின் கருத்தாகும்.

குரைப் என்பார் அறிவிக்கும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் ஹதீஸிலிருந்து அனைத்து இமாம்களும் தத்தமது பகுதியில் பிறை பார்த்தே தீர்மானிக்க வேண்டும் என்றே கூறியுள்ளனர்.

முஸ்லிமிற்கு விரிவுரை எழுதிய இமாம் நவவி (ரஹ்) கூறுவதைப் பாருங்கள்.

ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே (கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்). ஓர் ஊரில் பிறை பார்த்தால், வெகு தொலைவில் உள்ளவர்களுக்கு அது பொருந்தாது.

(முஸ்லிம் 1983வது ஹதீஸின் தலைப்பு)

ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே (கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்)

(திர்மிதி 693வது ஹதீஸின் தலைப்பு)

பிறை பார்ப்பதிலே பகுதிகளுக்கு மத்தியில் வேறுபாடுகள் இருக்கும்.

(நஸாயீ 2111 ஹதீஸின் தலைப்பு)

தாங்கள் பார்க்கும் பிறைக் கணக்கின் அடிப்படையில் தான் ஒவ்வொரு ஊராரின் மீதும் ரமளான் நோன்பு கடமையாகும். மற்றவர்கள் பார்க்கும் பிறையின் அடிப்படையில் அல்ல என்பதற்கான ஆதாரம்.

(இப்னு குஸைமா 1916வது ஹதீஸின் தலைப்பு)

மேற்கண்ட அனைத்தும் குரைப் என்பார் அறிவிக்கும் ஹதீஸிற்கு இமாம்கள் இட்ட தலைப்புகள் ஆகும். அதாவது ஒரு ஹதீஸிலிருந்து தாங்கள் விளங்கும் கருத்தையே இமாம்கள் தலைப்பாக இடுவார்கள். எனவே மேற்கண்ட இமாம்கள் அனைவரும் உலகப் பிறை ஆதாரமற்றது என்ற கருத்தில் உள்ளவர்களே என்பது தெளிவாகிறது.

உண்மையான முஃமின்களுக்கு இறைச் செய்தி மட்டுமே போதுமானதாகும். ஆனால் தவறான கொள்கையுடைய சிலர் முந்தைய கால அறிஞர்களைக் கூறி தங்களின் தவறான கருத்தை உண்மையாக்கப் பார்ப்பதால் தான் நாம் இந்தக் கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளோம்.

எனவே ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்த்து அல்லது தத்தமது பகுதியில் இருந்து வரும் உறுதியான பிறைத் தகவலின் அடிப்படையில் தான் நோன்பு மற்றும் வணக்க வழிபாடுகளைத் தீர்மானிக்க வேண்டும்.

ஒவ்வொரு பகுதியினரும் தத்ததமது பகுதியாக எதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உரிமையை நபியவர்கள் மக்களிடம் கொடுத்துள்ளார்கள். இதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.

“நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ

பிறை விஷயத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு அனைத்தும் இறைவனுடைய வஹீயான குர்ஆன் மற்றும் சுன்னாவிலிருந்து கூறப்படுபவையாகும். யாருடைய சொந்தக் கருத்தோ மனோ இச்சையோ அல்ல. எனவே அனைத்து விஷயங்களிலும் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படக்கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக.