மஹ்ஷர் மன்றத்தில் மாநபியின் புகார்

மஹ்ஷர் மன்றத்தில் மாநபியின் புகார்

தொடர்: 3

எம். ஷம்சுல்லுஹா

  1. கொலை முயற்சி,
  2. பிரச்சாரத்திற்குத் தடை
  3. சமூகப் பகிஷ்காரம்
  4. தொழுவதற்குத் தடை

இந்நான்கு வன்முறைகளும் அன்று நபி (ஸல்) அவர்களின் ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு எதிராக மக்கா காஃபிர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டன.

நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக மட்டுமல்ல! எல்லா இறைத்தூதர்களுக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் இவை!

தமிழகத்தில் தவ்ஹீதுவாதிகள் முதன்முதலில் ஏகத்துவத்தை எடுத்து வைத்ததும் இதே வன்முறைகளைத் தான் குராபிகள் கையாண்டார்கள். ஏகத்துவம் வளர்ந்த ஊர்களிலும், வளர்ந்து கொண்டிருக்கும் ஊர்களிலும் இந்த வன்முறைகளைத் தான் கையில் எடுக்கின்றார்கள்.

அம்சா தங்களின் அடாவடித்தனம்

ஏகத்துவத்தை மக்கள் மத்தியில் எடுத்து வைத்த மாத்திரத்தில் கொதித்துக் கொந்தளித்து எழுந்தவர்கள் ஆலிம்கள் தான்.

அன்று முஹம்மது (ஸல்) அவர்களின் ஏகத்துவப் பிரச்சாரத்தில் தங்கள் ஆதிக்க பீடம் அடித்து நொறுக்கப்படும் என்று அதிர்ந்து அலறிய குறைஷிக் காஃபிர்களைப் போன்று இந்த உலமாக்களின் கூடாரம் அதிர்ந்து அலறியது. இவ்விரு சாராருக்கும் மத்தியில் ஷிர்க்கில் – இணை வைப்பில் ஒற்றுமை இருந்தது போன்று இன்னொரு விஷயத்திலும் ஒற்றுமை இருந்தது. அது தான் வயிற்றுப் பிழைப்பு!

வளர்ந்து வரும் ஏகத்துவத்தால் வருமானம் பாதிக்கப்படும் என்று குறைஷி வர்க்கம் பயந்தது. அதே பயம் இந்த ஆலிம்கள் கூடாரத்தையும் கவ்விப் பிடித்தது. அதனால் குய்யோ முறையோ என்று கூப்பாடு போட ஆரம்பித்தனர். கொலை வெறியைத் தூண்டினர். மக்கத்துக் காஃபிர்களான அபூஜஹ்ல் சபையினரைப் போன்று கொலை வெறித் தாக்குதல்களிலும் இறங்கினர்.

நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் முக்கியமான பள்ளிவாசல் பெரிய குத்பா பள்ளிவாசல்! ஏகத்துவப் பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்தில் இந்தப் பெரிய குத்பா பள்ளிவாசலில் ஒரு தொழுகையின் போது கத்தி அல்லது அரிவாளைக் காட்டி, “எவனாவது விரலை அசைத்தால் வெட்டி விடுவேன்” என்று ஒருவர் கொக்கரித்தார். அவர் பெயர் அம்சா தங்கள். தாழையூத்தில் தாயத்து, தகடு தொழில் நடத்துபவர். அவர் அப்போது நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமாவின் செயலாளர். எவ்வளவு பொருத்தமான ஆள் இந்த அபூஜஹ்ல் சபைக்குச் செயலாளராக வந்திருக்கிறார் என்று பாருங்கள்.

அப்படியொரு வன்முறைப் போக்கு இவர்களிடம் மேலோங்கி இருந்தது. இது அன்றைய குறைஷிக் குப்பார்களின் வன்முறைப் போக்காகும்.

