மார்க்க ஆய்வுகளும் மாற்றப்பட்ட நிலைப்பாடுகளும்
கே.எம்.அப்துந் நாசிர், இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்
திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் மட்டுமே முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டு நாம் செயல்பட்டு வருகிறோம்.
இதில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் வளைந்து கொடுத்ததில்லை. இந்த அடிப்படைக் கொள்கையில் நம்மிடம் எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை. ஆயினும் ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் நம்மிடம் தவறுகள் ஏற்பட்டு அதை அவ்வப்போது பகிரங்கமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறோம்.
நம்மை விடப் பல மடங்கு அறிவும், ஆற்றலும் மிக்க எத்தனையோ அறிஞர்கள், ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் தவறாக முடிவு செய்து பின்னர் மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த நிலை ஏற்படாத எந்த அறிஞரும் உலகத்தில் ஒரு காலத்திலும் இருந்ததில்லை.
- அறிவிப்பாளர் குறித்த விமர்சனங்கள் அடங்கிய அனைத்து நூல்களும் கிடைக்கப் பெறாமை
- பொதுவாக மனிதரிடம் காணப்படும் மறதி, கவனமின்மை
- ஒருவரைப் பற்றி செய்த விமர்சனத்தை அதே பெயருடைய மற்றவருக்குப் பொருத்தி விடுதல்
- இந்தத் துறையில் விற்பன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் செய்த விமர்சனங்களில் தவறு ஏற்படாது என்று எண்ணி அப்படியே அவர்களின் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளுதல்
இது போன்ற பல்வேறு காரணங்களால் இத்தகைய தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன.
தவ்ஹீத் ஜமாஅத் மூத்த அறிஞர்களைப் பொறுத்த வரை அவர்கள் அனைவருமே மத்ஹபை அடிப்படையாகக் கொண்ட கல்விக் கூடங்களில் தான் கற்றனர். அவர்கள் கற்ற கல்விக் கூடங்களில் ஹதீஸ் கலை குறித்து முறையாகக் கற்பிக்கப்படாததால் அந்தக் கலையைக் கூட சுய முயற்சியால் கற்கும் நிலையில் இருந்தனர்.
இதன் காரணமாகத் தான் துவக்க காலங்களில் சில ஹதீஸ்கள் குறித்து நிலை மாற்றம் ஏற்பட்டது.
தற்போது ஹதீஸ் கலை தொடர்பான அனைத்து நூல்களும் திரட்டப்பட்டுள்ள நிலையில், கடந்த காலங்களில் நாம் பேசிய, எழுதிய, அங்கீகரித்த ஹதீஸ்களில் பலவீனமானவை உள்ளனவா? என்பதை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏற்பட்டது.
அதன் அடிப்படையில் கடந்த காலங்களில் நாம் ஒரு ஹதீஸை ஸஹீஹ் என்று கருதியதால் அதன் அடிப்படையில் சில சட்டங்களைக் கூறியிருப்போம். பின்னர் அவை பலவீனம் எனத் தெரிய வரும் போது நாம் முன்பு பலவீனமான ஹதீஸின் அடிப்படையில் கூறிய சட்டத்தை தவறு என்று தெளிவுபடுத்தியிருப்போம்.
பெரும்பாலான மக்கள் அதனை அறிந்திருந்தாலும் இன்னும் அதிகமானவர்கள் நாம் முன்னர் சரி என்று கூறி, பின்னர் தவறு என்று மாற்றியவற்றை அறியாமல் இருக்கின்றனர். எனவே அனைவரும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கத்தில், மாற்றப்பட்ட சட்டங்கள் என்ற தலைப்பில் அது பற்றிய விவரங்களை வெளியிடுகிறோம்.
ஏற்கனவே ஒரு கருத்தைச் சொல்லிவிட்டால் அது தவறு என்று தெரிந்த பின்னர் அதில் பிடிவாதமாக இருப்பதும் பொருந்தாத காரணம் கூறி உண்மையை மறைப்பதும் இறையச்சத்திற்கு எதிரானதாகும்.
மறுமையைப் பற்றிய அச்சம் இல்லாமல் குரோதப் புத்தி கொண்ட சில குறுமதியாளர்கள் இளக்காரம் செய்வார்கள் என்றாலும் நம் கவுரவத்தை விட மார்க்கம் முக்கியமானது என்ற அடிப்படையில் இதைத் தெளிவு படுத்துகின்றோம்.
ஆரம்பத்தில் நாம் சரியான செய்தி என்று சொல்லி, பின்னர் பலவீனமான செய்தி என்று சொன்ன ஹதீஸ்களையும், மக்களிடம் பரவலாக உள்ள பலவீனமான செய்திகளையும் இங்கு தொகுத்து எழுதவுள்ளோம். குறைகள் இருப்பின் தெரியப்படுத்தவும்.
- பெண்கள் கப்ர் ஜியாரத் செய்யலாமா?
பெண்கள் கப்ரு ஜியாரத் செய்வது கூடாது என்பது தான் முதலில் நம்முடைய ஜமாஅத்தின் நிலைப்பாடாக இருந்தது. அதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக எடுத்து வைக்கப்பட்டது.
கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களையும் அதை வணங்குமிடமாகவும் விளக்கு ஏற்றுமிடமாகவும் ஆக்கும் பெண்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: திர்மிதீ (294), நஸயீ (2016), அபூதாவூத் (2817), அஹ்மத் (1926, 2472, 2829, 2952)
இச்செய்தியில் பாதாம் என்ற அபூஸாலிஹ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.
பின்வரும் ஆதாரங்களின் அடிப்படையில் பெண்கள் கப்ரு ஜியாரத் செல்வதற்குத் தடையில்லை என்பதே சரியானதாகும்.
மரண பயத்தையும் மறுமைச் சிந்தனையையும் வரவழைத்துக் கொள்வதற்காக பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்வதற்கு அனுமதியுள்ளது. மண்ணறைகளுக்குச் செல்பவர்கள் ஓத வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.
நான் ”அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ”அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹூல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹூ பி(க்)கும் ல லாஹிகூன்” என்று சொல்” என்றார்கள்.
(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறை நம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்று விட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக் கூடியவர்களாக உள்ளோம்.)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் (1774)
நபியவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு கப்ரு ஜியாரத்தின் போது ஓத வேண்டிய துஆவைக் கற்றுக் கொடுத்ததின் மூலம் பெண்கள் கப்ரு ஜியாரத் செய்வதில் தவறில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
“அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (1777)
“அடக்கத்தலங்களை சந்திப்பதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். முஹம்மதுவிற்கு அவரின் தாயாருடைய அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி தரப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் மண்ணறைகளைச் சந்தியுங்கள். அவை உங்களுக்கு மறுமையை நினைவூட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: திர்மிதி (974)
மண்ணறைகளை ஜியாரத் செய்கிறோம் என்று கூறிக் கொண்டு சில பெண்கள் தர்ஹாக்களுக்குச் செல்கிறார்கள். தர்ஹாக்களில் இணை வைப்பு அரங்கேற்றப்படுவதாலும் மார்க்கம் தடை செய்த ஏராளமான அம்சங்கள் அங்கு நடைபெறுவதாலும் அங்கு ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் செல்வது கூடாது. பொது மையவாடிகளுக்குச் செல்லலாம்.
- நோன்பு திறக்கும் துஆ
நபி (ஸல்) அவர்கள் நோன்பு திறக்கும் போது “தஹபள்ளமவு வப்தல்லத்தில் உரூக்கு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்” என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.
(பொருள்: தாகம் தணிந்தது. நரம்புகள் நனைந்தது. அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்து விடும்)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: அபூதாபூத் 2010, ஹாகிம், பைஹகீ, தாரகுத்னீ
இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று நாம் கூறினோம். நமது உரைகளிலும் கட்டுரைகளிலும் நூல்களிலும் இதைத் தெரிவித்தோம்.
எதன் அடிப்படையில் இதை நாம் ஆதாரமாக ஏற்றோம் என்பதை முதலில் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.
