மார்க்கக் கல்வி
மதிப்பிழந்தது ஏன்?
எம். ஷம்சுல்லுஹா
(அல்லாஹ்) தான் நாடியோருக்கு ஞானத்தை வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.
அல்குர்ஆன் 2:269
இந்த வசனம் கல்வியின் மதிப்பை மிகச் சிறப்பாகத் தெரிவிக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இந்தக் கருத்தைப் பிரதிபலிக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான். நான் விநியோகிப்பவன் தான். அல்லாஹ்வே வழங்குகிறான். இந்தச் சமுதாயத்தில் ஒரு சாரார் அல்லாஹ்வுடைய கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். அல்லாஹ்வின் கட்டளை (மறுமை நாள்) வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி)
நூல்: புகாரி 71
இவ்வாறு மார்க்கக் கல்வியின் மகிமையைச் சொல்லும் வசனங்களும், ஹதீஸ்களும் அதிகமாகவே உள்ளன. இத்தகைய மதிப்பையும், மரியாதையையும், மாண்பையும் பெற்ற இந்த மேன்மை மிகு கல்வி, தமிழகத்தில் உரிய மதிப்பை இழந்தது ஏன்? என்று நாம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இதற்காக நாம் பெரிய ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை. மதரஸாக்களின் சட்ட திட்டங்களையும், பாடத்திட்டங்களையும் மேலோட்டமாகப் பார்த்தாலே அந்தக் காரணங்களை நாம் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
மதரஸாக்களின் சட்டதிட்டங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
மொட்டை அடித்தல்
மார்க்கக் கல்வி பயில வருகின்ற ஒரு மாணவனுக்கு முதன் முதலில் மதரஸா நிர்வாகம் இடுகின்ற கட்டளை மொட்டையடிக்க வேண்டும் என்பது தான். அவ்வாறு மொட்டை அடிக்கவில்லையெனில் அந்த மாணவன் மதரஸாவில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டான்.
மொட்டையடித்த மாணவன் மதரஸாவிலிருந்து வெளியே வருவதற்கே வெட்கப்படுகின்றான். தன்னுடைய சக வயதினர் தலை முடி வைத்துக் கொண்டு அழகாகக் காட்சியளிக்கையில் இவர்கள் மட்டும் ஏதோ பிராணிகள் போன்று ஒதுங்கி, ஒடுங்கி நடக்க வேண்டிய நிலை!
பொதுவாக மனிதனுக்கு அழகே தலை முடி தான். அதை ஓய்த்துக் கட்டும் வழக்கத்தை இவர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். இந்த வழக்கத்தை மார்க்கம் என்று இவர்கள் காட்ட முயல்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையை மழிப்பதைப் பழித்துத் தான் கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள், “கிழக்குத் திசையிலிருந்து (இராக்கிலிருந்து) சிலர் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்; ஆனால் அது அவர்களுடைய நெஞ்செலும்புகளைத் தாண்டிச் செல்லாது. (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறு பக்கமாக) வெளியேறி விடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து வெறியேறி விடுவார்கள். பிறகு அம்பானது வில்லின் நாண் உள்ள பகுதிக்குத் (தானாகத்) திரும்பாத வரை அவர்களும் மார்க்கத்திற்குத் திரும்பி வரவே மாட்டார்கள்” என்று சொன்னார்கள். “அவர்களின் அடையாளம் என்ன?” என்று வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மொட்டை போடுவ(தை ஒரு மரபாகவும் வழிபாடாகவும் கொண்டிருப்ப)து தான் (அவர்களின் அடையாளம்)” என்று பதில் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 7562
மார்க்கத்தில் இல்லாத இந்தச் சட்டத்தை இவர்கள் கடுமையாகக் கடைப்பிடிப்பதால் அதிகமான மாணவர்கள் இதன் பக்கம் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
ஜிப்பா
மதரஸா நிர்வாகம் மாணவர்களை ஜிப்பா அணியச் சொல்கிறது. தமிழ்நாட்டில் முஸ்லிம்களின் கலாச்சாரம் சட்டை, லுங்கி, கால்சட்டை போன்றவற்றை அணிவது தான். மற்றவர்கள் சட்டை, பேண்ட் சகிதத்துடன் காட்சியளிக்கும் போது தாங்கள் மட்டும் ஜிப்பாவுடன் தோன்றுவது இவர்களுக்குப் பெருத்த வெட்க உணர்வையும், வேதனையையும் தோற்றுவிக்கின்றது.
ஜிப்பா போடும் மதரஸா என்ற காரணத்தாலேயே அங்கு போய்ச் சேராமல் சட்டை போட அனுமதிக்கும் மரஸாவைத் தேடிப் பிடித்துச் சென்று படித்த ஆலிம்கள் உள்ளனர். இதனால் தான் ஆலிம்களில் சட்டை போடும் ஆலிம்கள், ஜிப்பா போடும் ஆலிம்கள் என்று இரு வகைகளாக உள்ளனர். அந்த அளவுக்கு இவர்கள் ஜிப்பா அணிவதை வெறுத்துள்ளனர்.
ஜிப்பா என்ற ஆடையைத் தான் அணிய வேண்டும் என்பதாலும், தலையில் மொட்டை அடிக்க வேண்டும் என்பதாலும் பல வசதி படைத்த வீட்டுப் பிள்ளைகள் இந்தக் கல்விக்கு வருவதில்லை. மார்க்கத்தில் இல்லாத நடைமுறையை மார்க்கம் என்ற பெயரில் செயல்படுத்துவது மார்க்கக் கல்வி பயில்வதற்குத் தடையாக அமைந்துள்ளது.
பாடத் திட்டம்
இது கணிணி (கம்ப்யூட்டர்) யுகம்! அறிவியல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த புரட்சி உலகம்! வியத்தகு மாற்றத்தைக் கண்ட இந்த உலகத்தில், அதற்கு ஈடு கொடுக்கும் கல்வித் திட்டம் அரபு மதரஸாக்களில் இல்லை. மதரஸாவிலிருந்து வெளிவந்த மாணவர்களுக்கு, ஆங்கில விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்கின்ற அளவுக்குக் கூட ஆங்கில அறிவு இருப்பதில்லை.
இன்றைய அரபுலகம், அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப ஆங்கில வார்த்தைகளுக்கு நிகரான அரபி வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது. அந்த வார்த்தைகளைக் கற்றுக் கொடுக்கும் பாடத் திட்டம் இன்னும் மதரஸாக்களில் அறிமுகமாகவில்லை. இதனால் மதரஸாக்களில் பயின்று வெளிவரும் ஆலிம்கள் பிழைப்புக்காகப் புரோகிதத்தை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கும் நிலை!
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மதரஸாவில் படித்து வெளிவரும் ஆலிம்கள் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துதல், குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுத்தல் போன்ற வட்டத்தைத் தாண்டி கத்தம் ஃபாத்திஹா ஓதுதல், கல்யாணம் நடத்தி வைத்தல், ஜனாஸா தொழுகை நடத்துதல், தாயத்து கட்டுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். இவை அத்தனைக்கும் மக்களிடம் கை நீட்டிக் காசு வாங்குவதால் மற்றவர்கள் இந்தத் துறையை அறவே வெறுக்கின்றனர்.
இன்னும் பல ஊர்களில் ஆலிம்கள் தான் ஜனாஸாவைக் குளிப்பாட்ட வேண்டும் என்ற பழக்கத்தை வைத்திருக்கின்றனர். இதனால் ஊரில் யார் இறந்தாலும் உடனே கதவு தட்டப்படுவது அங்குள்ள பேஷ் இமாமின் வீடு தான். அவர் நள்ளிரவில் என்ன நிலையில் இருப்பார்? என்றெல்லாம் இந்தச் சமுதாயம் பார்க்காது. இறந்தவர் வீட்டில் உடனே இமாம் வந்து நிற்கவில்லை என்றால், அவருக்கு உயிர் போனது போன்று இவருக்கு வேலை போய் விடும் என்ற நிலை!
கையேந்தும் நிலையில் கண்ணியமிக்க ஆலிம்கள்
இறந்த வீட்டில் போய் காரியத்தை நடத்திக் கொடுத்தால் இந்தப் புரோகிதப் பணிக்காக ஜனாஸாவுடன் தட்டில் வரும் அரிசி, முட்டை, சேவல் போன்ற காணிக்கைகள் இமாமுக்கு வழங்கப்படும். ஜனாஸா தொழுகை துவங்கும் முன்பே, தொழுகை நடத்துவதற்காக அவரது கையில் அழுக்கடைந்த 5 ரூபாய் தாளை இறந்தவரின் வாரிசு இரகசியமாக அல்ல! அஸ்ஸலாமு அலைக்கும் என்று உரத்தக் குரல் கொடுத்தவராகக் கொடுப்பார்.
ஒரு துளி சுய மரியாதை உள்ளவன் கூட இந்தச் சோதனையைத் தாங்கிக் கொள்ள மாட்டான். அதை இந்த ஆலிம் தாங்கிக் கொள்வார், தன்னுடைய குடும்பத்தைக் காப்பதற்காக! இதை விட்டு வெளியே வந்தால் வேறு துறை அவருக்குத் தெரியாது என்பதற்காக!
இதில் இன்னும் வேதனை என்னவென்றால் இந்த ஆலிம், பெண் குழந்தைகளைப் பெற்றிருப்பார். இவர்களைக் கட்டிக் கொடுக்கும் காலம் வரும். அதற்காக அவர் சிங்கப்பூர் செல்வார். கடை கடையாக ஏறுவார். நமது நாட்டில் வீட்டு வாசல்களில் நிற்கும் யாசகர்களுக்குச் சில சில்லரைக் காசுகளை விட்டெறிவது போல் அங்கு அவருக்கு வீசியெறியப்படும்.
பாவம் அவர் என்ன செய்வார்? பணத்திற்காக மணம் முடிக்கும் ஈனப் பிறவிகள் இருக்கையில் அவர் யாசகம் என்ற எல்லைக்குச் செல்கின்றார். இப்படிப்பட்ட ஓர் இழிநிலைக்குத் தள்ளப்படும் போது இந்தக் கல்வியை யார் தான் ஏறெடுத்துப் பார்ப்பார்கள்?
தன்மானத்தைத் தரும் தவ்ஹீது
இதனால் தான் மார்க்கக் கல்வி மக்களிடத்தில் மரியாதை இழந்து நிற்கின்றது. மக்கள் தங்கள் பிள்ளைகளை இந்தத் துறைக்கு அனுப்புவதற்குத் தயங்குகின்றனர். அதிலும் குறிப்பாகச் செல்வந்தர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்ப முன்வருவதில்லை. இலவச உணவு என்பதால் ஏழைப் பிள்ளைகள் தான் இந்தக் கல்வி கற்பதற்கு அனுப்பப்படுகிறார்கள்.
மக்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்ப வேண்டுமானால் இது வரை காணப்பட்டு வரும் குறைகள் களையப்பட வேண்டும். சட்ட திட்டங்கள் மற்றும் பாடத் திட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.
இன்று தவ்ஹீது ஜமாஅத்தினரால் நடத்தப்படும் இஸ்லாமியக் கல்லூரி இது போன்ற குறைகளை ஓரளவு களைந்திருக்கின்றது. நான்காண்டு பாடத் திட்டத்தில் தரமிக்க ஆலிம்களை உருவாக்கியிருக்கின்றது. தவ்ஹீது (ஏகத்துவக் கொள்கை) இருப்பதால் அது தன்மானத்தை ஊட்டியிருக்கின்றது.
எனவே தவ்ஹீது வட்டத்தில் உள்ள சகோதரர்கள், குறிப்பாகச் செல்வந்தர்கள் மார்க்கக் கல்வியைப் பற்றி ஏற்கனவே கொண்டிருந்த அதே தவறான மதிப்பீட்டை இப்போது கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அப்படிப்பட்ட தவறான மதிப்பீட்டை மாற்றிக் கொண்டு உங்கள் பிள்ளைகளை மார்க்கக் கல்வி பயில அனுப்புங்கள்.
இவ்வாறு உங்கள் பிள்ளைகளை நீங்கள் அனுப்பும் போது அவர்களைக் கண்டிப்பாக +2 வரை படிக்க வையுங்கள். இது அவர்களுக்கு இரு வகையில் பயன் தரும்.
