மஹ்ஷர் மன்றத்தில் மாநபியின் புகார் -6

மஹ்ஷர் மன்றத்தில் மாநபியின் புகார்

தொடர்: 6

எம். ஷம்சுல்லுஹா

இன்னும் சொல்லப் போனால் தங்களது பரிந்துரையாளர்கள் என்று மக்கா இணை வைப்பாளர்கள் எவர்களை நம்பிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர்! அவர்கள் மாபெரும் இறைத் தூதர்கள். இதை நாம் புகாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்த போது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங்களும் இருந்தன. அவற்றையும் வெளியேற்றினார்கள்.

இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை அழிப்பானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்விரு நபிமார்களும் அம்புகள் மூலமாகக் குறி பார்ப்பவர்களாக ஒரு போதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்என்று கூறி விட்டுக் கஅபாவில் நுழைந்தார்கள். அதன் ஓரங்களில் (நின்று) தக்பீர் கூறினார்கள்; அதில் தொழவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1601, 3352

இவ்விரு இறைத் தூதர்களும் சாதாரணத் தூதர்கள் கிடையாது. அந்த அரபியர்களின் தந்தையர்களும் ஆவர். இப்படி அவர்களது இரத்தத்துடன் இரண்டறக் கலந்த அந்த தூதர்களைத் தான் தங்கள் பரிந்துரையாளர்கள் என்று மக்கா இணை வைப்பாளர்கள் நம்பினர்.

அவர்கள் நம்பிய அந்த மாபெரும் இறைத் தூதர்கள் எங்கே? இறை நேசர்கள் என்ற பெயரில் இங்க இவர்கள் நம்புகின்ற சாதாரண அடியார்கள் எங்கே?

அந்த இறைத் தூதர்கள், நல்லடியார்கள் தாம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் இவர்கள் இறை நேசர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கின்ற முஹ்யித்தீன், காஜா முஈனுத்தீன், ஏர்வாடி இப்ராஹீம், ஷாகுல் ஹமீது, மஸ்தான் போன்றோர்கள் இறை நேசர்கள் என்பதற்கோ, நல்லடியார்கள் என்பதற்கோ நேரடியாக எந்தச் சான்றும் இல்லை.

மக்கா இணை வைப்பாளர்கள் இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட தூதர்களை பரிந்துரையாளர்கள் என்று நம்பிக் கொண்டிருந்த போதும் அவர்களின் நம்பிக்கையை அல்லாஹ் தகர்த்தெறிந்து, அந்த மக்களை இணை வைப்பாளர்கள், இறை மறுப்பாளர்கள் என்று முத்திரையிட்டு விட்டான்.

இந்த ஆலிம்களோ, அந்த நபிமார்களுக்கு அருகில் கூட நெருங்க முடியாத ஆட்களை, வரலாற்றுத் தடயமே இல்லாதவர்களை, ஆதாரப்பூர்வமான வரலாற்றை இழந்து விட்ட சாதாரணமானவர்களைப் பரிந்துரையாளர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இந்த நம்பிக்கையை இறைவன் எப்படி ஏற்றுக் கொள்வான்?

இந்த வகையில் மக்கா காஃபிர்களின் கடவுள் நம்பிக்கை சற்று உயர்வாகவும், இவர்களது நம்பிக்கை மிக மிக மட்ட ரகமானதாகவும் அமைந்து விடுகின்றது. இதன்படி பார்க்கும் போது இந்த ஆலிம்கள் மக்கா காஃபிர்களை விட கீழ் நிலையிலேயே உள்ளார்கள்.

எனவே இவர்கள் மக்கா காஃபிர்களை விடவும் அதிகமான நரகத் தண்டனை பெறுவதற் குத் தகுதியானவர்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

இந்த அடிப்படையில் இவர்களை ஒரு போதும் முஸ்லிம்கள் என்று கூற முடியாது.

என்ன தான் மறுமை நம்பிக்கை கொண்டிருந்தாலும் அந்த நம்பிக்கை, இணை வைப்பின் காரணமாகத் தகர்ந்து போய் விடுகின்றது.

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

அல்குர்ஆன் 39:65, 66

இந்த எச்சரிக்கை நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமல்ல! எல்லா இறைத் தூதர்களுக்கும் தான்.

இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

அல்குர்ஆன் 6:88

இறைத் தூதர்கள் இணை கற்பித்தாலே அவர்களது அமல்கள் எல்லாம் அழிந்து போகும் எனும் போது இவர்கள் எம்மாத்திரம்?