இந்தச் செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்து விட்டுப் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மர்வான் பின் ஸாலிம், அவரிடமிருந்து அறிவிக்கும் ஹூஸைன் பின் வாகித் ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்களை புகாரி, முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிடுகின்றார்.
ஹாகிம் நூலை மேற்பார்வை செய்த ஹதீஸ் கலை அறிஞர் தஹபீ அவர்கள், மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியின் அறிவிப்பாளர் என்பதை வழிமொழிந்துள்ளார்கள்.
மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியில் இடம் பெற்றுள்ளார் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் கூறியதன் அடிப்படையில் தான் நாமும் இதை வழிமொழிந்தோம்.
இமாம் புகாரி ஒருவரை ஆதாரமாகக் கொள்வதென்றால் அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் தான் ஏற்பார். பலவீனமானவர்களையோ, யாரென்று அறியாதவர்களையோ அவர்கள் ஆதாரமாகக் கொள்வதில்லை. இதில் பெரும்பாலான அறிஞர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. புகாரியின் சில அறிவிப்பாளர்கள் பற்றி சிலர் விமர்சனம் செய்திருந்தாலும் அதில் பெரும்பாலானவற்றுக்குப் பதிலும் அளிக்கப்பட்டுள்ளது.
ஹாகிம், தஹபீ ஆகிய இருவரும் மேற்கண்ட அறிவிப்பாளர் பற்றி, புகாரியில் இடம் பெற்றவர் என்று கூறுவதை நம்பித் தான் இதை ஆதாரப்பூர்வமானது என்று நாம் கூறியிருந்தோம்.
மேலும் இதைப் பதிவு செய்துள்ள தாரகுத்னீ அவர்களும் இதை ஹஸன் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்று சான்றளித்துள்ளார்கள்.
ஆனால் ஹாகிம், தஹபீ, தாரகுத்னீ ஆகியோரின் கூற்றுக்கள் தவறு என்பது மறு ஆய்வில் தெரிய வந்தது. மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் அறிவிக்கும் எந்த ஹதீஸும் புகாரியிலும் முஸ்லிமிலும் இல்லை.
ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறான தகவலைத் தந்துள்ளார்கள். புகாரி, முஸ்லிம் நூல்களில் மர்வான் அல்அஸ்பர் என்பார் அறிவிக்கும் ஹதீஸ் தான் இடம் பெற்றுள்ளது. மர்வான் பின் ஸாலிம் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இல்லை. மர்வான் அல்அஸ்பர் என்பவரை மர்வான் பின் ஸாலிம் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறாக விளங்கி இருக்கலாம் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறுவது மறு ஆய்வின் போது நமக்குத் தெரிய வந்தது.
மேலும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத்தன்மை பற்றி வேறு எந்த அறிஞராவது குறிப்பிட்டுள்ளாரா? என்று ஆய்வு செய்ததில் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை.
இப்னு ஹிப்பானைப் பின்பற்றி, இமாம் தஹபீ அவர்கள் மட்டும், “இவர் நம்பகமானவர் என்று கூறப்பட்டுள்ளார்’ என்று குறிப்பிடுகின்றார்.
இப்னு ஹிப்பான் அவர்கள், யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். அவரது பார்வையில் நம்பகமானவர் என்றால் யாராலும் குறை கூறப்படாதவராக இருக்க வேண்டும். யாரென்றே தெரியாதவர்களை யாருமே குறை கூறி இருக்க முடியாது. இதனால் யாரென்று தெரியாதவர்களையும் இப்னு ஹிப்பான், நம்பகமானவர் பட்டியலில் இடம் பெறச் செய்து விடுவார்.
இப்னு ஹிப்பான் அவர்களின் இந்த விதிமுறையை அனைத்து அறிஞர்களும் நிராகரிக்கின்றனர்.
வேறு எந்த அறிஞரும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை.
எனவே யாரென்று அறியப்படாத மர்வான் வழியாக இது அறிவிக்கப்படுவதால் இது நிரூபிக்கப்பட்ட நபிமொழி அல்ல.
