மண்டியிட வைத்த தொண்டி விவாதம்

மண்டியிட வைத்த தொண்டி விவாதம்

கே.எம். அப்துந் நாசிர், கடையநல்லூர்

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன்.

அல்குர்ஆன் 16:125

நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர்! அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர்! உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்!என்று அவர்கள் கூறினர்.

அல்குர்ஆன்  11:32

சத்தியத்தையும் அசத்தியத்தையும் தெளிவாகப் பிரித்துப் பார்ப்பதற்கு விவாதக் களம் காண்பதும் அவசியம் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

சத்தியத்தை நிரூபிப்பதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு போதும் பின்வாங்கியதில்லை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சத்தியப் பிரச்சாரப் பணியில் ஒரு மைல் கல் தான் மார்ச் 29 அன்று தொண்டியில் நடைபெற்ற விவாதமாகும்.

விவாத அரங்கில் நடைபெற்ற வாதப் பிரதிவாதங்களை இங்கே விரிவாக அலச வேண்டிய அவசியமில்லை. விவாதத்தின் நேரடிக் காட்சிகளும், அதற்கு முன்பாக ஜனவரி 20 அன்று நடைபெற்ற விவாத ஒப்பந்த காட்சிகளும் சிடிக்களாக மாற்றப்பட்டு ஆங்காங்கே மக்களைச் சென்றடைந்து கொண்டிருக்கின்றன. அசத்தியவாதிகளின் ஆணிவேர் அடியோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விவாதத்தின் பின்னால் ஒளிந்துள்ள சிலரின் முகமூடிகளைக் கிழித்தெறிவது அவசியமானதாகும். விவாதம் மௌலவி முஜீபுர் ரஹ்மான் அவர்களுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் நடந்ததாக மக்கள் நினைக்கலாம். ஆனால் குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து கொண்டு சூரிய ஒளியின் மகிமையை அறிந்திராத சிலரும் இதன் பின்னால் ஒளிந்து கொண்டுள்ளனர். அவர்கள் தங்களை வெள்ளை மனமுடையோர் போன்று காட்டிக் கொண்டாலும் அவர்களின் வாய்களிலிருந்தே பகைமை வெளியாகி விட்டது. அவர்களின் உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பது அதை விட அதிகம். உண்மையில் இவர்கள் மனத்தூய்மையான மார்க்கப் பற்றின் காரணமாக நம்மை விமர்சிக்கவில்லை. மாறாக நம்மீது கொண்டுள்ள தனி மனித குரோதத்தினாலேயே மார்க்க ரீதியாக உண்மையை அறிந்து கொண்டே நாம் தவறிழைத்து விட்டதாக நம்மை விமர்சிக்கின்றனர். உள்ளத்தில் உள்ளதை நான் அறிந்து கூறுகின்றேன் என்று வாதிக்க வரவில்லை. இதற்குச் சில சான்றுகளை உங்கள் முன் தருகின்றேன்.

இலங்கையைச் சார்ந்த ஜமால் முகம்மது மதனீ என்பவர் திருக்குர்ஆன் தொகுப்பு வரலாறு தொடர்பாக நம்முடைய தெளிவான கருத்துக்களை தப்பும் தவறுமாக விமர்சனம் செய்துள்ளார். இவர் தன்னுடைய விமர்சனத்தோடு நிறுத்தியிருந்தால் இவரிடம் குரோதம் இருப்பதாக நாம் வாதிக்க மாட்டோம். மாறாக இலங்கையைச் சார்ந்த இவர், தமிழ் நாட்டில் 25 ஆண்டுகாலமாக தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகளிலோ இயக்கப் பணிகளிலோ எதிலும் பங்கெடுக்காத இவர் இயக்கரீதியாக மிகவும் பாரதூரமான அவதூறுகளை  தொடுக்கின்றார். இவரைப் பற்றி மரியாதையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு தகுதியற்ற வகையில் தலைப்பிற்குத் தொடர்பில்லாத விமர்சனங்களைச் செய்துள்ளார். இவரைப் போன்று இன்னொருவர் ரில்வான் மதனீ என்பவர். இவர்கள் மார்க்க விஷயத்தில் கொண்டுள்ள கருத்து வேறுபாடுகளால் மட்டும் நம்மை விமர்சிப்பதாகக் காட்டிக் கொண்டாலும் இவர்களின் செயல்பாடுகள் இவர்களின் தனி மனித குரோதங்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

நாம் சிலரை விமர்சிக்கும் போது சில நேரங்களில் கடுமையாக விமர்சனம் செய்கின்றோம். அது பெரும்பாலும் நாம் முதலில் செய்கின்ற விமர்சனமாக இருக்காது. மாறாக அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு நிகரான பதிலடியாகவே அமைந்திருக்கும்.

திருக்குர்ஆன் தர்ஜமா தொடர்பாக தொண்டியில் நடைபெற்ற விவாதமும் இவர்கள் தூய மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக மனத்தூய்மையோடு விவாதம் செய்தார்கள் என்று கருதுவதற்கு இடமில்லை. தர்ஜமா தொடர்பாக முஜீப் செய்த விமர்சனத்தை அறிந்த சகோதரர்களுக்கு இது தெள்ளத் தெளிவானதாகும்.

ஹதீஸ்களை மறுப்பதற்குரிய வழிகளை திறந்து வைத்து விட்டார் என்றெல்லாம் மிகக் கடுமையான பல வார்த்தைப் பிரயோகங்களை வைத்து, தர்ஜமாவை கைகளில் உயர்த்தி உயர்த்திக் காட்டி ஜித்தா, பஹ்ரைன், மேலப்பாளையம், மதுரை ஜாக் தாயிகள் மீட்டிங், தமுமுக தலைமையகம் போன்ற பல இடங்களில் இவர் திரும்பத் திரும்ப என்னென்ன வாதங்களை எடுத்து வைத்தாரோ, எதை பிரம்மாண்டப்படுத்திக் காட்டினாரோ அதில் எந்த ஒன்றையும் விவாதக் களத்தில் அவர் வாழ்கின்ற காலத்திலேயே எடுத்து வைப்பதற்கு இவரால் இயலவில்லை.

முஜீப் அவர்கள் பல இடங்களில் உரையாற்றும் போது சில குறிப்பிட்ட விஷயங்களைத் தான் எடுத்து வைத்தார். 1. பால் குடி தொடர்பான ஹதீஸ் 2. தாவூத் நபி தொடர்பான விஷயம் 3. சுலைமான் நபி 99 மனைவிமார்களோடு ஒரே இரவில் உறவு கொண்டதாக வரக்கூடிய செய்தி 4. சொர்க்கம் நரகம் அழிக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்படும்  என்பது போன்ற செய்திகளைத் தான் தர்ஜமாவில் உள்ள மாபெரும் தவறுகளாக ஊருக்கு ஊர் பேசினார். இவையல்லாமல் திருக்குர்ஆன் தொகுப்பு வரலாறு தொடர்பாக மேலோட்டமாகவும், “இன்ன’ என்ற வார்த்தைக்குப் பொருள் செய்யாதது தொடர்பாகவும் சூனியம் தொடர்பாகவும், முதஷாபிஹாத் வசனங்கள் தொடர்பாகவும், ஷஃபாஅத் தொடர்பாக தன்னுடைய கருத்து எதையும் கூறாமல் ஹாமித் பக்ரி அவர்களின் கிளிப்பிங்கைப் போட்டுக் காட்டியும் ஒரு சில இடங்களில் விமர்சனம் செய்திருந்தார்.

நீங்கள் இதுவரை இந்த மொழிபெயர்ப்பிற்கு எதிராகப் பல மேடைகளில் எந்தெந்த கருத்துகளை எடுத்துரைத்தீர்களோ அதைப் பற்றித் தானே விவாதம் என்று விவாத ஒப்பந்தத்தில் நாம் கேட்டோம். அதில் பதிலளித்த முஜீப் அவர்கள், “இல்லை இல்லை இது வரை நான் கூறாத புதிய விஷயங்களையும்  விவாதத்தின் போது எடுத்துரைப்பேன்’ என்றார்.

“விவாதம் என்பது போட்டியல்ல. திடீரென்று புதிதாக ஒரு கேள்வியைக் கேட்டு எதிரியை வாயடைக்கச் செய்வதற்கு! மாறாக நீங்களும் நாங்களும் உண்மையை உணர்ந்து அதை மக்களுக்குப் போதிப்பதற்குரிய ஒரு களம்’ என்று தவ்ஹீத் ஜமாஅத்  உணர்த்திய பிறகு நான் வாதிக்கும் விஷயங்களுக்குரிய விவரங்களை விவாதத்திற்கு முன்கூட்டியே விபரமாகத் தருகிறேன் என்று வாக்குறுதியளித்தார். ஆனால் வாக்குறுதிக்கு மாற்றமாக பொத்தாம் பொதுவில் ஒரு பட்டியலை அளித்தார்.

அந்தப் பட்டியலில் கூட முஜீப் அவர்கள் நமக்கெதிராக மிகப் பயங்கரமாக எந்தெந்த கருத்துகளை விமர்சனம் செய்திருந்தாரோ அந்தக் கருத்துக்கள் இருக்கத் தான் செய்தன. இதை அவர் ஒரு போதும் மறுக்க முடியாது. அப்படியிருந்தும் வெளியில் பிதற்றிய அந்த விஷயங்களை எடுத்து வைப்பதற்கு அவர் தயங்கினார். நாம் அதை எடுத்துரைத்து வாதித்த போதும் அவற்றைப் பற்றி விவாதிக்க அவர் தயாராகவில்லை. எவற்றை ஈமானைப் பாதிக்கக் கூடிய விஷயங்கள் என்று கூறுமளவிற்கு வெளியில் கர்ஜித்தார்களோ அவற்றை நாமே எடுத்து வைத்த போதும் விவாதிக்கத் தயங்கியது தான், இவர்களிடம் சத்தியத்தை அறிய வேண்டும் என்ற உண்மையான நோக்கம் இல்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது.

விவாத ஒப்பந்ததின் போது மற்றொன்றையும் தவ்ஹீத் ஜமாஅத் தெளிவாகப் பதிவு செய்தது. அதாவது முஜீப் அவர்கள்  தர்ஜமாவிற்கு எதிராக எடுத்து வைக்கின்ற எல்லா வாதங்களையும் விவாதிப்பதற்கு ஒரு நாள் போதாது. அனைத்தையும் விவாதித்து முடிப்பதற்கு எத்தனை நாட்கள் ஆகுமோ அத்தனை நாட்கள் விவாதிப்போம். அல்லது குறைந்தது இரண்டு நாட்களாவது விவாதிப்போம் என்று கெஞ்சாத குறையாக மன்றாடியது.

சத்தியத்தை எப்படியாவது மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்பது தான் நம் நோக்கம். ஏனென்றால் சமுதாயப் பணிகளையும் சத்தியப் பிரச்சாரத்தையும் எவ்வித இலாப நோக்கமும் இல்லாமல் செய்து வருகின்ற தவ்ஹீத் ஜமாஅத்தினர் நேரங்களையும் காலங்களையும் ஒதுக்கி ஒரு விவாதக் களத்தைச் சந்திப்பது என்பது மிகப் பெரும் சிரமமான ஒரு விஷயமாகும். பல சிரமங்களுக்கு மத்தியில் ஒரு விவாதத்தை ஏற்பாடு செய்த பிறகு அனைத்தும் தெளிவு படுத்த வேண்டும் என்பது தான் நமது நோக்கம்.

ஏனென்றால் சிலர், “நான் கொடுத்த அனைத்து விஷயங்களையும் விவாதிக்கவில்லை’ என்ற முடிந்த பிறகும் பிதற்றிக் கொண்டு திரிவார்கள். இதற்காகத் தான் அனைத்து விஷயங்களையும் விவாதிக்கின்ற வரை விவாதம் நடைபெற வேண்டும் என்று நாம் பலமுறை கேட்டும் ஒரு நாளே போதுமானது என முஜீப் அவர்கள் பிடிவாதம் பிடித்ததும் சத்தியத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்கின்ற நோக்கம் இவர்களிடம் இல்லை என்பதற்குத் தெளிவான சான்றாகும்.

இப்போது விவாதக் களத்தில் முஜீப் எடுத்து வைத்து விஷயங்களுக்கு வருவோம்.

