மாநபிக்கு முரணான மவ்லானா பதில்கள்

மாநபிக்கு முரணான மவ்லானா பதில்கள்

காலம் முழுதும் களா தொழுகை

கேள்வி: தொழுகையில் தும்மினால் அல்ஹம்துலில்லாஹ் சொல்லக்கூடாது என்பது தெரியும். தொழுகையிலோ அல்லது குர்ஆன் ஔராத் ஓதும் போதோ கொட்டாவி வந்தால் அவூதுபில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் சொல்லலாமா?

பதில்: தொழுகையின் இடையில் கொட்டாவி வந்தால் முடிந்த அளவு வாயைப் பொத்தி அடக்க வேண்டும். தொழுகையில் நின்ற நிலையில் இருக்கும் போது கொட்டாவி வந்தால் வலது கையின் புறங்கையைக் கொண்டும் தொழுகையின் மற்ற நிலையில் இருக்கும் போது இடது கையின் புறங்கையைக் கொண்டும் பொத்தி அடக்க வேண்டும். அவூது இஸ்திக்ஃபார் செய்யக்கூடாது.  –  மனாருல் ஹுதா, பிப்ரவரி 2013

வழக்கமாக மவ்லானாவின் பதில்களை அலசுவோம். இப்போது நாம் பதிலை அலசவில்லை. நாம் அலசப் போவது மவ்லானாவின் மவ்னத்தை!

கேள்வி கேட்பவர், “தொழுகையில் தும்மினால் அல்ஹம்து லில்லாஹ் சொல்லக் கூடாது என்பது தெரியும்” என்று கூறி கேள்வி கேட்கிறார். அதாவது தொழுபவர் தும்மினால் அல்ஹம்து லில்லாஹ் சொல்லக்கூடாது என்பது ஹனஃபி மத்ஹபின் சட்டம். இதை மவ்லானா அப்படியே ஆமோதிக்கின்றார்.

ஹனஃபி மத்ஹபின் இந்தச் சட்டம் சரியா என்று பார்ப்போம்.

முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது (தொழுது கொண்டிருந்த) மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான் “யர்ஹமுக் கல்லாஹ்‘ (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என்று (மறுமொழி) கூறினேன். உடனே மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான் “என்னை என் தாய் இழக்கட்டும்! நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?” என்று கேட்டேன். மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள்மீது தட்டினர். என்னை  அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி விட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் -என் தந்தையும் என் தாயும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்- (பின்வருமாறு அறிவுரை) கூறினார்கள். அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களை விட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை; அடிக்கவுமில்லை; திட்டவுமில்லை. (மாறாக,) அவர்கள், “இந்தத் தொழுகையானது, மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று. தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும் பெருமைப்படுத்துவதும் குர்ஆன் ஓதுவதுமாகும்என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள்.  (நூல்: முஸ்லிம் 836)

இந்த ஹதீஸில் முஆவியா பின் ஹகம் (ரலி), நபி (ஸல்) அவர்களின் ஜமாஅத் தொழுகையில் ஒருவர் தும்மி, யர்ஹமுக்கல்லாஹ் என்று சொன்னதை நபித்தோழர்கள் தங்கள் பார்வைகளால் ஆட்சேபிக்கின்றனர்.

தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் என்று சொன்னால் தான் கேட்பவர் யர்ஹமுக்கல்லாஹ் என்று கூற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தும்மினால், “அல்ஹம்து லில்லாஹ்‘ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (இதைக் கேட்கும்) “உங்கள் சகோதரர்அல்லது “நண்பர்யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக “யர்ஹமுக்கல்லாஹ்என்று சொன்னால், நீங்கள் (அவருக்காக) “யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்‘ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 6224

இதன்படி தும்மியர் அல்ஹம்து லில்லாஹ் என்று சொன்ன பிறகு தான் முஆவியா பின் ஹகம் (ரலி) அவர்கள் யர்ஹமுக்கல்லாஹ் என்று சொல்லியிருக்கின்றார்கள். இந்த ஹதீஸைப் படிப்பவர் யாரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய விஷயம், தும்மியவர் அல்ஹம்து லில்லாஹ் சொன்னதை நபி (ஸல்) அவர்கள் ஆட்சேபிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் யர்ஹமுக்கல்லாஹ் என்று முஆவியா பின் ஹகம் சொன்னதையும் ஆட்சேபிக்கவில்லை. ஆட்சேபணைக்குரியது அவரது பேச்சு மட்டும் தான்.