இதன் அடிப்படையில் நோன்பு துறப்பதற்கென்று தனியாக எந்த துஆவும் இல்லை என்பது உறுதியாகின்றது.
சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்ற (புகாரி 5376) நபிமொழிக்கேற்ப நோன்பு துறக்கும் போதும் “பிஸ்மில்லாஹ்’ கூறுவது தான் சரியான நடைமுறை ஆகும்.
- வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓதலாமா?
வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓதுவது சுன்னத் என்பதே ஆரம்பத்தில் நம்முடைய நிலைப்பாடாக இருந்தது. இது தொடர்பாக ஏகத்துவம் மற்றும் தீன்குலப் பெண்மணி இதழ்களில் நாம் எழுதியுள்ளோம். இதற்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாக எடுத்து வைத்தோம்.
ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீது (ரலி)
நூல்: ஹாகிம் (3392)
ஆனால் மேற்கண்ட செய்தி ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
இது நபியவர்கள் கூறியது கிடையாது. அபூ ஸயீத் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்று (மவ்கூஃப்) என்பதே சரியானதாகும் என ஹாபிழ் இப்னு ஹஜர் உட்பட பல்வேறு அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓத வேண்டும் என்று வருகின்ற அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும்.
கஹ்ஃப் அத்தியாயத்திற்குப் பொதுவாக சில சிறப்புகளைக் குறிப்பிட்டு சில ஸஹீஹான ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன.
ஆனால் வெள்ளிக்கிழமை கஹ்ஃப் ஓதுவது சுன்னத் என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீசும் இல்லை என்பதே சரியானதாகும்.
- தொழுகையில் சப்தமிட்டு ஆமீன் கூறுவது கட்டாயமா?
தொழுகையில் கண்டிப்பாக சப்தமிட்டே ஆமீன் கூற வேண்டும் என்பதற்கு ஆதாரமாகப் பின்வரும் செய்தி எடுத்து வைக்கப்பட்டது.
இந்தப் பள்ளிவாசலில் 200 நபித்தோழர்களைக் கண்டுள்ளேன். இமாம் “கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்‘ எனக் கூறும் போது அந்த நபித் தோழர்களிடமிருந்து “ஆமீன்‘ என்ற பெரும் சப்தத்தை நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அதா
நூல்: பைஹகீ (2556), பாகம்: 2 பக்கம்: 59
நபியவர்கள் காலத்தில் நடந்த சம்பவமாகக் கருதியே இது ஆரம்ப காலத்தில் ஆதாரமாக எடுத்து வைக்கப்பட்டது. ஆனால் இது நபியவர்கள் காலத்தில் நடந்து அல்ல. இது நபியவர்கள் காலத்திற்குப் பின் நடைபெற்ற சம்பவமாகும். நபியவர்களிடமிருந்து வரக்கூடியது தான் மார்க்க ஆதாரமாகும். எனவே மேற்கண்ட செய்தியை நேரடி ஆதாரமாகக் கொள்ள முடியாது.
சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்ததும் ‘ஆமீன்’ கூற வேண்டும். சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் இமாம் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்ததும் இமாமும், பின் நின்று தொழுபவரும் ஆமீன் கூற வேண்டும்.
“இமாம் “கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்‘ எனக் கூறும் போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் எவர் கூறும் ஆமீன், மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகிறதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 782
இந்த ஹதீஸில் கூறப்படும் கூலூ (நீங்கள் சொல்லுங்கள்) என்ற அரபி வாசகம், மெதுவாகச் சொல்வதையும் சப்தமிட்டுச் சொல்வதையும் எடுத்துக் கொள்ளும். இந்த வாசகத்திற்கு நபித்தோழர்கள் சப்தமிட்டுக் கூறுதல் என்று புரிந்துள்ளார்கள் என்பதற்குப் மேலே நாம் குறிப்பிட்டுள்ள செய்தி ஆதாரமாக உள்ளது. எனவே ஆமீன் என்பதைச் சப்தமிட்டும் சொல்லலாம். விரும்பினால் சப்தமில்லாமலும் சொல்லலாம் என்பதே நமது நிலைப்பாடாகும்.
