மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுதல்

மறு ஆய்வு – 3

மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுதல்

பெரும்பாலான திருக்குர்ஆன் வசனங்களும், பெரும்பாலான நபிமொழிகளும் சட்டங்களை விளக்கும் வகையில் தான் அமைந்திருக்கும்.

ஆனால் சில ஹதீஸ்கள் சட்டங்களைக் கூறாமல் அடிப்படைக் கொள்கைகளை வகுக்கக் கூடியதாக அமைந்திருக்கும். இத்தகைய ஹதீஸ்கள் நூற்றுக்கணக்கான சட்டச் சிக்கல்களைத் தீர்த்து, தெளிவான முடிவுக்கு வருவதற்கு உதவும் வகையில் அமைந்துள்ளன.

அடிப்படைக் கொள்கைகளை வகுக்க வழி காட்டும் அத்தகைய ஹதீஸ்களில் பின்வரும் ஹதீஸும் அடங்கும்.

மன் தஷப்பஹ பிகவ்மின் ஃபஹுவ மின்ஹும்

பொருள்: பிற சமுதாயக் கலாச்சாரத்திற்கு ஒப்ப நடப்பவன் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவனே!

இந்த நபிமொழி இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படையைச் சொல்லித் தருகின்றது.

திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ தடுக்கப்படாத ஒன்றை பிற மதத்தவர்கள் தமது மதச் சடங்காகச் செய்து வந்தால், அவர்களுக்கு ஒப்ப நடந்து விடக் கூடாது என்பதற்காக அதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்பதே அந்த அடிப்படைக் கொள்கையாகும்.

தாலி கட்டுதல், மெட்டி அணிதல், திருமணத்தின் போது வாழை மரம் நடுதல், ஆரத்தி எடுத்தல், மங்கள நிகழ்ச்சிகளை அறிவிக்க மஞ்சள் தடவுதல், நெற்றியில் பொட்டு வைத்தல், நாமம் போடுதல், குடுமி வைத்தல், ஜெபமாலை எனப்படும் தஸ்பீஹ் மணி பயன்படுத்துதல், மீலாது விழா கொண்டாடுதல் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான காரியங்கள் குறித்து மேற்கண்ட நபிமொழியின் மூலம் தீர்வு காணலாம்.

இக்காரியங்களைச் செய்யக் கூடாது என்று நேரடியாகத் தடை இல்லாவிட்டாலும், இக்காரியங்களை நேரடியாக அனுமதிக்கும் சான்றுகள் இல்லாததால் – மேற்கண்ட நபிமொழியின் அடிப்படையில் இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று நாம் முடிவு செய்யலாம்.

எனவே தவ்ஹீத் பிரச்சாரக் கூட்டங்களில் அதிகமதிகம் பயன்படுத்தப்படும் நபிமொழிகளில் ஒன்றாக இந்த நபிமொழி அமைந்துள்ளது.

இஸ்லாத்தின் அடிப்படையிலிருந்து விலகி, பிற சமயக் கலாச்சாரத்தை நியாயப்படுத்துவோருக்கு இந்த ஹதீஸ் பெரும் அச்சுறுத்தலாகவும் சவலாகவும் இருக்கின்றது.

எனவே இந்த ஹதீஸை எப்படியாவது பலவீனமாக்கி விட்டால் எண்ணற்ற போலிச் சடங்குகளை நியாயப்படுத்தி விடலாம் என்ற எண்ணத்தில் பொருந்தாத காரணங்களைக் கூறி இதைப் பலவீனமாக்க அவர்கள் முயன்று வருகின்றனர்.

இந்த ஹதீஸைப் பலவீனமானது என்று நிறுவுவதற்கு அவர்கள் எடுத்துக் காட்டும் காரணங்கள் ஏற்புடையது தானா? என்பதை விரிவாக அலசுவோம்.

இந்தக் கருத்தில் ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் தப்ரானியின் அவ்ஸத் நூலிலும், பஸ்ஸார் நூலிலும்

இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அபூதாவூதிலும்

இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் மற்றொரு ஹதீஸ் முஸ்னத் அஹ்மதிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது.

தப்ரானியில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்

மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் பட்டியல் இது தான்.

 1. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹுதைபா (ரலி)
 2. ஹுதைபா (ரலி) கூறியதாக அவரது மகன் அபூஉபைதா
 3. அபூஉபைதா கூறியதாக இப்னு ஸீரீன்
 4. இப்னு ஸீரீன் கூறியதாக ஹிஷாம் பின் ஹஸ்ஸான்
 5. ஹிஷாம் பின் ஹஸ்ஸான் கூறியதாக அலீ பின் குராப்
 6. அலீ பின் குராப் கூறியதாக அப்துல் அஸீஸ் பின் கத்தாப்
 7. அப்துல் அஸீஸ் பின் கத்தாப் கூறியதாக முஹம்மத் பின் மர்சூக்
 8. முஹம்மத் பின் மர்சூக் கூறியதாக மூஸா பின் ஜக்கரிய்யா
 9. மூஸா பின் ஜக்கரிய்யா கூறியதாக நூலாசிரியர் தப்ரானி

மேற்கண்ட அறிவிப்பாளர்கள் வழியாக தப்ரானியில் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இடம் பெற்ற ஒவ்வொரு அறிவிப்பாளரின் நம்பகத்தன்மை பற்றியும் நாம் உறுதி செய்ய வேண்டும் என்றாலும் இந்த ஹதீஸைப் பொறுத்த வரை அதற்கு அவசியம் இல்லை.

ஏனெனில் இந்த ஹதீஸ் பலவீனமானது என்று விமர்சனம் செய்பவர்கள், மேற்கண்ட அறிவிப்பாளர்களில் ஒரே ஒருவர் தவிர மற்ற அனைவரும் நம்பகமானவர்கள் என்று ஒப்புக் கொள்கிறார்கள். அந்த ஒரு அறிவிப்பாளர் காரணமாகவே மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

எனவே அந்த ஒரு அறிவிப்பாளர் பற்றி அவர்கள் செய்துள்ள விமர்சனத்தை மட்டும் அலசுவதன் மூலம் இந்த ஹதீஸின் தரத்தை நாம் முடிவு செய்து விட முடியும்.

ஐந்தாவது இலக்கத்தில் நாம் குறிப்பிட்டுள்ள அலீ பின் குராப் என்ற அறிவிப்பாளர் காரணமாகவே இந்த ஹதீஸ் பலவீனமானது என்று வாதிடுகின்றனர்.

அலீ பின் குராப் பற்றிய விமர்சனம்

அலீ பின் குராப் என்ற அறிவிப்பாளர் பற்றி முரண்பட்ட இரண்டு கருத்துக்கள் அறிஞர்களிடையே இருக்கின்றது.

அலீ பின் குராப் என்பவரைப் பற்றிச் சொல்லப்படும் குறைகள் யாவை என்பதை முதலில் ஆய்வு செய்வோம்.

 1. ஷியாக் கொள்கையில் பற்றுடையவர்

இவரது ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்ற கருத்துடையவர்கள் கூறும் முதல் காரணம், “இவர் ஷியாக் கொள்கையில் தீவிரப் பற்றுள்ளவராக இருந்தார்” என்பது தான்.

இப்னு ஹிப்பான், இப்னு மயீன் உள்ளிட்ட சில அறிஞர்கள், “இவர் ஷியாக் கொள்கையில் பற்று கொண்டவராக இருந்தார்’ என்று கூறியுள்ளனர். எனவே இதன் காரணமாக  இவர் அறிவிக்கும் ஹதீஸ் பலவீனமானது என்று சிலர் வாதிக்கின்றனர்.

இந்த வாதம் ஏற்கத்தக்கதல்ல! ஏனெனில் எத்தகைய கொள்கை உடையவர் என்ற அடிப்படையில் ஒருவரது நம்பகத்தன்மையை ஹதீஸ் கலை வல்லுநர்கள் எடை போடுவதில்லை. அவரது நாணயம், நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் தான் நம்பகத்தன்மையை எடை போடுவார்கள்.