  1. “குர்ஆனில் சில இடங்களில் எழுத்துப் பிழைகள் இடம் பெற்றுள்ளன’ என்ற நம்முடைய கருத்தை மறுத்து “குர்ஆனில் எந்த ஒரு இடத்திலும் எழுத்துப் பிழைகள் ஏற்படவேயில்லை’ என வாதித்தார். அதற்கு ஒரு சான்றாக பஸத, யப்சுது, பஸ்ததன் என்பது போன்ற வார்த்தைகளை எடுத்து வைத்து வாதித்தார். இவற்றிற்கு மிகத் தெளிவான முறையில் ஆயிஷா (ரலி) அவர்கள், “குர்ஆனில் எழுத்துப் பிழைகள் இருப்பதாகக் கூறியது, அல்இத்கான் போன்ற குர்ஆன் கலை தொடர்பான நூற்களில் கூறப்பட்ட கருத்துகள், மேலும் சவூதியிலிருந்தே வெளியிடப்பட்ட இக்பால் மதனீ தர்ஜமாவிற்கும் சவூதி வெளியீடு குர்ஆனிலும் உள்ள வித்தியாசங்கள் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டு ஆணியடித்தாற்போல் தெளிவாகப் பதிலளிக்கப்பட்டது.

மேலும் “பஸத’ என்பது தொடர்பாக 2:245வது வசனத்தில்  ஸீன் என்ற எழுத்தை எழுதுவதற்குப் பதிலாக ஸாத் என்ற எழுத்தை எழுதியுள்ளனர். ஸாத் இடம் பெற்றால் அதற்கு அர்த்தம் வராது. எனவே அந்தத் தவறை அப்படியே எழுதி ஸாத் என்ற எழுத்தின் மீது ஒரு சிறிய அளவில் ஸீனை எழுதி அடையாளம் காட்டியுள்ளனர்.

அதே போல 7வது அத்தியாயத்தின் 69வது வசனத்தில் ஸீன் எழுதுவதற்கு பதிலாக ஸாத் எழுதி விட்டார்கள். இரண்டும் ஏறக்குறைய நெருக்கமான உச்சரிப்பைக் கொண்ட எழுத்துக்களாக இருப்பதால் இந்தத் தவறு நேர்ந்திருக்கலாம் என்று பல உதாரணங்களைக் காட்டி விளக்கமாகப் பதிலளிக்கப்பட்டது.

மேலும் இத்கான் என்ற நூலிலிருந்து ஆதாரங்களைக் காட்டும் போது முஜீப் அவர்கள் முதல் வரியை மறைத்து விட்டுப் படித்தது  போன்ற விஷயங்களும் எடுத்துரைக்கப்பட்டன. மேலும் குர்ஆனில் சில இடங்களில் எழுத்துப் பிழைகள் ஏற்பட்டதாகக் கூறுவதால் குர்ஆனின் பாதுகாப்பிற்கு எவ்வித சந்தேகமும் ஏற்படாது என்பதும் தெளிவாக விளக்கப்பட்டது. விவாத சிடிக்களைப் பார்வையிடுபவர்கள் இதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் நம்முடைய ஏகத்துவம் இதழிலும் இது தொடர்பாக விரிவான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட இருக்கின்றோம்.

  1. ஆதம் (அலை) அவர்கள் சொர்க்கத்தில் ஒரு மரத்தைச் சாப்பிட்டதால் அவர்களுக்குப் பாலுணர்வு ஏற்பட்டது. எனவே அந்த மரம் பாலுணர்வை ஏற்படுத்தும் மரம் என்று விரிவுரை தொடர்பாகவும் விவாதம் நடைபெற்றது. இதற்கும் பல ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி தெளிவாக பதிலளிக்கப்பட்டது.
  2. தர்ஜமாவில் ஒரு சில இடங்களில் சில வார்த்தைகளுக்கு மொழிபெயர்ப்பு விடுபட்டுள்ளதாக முஜீப் சுட்டிக்காட்டினார். அவற்றில் பல இடங்களில் சரியாகத் தான் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. மாறாக முஜீப் அதைத் தவறு என்று விளங்கிக் கொண்டார். உதாரணமாக விவாத சிடிக்களை பார்ப்பவர்கள் ஸாமிரி என்பவன் கூறிய வாசகம் தொடர்பாக உள்ள கருத்துக்களைப் பார்வையிட்டால் இதனைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

மேலும் முஜீப் கூறியது போல் இரண்டு இடங்களில் ஒரு இடத்தில் ஆண்பாலாக மொழிபெயர்க்க வேண்டிய இடத்தில் பெண்பாலாகவும் மற்றொரு இடத்தில் ஒரே பொருளுடைய இரு வார்த்தைகளில் ஒன்றிற்கு மொழி பெயர்ப்பு விடுபட்டுள்ளது.