கொள்கைக்கு எதிரான கொலை முயற்சி

சுருக்கமாகச் சொல்லப் போனால் சத்தியத்தை ஏற்ற ஒரு சின்னஞ்சிறு கூட்டத்திற்கு எதிராக ஒரு போர் முழக்கமே நடந்தது. அதன் உச்சக்கட்டமாகத் தான் அந்த ஆலிம்களும், சத்தியத்திற்கு எதிரான பணக்காரப் பேர்வழிகளும் கூட்டாக இணைந்து கூலிப் படையை ஏவி விட்டு,  கொலை செய்ய ஏற்பாடு செய்தனர். ஆனால் அல்லாஹ்வின் அருளால் அந்த முயற்சி பலிக்காமல் போனது. வெறியோடு வந்தவர்களின் குறி தவறியது.

(முஹம்மதே!) உம்மைப் பிடித்து வைத்துக் கொள்ளவோ, உம்மைக் கொலை செய்யவோ, உம்மை வெளியேற்றவோ (ஏக இறைவனை) மறுப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப் பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான்6. சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்.

அல்குர்ஆன் 8:30

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுவது போல் அன்றைய அபூஜஹ்லின் பாதையில் ஆலிம்கள் இந்தக் கொலை வெறித் தாக்குதலை நடத்தி முடித்தனர். ஆனால் அல்லாஹ் அவர்களின் சதியை முறியடித்து விட்டான்.

குர்ஆன் கூறும் ஏகத்துவத்தை அன்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்போது அவர்கள் மீதும், கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் மீதும் இந்தக் கொலை வெறித் தாக்குதல் அபூஜஹ்ல் அணியினரால் நடத்தப்பட்டது.

இன்றும் குர்ஆன் கூறும் ஏகத்துவத்தை தவ்ஹீது ஜமாஅத்தினர் மக்களிடம் எடுத்துச் சொல்கின்றனர். இன்று ஆலிம்கள் எனப்படுவோர் பணக்காரப் பேர்வழிகளுடன் இணைந்து கொலை வெறித் தாக்குதல் நடத்துகின்றனர். அன்றைய அபூஜஹ்ல் அணியினரும், இன்றைய ஆலிம் அணியினரும் கிளம்பியிருப்பது குர்ஆனுக்கு எதிராக! அதனால் தான் இந்தக் கொலை முயற்சித் தாக்குதல்கள் என்பதற்காகவே இந்த எடுத்துக்காட்டு!

சமூக பகிஷ்காரம்

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்த போது, அன்றைய அபூஜஹ்ல் அணியினர் சமூகப் பகிஷ்காரம் செய்ததைக் கடந்த தொடரில் பார்த்தோம்.

இன்று தவ்ஹீது ஜமாஅத்தினர் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்த காரணத்தால், ஆலிம் சபையினர் ஊர் விலக்கத்தை மேற்கொள்கின்றனர். எனது தம்பி ஹாஜா பிர்தவ்ஸியின் குடும்பத்தை சில ஆண்டுகள் ஊர் நீக்கம் செய்து வைத்தனர். இதற்காக அவர் நீதிமன்ற வழக்குகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவரும், அவருக்கு உதவ முன்வந்த பெரியவர் கே.எஸ். குலாம் ரசூல் அவர்களும் காவல் நிலையம், நீதிமன்றம் என அலைந்த அலைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல!

இந்த ஊர் நீக்கம் 1987ல் நடந்தது என்றால் அண்மையில் பொட்டல் புதூரில் ஒரு சமூகப் பகிஷ்காரம் நடந்தது.

பொட்டல்புதூர்! இது நெல்லை மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் உள்ள ஊர். இங்கு அமைந்துள்ள சுற்றுலாத்தலம் தர்ஹா தான். எல்லா ஊர்களிலும் அவ்லியாக்கள் இறந்ததற்காக சமாதி எழுப்பி தர்ஹா கட்டுவார்கள் என்றால் இங்கு அப்துல் காதிர் ஜீலானி வந்து போனதற்காக ஒரு தர்ஹா! இந்தத் தர்ஹாவில் கொடி தூக்கி, துதிக்கையை தூக்கிய வண்ணம் வலம் வந்த யானை மரணித்த போது பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் அதை அடக்கம் செய்த அதிசய அற்புத (?) ஊர்.