ஹதீஸ் கலை வல்லுனர்களால் நம்பகமானவர் என்று முடிவு செய்யப்பட்டவர்களில் பலர் ஷியாக்களாகவும், கத்ரியாக்களாகவும், முர்ஜியாக்களாகவும் இன்னும் பல தவறான கொள்கையுடையவர்களாகவும் இருப்பதை சர்வ சாதாரணமாகக் காணலாம்.

இதனால் தான் இவரைப் பற்றி இப்னு மயீன் அவர்கள் கூறும் போது, “இவர் பழுதில்லாதவர்; ஆயினும் ஷியாக் கொள்கையுடையவர்” என்று குறிப்பிடுகிறார்கள்.

“இவர் ஷியாக் கொள்கையுடையவர் என்பதால் இவரைக் குறை கூறியுள்ளனர். ஆனால் இவரது அறிவிப்புக்களைப் பொறுத்த வரை இவரை உண்மையாளர் என்று வர்ணித்துள்ளனர்’ என்று கதீப் அவர்கள் கூறுகிறார்கள்.

ஹஸன் பின் இத்ரீஸ் அவர்கள் பின்வரும் நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

அலீ பின் குராப் பற்றி அப்துல்லாஹ் பின் அம்மாரிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், “அவர் ஹதீஸில் ஈடுபாடு உள்ளவராகவும், ஹதீஸ் ஞானமுள்ளவராகவும் இருந்தார்” என்று விடையளித்தார்கள். “அவர் பலவீனமானவர் இல்லையா?” என்று நான் கேட்டேன்.

அதற்கவர்கள், “அவர் ஷியாக் கொள்கையுடையவராக இருந்தார். ஹதீஸ் பற்றி ஞானமுள்ள ஒருவர் பொய்யராக இல்லாத போது, ஷியாக் கொள்கை அல்லது கத்ரியாக் கொள்கையுடையவர் என்ற காரணத்துக்காக அவரது ஹதீஸ்களை நான் விட்டு விட மாட்டேன். மூஸிலியை விடச் சிறந்தவராக இருக்கும் ஒருவர் ஹதீஸ் பற்றி ஞானமில்லாதவராக இருந்தால் அவர் வழியாக எதையும் நான் அறிவிக்கவும் மாட்டேன்” என்று விடையளித்தார்கள்.

இப்னு கானிவு அவர்கள் இவரைப் பற்றிக் கூறும் போது, “இவர் நம்பகமானவர்; ஷியாக் கொள்கை உடையவர்” என்று குறிப்பிட்டார்கள்.

ஒருவரது கொள்கை எது என்பது ஹதீஸ் துறையில் கவனிக்கப் படுவதில்லை என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

புகாரியில் ஷியாக்கள்

இதை இன்னும் உறுதிப்படுத்திட புகாரியில் இடம் பெற்ற ஷியாக்கள் சிலரை இங்கே சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

புகாரி இமாமின் ஆசிரியரான உபைதுல்லாஹ் பின் மூஸா என்பவர் ஷியாக் கொள்கையுடையவராக இருந்தார். அத்துடன் மிகவும் நம்பகமானவராகவும் இருந்தார். இதன் காரணமாக புகாரி இமாம் அவர்கள் இவர் வழியாக ஏராளமான ஹதீஸ்களைத் தமது நூலில் பதிவு செய்துள்ளனர்.

அவை வருமாறு: 8, 126, 127, 354, 520, 865, 1139, 1140, 1330, 1915, 2006, 2341, 2518, 2700, 3359, 3632, 4039, 4043, 4053, 4150, 4251, 4512, 4706, 4839, 4904, 4917, 4928, 4979, 4990, 5054, 5152, 5541, 5836, 6154, 6536, 6744, 6864, 6908, 6920, 7063, 7311, 7511.

இது போல் அதீ பின் ஸாபித் அன்ஸாரி என்பவரும் ஷியாக் கொள்கையுடையவராக இருந்தார்; அத்துடன் நம்பகமானவராகவும் இருந்தார். இவரது கொள்கையைக் கவனிக்காமல் நம்பகத்தன்மையை மட்டும் கவனத்தில் கொண்டு இமாம் புகாரி அவர்கள் இவர் வழியாகப் பல ஹதீஸ்களைத் தமது நூலில் பதிவு செய்துள்ளனர். அவை வருமாறு:

55, 769, 964, 989, 1382, 1674, 1884, 2398, 2474, 2727, 3213, 3255, 3282, 3783, 4050, 4124, 4222, 4225, 4414, 5351, 5397, 5516, 5881, 6048, 6115, 6195, 7546.

இவரைப் போலவே அவ்ஃப் பின் அபீஜமீலா என்பவரும் ஷியாக் கொள்கையுடையவராக இருந்தார். அதே நேரத்தில் நம்பகத்தன்மை உடையவராகவும் இருந்தார். இவர் வழியாகப் பின்வரும் ஹதீஸ்களை இமாம் புகாரி அவர்கள் தமது நூலில் பதிவு செய்துள்ளனர்.

47, 344, 348, 547, 599, 1143, 2225, 3275, 3345, 3404, 3915, 3947, 4425, 4674, 4799, 4849, 5010, 5198, 6075, 6546, 6669, 7047, 7099, 7112

இது போன்று முஹம்மத் பின் ஃபுளைல் பின் கஸ்வான் என்பவரும் நம்பகமானவராகவும், அதே சமயம் ஷியாக் கொள்கையுடையவராகவும் இருந்தார். இவர் வழியாகவும் பல ஹதீஸ்களை புகாரி இமாம் தமது நூலில் பதிவு செய்துள்ளனர். அவை வருமாறு:

38, 595, 1300, 1728, 2041, 2064, 2544, 2963, 3821, 4022, 4170, 4268, 5374, 5483, 6460, 6682, 7079, 7563

இன்னும் இவர்களைப் போன்று வேறு சில ஷியாக்களின் அறிவிப்புகளும் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒருவர் ஷியாக் கொள்கை உடையவர் என்பதற்காக ஒரு ஹதீஸைப் பலவீனமானது என்று கூறுவதாக இருந்தால் மேற்கண்ட ஹதீஸ்கள் அனைத்தைப் பற்றியும் அவ்வாறு கூற வேண்டும். அப்படி எந்த அறிஞரும் கூறவில்லை.

எனவே அலீ பின் குராப் என்பவர் ஷியாக் கொள்கையுடையவர் என்றாலும் அவர் நம்பகமானவர்; உண்மையாளர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதைக் காரணம் காட்டி இவரது அறிவிப்புகளை நிராகரிக்க முடியாது.

 1. அலீ பின் குராப் – தத்லீஸ் செய்பவர்

ஒரு ஹதீஸை அறிவிப்பவர், தனக்கு அறிவித்தவரின் பெயரைக் குறிப்பிட வேண்டும். அப்படிக் குறிப்பிட்டால் தான் அவரின் நம்பகத் தன்மையை மற்றவர்கள் பரிசீலிக்க முடியும்.

இப்படித் தான் ஹதீஸ்கள் நூல் வடிவில் திரட்டப்பட்ட காலத்தில் பெரும்பாலான அறிவிப்பாளர்கள் அறிவித்து வந்தனர். ஆயினும் சில அறிவிப்பாளர்கள் தமக்கு அறிவித்தவரைக் கூறாமல், அறிவித்தவரின் ஆசிரியரைக் கூறி விடுவார்கள். அதாவது தம்முடைய ஆசிரியரைக் கூறாமல் ஆசிரியரின் ஆசிரியரைக் கூறி விடுவர்.

தமது ஆசிரியரை விட ஆசிரியரின் ஆசிரியர் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருப்பதாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ, மறதியாகவோ இவ்வாறு சிலர் கூறி விடுவர்.