ஆனால் உண்மையில் இவை விவாதத்திற்குரிய ஒரு விஷயம் இல்லை. முஜீப் அவர்கள் இதனை ஒரு போஸ்ட் கார்டில் எழுதி தெரியப்படுத்தியிருந்தால் அடுத்த பதிப்புகளில் அவை திருத்திக் கொள்ளப்படக்கூடியவையே! இப்படி சில இடங்களில் சிலர் சுட்டிக் காட்டிய பின் அவை அடுத்த பதிப்புகளில் மாற்றப்பட்டுள்ளன.

  1. குர்ஆன் வசனங்களுக்கு எண்கள் இட்டது தொடர்பாகவும் விரிவான விவாதம் நடைபெற்றது. திருக்குர்ஆனின் மூலப்பிரதி இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த மூலப்பிரதியில் குர்ஆன் வசனங்களுக்கு எண்கள் போடப்படவில்லை. பின்னால் வந்தவர்கள் தான் குர்ஆன் வசனங்களுக்கு எண்களை இட்டார்கள். இதன் காரணமாகத் தான் வசனங்களின் எண்கள், குர்ஆனில் எத்தனை வசனங்கள் இருக்கின்றன என்பது குறித்து அறிஞர்கள் பலவிதமான எண்ணிக்கையைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அலீ (ரலி) அவர்கள் 6218 என்கிறார்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 6616 என்கிறார்கள், ஹுமைத் என்பார் 6212 என்கிறார்கள், அதா என்பார் 6177 என்றும், இன்னொரு சந்தர்ப்பத்தில் 6204 என்றும் குறிப்பிடுகிறார்.

மக்கள் பொதுவாக 6666 வசனங்கள் என்று பரவலாகக் குறிப்பிடுகிறார்கள். இப்போது உலகம் முழுவதும் அச்சிடப்படும் குர்ஆன் பிரதிகளில் 6236 வசனங்கள் உள்ளன.

வசனங்கள் எத்தனை என்று அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ கூறவில்லை. மேலும், உஸ்மான் (ரலி) அவர்களுடைய மூலப் பிரதியிலும் குர்ஆனுடைய மொத்த வசனங்கள் குறித்து எந்தவொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் குறிப்பிடப்படவில்லை.

உஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்த மூலப் பிரதியில் ஒவ்வொரு வசனம் முடிவுறும் போது அதன் இறுதியில் வசனத்தின் எண் குறிப்பிடப்படவில்லை. எந்தவொரு வசனத்தின் முடிவும் மூலப் பிரதியில் அடையாளமிடப்படவில்லை.

எனவே தான் வசனங்களை எண்ணும் போது ஒவ்வொருவரும் பல விதமான எண்ணிக்கையைக் கூறுகிறார்கள். எண்ணிக்கை எத்தனை என்பதில் கருத்து வேறுபாடு இருந்தாலும் எந்த எண்ணிக்கையைக் கூறினாலும் குர்ஆனில் எதுவும் அதிகரிப்பதோ, குறைவதோ இல்லை.

ஒருவர் இரண்டு வசனங்களை ஒரு வசனமாகக் கருதுவார்; இன்னொருவர் ஒரு வசனத்தை இரண்டு வசனங்களாகக் கருதுவார்; எங்கே வசனத்தை முடிப்பது என்பதில் தான் கருத்து வேறுபாடு உள்ளது.

உலகம் முழுவதும் மக்கள் பயன்படுத்தி வருகின்ற, குர்ஆனில் இப்போது போடப்பட்டிருக்கின்ற, எண்களை நாம் ஆய்வு செய்தால் எண்களிடுவதில் அறிஞர்களால் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

சில இடங்களில் எழுவாயை ஒரு வசனமாகவும், பயனிலையை இன்னொரு வசனமாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இரண்டையும் சேர்த்து ஒரு வசனமாகக் கூறும் போது தான் அதனுடைய பொருள் முழுமை பெறும்.

ஆனால் வசனங்களுக்கு எண்கள் இட்டவர்கள் கருத்து முழுமை பெறுவதை கவனத்தில் கொள்ளவில்லை என்பதை இப்போது போடப் பட்டிருக்கின்ற எண்களை ஆய்வு செய்தால் நாம் தெரிந்து கொள்ளலாம்.

சில இடங்களிலே விதி ஒரு வசனமாகவும், அந்த விதியிலிருந்து விலக்கு இன்னொரு வசனமாகவும் அமைந்திருக்கும். அந்த இரண்டையும் சேர்த்து ஒரு எண்ணாக அவர்கள் அமைத்திருந்தால் அதைப் புரிந்து கொள்வதற்கு எளிதாக இருந்திருக்கும். உதாரணத்திற்காக சில வசனங்களை நாம் காண்போம்.

நான்காவது அத்தியாயத்தில் 168, 169 ஆகிய இரு வசனங்களை எடுத்துக் கொள்வோம். இதில் “அவர்களுக்கு வழி காட்ட மாட்டான்’ என்பது 168வது வசனத்திலும், “நரகத்தின் வழியைத் தவிர’ என்பது 169வது வசனத்திலும் உள்ளது. இரண்டும் சேர்ந்து தான் ஒரு வாக்கியம் என்பதை யாரும் விளங்க முடியும். ஆனாலும் இதை இரண்டு வசனங்களாகப் பிரித்திருக்கிறார்கள்.

7வது அத்தியாயத்தின் 121, 122 ஆகிய வசனங்களை எடுத்துக் கொண்டால், 121-ல் “நாங்கள் அகிலத்தின் இறைவனை நம்பினோம் எனக் கூறினார்கள்’ என்றும் 122-ல் “மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய’ என்றும் உள்ளது.

“மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய’ என்பதில் எந்தவொரு கருத்தும் முழுமை பெறவே இல்லை. “மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய அகிலத்தின் இறைவனை நாங்கள் நம்பினோம்’ என்று சொன்னால் தான் வாக்கியம் முழுமை பெறுகிறது.

இதே போல் 11வது அத்தியாயத்தில் 96, 97 வசனங்களை எடுத்துக் கொண்டால் 96வது வசனத்தில் “மூஸாவை தகுந்த சான்றுகளோடு அனுப்பினோம்’ என்று இருக்கிறது. 97வது வசனத்திலே “ஃபிர்அவ்னிடம்’ என்று இருக்கிறது.

“ஃபிர்அவ்னிடம்’ என்பது இந்த 96 வசனத்துடன் இணைய வேண்டிய சொல். ஆனாலும் ஃபிர்அவ்னிடமும், அவனது கூட்டத்தினரிடமும் என்பதை தனியாகப் பிரித்ததால் அதற்கு பொருள் இல்லாமல் போய் விடுகிறது.

இப்படி ஏராளமான வாக்கியங்களை, கருத்து முழுமை பெறாத வகையில் வசனங்களாகப் பிரித்திருப்பதை நாம் பார்க்கிறோம். சில இடங்களில் ஒரு வாக்கியத்தை நான்கு, ஐந்து வசனங்களாகக் கூட பிரித்து வைத்திருக்கிறார்கள். ஒரே ஒரு சொல்லைக் கூட ஒரு வசனம் என்று சில இடங்களில் கணக்கிட்டிருக்கிறார்கள்.

இதில் இரண்டு விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குர்ஆன் என்பது அதனுடைய ஆழமான கருத்துக்களுக்காகவும், அதன் அழகான நடைக்காகவும் தனிச் சிறப்பு பெற்றிருக்கிறது.

வசனங்களைப் பிரிப்பதென்றால் அதற்கு இரண்டு அளவு கோல்கள் இருக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதும் போது எந்த இடத்தில் நிறுத்தினார்களோ அந்த இடத்தை ஒரு வசனம் என்று கணக்கிட்டிருந்தால் அது ஏற்கத்தக்கதாக இருக்கும். அல்லது ஒரு கருத்து எந்த இடத்தில் முழுமை பெறுகிறதோ அதை ஒரு வசனம் என்று கணக்கிட்டிருந்தாலும் அறிவுப்பூர்வமானதாக இருந்திருக்கும். ஆனால் இந்த இரண்டு அளவுகோலின் அடிப்படையில் வசனங்களுக்கு எண்கள் இடப்படவில்லை.

மாறாக ஒவ்வொரு வசனத்தையும் குறிப்பிட்ட ஒரு எழுத்தைக் கொண்டு முடிக்க வேண்டும் என்பதைத் தான் வசனங்களைப் பிரிப்பதற்கு அளவு கோலாகக் கொண்டுள்ளனர்.

உதாரணமாக யஃலமூன், தஃல மூன், யஃப்அலூன் இப்படி வருகிறதா என்பதைப் பார்த்து அந்த இடங்களில் வசனங்களை முடித்தார்கள்.

