மஹ்ஷர் மன்றத்தில் மாநபியின் புகார்

மஹ்ஷர் மன்றத்தில் மாநபியின் புகார்

தொடர்: 7

எம். ஷம்சுல்லுஹா

இனிமையான குரலில், லயிக்க வைக்கும் ராகத்தில் மிக ரசனையாகக் குர்ஆனை ஓதி, நம்மை வசப்படுத்தி ரசிக்க வைக்கும் இந்த ஆலிம் பெருமக்களா நரகில்? ஏற்றுக் கொள்ள முடியவில்லையே என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.

அதற்கான பதிலைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள். அவர்கள் சிறு வயது இளைஞர்களாக இருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (திருக்குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். அவர்கள் வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன் எறிந்த) அம்பு (அதன் மறு பக்கமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் சென்று விடுவார்கள். அவர்களுடைய இறை நம்பிக்கை அவர்களுடைய தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்களை எங்கு நீங்கள் சந்தித்தாலும் கொன்று விடுங்கள். ஏனெனில், அவர்களைக் கொன்றவர்களுக்கு அவர்களைக் கொன்றதற்காக மறுமை நாளில் நற்பலன் கிடைக்கும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: புகாரி 3611

இன்று இந்த ஆலிம்கள் சொற்பொழிவாற்றும் போது, கண்மணி நாயகம், ரசூலே அக்ரம், ஹள்ரத் நபிகள் நாயகம் என்று நபி (ஸல்) அவர்களின் பெயருக்கு முன்னால் அலங்கார அடைமொழிகளைக் கொடுத்து அழைப்பதில் கொஞ்சமும் வஞ்சம் செய்ய மாட்டார்கள். ஆனால் அவர்களது ஈமான் தொண்டைக் குழியைத் தாண்டி உள்ளத்திற்குள் செல்லாது என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

சிந்தனையற்ற இளைஞர்கள்

இன்று மதரஸாவில் படிக்கும் மாணவர்களைப் பார்த்தீர்கள் என்றால் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இவர்கள் இளம் வயதினர். எந்தச் சிந்தனைத் தெளிவும் இல்லாதவர்கள். இதற்கு ஒரே ஓர் எடுத்துக் காட்டு, இறந்தவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று இவர்கள் நம்புவது தான்.

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.

அல்குர்ஆன் 35:22

இவ்வளவு தெளிவாக அல்லாஹ் விளக்கியிருந்தும் இறந்தவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று இவர்கள் நம்புகின்றனர். இது போன்று அடுக்கடுக்கான எடுத்துக்காட்டுகளை நாம் கூறலாம்.

அதிர வைக்கும் அதிகமான வணக்கங்கள்

தஸ்பீஹ்கள், நஃபில்கள், தஹஜ்ஜத் என இவர்களது வணக்கங்கள் அமர்க்களப்படும். இவர்களது வணக்க வழிபாடுகளைப் பார்த்து, நாம் என்ன தொழுகிறோம் என்று எண்ணத் தலைப்படுவோம். இந்த அடையாளங்கள் மட்டுமே ஒருவர் சுவனவாதி என்று முடிவெடுக்கப் போதுமாகி விடாது என்பதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

வழிகெட்ட ஒரு கூட்டத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்யும் போது பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.

அவர்களுடைய தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களுடைய நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகையையும் உங்களுடைய நோன்பையும் அற்பமானவை யாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும்.) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய கழுத்தெலும்பை (தொண்டையை) தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறு பக்கம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்று விடுவார்கள்.

அறிவிப்பவர்: அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 3610

இப்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரித்து வைத்தாற்போல் இவர்களைப் பற்றிக் கூறுகின்றார்கள். ஆனால் இவர்களோ இந்த ஹதீஸை நமக்கு எதிராகத் திருப்பி விடுகின்றனர். நமது ஜமாஅத்தில் அதிகமான இளைஞர்கள் உள்ளனர். அதிலும் இவர்களை விட்டு விலகி நமது ஜமாஅத்தை நோக்கி அணியணியாகப் படையெடுத்து இளைஞர்கள் வருகின்றனர். இதை வைத்துக் கொண்டு இந்த ஹதீஸை நமக்கு எதிராகத் திருப்புகின்றனர்.