தனது ஆசிரியரை இருட்டடிப்புச் செய்வதை தத்லீஸ் எனக் குறிப்பிடுவர்.

அப்துல்லாஹ் என்பவர் அப்துர்ரஹ்மானுக்கு ஒரு ஹதீஸைக் கூறுகிறார்; அப்துர்ரஹ்மான், அப்துல் காதிருக்கு இதைக் கூறுகிறார்.

இதை அப்துல் காதிர் எவ்வாறு அறிவிக்க வேண்டும் என்றால் “எனக்கு அப்துர்ரஹ்மான் கூறினார்; அவருக்கு அப்துல்லாஹ் கூறினார்” என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு அறிவிக்காமல் “அப்துல்லாஹ் கூறினார்” என்று மட்டும் அறிவித்தால் இவர் தனது ஆசிரியர் அப்துர்ரஹ்மானை இருட்டடிப்புச் செய்து விட்டார்.

அப்துர்ரஹ்மான் என்பவர் நம்பகமற்ற அறிவிப்பாளராக இருக்க வாய்ப்புள்ளது எனும் போது அதை இருட்டடிப்புச் செய்தால் தவறான ஹதீஸ் சரியான ஹதீஸாகி விடக் கூடிய வாய்ப்பு உள்ளது.

இத்தகைய வழக்கமுடைய ஒருவர் “அப்துர்ரஹ்மான் கூறினார்” என்று தனது ஆசிரியர் பெயரைப் பயன்படுத்தி அறிவித்தாலும் இடையில் யாரையும் விட்டிருப்பாரோ என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும்.

இத்தகைய குணமுடையவர், “அப்துர்ரஹ்மான் கூறினார்” என்று கூறாமல், “அப்துர்ரஹ்மான் என்னிடம் கூறினார்” என்றோ, அல்லது “அப்துர்ரஹ்மானிடம் நான் செவியுற்றேன்” என்றோ கூறி, யாரையும் இருட்டடிப்பு செய்யவில்லை என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.  இவ்வாறு தெளிவுபடுத்தி விட்டால் அந்த ஹதீஸ் ஏற்கப்படும். அவ்வாறு தெளிவுபடுத்தா விட்டால் அது நிராகரிக்கப்படும்.

இந்த அடிப்படையைக் கவனத்தில் வைத்துக் கொண்டு அலீ பின் குராப் பற்றிய விமர்சனத்துக்கு வருவோம்.

இமாம் அஹ்மத் பின் ஹம்பல், தாரகுத்னீ உள்ளிட்ட சில அறிஞர்கள், “இவர் தத்லீஸ் செய்பவர்’ என்று கூறியுள்ளனர். அதே சமயம் இவர் உண்மையாளர் என்றும் அஹ்மத் பின் ஹம்பல் கூறியுள்ளனர். யஹ்யா பின் மயீன், நஸயீ, அபூதாவூத், தாரகுத்னீ உள்ளிட்ட பலர் இவரைப் பற்றி நல்லெண்ணம் கொள்ளும் வகையில் கருத்துக் கூறியுள்ளனர்.

எனவே நம்பகமானவர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இவர் தத்லீஸ் செய்யும் வழக்கம் உள்ளவராக இருக்கிறார். மேற்கண்ட ஹதீஸையும் இருட்டடிப்புச் செய்து தான் அறிவித்துள்ளாரா? அல்லது தனது ஆசிரியரிடம் நேரடியாகக் கேட்டு அறிவிப்பதைத் தெளிவுபடுத்தி அறிவித்துள்ளாரா? என்பதன் அடிப்படையில் இது பற்றி நாம் முடிவு செய்ய வேண்டும்.

தப்ரானியின் அறிவிப்பில் “ஹிஷாம் பின் ஹஸ்ஸான் வழியாக’ என்று தான் இவர் கூறுகிறார். ஹிஷாம் பின் ஹஸ்ஸானிடம் தான் நேரடியாகக் கேட்டதாகக் குறிப்பிடவில்லை. இந்த அறிவிப்பு மட்டுமே இருந்தால் இதில் இருட்டடிப்புச் செய்திருக்க வாய்ப்பு உள்ளதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

ஆனால் பஸ்ஸார் என்ற நூலில் உள்ள அறிவிப்பில், தான் இருட்டடிப்புச் செய்யவில்லை என்பதை அவர் தெளிவாகவே சொல்லிக் காட்டுகிறார்.