ஒன்று, அவர்கள் மார்க்கக் கல்வியைக் கற்பதற்கு இந்தத் தகுதி பின்புலமாக அமையும். ஏனென்றால் இந்த மார்க்கக் கல்வி ஒரு பட்டப் படிப்புக்கு நிகரான பாடத்திட்டத்தை உள்ளீடாகக் கொண்டுள்ளது. எனவே +2 முடித்திருந்தால் தான் இதை நன்கு விளங்கிக் கற்பதுடன் மற்றவர்களுக்கும் விளக்கும் திறமையைப் பெற முடியும்.
அடுத்ததாக, +2 முடித்தவர் ஆலிம் படிப்பை முடித்து விட்டு, அஞ்சல் வழி தொலை தூரக் கல்வி மூலம் பட்டப் படிப்பு முதற் கொண்டு, எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி. போன்ற படிப்புகளையும் படித்து முனைவர் (டாக்டர்) பட்டம் பெறுவதற்குக் கூட வாய்ப்புகள் உள்ளன.
தற்காலத்தில் பட்டப் படிப்பில் அரபிப் பாடத்தை எடுத்தவர்கள், எம்.பில்., பி.ஹெச்.டி. முடித்தவர்கள் கூட அரபு மொழியைச் சரியான முறையில் வாசிப்பதற்குத் தாளம் போடுகின்றனர். இதில் அவர்கள் காட்டுகின்ற பந்தாக்களும் தாங்க முடிவதில்லை. ஆனால் இவ்வாறு இஸ்லாமியக் கல்லூரியில் பயின்ற பின் பட்டப் படிப்பை முடிப்பவர்கள் இந்தத் துறையில் மின்னுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
இப்படி வெளிவருபவர்கள், சமுதாயத்தை எதிர்பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்காது. அவர்கள் சத்தியத்தை யாருக்கும் அடிமைப் படாதவாறு சொந்தக் காலில் நின்று சொல்லலாம்.
இன்று மார்க்கக் கல்வி பயில வரும் பெண்களுக்கும் +2 கல்வித் தகுதி இருந்தால் நல்லது. குறைந்த பட்சம் 10வது வகுப்பாவது முடித்திருப்பது அவசியமாகும். மார்க்கக் கல்வி பயில அனுப்பும் பெற்றோர்கள் இதைக் கவனத்தில் கொள்வதேயில்லை.
இந்தக் கல்வித் தகுதி நிச்சயமாக அவர்களை மார்க்கத்தை நன்கு விளங்குவதற்கும், உலக விஷயங்களில் சிறந்து விளங்குவதற்கும் துணை புரியும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே பெண்களையும் குறைந்தபட்சம் மேற்கண்ட கல்வித் தகுதி முடித்த பின்னரே மார்க்கக் கல்வி பயில அனுப்ப வேண்டும்.
இந்த அடிப்படைகளைக் கவனத்தில் கொண்டு, ஏகத்துவ சகோதரர்கள் தங்கள் பிள்ளைகளை மார்க்கக் கல்வி பயில அதிகமாக அனுப்பி வைக்க வேண்டும்.
பல சகோதரர்கள் தங்கள் ஊருக்கு தாயீ வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் ஊர்களிலிருந்து மார்க்கக் கல்வி பயில்வதற்கு ஆட்களை அனுப்புவதில்லை. எனவே தாயீக்கள் பற்றாக்குறையைத் தீர்க்க உங்கள் பிள்ளைகளை, குறிப்பாக செல்வந்தர்கள் தங்கள் பிள்ளைகளை இஸ்லாமியக் கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மார்க்கக் கல்வி படிக்க வேண்டும் என்று ஆர்வமுள்ள ஏழைகள் இருப்பார்கள். வசதி படைத்தவர்கள் அவர்களை எல்லா வகையிலும் தத்தெடுத்துப் படிக்க வைத்து, உங்கள் ஊரில் ஏகத்துவத்தை நிலை நாட்டுங்கள்.
நமது இந்த அணுகுமுறையின் காரணமாக சுன்னத் வல் ஜமாஅத்திலுள்ள ஆலிம்களையும் இந்தக் கொள்கைக்கு ஈர்க்க முயல வேண்டும். இதன் மூலம் மார்க்கக் கல்வியின் மதிப்பை உயர்த்த வேண்டும்.