அந்த ஊரில் அப்துல் காதர் என்ற சகோதரர் குர்ஆன் கூறும் தவ்ஹீதைச் சொல்கின்றார். அவ்வளவு தான்! ஊரே கொந்தளிக்கின்றது; நெருப்பாய் கனர்கின்றது. விளைவு ஊர் நீக்கம்! அதுவும் பொதுக்குழாயில் குடிநீர் பிடிப்பதற்குக் கூடத் தடை விதிக்கப்பட்டது. அவரது கடையில் யாரும் பொருட்கள் வாங்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது. அந்த அளவுக்கு உக்கிரமான ஊர் நீக்கத்தை சகோதரர் அப்துல்காதர் சந்தித்தார்.

அன்று மக்காவில் அபூஜஹ்ல் அரங்கேற்றிய அதே சமூகப் பகிஷ்காரத்தை இன்றைய ஆலிம் சபை அரங்கேற்றுகிறது.

இரண்டுக்கும் காரணம் ஒன்று தான். குர்ஆன் கூறும் ஏகத்துவத்தை எடுத்துச் சொன்னது தான்.

குர்ஆனுக்கு எதிரான நடவடிக்கைகள், வன்முறை வெறியாட்டங்களின் வரிசையில் உள்ளது தான் தொழுவதற்குத் தடை!

பள்ளிவாசலில் தொழத் தடை

ஏகத்துவப் பிரச்சாரம் தமிழகத்தில் தொடங்கியதும் பல்வேறு எதிர்ப்புகள் பல முனைகளிலிருந்து புயலாய் கிளம்பின. அதில் ஒன்று தான் பள்ளிவாசலில் சென்று தொழுவதற்கு விதிக்கப்பட்ட தடை! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இப்படித் தடுக்கப்பட்டார்கள் என்பதைக் கடந்த தொடரில் கண்டோம். அன்று அபூஜஹ்ல் அரங்கேற்றிய இந்த அநியாயத்தை இன்று ஆலிம் சபையினர் அரங்கேற்றுகின்றனர்.

1988ல் நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டது. அபூஜஹ்லின் பாதையில் இந்த அநியாயத்தை ஜமாஅத்துல் உலமா அரங்கேற்றுவதைப் பாருங்கள். அந்தப் பிரசுரம் இது தான்.

குழப்பவாதிகளை பள்ளிகளில் அனுமதிக்காதீர்கள்!

நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா தீர்மானம்

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பெரிய கொத்பா பள்ளிவாசல் கமிட்டியிலிருந்து நெல்லை ஜமாஅத்துல் உலமா சபைக்கு அனுப்பப்பட்ட கடிதம், 2.10.88 தேதி அன்று நடைபெற்ற ஜ.உ. சபை செயற்குழு கூட்டத்தில் வாசிக்கப்பட்டு நீண்ட பரிசீலனைக்குப் பின் கீழ்க்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலப்பாளையம் பெரிய கொத்பா பள்ளிவாசல் கமிட்டியின் கடிதம்

இமாம்களையும் மத்ஹபுகளையும் ஒத்துக் கொள்ளாத ஒரு கூட்டம் தங்களுக்கு தவ்ஹீது இயக்கம் என்று பெயர் வைத்துக் கொண்டு சமீப காலமாக எங்களூரில் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளுக்கு முரணான வகையில் குர்ஆனுக்கும் ஹதீசுக்கும், தான் தோன்றித்தனமாக அர்த்தங்கள் கூறி அனர்த்தம் விளைவித்து வருகிறது. இதனால் சுன்னத் வல்ஜமாஅத்தினராகிய எங்களூர் முஸ்லிம் பொது மக்கள் கொதிப்பும் கோபமும் கொண்டுள்ளனர். இந்நிலையில் குழப்பவாதிகளான இக்குதர்க்கவாதிகளை நமது பள்ளிகளில் அனுமதிக்கலாமா? என்பது பற்றி மாவட்ட ஜமாஅத்துல் உலமாவிலிருந்து மார்க்க ரீதியாக முடிவெடுத்து தகவல் தந்தால் அதை நாங்கள் செயல்படுத்தத் தயாராக இருக்கின்றோம்.

