மனிதனை வாழ வைக்கும் மரண தண்டனை

மனிதனை வாழ வைக்கும் மரண தண்டனை

சவூதியின் தலைநகர் ரியாத் அருகில் அமைந்த தவ்ஆத்மி என்ற ஊரில் நாயிஃப் என்பவரது வீட்டில் இலங்கையைச் சேர்ந்த ரிசானா நாஃபிக் என்பவர் பணிப்பெண்ணாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நாயிஃபின் மகன் காலித் என்ற நான்கு மாதக் குழந்தை இப்பெண்ணின் பாதுகாப்பில் இருக்கும் போது கொல்லப்பட்டு விடுகின்றது. காவல்துறை விசாரணை, பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் ரிசானாவின் வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சவூதி நாட்டுச் சட்டத்தின்படி – உயிருக்கு உயிர் என்ற குர்ஆனிய சட்ட அடிப்படையில் கடந்த ஜனவரி 9, 2013 அன்று ரிசானாவுக்குத் தலை வெட்டப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டது தான் தாமதம், பன்னாட்டு அரசுகள், மனித உரிமை ஆணையங்கள், ஐ.நா. சபை உள்ளிட்ட அத்தனையும் இதை வன்மையாகக் கண்டிக்கத் துவங்கி விட்டன. உலகளாவிய இந்த விமர்சனங்களுக்கு சவூதி அரசு என்ன பதில் சொல்கின்றது என்று விடையும் விளக்கமும் தேடிய போது, “எங்களது அரசாங்கம் நீதித்துறையில் தலையிடாது. சவூதியின் நீதித்துறை சுதந்திரமானது” என்பது தான் சவூதி அரசாங்கம் சொல்கின்ற ஒரு வரி பதில். உண்மையும் அதுதான்.

குற்றவாளி, சவூதி மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டால் கொலையாளிக்கு மரண தண்டனை தான். சவூதி அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அடிப்படையில் இந்தத் தண்டனையை நிறைவேற்றிவிடவில்லை.

காவல்துறையிலிருந்து இந்த வழக்கு பொது நீதிமன்றத்திற்குச் செல்கின்றது. அதன் பின்னர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் செல்கின்றது. அங்கும் இந்தக் குற்றம் உறுதி செய்யப்படுகின்றது. இதன் பின்னர் உச்சநீதிமன்றத்திற்குச் செல்கின்றது. அங்கும் குற்றம் உறுதி செய்யப்பட்ட பின் மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றது. இதைத் தான் உலக நாடுகள் விமர்சனம் செய்கின்றன.

இந்த விமர்சனத்தில் தமிழகத்திலுள்ள அறிவுஜீவிகள் என்று சொல்லிக் கொள்பவர்களும் சேர்ந்து கொண்டு, இஸ்லாமிய மார்க்கத்தை விமர்சிக்க ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இதில் சேர்ந்து கொள்கின்றார். அவருடைய விமர்சனத்தின் ஒரு பகுதியைப் பாருங்கள்.

“போலீசார் என்னைத் தடியால் அடித்தார்கள். குழந்தையின் கழுத்தை நெரித்ததாகக் கூறுமாறு சொல்லி அடித்தார்கள். அப்படிக் கூறாவிட்டால் எலக்ட்ரிக் ஷாக் கொடுப்பதாகக் கூறினார்கள். என்னை வலியுறுத்தி அவர்கள் எழுதிய பேப்பரில் கையொப்பமிடச் செய்தார்கள். அல்லா மீது ஆணையாக நான் குழந்தையைக் கொல்லவில்லை. கழுத்தை நெறிக்கவில்லை”

இப்படி ரிசானா சொன்னதாக கருணாநிதி கதை வசனம் போன்று எழுதியுள்ளார். சவூதி காவல்துறை ஒன்று கருணாநிதியின் கைவசம் இருந்த காவல்துறை இல்லை. ஒரு குற்றம் நடந்தவுடன் யாரேனும் ஒரு அப்பாவியைப் பலிகடாவாக்கி, அவனை அடித்துத் துன்புறுத்தி, மிரட்டி குற்றத்தை ஒப்புக் கொள்ள வைத்து கொலையாளி ஆக்குகின்ற வேலையை இவர் முதல்வராக இருந்த போது காவல்துறை செய்தது.

இந்திய அளவில் காவல்துறையின் செயல்பாடுகள் இப்படித் தான் இருந்து வருகின்றன. அதிலும் முஸ்லிம்கள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு, மாலேகான் குண்டு வெடிப்பு, அஜ்மீர் குண்டுவெடிப்பு ஆகியவற்றில் முஸ்லிம்களே பலிகாடாவாக்கப்பட்டனர். பின்னர் இந்துத்வாவின் பயங்கரவாதச் செயல்கள் இவை என உறுதியான பின் விடுவிக்கப்பட்டனர். இதுபோன்ற ஒரு நிர்ப்பந்தம் சவூதி அரசாங்கத்துக்குக் கிடையாது.

இந்திய நீதித்துறையை எடுத்துக் கொண்டால், பாபரி மஸ்ஜித் வழக்கு இதற்கு நிதர்சனமான எடுத்துக்காட்டு. முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளி என்று தெரிந்தும் பெரும்பான்மை என்ற நிர்ப்பந்தத்திற்குப் பயந்து, இதுவரை இந்த வழக்கை இழுத்தடித்து வருகின்றது. இதனால் பல்வேறு வகுப்புக் கலவரங்கள், உயிரிழப்புக்கள், பொருளாதாரச் சேதங்கள் என்று விளைவுகளும் விபரீதங்களும் நீண்டு கொண்டே செல்கின்றன.

இப்படி ஒரு நிர்ப்பந்தம் சவூதி நீதிமன்றங்களுக்கு ஒருபோதும் கிடையாது. அதனுடைய பார்வை எல்லாம் ஒன்றே ஒன்று தான். மனித உயிர் புனிதமானது. அந்த உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டால் அதற்குப் பரிகாரம் உயிர் தான். பறிக்கப்பட்டது பச்சிளம் குழந்தையின் உயிராக இருந்தாலும் சரி தான்.

ஒவ்வொரு மரண தண்டனையின் போதும் சவூதி உள்துறை அமைச்சகம் ஓர் அறிக்கையை வெளியிடும். அதேபோன்று ரிசானா விவகாரத்திலும் வெளியிட்டது. அந்த அறிக்கையில் மிக முக்கியமாகக் கூறப்படும் செய்தி, “அடுத்தவர் உயிரைப் பறிப்பவருக்கு இது தான் கதி’ என்று குறிப்பிடுகின்றது.

இப்படி ஒரு தண்டனை இருக்கும் போது தான் அடுத்தவன் உயிரை ஒருவன் அநியாயமாகப் பறிக்க மாட்டான். ஆம்! மனித உயிரைப் பாதுகாக்கும் ஒரு கவசமாக இந்தச் சட்டம் திகழ்கின்றது. இதைத் தான் திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள்.

அல்குர்ஆன் 2:179