- நடுவிரலில் மோதிரம் அணியலாமா?
நடுவிரலிலும் அதற்கு அருகில் உள்ள விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்ற நிலைப்பாட்டைத் தான் நாம் முன்னர் கொண்டிருந்தோம். இவ்வாறு தான் நேரடி கேள்வி பதிலின் போதும் நமது பத்திரிகைகளிலும் இவ்வாறே முன்னர் கூறியுள்ளோம். ஆனால் அது குறித்த ஹதீஸை மறு ஆய்வு செய்த போது இந்த விரல்களில் மோதிரம் அணிவது தவறல்ல என்ற முடிவுக்கே வர முடிகிறது. இது குறித்த விபரம் வருமாறு:
இதற்கு அடிப்படையாக முஸ்லிமில் இடம் பெறும் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.
நடுவிரலையும் அதை அடுத்துள்ள விரலையும் சுட்டிக்காட்டி இந்த விரலிலோ அல்லது இந்த விரலிலோ மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குத் தடை செய்தார்கள் என்று அலீ (ரலி) கூறியதாக ஆஸிம் கூறினார்.
(முஸ்லிம் 3910)
இந்த ஹதீஸில் தெளிவாக எதுவும் கூறப்படவில்லை. இரண்டு விரல்களில் மோதிரம் அணியக் கூடாது என்று இந்த ஹதீஸ் கூறவில்லை. இரண்டில் ஏதோ ஒரு விரலில் அணியக் கூடாது. அது எந்த விரல் என்பது தெரியவில்லை என்றே கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம் நூலில் இடம் பெற்ற மற்றொரு அறிவிப்பில் (ஹதீஸ் எண் 3910) “இரண்டில் எந்த விரல் என்பது ஆஸிமுக்குத் தெரியவில்லை’ என்று கூறப்படுகிறது
இதே செய்தி இப்னுமாஜாவில் வேறு விதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டை விரலிலும் சுண்டு விரலிலும் மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் (இப்னு மாஜா 3638) என்று இந்த அறிவிப்பில் கூறப்படுகிறது.
இரண்டையும் அலீ (ரலி) அவர்கள் தான் அறிவிக்கிறார்கள். இரண்டையும் அலீ (ரலி) வழியாக அபூபுர்தாவும் அவர் வழியாக ஆஸிமும் தான் அறிவிக்கிறார்கள்.
அதாவது ஒரே செய்தி நான்கு விரல்களில் மோதிரம் அணிவதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதியாக அறிவிக்கப்படுவதையே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். சந்தேகத்துக்கு இடமான சொற்களைக் கொண்டு சட்டம் எடுக்க முடியாது.
எனவே குறிப்பிட்ட விரலில் மோதிரம் அணியக் கூடாது என்பதை உறுதியாக அறிவிக்கும் ஹதீஸ் இல்லாததால் அனைத்து விரல்களிலும் மோதிரம் அணியலாம் என்பதே சரியானதாகும்.
- ருகூவிற்குப் பிறகு என்ன கூற வேண்டும்?
தொழுகையில் ருகூவிலிருந்து எழுந்த பிறகு ரப்பனா வலகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி என்று கூறுவது நபிவழி என்ற கருத்தை நாம் கூறி அதனை நடைமுறைப்படுத்தியும் வந்தோம். அதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக எடுத்துரைக்கப்பட்டது.
நாங்கள் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தியபோது “ஸமி அல்லாஹூ லிமன் ஹமிதஹ்‘ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒரு மனிதர் “ரப்பனா வல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ” எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியது. தூய்மையும் சுபிட்சமும் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன் என்று கூறினார். தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், “(இந்த வார்த்தைகளை) மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அந்த மனிதர், “நான் தான்” என்றார். “முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் “இதை நம்மில் முதலில் பதிவு செய்வது யார்‘ என (தமக்கிடையே) போட்டியிட்டுக் கொள்வதை நான் கண்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரக்கீ (ரலி)
நூல்: புகாரி 799
மேற்கண்ட இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது தொழுகையில் ருகூவிற்குப் பிறகு இவ்வாறு கூறுவதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்து விட்டார்கள் என்றும், ருகூவிற்குப் பிறகு நாமும் அவ்வாறு கூறலாம் என்றும் நமக்குத் தோன்றுகிறது.
ஆனால் இதே சம்பவம் அனஸ் (ரலி) அவர்கள் வழியாக முஸ்லிமில் இடம் பெறுகிறது. இந்த அறிவிப்பில் அந்த மனிதர் இந்த வாசகத்தை எதற்காகச் சொன்னார்? எந்த சூழ்நிலையில் சொன்னார் என்ற கூடுதல் விபரம் இடம்பெற்றுள்ளது.
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் மூச்சிறைக்க (விரைந்து) வந்து தொழுகை வரிசையில் சேர்ந்து, “அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி‘ (தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் “உங்களில் இவ்வார்த்தைகளை மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். மக்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்), “உங்களில் இதை மொழிந்தவர் யார்? ஏனெனில், அவர் தவறாக ஏதும் சொல்லவில்லை” என்று கூறினார்கள். உடனே அந்த மனிதர் “நான் மூச்சிறைக்க வந்து தொழுகையில் சேர்ந்தேன். ஆகவே, இவ்வாறு சொன்னேன்” என்று பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பன்னிரண்டு வானவர்கள் தமக்கிடையே “இதை எடுத்துச் செல்பவர் யார்?’ எனும் விஷயத்தில் போட்டியிட்டுக் கொண்டிருந்ததை நான் கண்டேன்” என்று கூறினார்கள்.
முஸ்லிம் (1051)
அந்த மனிதர் ருகூவுக்குப் பின் இதைக் கூற வேண்டும் என்பதற்காக இப்படிச் சொல்லவில்லை. மாறாக ருகூவு கிடைக்குமோ அல்லது தவறி விடுமோ என்று அவர் மூச்சிறைக்க வேகமாக வருகிறார். அவர் வேகமாக வந்ததால் ருகூவு கிடைத்து விடுகிறது. இந்த மகிழ்ச்சியில் அல்லாஹ்வைப் புகழ்வதற்காகத் தான் மேற்கண்ட வாசகத்தைக் கூறினார் என்பது இதில் இருந்து தெரிகிறது.
நமக்கு ஒரு நன்மை கிடைக்கும் போது அதற்கு நன்றி செலுத்துவதற்காக இந்த வாசகத்தைக் கூறுவது மிகச் சிறந்தது என்று தான் இந்த ஹதீஸிலிருந்து சட்டம் எடுக்க வேண்டும். இதுதான் தற்போது நம்முடைய நிலைப்பாடு ஆகும்.
ருகூவிற்குப் பிறகு இவ்வாறு கூறுவது சிறந்தது என்று சட்டம் எடுப்பது கூடாது. ஏனென்றால் ருகூவிற்குப் பிறகு இதைக் கூற வேண்டும் என்று அந்த நபித்தோழர் நாடவில்லை.
இந்த வாசகத்தைக் கூறினால் வானவர்கள் போட்டி போட்டுக் கொண்டு இதை அல்லாஹ்விடம் கொண்டு செல்வதாக நபி (ஸல்) அவர்கள் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.
இந்த வாசகத்தை ருகூவிற்குப் பிறகு சொன்னால் தான் இந்த சிறப்பு கிடைக்குமென்றால் நபி (ஸல்) அவர்கள் தம்முடைய ஒவ்வொரு தொழுகையிலும் ருகூவிற்குப் பிறகு இப்படிப்பட்ட சிறப்பைப் பெற்றுத் தரும் இந்த வாசகத்தைக் கூறாமல் இருந்திருக்க மாட்டார்கள்.
மேலும், இனிமேல் எல்லோரும் இன்று முதல் ருகூவிற்குப் பிறகு அவர் சொன்ன அதே வாசகத்தைத் தான் கூறவேண்டும் என்ற கட்டளையும் நபிகளார் பிறப்பிக்கவில்லை.
குறிப்பிட்ட அந்த நபித்தோழராவது ஒவ்வொரு தொழுகையிலும் ருகூவிற்குப் பிறகு இந்த வாசகத்தைச் சொல்லி வந்தார் என்பதற்கும் எந்தச் சன்றையும் நம்மால் காண முடியவில்லை.
வானவர்கள் எடுத்துச் செல்ல போட்டி போடுகின்றார்கள் என்று சொல்லக் கூடிய அளவுக்கு சிலாகித்துச் சொன்ன பிறகும் அந்த வார்த்தைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையிலுமோ, அல்லது எப்போதாவது, ஏதாவது ஒரு தொழுகையின் போதோ கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை.
மாறாக, அவர்கள் தமது தொழுகைகளில் ருகூவிற்குப் பிறகு ரப்பனா வலகல் ஹம்து என்று மட்டுமே கூறியதாகப் பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்ட பிறகு இறைவனைப் புகழுவதற்காக இதே வாசகத்தைக் கூறியுள்ளார்கள்.
அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) தமது உணவு விரிப்பை எடுக்கும்போது “அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹூ ரப்பனா” என்று பிரார்த்திப்பார்கள்.
பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்.
புகாரி (5458)
எனவே நமக்கு ஒரு நன்மை ஏற்பட்டு, அதற்காக இறைவனைப் புகழ வேண்டிய நேரங்களில் இந்த வாசகத்தைக் கூறினால் அப்போது இதை வானவர்கள் போட்டி போட்டுக் கொண்டு இறைவனிடம் கொண்டு செல்கிறார்கள் என்பது தான் இந்த ஹதீஸின் கருத்து. மாறாக, தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் இவ்வாறு கூறினால் இந்தச் சிறப்பு கிடைக்கும் என்று புரிந்து கொள்ளக் கூடாது.
நபிகள் நாயகத்தின் அங்கீகாரமும் மார்க்க ஆதாரம் தான். அவர்கள் எதை அங்கீகரித்தார்கள் என்பதை நாம் சரியாக விளங்க வேண்டும். ருகூவுக்குப் பிறகு ஒவ்வொருவரும் இதைக் கூற வேண்டும் என்பதற்காக அங்கீகரிக்கவில்லை.
அப்படியானால் ருகூவு கிடைக்காது என்ற சந்தேகத்துடன் ஓடி வருபவர் ருகூவு கிடைத்து விட்டால் மகிழ்ச்சியடைந்து இந்த துஆவைக் கூறலாமா? இதை மட்டும் பார்க்கும் போது கூறலாம் என்று தோன்றினாலும் வேகமாக ஓடி வருவதைப் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டார்கள்.
அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது சிலர் (தொழுகையில் வந்து சேர அவசரமாக வந்ததால் உண்டான) சந்தடிச் சப்தத்தைத் செவியுற்றார்கள். தொழுது முடிந்ததும், “உங்களுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “தொழுகையில் வந்து சேர்வதற்காக நாங்கள் விரைந்து வந்தோம்” என்று பதிலளித்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவ்வாறு செய்யாதீர்கள் தொழுகைக்கு வரும் போது நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். (இமாமுடன்) கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப்போன (ரக்அத்)தை (தொழுகை முடிந்ததும் எழுந்து) பூர்த்தி செய்யுங்கள்” என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 635
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கூட்டுத் தொழுகைக்காக) இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்கு நடந்து செல்லுங்கள். அப்போது நிதானத்தையும் கண்ணியத்தையும் கடைப்பிடியுங்கள். அவசரப்பட்டு ஓடிச் செல்லாதீர்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதை (பின்னர்) பூர்த்தி செய்யுங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 636
அந்த நபித்தோழரைப் போல் வேகமாக ஓடி வந்து ருகூவை அடைவதற்கு இனி மேல் அனுமதி இல்லை.