புகாரி 6224 ஹதீசுக்கு ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தமது பத்ஹுல்பாரியில் விளக்கமளிக்கும் போது, தொழுகையாளிகள் உட்பட அனைவரும் தும்மும் போது அல்ஹம்து லில்லாஹ் சொல்வது மார்க்கமாகும் என்று குறிப்பிடுகின்றார்கள். இந்த அளவிற்கு முஆவியா (ரலி) அவர்களின் ஹதீஸ் தெளிவாக அமைந்திருக்கின்றது.

இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டி, தொழுகையில் தும்மியவர் அல்ஹம்து லில்லாஹ் சொல்வது மார்க்கமாகும் என்று தானாக வலிய வந்து மவ்லானா சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் சொல்லாமல் மவுனம் காக்கின்றார். மாநபிக்கு எதிரான மத்ஹபு நிலைப்பாட்டை இந்த மவுனத்தின் மூலம் ஆதரிக்கின்றார். நபி (ஸல்) அவர்கள் மீது காட்டும் பாசத்தை விட, மத்ஹபுப் பாசம் தான் இவர்களிடம் மிகைத்து நிற்கின்றது என்பதையே இது காட்டுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு அவரது தந்தையையும் அவரது பிள்ளையையும் விட நான் மிக நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) ஈமான் உள்ளவராக மாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 14

இந்த ஹதீஸில் இடம்பெறும் எச்சரிக்கையை மவ்லானவிற்குச் சொல்லிக் கொள்கிறோம்.

அடுத்து ஜனவரி இதழில் வெளியான குர்ஆன், ஹதீசுக்கு முரணான ஒரு கேள்வி பதிலைப் பார்ப்போம்.

கேள்வி: எனக்கு வயது 43. பாலிகானதிலிருந்து விடுபட்ட நோன்புகளை 27 வருட நோன்புகள் ஓரிரு வருடங்கள் வைத்திருப்பேன். மீதமுள்ள களா நோன்புகளுக்குப் பகரமாக தர்மம் செய்ய முடியுமா?

பதில்: பருவ வயதை எத்திய பின் எத்தனை தொழுகைகள், நோன்புகள் தவறியுள்ளன என்று கணிப்பாகக் கணக்கிட்டு தொழுகைகளை ஒவ்வொரு நாளும், நோன்புகளை வாரத்திற்கு, மாதத்திற்கு இத்தனை என்பதாக முடிந்த அளவு களா செய்து கொண்டே வாருங்கள். அச்சமயம் எனது பருவ வயதிற்குப் பின் தவறிய தொழுகையை, கடந்து விட்ட ரமளான் நோன்பை களாவாக நிறைவேற்றுகிறேன் என்பதாக நிய்யத் வைத்துக் கொள்ளுங்கள். வாலிபம், ஆற்றல் இருக்கும் போது தொழுகைக்கோ, நோன்புக்கோ பகரமாக தர்மம் பரிகாரமாக அமையாது. களா தான் செய்தாக வேண்டும்.           (தஹ்தாவீ 259)      – மனாருல் ஹுதா, ஜனவரி 2013

மவ்லானாவிடம் கேள்வியாளர் எழுப்பிய கேள்வி, நோன்பு களாச் செய்வது பற்றித் தான். ஆனால் இவரோ வலிய வந்து தொழுகையின் களா பற்றியும் சேர்த்துச் சொல்கின்றார்.

தொழுகை விஷயத்தில் அல்லாஹ்வோ, அவனது தூதரோ வழங்காத தீர்ப்பை இந்த மவ்லானா எப்படி வழங்கத் துணிந்தார்?

அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளைக் கூறுபவர்களுக்கு என்ன நேர்ந்தது? யார் அல்லாஹ்ôவின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கிறார்களோ அவர்களுடைய அந்த நிபந்தனை வீணானது; (செல்லாதது😉 அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனைதான் நிறைவேற்றத் தக்கதும், உறுதியானதும் (கட்டுப்படுத்தும் வலிமையுடையதும்) ஆகும்!எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 2155

களா தொழுகை என்பது குர்ஆனிலோ, ஹதீஸிலோ அறவே கிடையாது. தொழுகையை களா செய்யும் வாய்ப்பையும், வாசலையும் அல்லாஹ் அடைத்து விட்டான்.

ஒரு உளூச் செய்யத் தண்ணீர் இல்லையெனில் தயம்மும் செய்து தொழ வேண்டும்.

நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.  (அல்குர்ஆன் 5:6)

பயணத்தில் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறைப்படி தொழுகையைச் சுருக்கிக் கொள்ளலாம்.

லுஹர், அஸர் ஆகியவற்றையும் மக்ரிப், இஷா ஆகியவற்றையும் சேர்த்தும் தொழுது கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் விரைவாக பயணம் புறப்பட நேரிட்டால் மஃக்ரிப் தொழுகையைப் பிற்படுத்துவார்கள். (மஃக்ரிபைச் சுருக்கித் தொழாமல்) மூன்று ரக்அத்களாகவே தொழுது சலாம் கொடுப்பார்கள். பின்னர் சிறிதே இடைவெளிவிட்டு இஷாத் தொழுகைக்கு இகாமத் சொல்லி இரண்டு ரக்அத்களாக அதை(ச் சுருக்கி)த் தொழுவார்கள். பின்னர் சலாம் கொடுப்பார்கள். இஷாத் தொழுகைக்குப் பிறகிலிருந்து நடு இரவில் அவர்கள் (தஹஜ்ஜுத் தொழுகைக்காக) எழும் வரை உபரியான தொழுகைகள் எதையும் தொழ மாட்டார்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: புகாரி 1092

நின்று தொழ இயலவில்லையானால் உட்கார்ந்து தொழவேண்டும்; உட்கார்ந்தும் தொழ முடியவில்லை என்றால் படுத்துக் கொண்டு தொழலாம்.

எனக்கு மூலவியாதி இருந்தது. அகவே நான் தொழுவது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்)அவர்கள் “நின்று தொழுவீராக! இயலாவிட்டால் உட்கார்ந்து தொழுவீராக! அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழுவீராக!என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), நூல்: புகாரி 1117

இவை அனைத்துமே தெளிவாகத் தெரிவிப்பது ஒன்றே ஒன்று தான். அது தொழுகைக்கு களா இல்லை என்பது தான்.

அந்தந்த நேரத்தில் தொழ வேண்டும் என்று 4:103 வசனத்தில் அல்லாஹ் கடுமையாகக் கூறியிருந்தும் ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் உரிய நேரத்தில் தொழுதாக வேண்டும் என்று கண்டிப்பாக உணர்த்தியிருந்தும் சிலர் ‘களா’வாகத் தொழுகின்றேன் என்று கூறி இஷாவுக்குப் பிறகு நின்று கொண்டு சுபுஹ் தொழுகையிலிருந்து இஷா தொழுகை வரை மொத்தமாகத் தொழுது கடனைக் கழித்து கணக்கைத் தீர்க்கின்றனர்.

இப்படி அல்லாஹ்வின் சட்டங்களைக் கேலிக் கூத்தாக்குவதற்குக் காரணம், ஒரு வேளையில் தொழுகையை விட்டு விட்டால் மறுவேளையில் தொழுது கொள்ளலாம் என்பது போன்ற சட்டங்களைச் சொல்வதால் தான்.