ஆனால் உண்மையிலேயே அவர்கள் கருத்தைத் தான் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். காரணம், வசனம் என்று நாம் தமிழில் குறிப்பிட்டாலும் அல்லாஹ் ஆயத் என்ற சொல்லைத் தான் இதற்குப் பயன்படுத்துகிறான்.

ஒரு கருத்து முழுமை பெறாத இடத்தில் துண்டாக்கினால் அதை அத்தாட்சி என்று கூற மாட்டோம்.

ஆனாலும் இப்போது நடைமுறையில் எண்களைக் குறிப்பிடுவது ஆதாரங்களை எடுத்துக் காட்டுவற்கும், விவாதங்கள் புரிவதற்கும், சொற்பொழிவுகள் புரிவதற்கும், குறிப்பிட்ட ஒரு வசனத்தைத் தேடி எடுப்பதற்கும் உதவியாக இருக்கின்றன.

இப்போது இதில் ஒவ்வொருவரும் மாற்றம் செய்யப் புகுந்தால் தேவையற்ற குழப்பங்கள் தான் ஏற்படும். எனவே எந்த எண்களை சில நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறோமோ அதில் நாம் எந்த மாறுதலும் செய்யவில்லை.

அதே சமயத்தில் முழுமை பெறாத அந்த வசனங்களை எல்லாம் சேர்த்து தமிழாக்கம் செய்து தேவையற்ற அடைப்புக் குறிகள் வருவதைத் தவிர்த்திருக்கிறோம்.

வசனங்களுக்கு எண்கள் போட்டவர்கள் அவர்களாகத் தான் போட்டனர் என்பதற்கு இரண்டு தமிழ் மொழிபெயர்ப்புகளை உதாரணமாகக் கூறலாம்.

ஆ.கா. அப்துல்ஹமீத் பாகவி அவர்களின் மொழிபெயர்ப்பில் 6வது அத்தியாயம் 73வது வசனத்தை ஒரு வசனமாகக் குறிப்பிட்டுள்ளார். இதையே நிஜாமுத்தீன் மன்பஈ அவர்கள் 73, 74 என இரண்டு வசனங்களாக எண்ணியுள்ளார். இதனால் இந்த அத்தியாயம் முழுவதும் இரண்டு மொழிபெயர்ப்புகளுக்கிடையே ஒரு எண் வித்தியாசத்தில் அமைந்திருப்பதைக் காணலாம்.

இந்தச் செய்திகளெல்லாம் சில சகோதரர்களுக்கு இது வரை கேள்விப்பட்டிராத செய்திகளைப் போல் தோன்றலாம். ஆனால் ஒவ்வொரு கால கட்டத்திலும் இதை அந்தந்த காலத்தவருக்கு நினைவூட்டப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது.

எனவே குர்ஆனில் நமது வசதிக்காக நாம் ஏற்படுத்திக் கொண்டவை எவை? குர்ஆனிலே அல்லாஹ் அமைத்துத் தந்தவை எவை? என்ற வேறுபாட்டை நாம் விளங்கி வைத்திருந்தால் ஒவ்வொருவரும் இதைப் புரிந்து வைத்திருந்தால் குர்ஆன் என்ற பெயரால் யாரும் மக்களை வழி கெடுத்துவிட முடியாது.

சுருக்கமாக சொல்வதென்றால் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் என்பதைத் தவிர வசன எண்களோ அத்தியாயத்தின் பெயர்களோ இடையிடையே எழுதப்படுகின்ற விஷயங்களோ மூலப் பிரதியில் இல்லை. மூலப்பிரதியில் உள்ள செய்திகள் மாத்திரம் தான் இறைவன் புறத்திலிருந்து வந்தவை என்பதை நாம் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.

என்பது போன்ற விளக்கங்களை தெளிவாக எடுத்துரைத்து முஜீப் அவர்களின் வாதங்களுக்கு ஆணித்தரமாகப் பதிலளிக்கப்பட்டது.

மொத்தத்தில் விவாதத்தில் நடந்த அனைத்தையும் வரிக்கு வரி நாம் இங்கே குறிப்பிட முடியாது. முக்கியமான சில குறிப்புகளை மட்டும் தான் இங்கே தந்துள்ளோம்.

ஆனால் தொண்டியில் நடைபெற்ற விவாதம் சத்தியத்தின் முன்னால் அதற்கெதிரான அனைவரையும் மண்டியிட வைத்தது என்பதே யாவரும் தெரிந்து கொண்ட உண்மையாகும்.