நமது ஜமாஅத்தில் அதிகமான இளைஞர்கள் இருப்பது உண்மை தான். ஆனால் அவர்கள் சிந்தனைத் தெளிவற்றவர்கள் கிடையாது. சிந்தனைத் தெளிவுள்ளவர்கள். இந்த ஆலிம்களைப் போன்று நட்சத்திரங்கள் வானில் பதிக்கப்பட்டுள்ளன என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் அல்ல.

இந்த இளைஞர்கள் சிந்தனைத் தெளிவுள்ளவர்கள். அதனால் தான் சமாதி வழிபாடு, இறந்தவர்களிடம் உதவி தேடுதல், சுய மரியாதையை இழந்து சக மனிதனின் காலில் விழுந்து வணங்குதல், தாயத்து, தகடு என்ற மவ்ட்டீகங்களை விட்டும் வெளியேறி சத்தியத்தின் பக்கம் வந்துள்ளனர்.

மேற்கண்ட புகாரி 3611 ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுவது போன்று சிந்தனையற்ற இளைஞர்களாக இருப்பவர்கள் இந்த ஆலிம்களிடம் பாடம் பயிலும் மதரஸா மாணவர்கள் தான். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மற்றொரு ஹதீஸில் இவர்களது அடையாளத்தையும் விளக்கியுள்ளார்கள். அது தான் மொட்டையடித்தல் ஆகும்.

நபி (ஸல்) அவர்கள், “கிழக்குத் திசையிலிருந்து (-இராக்கிலிருந்து) சிலர் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்; ஆனால், அது அவர்களுடைய நெஞ்செலும்புகளைத் தாண்டிச் செல்லாது. (வேட்டைக் காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிருந்து (மறு பக்கமாக) வெளியேறி விடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து வெறியேறி விடுவார்கள். பிறகு அம்பானது வில்லின் நாண் உள்ள பகுதிக்குத் (தானாகத்) திரும்பாத வரை அவர்களும் மார்க்கத்திற்குத் திரும்பி வரவே மாட்டார்கள்என்று சொன்னார்கள். “அவர்களின் அடையாளம் என்ன?” என்று வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மொட்டை போடுவது தான் (அவர்களின் அடையாளம்)என்று பதில் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 7562

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள இந்த அடையாளம் எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது என்று பாருங்கள். ஒருவன் மதரஸாவுக்குச் சென்றால் முதன் முதலாக அவன் தனது தலை முடியைத் தான் பலி கொடுத்தாக வேண்டும். இல்லையெனில் அவன் ஓதுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டான். மதரஸாவுக்கு ஓத வந்த பல மாணவர்கள் மொட்டையடிக்கும் கலாச்சாரத்தைக் கண்டு வெருண்டோடியிருக்கின்றனர். இதனால் பல இளைஞர்கள் மதரஸா பக்கமே தலை காட்டாமல் இருந்திருக்கின்றார்கள்.

இந்த ஹதீஸ்களில் வருகின்ற அடையாளங்களும் அளவீடுகளும் எவ்வளவு துல்லியமாக இந்த ஆலிம்களுக்குப் பொருந்திப் போகின்றன என்று பாருங்கள். மேற்கண்ட ஹதீஸ்களில் இடம் பெறும் கூட்டத்தினர் கொல்லப்பட்டு விட்டனர் என்றாலும் அவர்களது அடையாளங்கள் அனைத்தும் இந்த ஆலிம்களுக்கும் பொருந்திப் போகின்றன என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கே இதை இங்கே குறிப்பிடுகின்றோம்.

எனவே இந்த ஆலிம்கள் மயக்கத்தக்க விதத்தில் குர்ஆன் ஓதுவதையும், வியக்கத்தக்க வகையில் அமல்கள் செய்வதையும் வைத்து இவர்களா நரகத்திற்குச் செல்வார்கள் என்று அதிசயிக்கவோ, ஆச்சரியப்படவோ தேவையில்லை.

ஷிர்க் என்ற பாவம் யாரிடமிருந்தாலும் அவர்கள் நரகத்தைச் சந்தித்தே ஆக வேண்டும்.

என் இறைவா! எனது சமுதாயத்தினர் இந்தக் குர்ஆனைப் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கி விட்டனர்என்று இத்தூதர் கூறுவார்.

அல்குர்ஆன் 25:30

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்தப் புகாரின் அடிப்படையில் குர்ஆன் தான் மறுமையில் நடுவராக வந்து நிற்கின்றது.

மறுமை நாளில் இறை நம்பிக்கையாளர்கள் பரிந்துரைக்காக நபி (ஸல்) அவர்களிடம் செல்லும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவனிடம் ஸஜ்தாவில் விழுந்து மன்றாடுவார்கள். அந்தப் பரிந்துரையை ஏற்று வல்ல ரஹ்மான் நரகத்திலிருந்து மக்களை வெளியேற்றி சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பான். இதுபற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் போது,

இறுதியில் குர்ஆன் தடுத்து விட்ட, அதாவது நிரந்தர நரகம் கட்டாயமாகி விட்டவர்களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் இருக்க மாட்டார்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, “(நபியே!) உம் இறைவன் உம்மை (“மகாமும் மஹ்மூத்எனும்) உயர் அந்தஸ்துக்கு அனுப்பலாம்எனும் (17:79 ஆவது வசனத்தை) ஓதினார்கள்.

பிறகு இந்த “மகாமும் மஹ்மூத்எனும் இடம் உங்கள் நபிக்காக வாக்களிக்கப்பட்ட இடமாகும்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 7440

இந்தக் குர்ஆன் மறுமையில் நடுவராக வந்து நிற்கின்றது. குர்ஆன் யாரைத் தடை செய்துள்ளதோ அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை கிடைக்காமல் நிரந்தர நரகத்திற்கு உரியவர்களாகி விடுகின்றனர்.

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

அல்குர்ஆன் 4:48

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம்.

அல்குர்ஆன் 5:72

வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லும் ஏஜெண்டுகள் மக்களை ஏமாற்றுவதைப் பார்க்கிறோம். அந்த ஏஜெண்டுகளிடம் பணத்தைப் பறி கொடுத்து ஏமாந்தவர்கள் அவர்கள் மீது கடுமையான ஆத்திரத்தை வெளிப்படுத்துகின்றனர்.

வெளிநாட்டுக்குச் சென்றால் மீண்டும் தாய்நாட்டிற்குத் திரும்பி வந்து விடலாம். ஆனால் மறுமை விஷயத்தில் ஏமாந்தவர்கள், ஏமாற்றியவர்கள் இந்த உலகத்திற்குத் திரும்பி வர முடியுமா? ஒரு போதும் வர முடியாது.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

அல்குர்ஆன் 23:99, 100

மறுமையைப் பொறுத்த வரை ஒரு போதும் திரும்ப முடியாது என்று அல்குர்ஆன் ஆணித்தரமாகக் கூறுகின்றது. அதனால் இதில் ஏமாந்தவர்கள், தங்களை ஏமாற்றியவர்கள் மீது அதாவது இந்த ஆலிம்கள் மீது தங்களது அத்தனை ஆத்திரத்தையும் கொட்டுவார்கள்.

எங்கள் இறைவா! ஜின்களிலும், மனிதர்களிலும் எங்களை வழி கெடுத்தோரை எங்களுக்குக் காட்டு! அவர்கள் இழிந்தோராகிட அவர்களை எங்களின் பாதங்களின் கீழே ஆக்குகிறோம் என்று (ஏக இறைவனை) மறுத்தோர் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 41:29

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் “நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுவார்கள். “எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்எனவும் கூறுவார்கள். “எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!எனவும் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 33:66-68

இப்படியொரு வேதனை வெளிப்பாட்டை ஏமாற்றப்பட்டவர்கள், ஏமாற்றியவர்களுக்கு எதிராக வெளிப்படுத்துவார்கள். ஆனால் அதில் ஒரு பயனும் இருக்காது.

எனவே இந்த உலகத்தில் அவர்களை அடையாளம் கண்டு, புனித நபியின் புகாருக்கு ஆளாகும் இந்த ஆலிம்களின் மாயச் சிலந்தி வலையிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.