“தொழுகையை இவ்வாறு களாச் செய்யலாம் என்று சொல்வது நல்ல நோக்கத்திற்காகத் தான். ஓர் அடியான் தன் மீது கடமையாகி விட்ட தொழுகையை விட்டு விட்டால் அது கடனாகி விடுகின்றது.  கடனை திருப்பிச் செலுத்துவது எப்படி கட்டாயமோ அதுபோல் செலுத்தியாக வேண்டும். இல்லையேல் அல்லாஹ் தண்டித்து விடுவான் என்பதற்காகத்தான் களாத் தொழுகை உண்டு என்று கூறுகின்றோம்’ என்று மார்க்கத் தீர்ப்பு வழங்குகின்றனர்.

மார்க்கத்தில் இல்லாத இது போன்ற தீர்ப்புகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். ”இவ்வளவு நாளும் தொழாமல் இருந்து விட்டோமே, சரி இன்றையிலிருந்து இனிமேலாவது ஒழுங்காகத் தொழுவோம்” என்ற நல்ல முடிவிற்கு ஒருவன் வந்து, மார்க்க அறிஞரிடம் ஃபத்வா கேட்கின்றான்.  இன்றையிலிருந்து நான் தொழப் போகின்றேன், இதுவரை நான் விட்ட தொழுகைகளின் நிலை என்ன? என்று கேட்கின்றான்.

இந்தக் கேள்வியாளர் போன்று 43வது வயதில் ஒருவர் திருந்தி, மனம் வருந்தி வருகின்றார் என்று வைத்துக் கொள்வோம். 16 வயதில் அவர் பருவமடைந்திருந்தால் 27 ஆண்டுகள் தொழுகையைக் களாச் செய்ய வேண்டிய நிலை ஏறப்படும். இந்த 27 ஆண்டு கால தொழுகையைத் தொழ வேண்டும் என்று சொன்னால் இதைத் தாங்க முடியாமல் வந்த பாதையை நோக்கித் திரும்பி விட நேரிடும். அந்தப் பாவம் இப்படி ஒரு தீர்ப்பை அளித்த மவ்லானாவுக்குத் தான் பதிவாகும்.

இந்தத் தீர்ப்பு தொழப் போகின்றேன் என்று திருந்தி வந்தவருக்கு திருப்பு முனையாக அமையவில்லை.  திருந்தி, வருந்தி வந்தவரின் நம்பிக்கையை அறுத்து விடும் கத்தி முனையாக அமைந்து விட்டது.  இவ்வளவு நாட்கள் நிலுவையாகக் குவிந்து கிடக்கும் தொழுகைகளுடன் இனிமேல் உள்ள தொழுகைகளும் கிடந்து விட்டுப் போகட்டும் என்று வந்த வழியைப் பார்த்து திரும்பி விடுகின்றார்

இதுதான் நல்ல நோக்கத்தின் பின்னால் புதைந்து கிடக்கும் பேராபத்தாகும். அப்படியானால் களா தொழுகையே இல்லையா? இவ்வளவு நாளும் தொழாமல் 20 வருடங்களாகத் தேங்கிப் போனவருக்கு வழி வகை என்ன? என்பதை இப்போது பார்ப்போம்.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். (அல்குர்ஆன் 2:185)

இந்த வசனத்தில் நோன்பு மாதம் வந்து, ஒருவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் ரமலான் மாதம் அல்லாத வேறு நாட்களில் நோன்பு நோற்க வேண்டும் என்று நோன்பை களாச் செய்யுமாறு கூறுகின்றான்.

இப்படி நோன்பில் களாச் செய்யுமாறு கூறிய இறைவனுக்கு, தொழுகையில் களாவைப் பற்றி சொல்லத் தெரியாதா?  நிச்சயமாக அவன் ஞானமிக்கவன்.

தொழுகையில் அல்லாஹ் களாவை விரும்பவில்லை.  அவ்வப்போது உடனே தொழவேண்டும் என்று உறுதியாகக் கட்டளையிடுகின்றான்.  ஒரு மனிதன் போர்க்களத்தில் நின்றாலும் தொழுதாக வேண்டும்.  இதை அல்லாஹ் தன் திருமறையில் 4:102 வசனத்தில் குறிப்பிடுகின்றான்.  இந்த வசனத்தில் போர்க்களத்தில் எப்படித் தொழ வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு விட்டுப் பின்னர், தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று கூறுகின்றான்.