இந்த அறிவிப்பில் “ஹிஷாம் பின் ஹஸ்ஸான் என்பவர் எனக்குக் கூறினார்” என்ற வாசகத்தை அலீ பின் குராப் பயன்படுத்தியுள்ளார். எனக்குக் கூறினார் என்ற சொல் இவர் நேரடியாக அவரிடம் கேட்டதை உறுதிப் படுத்துகிறது என்பதால் இந்த ஹதீஸில் எந்த இருட்டடிப்பும் இருக்க வழியில்லை. எனவே தத்லீஸ் என்ற காரணம் கூறி இதைப் பலவீனமான அறிவிப்பு என்று கூறுவது ஹதீஸ் கலை விதிகளுக்கு முரணானதாகும்.

 1. இப்னு ஹிப்பானின் கடுமையான விமர்சனம்

இறுதியாக, இப்னு ஹிப்பான் அவர்கள் இவரைப் பற்றி கடுமையான விமர்சனம் செய்துள்ளதை எடுத்துக் காட்டி இந்த ஹதீஸ் பலவீனமானது என்று வாதிடுகின்றனர்.

“இவர் இட்டுக்கட்டப்பட்ட பல விஷயங்களை அறிவித்துள்ளார். எனவே இவரை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது; மேலும் இவர் ஷியாக் கொள்கையில் தீவிரமானவராக இருந்தார்” என்பது இப்னு ஹிப்பான் அவர்களின் விமர்சனம்.

இப்னு ஹிப்பான் அவர்களின் விமர்சனத்தை ஆய்வு செய்த அறிஞர்கள் இப்னு ஹிப்பான் எல்லை மீறி விமர்சனம் செய்திருப்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர். இவர் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவித்தவர் என்ற இப்னு ஹிப்பானின் கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

“இவரைப் பலவீனமாக்கியதில் இப்னு ஹிப்பான் வரம்பு மீறி விட்டார்” என்று இப்னு ஹஜர் அவர்கள் தக்ரீபுத் தஹ்தீப் நூலில் குறிப்பிடுகிறார்கள்.

“இவரைப் பற்றிக் குறை கூறியவர்கள் இவருக்கு அநீதி இழைத்து விட்டனர்” என்று இப்னு மயீன் அவர்கள் கூறுகிறார்கள். (நூல்: தஹ்தீபுல் கமால்)

எனவே “பிற சமயக் கலாச்சாரத்திற்கு ஒப்ப நடப்பவர் அவர்களைச் சேர்ந்தவரே’ என்று தப்ரானியிலும் பஸ்ஸாரிலும் பதிவு செய்யப்பட்ட அறிவிப்பு ஆதாரப் பூர்வமானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அபூதாவூதில் இடம் பெறும் அறிவிப்பில் அனைவரும் நம்பகமானவர்கள் என்றாலும் அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் என்பவர் கடைசிக் காலத்தில் மூளை குழம்பி விட்டார். “இந்த ஹதீஸ் மிகவும் பலமான அறிவிப்பு” என்று இப்னு தைமிய்யா போன்றவர்கள் கூறியிருந்தாலும் அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் பற்றிய விமர்சனத்திற்கு அவர்களிடம் பதில் இல்லை.

முஸ்னத் அஹ்மதில் இடம் பெறும் அறிவிப்பும் இதே காரணத்துக்காக பலவீனமாக உள்ளது.

இவ்விரு அறிவிப்புக்கள் பலவீனமானவை என்றாலும் தப்ரானியிலும், பஸ்ஸாரிலும் பதிவான அறிவிப்புக்கள் பலமானவை என்பது மறு ஆய்விலும் உறுதிப்படுகின்றது.