நெல்லை ஜ.உ. சபை தீர்மானம்

மேலப்பாளையம் பள்ளி வாசல்களும், மற்றும் ஊர்களிலுள்ள மஜ்ஜிதுகளும் ஹனபி, ஷாபி, ஹன்பலி, மாலிகி ஆகிய நான்கு மத்ஹபுகளையும் தழுவி வாழ்கின்ற சுன்னத்வல் ஜமாஅத்தைச் சேர்ந்த முஸ்லிம்களால் கட்டப்பட்டு, வக்ஃபு செய்யப்பட்டவைகளாகும். மேலும் அதே அடிப்படையிலேயே நிர்வகிக்கப்பட்டு வருவதுமாகும். எனவே மேற்படி பள்ளிகளில் இமாம் அபூஹனீபா (ரஹ்), இமாம் ஷாபி (ரஹ்), இமாம் மாலிக் (ரஹ்), இமாம் அஹ்மதுப்னு ஹம்பல் (ரஹ்) ஆகிய நான்கு இமாம்களின் மத்ஹபுகளில் எது ஒன்றையும் பின்பற்றாத, நீங்கள் குறிப்பிட்ட குழப்பவாதிகள் மேல்படி பள்ளிவாசல்களுக்கு வருவதையோ, தனியாகத் தொழுவதையோ, இமாமாக நின்று தொழுகை நடத்தவோ, இமாம்களுக்குப் பின்னால் நின்று தொழுவதையோ அனுமதிக்கக் கூடாது. மேலும் மேற்படி குழப்பவாதிகளைக் கொண்டு நிக்காஹ் நடத்தி வைப்பதும் கூடாது. மேலும் குழப்பவாதிகள் சுன்னத்வல் ஜமாஅத் முஸ்லிம்கள் நடத்தும் எந்த வைபவங்களிலும் கலந்து கொள்ளவும் அனுமதிக்கக்கூடாது.

அவ்வாறு அனுமதித்தால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பள்ளிவால்களை தங்களுடைய தவறான கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யப் பயன்படுத்திக் கொள்வார்கள். அவர்கள் பள்ளிவாசல்களுக்கு இந்த நோக்குடன் தான் வருகிறார்கள். எனவே குழப்பம் கொலையை விடக் கொடியது என்ற அல்குர்ஆன் அடிப்படையில் இவர்களைப் பள்ளியில் அனுமதிக்கக்கூடாது.

இப்படிக்கு

தலைவர் மௌலானா மௌலவி

எம்.இ.எம். அபுல்ஹஸன் ஷாதலி

செயலாளர் ஹஜரத் வி. ஹம்ஸா மௌலவி

நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா

15.10.88

வெளியீடு: மேலப்பாளையம் மஜ்லிசுல் உலமா சபை.

நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமாவின் இந்தப் பிரசுரத்தையடுத்து மேலப்பாளையத்தில் அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை இதோ:

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

9.11.88 அன்று மேலப்பாளையம் புதுமனை கொத்பா பள்ளிவாசலில் வைத்து, ஜனாப் வி.எஸ்.டி. சம்சுல் ஆலம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மேலப்பாளையம் அனைத்துப் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டியினர் மற்றும் ஜமாஅத்தினர் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.

“சுன்னத் வல் ஜமாஅத் இமாம்களையும் மத்ஹபுகளையும் ஏற்காதவர்கள் அந்தந்த முஹல்லா பள்ளிவாசல்களில் தொழக்கூடாது என்று அந்தந்த பள்ளிவாசல்களிலும் போர்டு எழுதி வைப்பது என்றும், இந்த முடிவை அந்தந்த முஹல்லா பள்ளிவாசல் பொறுப்பாளர்களே அமுல் நடத்த முழுப் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

போர்டு எழுதி வைக்க வேண்டிய வாசகம்:

“சுன்னத் வல் ஜமாஅத் இமாம்களையும் மத்ஹபுகளையும் ஏற்காதவர்கள் இப்பள்ளிவாசலில் தொழ அனுமதிக்கப்பட மாட்டார்கள்”

– நிர்வாகிகள்

மேலே கண்ட வாசகத்தை பள்ளிவாசல் ஜும்ஆ மற்றும் வக்து தொழுகை நேரங்களில் அறிவிப்புச் செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம். வஸ்ஸலாம்

இப்படிக்கு

அனைத்துப் பள்ளிவாசல்   நிர்வாகக் கமிட்டியினர்

வி.எஸ்.டி. சம்சுல் ஆலம்

அமைப்பாளர்