நீங்கள் தொழுகையை முடித்ததும் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினையுங்கள்! நீங்கள் அச்சமற்ற நிலையை அடைந்தால் தொழுகையை (முழுமையாக) நிலைநாட்டுங்கள்! நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

தொழுகையைக் களாச் செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு ஏற்ற இடம் உண்டென்றால் அது போர்க்களம் தான்.  எதிரிகள் முஸ்லிம்களை அழித்துவிடத் துடிக்கும் அந்தக் கட்டத்தில் கூட தொழுகையை விடக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிடுவதிலிருந்து களாத் தொழுகை என்பது இஸ்லாத்தில் அறவே அனுமதிக்கப்பட்டதல்ல என்பதை விளங்கலாம்.

எனவே தொழுகையைக் களாச் செய்வதற்கு வல்ல அல்லாஹ் எந்தவிதமான வழியையும் விட்டு வைக்கவில்லை. அந்தந்த நேரத்தில் உரிய தொழுகையைக் கண்டிப்பாகத் தொழுதாக வேண்டும்.  களாத் தொழுகை என்ற ஒன்று இருக்கின்றது என்று சொல்வதால் தான் மக்களிடம் அலட்சியம் ஏற்படுகின்றது. அதனால் தொழுகையை விட்டு விட்டு களாவாக, பதினேழு ரக்அத்துகளையும் மொத்தமாகத் தொழும் நிலைக்குச் சென்று விடுகின்றார்கள்.  சினிமாவுக்குச் செல்வதற்காகத் தொழுகையை விட்டு விட்டு, சினிமா முடிந்த பின்னர் மூன்று வேளைத் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுபவர்களும் உண்டு.

ஒரு நேரத் தொழுகையை வேண்டுமென்று விடுவது இறை நிராகரிப்புக்குக் கொண்டு செல்லும் பெரும் பாவம் என்று மக்களிடம் எடுத்துச் சொல்லும் போது அவர்கள் உணரத் தலைப்பட்டு அந்தந்த நேரத்தில் அந்தந்த தொழுகையை நிலைநாட்டுவார்கள்.

ஒருவர் தனக்குத் தொழுகை கடமையான நாளிலிருந்து 20 வருடங்களாகத் தொழவில்லை என்றால் அதற்காக அவரது மனம் வருந்துகின்றது.  அவர் 15 வயதிலிருந்து விட்ட தொழுகையை எல்லாம் தொழ வேண்டும் என்ற அவசியம் இல்லை.  இதற்குப் பரிகாரம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவது தான். எல்லாம் வல்ல அல்லாஹ் இத்தகையவர்களை மன்னிக்கக் காத்திருக்கின்றான்.

அவர்களுக்குப் பின்னர் வழித்தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் பின்னர் நட்டத்தைச் சந்திப்பார்கள். திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 19:59, 60)

அல்லாஹ் இப்படி ஒரு விசாலத்தைத் தன் அடியார்களுக்கு வழங்கியிருக்கும் போது அதில் இந்த அறிஞர்கள் குறுக்கிட்டு, திருந்தி வருபவர்களிடம் களா எனும் பெரும் பாரத்தை ஏற்றி அவர்களை விரக்தியாளர்களாக, அல்லாஹ்வின் அருளை விட்டும் நிராசையடையக் கூடியவர்களாக ஆக்கி விடுகின்றனர். இப்படி ஒரு நெருக்கடியை, மனந்திருந்தி வரும் அடியார் மீது திணிப்பதற்காக அல்லாஹ்விடம் இந்த மார்க்க அறிஞர்கள் பதில் கூறவேண்டும்.