ஒரு குடம் பால் ஒரு துளி விஷம்

இவர்களது இறை நம்பிக்கை, ஏனைய அமல்கள் எல்லாமே இணை வைப்பின் காரணமாக அழிந்து போய் விடுகின்றன. இவர்களது தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்கள், இன்ன பிற சமூக நலச் சேவைகள் அத்தனையுமே அழிந்து போய் விடுகின்றன. ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தால் போதும். அவ்வளவு பாலும் விஷமாக மாறி வீணாகி விடுகின்றது. அது போல் இணை வைப்பவர்கள் செய்கின்ற அத்தனை அமல்களும் பாழாகிப் போய் விடுகின்றன. அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

மேற்கண்ட விளக்கங்களிலிருந்து, இந்த ஆலிம்கள் கொண்டிருக்கும் இறை நம்பிக்கை இவர்களுக்கு ஒரு போதும் கை கொடுக்காது என்று தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நாம் தான் இறை நம்பிக்கை கொண்டிருக்கிறோமே! நாம் எப்படி நரகத்திற்குப் போவோம்? என்று ஒருவர் இணை வைப்பில் நீடிப்பாரானால் அவர் குர்ஆனைச் சரியாக விளங்காதவர் ஆவார். காரணம், எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் தெளிவாகக் கூறுகின்றான்.

அவர்களில் பெரும்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை. (அல்குர்ஆன் 12:106)

அதாவது இம்மக்கள் இறை நம்பிக்கை கொள்வதில் ஒன்றும் குறைச்சல் இல்லை. ஆனால் இணை வைக்கின்றனர் என்று கடுமையாகச் சாடுகின்றான்.

அதனால் ஒருவரிடம் இறை நம்பிக்கை மாத்திரம் இருந்தால் போதாது. அவரிடம் இணை வைப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். இறை நம்பிக்கை அல்லது அது போன்ற மறுமை நம்பிக்கை ஒருவரிடம் இருந்து அவர் இணை வைப்பாரானால் அவரும் நரகவாதி தான்.

எனவே மக்கா காஃபிர்கள் மறுமை நம்பிக்கை இல்லாதவர்கள்; இந்த ஆலிம்கள் மறுமை நம்பிக்கை உள்ளவர்கள்; அவர்களுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு உண்டு என்று பேசுவதெல்லாம் இங்கு அடிபட்டுப் போய் விடுகின்றது. அடுத்து இன்னொரு கேள்வி எழுகின்றது.

இனிமையான குரலில், லயிக்க வைக்கும் ராகத்தில் மிக ரசனையாகக் குர்ஆனை ஓதி, நம்மை வசப்படுத்தி ரசிக்க வைக்கும் இந்த ஆலிம் பெருமக்களா நரகில்? ஏற்றுக் கொள்ள முடியவில்லையே என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.

அதற்கான பதிலைச் சில ஹதீஸ்களிலிருந்து பார்ப்போம்.

கப்ரை வணங்கும் பரேலவி மதத்தினர்

அப்துந்நாஸிர்

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.

அல்குர்ஆன் 51:56

அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனுக்கு மட்டுமே வழிபட வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் மனிதர்களாகிய நம்மைப் படைத்திருக்கிறான் என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

உண்மையான இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற மக்களுக்கு மத்தியில் ஷைத்தானிய அடிச்சுவடுகளைச் சிறிதும் பிசகாமல் பின்பற்றுகின்ற பரேலவி மதத்தினரால் சமாதி வழிபாடு, தாயத்து, தகடுகள், போன்ற எண்ணற்ற இணை கற்பிக்கின்ற காரியங்கள் புகுந்து விட்டன.

ஆனால் சத்தியத்தை யாருக்கும் அஞ்சாது எடுத்துரைக்கின்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் தீவிரப் பிரச்சாரத்தின் காரணத்தினால் ஷைத்தானிய சக்திகளான கப்ரு வணங்கி பரேலவிகளின் சிலந்திக் கோட்டைகள் தகர்த்தெறியப் பட்டுள்ளன.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (இறைவனைப் பற்றி) நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்.

அல்குர்ஆன் 21:18

இன்றைக்கு அதிகமான மக்கள் சத்தியத்தை விளங்கி உண்மையான இஸ்லாத்தைப் பின்பற்றத் துவங்கி விட்டார்கள். இதனால் முஸ்லிம்களைப் போன்று வேடமிட்டு கப்ரை வணங்கும் பரேலவி மதத்தினர், “நாங்கள் கப்ரை வணங்கவில்லை. கப்ரு ஸியாரத்தைத் தான் செய்கிறோம்” என்று கப்ரு வணக்கத்திற்கும் கப்ரு ஸியாரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் அவர்கள் செய்கின்ற இழிசெயலை நற்செயலாகக் காட்டியுள்ளனர்.

இணை கற்பிக்கின்ற, பெரும் பாவ காரியங்களான சமாதிகளைக் கட்டி அதற்கு விழாக்கள் எடுப்பது, ஊர்வலம் நடத்துவது, சமாதியில் சந்தணம் பூசுவது, மாலையிடுவது, மரியாதை செய்வது, மவ்லூது பஜனைகள் பாடுவது, நேர்ச்சைகள் வழங்குவது, சமாதிகள் பெயரில் சினிமாப் பாட்டுகளை இசையுடன் பாடி கச்சேரி நடத்துவது, யானை என்ற மிருகத்துடன் பரேலவியிஸ மாக்களும் சேர்ந்து மிருக ஊர்வலம் செல்வது, சமாதியில் முறையிடுவது, உண்டியல் வைத்து வசூலிப்பது போன்றவையும் உண்மையான இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற காரியங்களே என்பது இஸ்லாத்தைப் படிக்காத, கப்ரை வணங்கும் பரேலவியிஸ மதத்தினருக்கு விளங்கவில்லை.

உண்மையான இஸ்லாத்தில் கை தட்டுவது, சீட்டியடிப்பது போன்றவை தொழுகையாகக் கருதப்படாது. இதையே பரேலவிகளைப் போன்று அல்லாஹ்வை நம்பிய மக்கா காஃபிர்கள் தாங்கள் வணங்கிய சிலைகளுக்குச் செய்ததால் அக்காரியங்களை அவர்களுடைய தொழுகையாகவே அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர (வேறெதுவும்) இந்த ஆலயத்தில் அவர்களின் தொழுகையாக இருக்கவில்லை. “நீங்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருந்த காரணத்தினால் வேதனையை அனுபவியுங்கள்!” (என்று கூறப்படும்)

அல்குர்ஆன் 8:35

இது போன்றே கப்ரை வணங்கும் பரேலவிகள் செய்யும் மேற்கண்ட காரியங்களும், இறைவனுக்கு இணை கற்பிக்கும் வணக்கமாகவே கருதப்படும்.

அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே ஒரு இறைவனை அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. “அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை; எதுவும் இல்லை” என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும், ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுடைய பண்புகள் ஆற்றல்கள் அவனுக்கு இருப்பது போல் மற்றவர்களுக்கு இருப்பதாக நம்புவதும், அல்லாஹ்வுக்குச் செய்யும் வழிபாடுகளில் எந்தவொன்றையும் மற்றவர்களுக்குச் செய்வதும் இணை கற்பித்தல் என்று இஸ்லாம் கூறுகிறது.

இவ்வாறு இறைவனுக்கு இணை கற்பித்தல், மனிதர்கள் செய்கின்ற குற்றங்களிலேயே மிகவும் பெரிய குற்றம் எனவும், இக்கொள்கையிலிருந்து திருந்திக் கொள்ளாமல் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கு மன்னிப்பு இல்லை; என்றென்றும் நரகத்தில் கிடப்பார் என்றும் இஸ்லாம் கூறுகிறது.

இனி பரேலவிகள் கப்ரை வைத்துக் கொண்டு செய்யும் காரியங்கள் கப்ரு வணக்கமே என்பதற்கான சான்றுகளைப் பார்ப்போம்.

இறந்தவர்களை இறை நேசர்கள் (அவுலியா) என்று தீர்மானிப்பது இணை வைத்தலே!

புத்தன் துறையைச் சேர்ந்த பரேலவி மதத்தினர் அல்ஆரிபுபில்லா என்ற பெயருடைய ஒருவரை இறை நேசர் என்றும் மகான் என்றும் கூறுகின்றனர். இவ்வாறே ஒவ்வொரு தர்ஹாவில் உள்ளவர்களையும் கூறுகின்றனர். இவர்கள் அவுலியா எனக் கூறுபவர்களில் சில குரங்களும், யானையும், அணில்களும், கட்டை பீடி மஸ்தான்களும், அறுபதடி பாவாக்களும் அடங்கியுள்ளனர்.

அல்லாஹ்வும், அவனிடமிருந்து இறைச்செய்தி பெற்றதன் அடிப்படையில் இறைத்தூதரும் யாரையெல்லாம் சுவர்க்கவாசிகள் என்றும் நரகவாசிகள் என்றும் கூறியுள்ளார்களோ அவர்களைத் தவிர வேறு யாரையும் அவர் மரணித்த பிறகு இவர் சுவர்க்கவாசி தான் அல்லது இவர் நரகவாசி தான் என்று தீர்மானிக்கக் கூடிய அதிகாரம் யாருக்கும் கிடையாது. இறைத் தூதர்கள் கூட இறைவன் அவர்களுக்கு அறிவித்தவர்களை மட்டும் தான் கூற முடியுமே தவிர வேறு யாரையும் அவர்களாகத் தீர்மானிக்க முடியாது.

கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள்.

அல்குர்ஆன் 10:62, 63

இறை நம்பிக்கை, இறையச்சம் கொண்ட அனைவரும் இறை நேசர்களே என மேற்கண்ட வசனம் கூறுகிறது. ஒருவனுடைய உண்மையான இறையச்சத்தையும், இறை நம்பிக்கையையும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது. நபியவர்களுக்குக் கூட இந்த அதிகாரம் கிடையாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் “மக்களின் இதயங்களைத் துளையிட்டுப் பார்க்கவோ அவர்களின் வயிறுகளைக் கிழித்துப் பார்க்கவோ எனக்கு உத்தரவிடப்படவில்லை

அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)

நூல்: புகாரி 4351

இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்தும் விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் யார் எவர் வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்த போது உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரது உடல் நீராட்டப்பட்டு அவரது ஆடையிலேயே கஃபனிப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), “ஸாயிபின் தந்தையே! உம்மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன்எனக் கூறினேன். உடனே நபி (ஸல்) அவர்கள்  “அவரை அல்லாஹ் கண்ணியப் படுத்தியுள்ளான் என்பது, உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத் தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?” என நான் கேட்டேன். அதற்கு, நபி (ஸல்) அவர்கள், “இவர் இறந்து விட்டார். எனவே அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே நான் விரும்புகின்றேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் எனது நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாதுஎன்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.

நூல்: புகாரி 1243

உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த சஹாபி. ஹிஜ்ரத் செய்தவர். அவர் மரணித்த பிறகு, அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தி விட்டான் என்று தீர்மானிப்பதை நபியவர்கள் கண்டிக்கிறார்கள். ஒருவன் எவ்வளவு நல்லவனாக வாழ்ந்தாலும் அவன் மரணித்த பிறகு அவன் நிலை என்னவென்பதை அல்லாஹ் ஒருவன் தான் அறிந்தவன். அவனைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது.

நம்முடைய பார்வைக்கு ஒருவன் நல்லவனாக வாழ்ந்தாலும் அவன் மரணித்த பிறகு அவன் நல்லவன் தான் என நாம் தீர்மானிக்க முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக விளக்குகின்றன. பின்வரும் ஹதீஸ் இதனை நூறு சத விகிதம் உறுதிப்படுத்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்)செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸாஇத்(ரலி)

நூல்: புகாரி 2898

ஒருவர் மரணித்த பிறகு அவரை மகான், நல்லவர், அவுலியா, சுவர்க்கவாசி என்று தீர்மானிக்கின்ற அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியதாகும். இதற்கு மாற்றமாக இறை அதிகாரத்தைக் கையிலெடுத்து ஆரிபு என்பவரையும், முஹைதீன் என்பவரையும் அனைத்து தர்ஹாவில் அடக்கப்பட்டவர்களையும் யானைகளையும், குரங்குகளையும், கட்டைப்பீடி மஸ்தான்களையும் இந்த பரேலவி மதத்தினர் அவுலியாக்கள் என்று தீர்மானித்தது இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற காரியமே! இதை உண்மையான முஸ்லிம்கள் தெளிவாக விளங்கியுள்ளனர்.

கப்ரைக் கடவுளாக்கிய பரேலவி மதத்தினர்

பிரார்த்தனை என்பது வணக்கமாகும். அதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் செய்வது கூடாது. அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களிடம் பிரார்த்தனை செய்தால் நாம் அவர்களைக் கடவுளாக எடுத்துக் கொண்டோம் என்பதே அதன் பொருளாகும்

பிரார்த்தனை தான் வணக்கமாகும்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்(ரலி)

நூல்கள்: அஹ்மத், திர்மிதீ, ஹாகிம், அபூதாவூத்

வணக்கங்களில் சிறந்தது எதுவென நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “ஒரு மனிதன் தனக்காக இறைவனிடம் செய்யும் பிரார்த்தனையாகும்என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: அல்அதபுல் முப்ரத்

பிரார்த்தனையை விட இறைவனிடம் மதிப்பு மிக்கது வேறொன்றுமில்லைஎனவும் நபிகள் நாயகம் (ஸல்) அருளியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: ஹாகிம்

இந்த நபிமொழிகள் யாவும் பிரார்த்தனை என்பது ஒரு வணக்கம் என்று கூடச் சொல்லாமல் வணக்கங்களிலேயே தலை சிறந்த வணக்கம் எனத் தெளிவாக அறிவிக்கின்றன. யார் இறைவனல்லாத மற்றவர்களைப் பிரார்த்திக்கின்றார்களோ அவர்கள் இறைவனல்லாதவர்களை வணங்கியவர்களாகவே இறைவனால் கருதப்படுவர். லாயிலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை) என்பதில் இவர்களுக்கு நம்பிக்கையில்லை.

எனவே கப்ரிடம் பிரார்த்தனை செய்யும் பரேலவி மதத்தினர் கப்ரு வணங்கிகளே!

கப்ரில் உள்ளவர் கேட்கிறார் என்ற நம்பிக்கை

எங்கிருந்து அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும், எப்போது அழைத்தாலும் செவியேற்றுப் பதிலளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு அவ்வாற்றல் இருப்பதாக நம்புபவர்கள் இறை வணக்கத்தை இறைவனல்லாத மற்றவர்களுக்குச் செய்தவர்களாவர். இதோ இறைவன் கூறுவதைப் பாருங்கள்.

அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

அல்குர்ஆன் 35:13,14

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

அல்குர்ஆன் 7:194

செத்தவன் செவியேற்க மாட்டான் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன.

ஆனால் பரேலவி மதத்தினர் ஒரே நேரத்தில் ஆயிரக் கணக்கானோர் கப்ருக்கு முன்னால் நின்று கேட்கின்றனர். கப்ரில் உள்ளவர் அனைவரின் கூற்றையும் கேட்கிறார் என்ற நம்பிக்கையிலேயே இவ்வாறு பிரார்த்திக்கின்றனர்.

மேலும் எங்கோ வாழ்கின்ற தமிழ் பேசுகின்ற ஒரு பரேலவி மதத்தைச் சார்ந்தவன், தமிழே தெரியாத என்றைக்கோ இறந்து பக்தாதில் அடங்கி மண்ணோடு மண்ணாகி விட்ட முஹைதீன் என்பவரை அழைக்கின்றான். எங்கிருந்து அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும் செத்தவன் கேட்கின்றான் என்ற நம்பிக்கையிலேயே இவ்வாறு செய்கின்றனர். முஹைதீனை ஆயிரம் தடவை அழைத்தால் அவர் கண்ணெதிரே வருவார் என்றும் மவ்லிதுகளில் எழுதி வைத்துள்ளனர்.

எங்கிருந்து அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும், எப்போது அழைத்தாலும் செவியேற்றுப் பதிலளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.  இவ்வாற்றல் கப்ருக்கு இருப்பதாக நம்புவதால் பரேலவிகள் கப்ரு வணங்கிகளே!

கப்ருக் கடவுளிடம் உதவி தேடும் பரேலவி மதத்தினர்

(அல்லாஹ்வே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.

அல்குர்ஆன் 1:4

மிகைத்தவனும், ஞானமிக்கோனுமான அல்லாஹ்விடமிருந்தே தவிர எந்த உதவியும் இல்லை.

அல்குர்ஆன் 3:126

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்வோர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

அல்குர்ஆன் 3:160

நபி (ஸல்) கூறினார்கள்: நீ எதைக் கேட்டாலும் அல்லாஹ்விடமே கேள். நீ உதவி தேடினால் அல்லாஹ்வைக் கொண்டு (மட்டுமே) உதவி தேடு.

அறிவிப்பவர்: இப்னு  அப்பாஸ் (ரலி)

நூல்: திர்மிதி 2440

அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடும்படி மேற்கண்ட வசனங்களும் ஹதீஸ்களும் நமக்குக் கற்றுத் தருகின்றன. எனவே உதவி தேடுதல் என்பது வணக்கமாகும்

இந்தப் பரேலவி மதத்தினர் இறைவனிடம் மட்டுமே உதவி தேட வேண்டும் என்பதன் சரியான பொருளைத் திரிக்கின்றனர்.

நன்மையான காரியங்களிலும் இறையச்சத்தை ஏற்படுத்தும் காரியங்களிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 5:2

இந்த வசனத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதை அல்லாஹ் அனுமதிக்கிறான்; வலியுறுத்தவும் செய்கிறான்.

எனவே ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக் கொள்வதும், மனிதர்களை மனித நிலையில் வைத்து உதவி தேடுவதும் இணை வைத்தலாகாது.

ஆனால் மனிதனை இறைவனது அம்சம் பொருந்தியவனாகக் கருதும் விதமாக உதவி தேடுவது மட்டுமே இணை வைத்தலாகும். கப்ரில் அடங்கி மண்ணோடு மண்ணாகி விட்ட ஒருவரை, ஒருவன் அழைத்து உதவி தேடும் போது அவர் இறைவனது அம்சம் கொண்டவராக நம்பப்படுகிறார்.

எங்கிருந்து அழைத்தாலும் எந்த மொழியில் அழைத்தாலும் எப்போது அழைத்தாலும் செவியேற்றுப் பதிலளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.

இவ்வாற்றல் கப்ருக்கு இருப்பதாக நம்புவதாலும் எவ்வித உபகரணங்களும் இல்லாமால் நோய் நீக்குதல்,  குழந்தை பாக்கியத்தை அளித்தல் போன்ற ஆற்றல்கள் இறைவனுக்கு இருப்பதைப் போன்று கப்ருக்கு இருப்பதாக நம்பி இறைவனிடம் மட்டுமே முறையிட வேண்டியவற்றை கப்ரிடம் முறையிடும் பரேலவிகள் கப்ரு வணங்கிகளே!

கப்ருக்கு அறுத்துப் பலியிட்டு நேர்ச்சை செய்தல்

உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!

அல்குர்ஆன் 108:2

இந்த வசனத்தில் இறைவனுக்காக மட்டுமே தொழ வேண்டும். அவனுக்காக மட்டுமே அறுத்துப் பலியிட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

தொழுகை எப்படி வணக்கமோ அது போல் அறுத்துப் பலியிடுவதும் வணக்கமே! தொழுகைகளை எப்படி இறைவனல்லாத எவருக்கும் செய்யக் கூடாதோ, அது போல் அறுத்துப் பலியிடுவதையும் இறைவனல்லாத எவருக்கும் செய்யக் கூடாது என்று இங்கே தெளிவுபடுத்தப்படுகின்றது.

யார் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்காக அறுக்கின்றானோ, அவனை அல்லாஹ் லஃனத் செய்கிறான்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: முஸ்லிம் 4001

யார் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதாக நேர்ச்சை செய்கிறாரோ, அதை அவர் நிறைவு செய்யட்டும்! யார் இறைவனுக்கு மாறு செய்யும் விஷயங்களில் நேர்ச்சை செய்கிறாரோ, அதை நிறைவேற்றலாகாதுஎன்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 6696

அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்காகவும் உயிரே போய் விடும் என்ற நிலை ஏற்பட்டாலும், எதனையும் பலியிடக் கூடாது. அற்ப ஈ போன்ற மதிப்பற்ற உயிரினங்களைக் கூட, அல்லாஹ் அல்லாதவர்களுக்குப் பலியிடக் கூடாது; நேர்ச்சை செய்யக் கூடாது  என்பதை இந்த ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

நேர்ச்சையும் அறுத்துப் பலியிடலும் ஒரு இபாதத் – வணக்கம் என்பதை எவர் அறியவில்லையோ, அதன் படி நடக்கவில்லையோ, அவர்கள் இறைவனல்லாதவர்களை வணங்கியவர்களாக ஆகி நிரந்தர நரகத்திற்குத் தகுதி பெறுகிறார்கள்.

எனவே கப்ருகளுக்கு அறுத்துப் பலியிடுதல், நேர்ச்சை செய்தல் என்ற வணக்கங்களைச் செய்யும் பரேலவி மதத்தினர் கப்ரு வணங்கிகளே!

யானையைக் கடவுளாக்கிய கப்ரு வணங்கிகள்

கப்ரு வணக்கத்தை கப்ரு ஸியாரத் என்று பெயர் மாற்றம் செய்யும் பரேலவிகள் தங்களுடைய வணக்கத் தலங்களாகிய தர்ஹாக்களில் யானையைக் கட்டி வைத்து தீனி போடுகின்றனர். ஆண்களும் பெண்களும் கலர்ஃபுல்லாகக் காட்சி தந்து ஒருவரை ஒருவர் பார்த்து ரசிப்பதற்காவும், சினிமாப் பாட்டுப் பாடி பக்தர்களைக் குஷிப்படுத்தவும், கோயில்களில் சிலைகளுக்காக பாடப்படும் பஜனைகளை தங்களது கோயில்களாகிய தர்ஹாக்களில் பாடுவதற்காவும் இன்னும்  மார்க்கத்திற்கு புறம்பான பல அனாச்சாரங்களை அரங்கேற்றுவதற்காகவும் கந்தூரி விழா என்று ஏற்பாடு செய்வர்.

இதற்குக் கூட்டம் சேர்ப்பதற்காக யானையைத் தெருத் தெருவாக அழைத்து வருவர். இந்த யானையைப் பார்க்கும் போது தான் மக்களுக்கு அவுலியாவின் ஞாபகம் வந்து இவர்களின் வணக்கத் தலங்களாகிய தர்ஹாவில் நடக்கும் லீலைகளில் கலந்து கொள்வார்கள் என்பதற்காவே இவ்வாறு செய்கிறோம் என பரேலவிகள் கூறுகின்றனர்.

நபியவர்கள் இவ்வாறு தான் கப்ரு ஸியாரத் செய்தார்களா? என்றெல்லாம் இவர்களிடம் கேள்வி கேட்கக் கூடாது. ஏனென்றால் இவர்கள் பரேலவி மதத்தினர்.

இந்தப் பரேலவி மதத்தினர், யானை தனது தும்பிக்கையால் தண்ணீரை உறிஞ்சி ஒரு பக்தனின் மீது சிந்தினால் அவன் பாக்கியம் பெற்றவனாகி விடுவான் என நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த யானை தண்ணீரை உறிஞ்சி அடிப்பதின் மூலமே தர்ஹாக்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் வருமானம் வருகிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மேலும் இந்தப் பரேலவி மதத்தினர் யானை ஊர்வலம் வரும் போது அதன் முதுகிலிருக்கும் கொடிக்களையின் பூக்களைப் பெறுவதையும், தங்கள் குழந்தைகளை அதன் முதுகில் ஏற்றி இறக்குவதையும் பெரும் பாக்கியமாகவே கருதுகின்றனர்.

இவர்கள் யானையைக் கடவுளாகக் கருவதுவதாலேயே இது போன்ற வணக்கங்களைத் தங்களுடைய யானைக் கடவுளுக்குச் செய்கின்றனர் என்பதை உண்மையான முஸ்லிம்கள் நன்றாக விளங்கியே வைத்துள்ளனர்.

சந்தனம், கொடிக்களை, நெருப்பை வணங்கும் பரேலவிகள்

பரேலவி மதத்தினர் தங்களது வணக்கத்தலங்களாகிய தர்ஹாக்களில் அவர்கள் கடவுளாக வணங்கும் கப்ருகளுக்கு சந்தனத்தைப் பூசுகின்றனர். முஸ்லிம் அல்லாதவர்கள் கற்சிலைகளுக்குப் பாலை ஊற்றி அபிஷேகம் செய்கின்றனர். அது போன்று கற்சிலையை விடக் கீழ் நிலையில் உள்ள கப்ருகளுக்கு சந்தன அபிஷேகம் செய்தல், சந்தனம் பூசுதல் என்பது இணை கற்பிக்கின்ற காரியம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அது போன்ற கப்ருகளில் பூசப்பட்ட சந்தனம் தங்களுக்கு பரக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் அதனைக் கழுத்துகளில் பூசிக் கொள்கின்றனர். இறைவனல்லாத ஒரு பொருள் இறைவனைப் போன்று நமக்கு நன்மை ஏற்படுத்தும் என நம்பிக்கை வைப்பதால் இதுவும் இணை கற்பிக்கின்ற காரியமே!

அது போன்று தர்ஹாக்களில் விளக்குகளை ஏற்றி வைத்து   அந்த நெருப்பைத் தொட்டு முத்தமிடுகின்றனர். அதற்கு விளக்கு ராத்திரி என்றும் பெயர் வைத்துள்ளனர். இவ்வாறு செய்வதால் துன்பங்கள் நீங்கும் என நம்பிக்கை வைத்துள்ளனர். இதே நம்பிக்கையில் தான் கொடிக்களைகளையும் தொட்டு முத்தமிடுகின்றனர். நமக்கு துன்பத்தையும், இன்பத்தையும் ஏற்படுத்தக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டும் தான்.

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 10:107

சந்தனமும், நெருப்பும், கொடிக் களைகளும் இறைவனைப் போன்று இன்ப துன்பங்களைத் தரக் கூடியவை என பரேலவி மதத்தினர் நம்பிக்கை வைத்திருப்பதால் கொடி ஊர்வலமும், தர்ஹாக்களில் விளக்கேற்றுவதும் இணை கற்பிக்கின்ற காரியங்கள் தாம் என்பதில் சந்தேகமில்லை.

பஜனை பாடுவதும் உண்டியல் வைப்பதும் இணை கற்பித்தலே!

கப்ரை வணங்கும் பரேலவி மதத்தினர் தங்களுடைய வணக்கத் தலங்களிலே தங்களுடைய கடவுளாகிய கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவரைப் புகழ்ந்து பஜனைகளைப் பாடுகின்றனர். இந்த பஜனைகள் அனைத்துமே இறைவனுடைய பண்புகளை இறைவனின் அடிமைகளுக்கு வழங்கி அவர்களைக் கடவுளாக வழிபடக்கூடிய பாடல்களாகவே அமைந்துள்ளன.

இதற்கு ஒரு சிறிய உதாரணமாக அனைவரும் அறிந்த யாகுத்பா என்ற பஜனையில் இடம் பெற்ற ஒரு கருத்தைக் கூறலாம். அதாவது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து பாக்தாத்தில் மரணமடைந்த முஹைதீன் அவர்களை, யார், எங்கிருந்து, எந்த மொழியில், எந்த நேரத்திலும் “முஹைதீனே! வந்து விடுங்கள்!’ என்று ஆயிரம் தடவை அழைத்தால் அவர் கண் முன்னே காட்சி தருவார் என்று பாடுகின்றனர்.

நபிமார்களின் உடல்களைத் தவிர மற்றவர்களின் உடல்களை மண் சாப்பிட்டு விடும் என்று நபியவர்கள் கூறியுள்ளனர். ஆனால் மண்ணோடு மண்ணாகி விட்ட முஹைதீன் என்பவர் இறைவனைப் போன்று ஆற்றலுள்ளவர் என பரேலவி மதத்தினர் பஜனை பாடுவதாலும் இவர்களுடைய பஜனைகள் அனைத்தும் இவ்வாறு அமைந்துள்ளதாலும், இந்தப் பஜனைகளை இறந்தவர் கேட்கிறார் என்ற நம்பிக்கை வைத்திருப்பதாலும் பஜனைகள் பாடுவது இணை கற்பிக்கின்ற காரியமே!

இது போன்றே நாம் எந்த ஒன்றைச் செலவு செய்தாலும் இறைவனுக்காக மட்டுமே செலவிட வேண்டும். இறைவனைத் தவிர மற்றவர்களின் திருப்திக்காகவோ அவர்கள் தனக்கு அருள்புரிய வேண்டும் என்ற நம்பிக்கையிலோ ஒருவன் மக்களுக்கு வாரியிறைத்தாலும் உண்டியலில் போட்டாலும் அக்காரியம் இணை கற்பிக்கின்ற காரியமே!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் அவனுக்காக மனத்தூய்மையுடனும் அவனுடைய திருமுகத்தை நாடியும் செய்கின்ற செயலைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)

நூல்: நஸயீ 3089

ஆனால் பரேலவி மதத்தினர் தங்களுடைய கப்ருக் கடவுளின் திருப்திக்காகவும், அருளுக்காகவும் உண்டியல் வைத்து வசூலித்து கொள்ளையடிப்பதால் தர்ஹாக்களில் வைக்கப்பட்ட உண்டியல்களில் காசு போடுவதும் இணை கற்பிக்கின்ற காரியமாகும்.

பரேலவி மதத்தினர் கப்ரை வணங்குகிறார்கள் என்பதற்கு இன்னும் பல சான்றுகள் உள்ளன. யூத, நஸராக்களின் கலாச்சாரமாகிய இந்தச் சமாதி வழிபாட்டை ஒழிப்பதற்காகத் தான் நபியவர்கள் பின்வரும் எச்சரிக்கைகளைக் கூறியுள்ளார்கள்.

கப்ரைக் கட்டுவது, பூசுவது கூடாது!

நபி (ஸல்) அவர்கள் கப்ருகளை பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1610

கப்ருகளைத் தரைமட்டமாக்குதல்

அபுல் ஹய்யாஜ் அல் அஸதி அறிவிக்கிறார்கள்:

அலீ (ரலி) அவர்கள் என்னிடம், “நபி (ஸல்) அவர்கள் எந்தப் பணிக்காக அனுப்பினார்களோ அதே பணிக்கு உன்னை அனுப்புகிறேன். எந்தச் சிலையையும் அதனை அழிக்காமலும் எந்தக் கப்ரையும் அதனைத் தரைமட்டம் ஆக்காமலும் விட்டு விடாதே!என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1609

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  உங்களுடைய கப்ருகளைத் தரையோடு மட்டமாக ஆக்குங்கள்.

அறிவிப்பவர்: ஃபழாலா பின் உபைத்(ரலி)

நூல்: அஹ்மது 22834

அல்லாஹ்வின் சாபம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  யூத, நஸராக்களை அல்லாஹ் சபித்து விட்டான். (ஏனென்றால்) தங்களுடைய நபிமார்களின் கப்ருகளை தர்ஹாக்களாக எடுத்துக் கொண்டனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ 1330

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் சமாதிகளை தர்ஹாக்களாக ஆக்கிக் கொண்டார்கள். நான் அதை விட்டும் உங்களைத் தடுக்கிறேன்.

அறிவிப்பவர்: சுன்துப் (ரலி)

நூல்:  முஸ்லிம் 827

படைப்பினங்களிலேயே மோசமானவர்கள்

அறிந்து கொள்ளுங்கள், மக்களிலேயே மோசமானவர்கள் தங்களின் நபிமார்களின் கப்ருகளை தர்ஹாக்களாக ஆக்கிக் கொண்டவர்கள் தான்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉபைதா (ரலி)

நூல்: அஹ்மத் (1599)

எனவே சாபத்தைத் தரும் இந்தச் சமாதி வழிபாட்டைப் புறக்கணிப்போம். சத்தியத்தை நோக்கி அணி திரள்வோம்.