ஒருவர் தொழாமல் தூங்கி விட்டால் தூக்கத்திலிருந்து விழித்ததும் தொழலாம்.  அல்லது மறந்து போய் தொழாமல் இருந்து விட்டால் நினைவு வந்ததும் தொழவேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரிலிருந்து திரும்பியபோது இரவு முழுவதும் பயணம் செய்தார்கள். இறுதியில் அவர்களுக்கு உறக்கம் வந்துவிடவே (ஓரிடத்தில் இறங்கி) ஓய்வெடுத்தார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்களிடம் “இன்றிரவு எமக்காக நீர் காவல் புரிவீராக!என்றார்கள். பிலால் (ரலி) அவர்கள் (கண் விழித்து) அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அளவு தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (படுத்து) உறங்கினார்கள். வைகறை நேரம் (ஃபஜ்ர்) நெருங்கிய வேளையில் பிலால் (ரலி) அவர்கள் வைகறை (கிழக்கு)த் திசையை முன்னோக்கியபடி தமது வாகன (ஒட்டக)த்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்கள். அப்போது தம்மையும் அறியாமல் சாய்ந்தபடியே கண்ணயர்ந்து உறங்கிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ, பிலால் (ரலி) அவர்களோ, நபித்தோழர்களில் எவருமோ சூரிய ஒளி தம்மீது படும்வரை விழிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம் முதலில் கண் விழித்தார்கள். பதறியபடியே அவர்கள் “பிலால்!என்றழைத்தார்கள். பிலால் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களைத் தழுவிக்கொண்ட அதே (உறக்கம்)தான் என்னையும் தழுவிக்கொண்டதுஎன்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்) “உங்கள் வாகனங்களைச் செலுத்துங்கள்என்று கூற, உடனே மக்கள் தம் வாகனங்களைச் செலுத்தி சிறிது தூரம் சென்றார்கள். 

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறங்கி) அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிலால் (ரலி) அவர்களிடம் (பாங்கு மற்றும்) இகாமத் சொல்லச் சொன்னார்கள். பிலால் (ரலி) அவர்கள் இகாமத் சொன்னதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். தொழுது முடிந்ததும், “தொழுகையை மறந்துவிட்டவர் நினைவு வந்ததும் அதைத் தொழுதுகொள்ளட்டும். ஏனெனில் அல்லாஹ், “என்னை நினைவுகூரும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக!‘ (20:14) என்று கூறுகின்றான்என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: முஸ்லிம் 1097, அபூதாவூத்

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் உறங்கி விட்டார்கள். சூரியன் உதித்த பிறகு தான் விழிக்கின்றார்கள். எழுந்ததும் உடனே அந்த இடத்தை விட்டு கொஞ்சம் கடந்து சென்று தொழுகை நடத்துகின்றார்கள். தொழுது முடித்து விட்டு, ”மறந்தவர்கள் நினைவு வந்ததும் தொழுங்கள்” என்று சொல்கின்றார்கள்.

இன்னொரு ஹதீஸில், ”யார் தொழுகையை மறந்து விடுகின்றாரோ அல்லது தொழாமல் உறங்கி விடுகின்றாரோ அதற்குரிய பரிகாரம் நினைவு வந்ததும் அதைத் தொழுவது தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி அனஸ் (ரலி) மூலம் அறிவிக்கப்பட்டு, முஸ்லிமில் இடம் பெறுகின்றது.

இந்த ஹதீஸ்களிலிருந்து தூக்கம், மறதி ஆகியவற்றின் காரணமாக தொழுகை தாமதமாகி விட்டால் அல்லாஹ் நம்மைத் தண்டிக்க மாட்டான்.  ஏனெனில் இவை இரண்டுமே நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள்.  அதற்காக அலாரத்தை அணைத்து விட்டு வேண்டுமென்றே சுபுஹ் தொழாமல் தூங்குபவருக்கு இது பொருந்தாது.  எதுவுமே தெரியாத அளவுக்குத் தூங்கி விட்டால் அதை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். இந்த இரண்டு காரணங்களைத் தவிர்த்து சுய நினைவுடன் தொழுகையை விடுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை.