பேசும் மொழிகளும் படைத்தவனின் அற்புதமே!
எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்
மொழியறிந்தோரின் மகத்தான சேவை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்திலும், அவர்களுக்கு பிந்தைய காலத்திலும் இந்த சத்தியத்தைத் தெரிந்து கொள்வதற்கும், வலுவாக நிலைநாட்டுவதற்கும், இன்னும் திசையெங்கும் பரப்புவதற்கும் பன்மொழிப் புலமை பெற்றவர்கள் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். இதன் மூலம் பிறமொழியறிந்த மக்கள் சத்திய மார்க்கமான இஸ்லாத்தைத் தெரிந்து கொள்ளும் பொன்னான வாய்ப்பைப் பெற்றார்கள்.
குறிப்பிட்டுக் கூறுவதாக இருந்தால், இப்பணியில் திறம்பட செயலாற்றிய சான்றோர்களாக நபித்தோழர்கள் திகழ்ந்தார்கள். நபித்தோழர்களில் பலர் பிறமொழியைக் கற்று சத்தியத்தைப் எடுத்துரைத்தார்கள். இன்னும் பலர், பிறமொழியை அறிந்தவர்களின் உதவியுடன் மார்க்கப் பணியில் செம்மையாக செயல்பட்டார்கள். இதற்குரிய சான்றுகளைக் காண்போம்.
நபி (ஸல்) அவர்களிடம் யூதர்கள் தம் சமுதாயத்தாரி-ருந்து விபசாரம் புரிந்து விட்டிருந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் அழைத்து வந்தார்கள். (தீர்ப்பளிக்கும்படி கேட்டார்கள்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்களில் விபசாரம் புரிந்தவரை நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அவர்கள் “நாங்கள் அவ்விருவரையும் (அவர்களின் முகங்களில்) கரும்புள்ளியிட்டு அடிப்போம்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “(உங்கள் வேதமான) தவ்ராத்தில் (விபசாரம் செய்தவருக்கு) “ரஜ்ம்‘ (சாகும் வரை கல்லால் அடிக்கும்) தண்டனையை நீங்கள் காணவில்லையா?” என்று கேட்க, யூதர்கள், “(அப்படி) ஒன்றும் அதில் நாங்கள் காணவில்லை” என்று பதிலளித்தனர். உடனே (யூத மார்க்க அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், யூதர்களிடம், “பொய் சொன்னீர்கள், நீங்கள் உண்மையாளர்களாயின் தவ்ராத்தைக் கொண்டு வந்து ஓதிக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள். (அவ்வாறே தவ்ராத் கொண்டுவரப்பட்டு ஓதப்பட்டது.) அப்போது அவர்களுக்கு வேதம் கற்பிக்கும் வேதம் ஓதுநர் “ரஜ்ம்‘ தொடர்பான வசனத்தின் மீது தம் கையை வைத்து (மறைத்துக் கொண்டு) தம் கைக்கு முன்னால் இருப்பதையும் அதற்கு அப்பால் உள்ளதையும் மட்டும் ஓதலானார். (கைக்குக் கீழே உள்ள) ரஜ்முடைய வசனத்தை ஓதவில்லை. உடனே அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் அந்த ஓதுநரின் கையை ரஜ்முடைய வசனத்தை விட்டு இழுத்துவிட்டு, “இது என்ன?” என்று கேட்டார்கள். யூதர்கள் அதைப் பார்த்தபோது, “இது ரஜ்முடைய வசனம்” என்று சொன்னார்கள். ஆகவே (விபசாரம் புரிந்த) அவ்விருவருக்கும் தண்டனை வழங்கும்படி நபியவர்கள் ஆணையிட்டார்கள். எனவே, அவ்விருவருக்கும் மஸ்ஜிதுந் நபவியில் ஜனாஸாக்கள் (இறுதிப் பிரார்த்தனைக்காகச் சடலங்கள்) வைக்குமிடத்திற்கருகே கல்லெறி தண்டனை தரப்பட்டது. அந்தப் பெண்ணின் அந்த நண்பன் அவளைக் கல்லடியிலிருந்து காப்பாற்றும் விதத்தில் அவள் மீது கவிழ்ந்துகொள்வதை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புஹாரி 4556
ஸாதான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் “நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ள குடிபானங்களைப் பற்றி உங்களது (வட்டார) மொழியில் கூறி, அதற்கு எங்களது (வட்டார) மொழியில் எனக்கு விளக்கமளியுங்கள். ஏனெனில், எங்களது மொழி வழக்கு அல்லாத வேறொரு மொழி வழக்கு உங்களுக்கு உள்ளது” என்று கூறினேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹன்த்தமை‘ப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள். அது சுட்ட களிமண் பாத்திரமாகும். மேலும், அவர்கள் “துப்பா‘வையும் தடை செய்தார்கள். அது சுரைக்காய் குடுவையாகும். “முஸஃப்பத்‘தையும் தடை செய்தார்கள். அதுவே தார் பூசப்பட்ட பாத்திரமாகும். “நக்கீரை‘யும் தடை செய்தார்கள். அது பேரீச்ச மரத்தின் மேற்பட்டை உரிக்கப்பட்டு பின்னர் நன்கு குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரமாகும்” என்று கூறிவிட்டு, “(இவற்றை விடுத்து) தோல்பைகளில் பானங்களை ஊற்றிவைக்குமாறு உத்தரவிட்டார்கள்” என்று சொன்னார்கள்.
நூல்: முஸ்லிம் 4060
ஓர் அடியார் (உ.ளூ செய்து) தொழுமிடத்தில் (கூட்டுத்) தொழுகையை எதிர்பார்த்தபடி இருக்கும் நேரமெல்லாம் அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுகிறாôர். (இது எதுவரையில் எனில்) அவருக்கு ஹதஸ் (சிறுதுடக்கு) ஏற்படாத வரை‘ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது (அரபி மொழி புரியாத) ஒரு பாரசீகர் “ஹதஸ் என்றால் என்ன, அபூஹுரைரா அவர்களே!?” என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “பின் துவராத்திலிருந்து வெளியாகும் காற்று” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: சயீத் அல்மக்புரீ (ரஹ்), நூல்: புஹாரி 176
(பஸ்ராவின் ஆளுநராயிருந்த) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தமது கட்டிலில் அமருமாறு கூற, அவ்வாறே நான் அமர்ந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்கள், “என்னிடம் நீங்கள் (மொழிபெயர்ப்பாளராக இங்கேயே) தங்கிவிடுங்கள். (அதற்காக) நான் எனது செல்வத்திலிருந்து ஒரு பங்கை உங்களுக்குத் தருகிறேன்” என்று கேட்டுக்கொண்டார்கள். அதன்படி அவர்களுடன் நான் இரண்டு மாதங்கள் (மக்காவில்) தங்கி விட்டேன்.
அறிவிப்பவர்: அபூஜம்ரா, நூல்: புஹாரி 53, 87, 7266
(நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முதன்முதலில் இறைச்செய்தி வந்தபோது) கதீஜா (ரலி) அவர்கள், தம் தந்தையின் சகோதரர் மகனான வரக்கா பின் நவ்ஃபல் பின் அசத் பின் அப்தில் உஸ்ஸா என்பாரிடம் நபி (ஸல்) அவர்களை அழைத்துச் சென்றார்கள்.
“வரக்கா’ அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும், அவர் (அரபு மற்றும்) எபிரேய (ஹீப்ரு) மொழியில் எழுதத் தெரிந்தவராக இருந்தார். எனவே, இன்ஜீல் வேதத்தை அல்லாஹ் நாடிய அளவிற்கு ஹீப்ரு மொழியி(லிருந்து அரபு மொழியி)ல் எழுதுவார். அவர் கண் பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார். (சுருக்கம்)
நூல்: புஹாரி 3, 3392, 4953, 6982
மார்க்கத்தை அறிய உதவும் மொழிப்புலமை
மக்கள் ஒரு மொழியைப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் இடையே பல்வேறு மாறுதல்கள் இருக்கும். பேச்சு நடை, எழுத்து நடை என்பது எல்லா மொழிகளிலும் உண்டு. மேலும் மொழி என்றால் அதில் பிறமொழிச் சொற்கள் கலந்திருக்கும். எனவே ஒரு மொழியில் புலமை பெறுவதாக இருந்தால் அந்த மொழியில் பயன்படுத்தப்படும் வழக்குகளை தெரிந்து கொள்வதோடு அதில் கலந்திருக்கும் பிறமொழி சொற்களின் பொருட்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபி மொழி பேசுபவர்களாக இருப்பினும் அவர்கள் தமது பேச்சுக்களிலும், மக்களுக்கு தெரிவித்த போதனைகளிலும் பிறமொழி வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்கள். நபிகளாரின் போதனைகளை முழுமையாக விளங்கிக் கொள்வதற்கு அந்தச் சொற்களின் பொருளையும் நாம் தெரிந்திருக்க வேண்டும். அல்லாஹ்வின் அருளால் அந்த வார்த்தைகளின் அர்த்தங்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. அதற்காக அரும்பாடுபட்ட நல்லலோர்களின் பணி மகத்தானது; என்றும் மறக்க முடியாதது ஆகும்.
ஹஸன் பின் அலீ (ரலி) அவர்கள் (சிறுவராயிருந்த போது) தர்மப் பொருளாக வந்த பேரீச்சம் பழங்களிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம் வாயில் வைத்தார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள் பாரசீக மொழியில், “கிஹ் கிஹ் – சீச்சீ!” (என்று சொல்- விட்டு) “நாம் தர்மப் பொருளைச் சாப்பிட மாட்டோம் என்று உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புஹாரி 3072
அபிசீனியா நாட்டி-ருந்து நானும் ஜுவைரிய்யா அவர்களும் வந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குப் பட்டுத் துணி ஒன்றை உடுத்தக் கொடுத்தார்கள். அதில் அடையாளக் குறிகள் சில இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கரத்தால் அந்த அடையாளங்களைத் தடவியபடி, “அழகாயிருக்கிறதே! அழகாயிருக்கிறதே!” (என்பதைக் குறிக்க அபிசீனிய மொழியில் “சனா, சனா‘) என்று கூறலானார்கள்.
அறிவிப்பவர்: உம்மு காலித் (ரலி), நூல்: புஹாரி 3874
“மறுமை நாளுக்கு முன்பு ஒரு கால கட்டம் வரும். அப்போது கல்வி அகற்றப்படுவிடும்; அறியாமை நிலவும்; “ஹர்ஜ்‘ பெருகிவிடும். “ஹர்ஜ்‘ என்பது கொலையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” எனத் தெரிவித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: புஹாரி 7064, 7065
அல்லாஹ்வின் வேதமும், அவனது தூதரின் வாழ்வியல் போதனைகளும் அரபி மொழியில் இருக்கின்றன. அவற்றை அழகிய முறையில் அறிந்து கொள்ள வேண்டுமெனில் அரபி மொழியை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த ஆர்வம் எத்தனை மக்களிடம் இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்.
அரபி மொழியில் முழுமையான புலமை பெறாவிட்டாலும், குறைந்தபட்சமாக அதைப் படிப்பதற்காவது முயற்சி செய்யலாம். ஆனால் முஸ்லிம்களின் நிலமை பரிதாபத்திற்குரியதாக உள்ளது. பெரும்பாலான மக்கள் குர்ஆனைப் படிப்பதற்குக் கூட தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
தாய்மொழி தெரிந்தவர்களும் தவறிழைப்பார்கள்
குர்ஆனும் ஹதீஸ்களும் அரபி மொழியில் இருப்பதால் அரபிகள் மட்டுமே அதைச் சரியாகப் புரிந்து கொள்வார்கள்; அவர்கள் ஒருபோதும் மார்க்க விஷயங்களில் தவறிழைக்க மாட்டார்கள் என்று சில முஸ்லிம்கள் நினைக்கின்றனர்.
இன்றும் மார்க்க ரீதியாக ஒரு கருத்து வேறுபாடு வரும் போது நாம் அடுக்கடுக்கான சரியான ஆதாரங்களைக் காட்டினாலும் அதற்கு மாற்றமாக இருக்கும் அரபிகளின் செயல்களைச் சுட்டிக்காட்டி அவர்கள் செய்வதுதான் சரியாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இதற்குப் பல உதாணரங்களைக் குறிப்பிடலாம்.
மதீனாவில் ரமலான் மாதத்தில் குர்ஆனை ஓதி முடித்ததற்கு ஒரு பெரிய துஆவை தொழுகையில் ஓதுவார்கள். மார்க்கத்தில் எந்தவொரு ஆதாரமும் இல்லாத இக்காரியத்தை இந்நிலைபாட்டில் உள்ளவர்கள் சரி காண்பார்கள். அதுபோன்று அங்கு இருப்பவர்ககள் மத்ஹபுகளைப் பின்பற்றுவதை இங்கு இருப்பவர்கள் தங்களுக்கு ஆதாரமாகக் காட்டுவார்கள்.
இதற்கெல்லாம் காரணம் ஒரு செய்தியை அந்த மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமே சரியாகச் சொல்வார்கள், செய்வார்கள் என்ற குருட்டுத்தனமான சிந்தனையே ஆகும். தாய்மொழியைத் தெரிந்தவர்களும் அந்த மொழியில் இருக்கும் கருத்துக்களைத் தப்புத் தவறுமாக விளங்கிச் செய்வார்கள் என்பதற்குப் பின்வரும் செய்தி சான்றாக இருக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மக்கள் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சியதே காரணம். நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக்கால மாச்சரியத்திலும் தீமையிலும் மூழ்கிக்கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) இந்த நன்மையை எங்களிடம் கொண்டுவந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆம் (இருக்கிறது)‘ என்று பதிலளித்தார்கள். நான், “அந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதா?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும்” என்று பதிலளித்தார்கள். நான், “அந்தக் கலங்கலான நிலை என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஒரு கூட்டத்தார் எனது வழிமுறை (சுன்னா) அல்லாததைக் கடைப்பிடிப்பார்கள். எனது நேர்வழியல்லாததைக் கொண்டு வழிகாட்டுவார்கள். அவர்களில் நீ நன்மையையும் காண்பாய்; தீமையையும் காண்பாய்” என்று பதிலளித்தார்கள். நான், “அந்த நன்மைக்குப் பிறகு தீமை உண்டா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம். நரகத்தின் வாசல்களில் நின்றுகொண்டு (அங்கு வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவரை நரகத்தில் அவர்கள் எறிந்து விடுவார்கள்” என்று பதிலளித்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்க(ளுடைய அடையாளங்)களை எங்களுக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்கள் நம் (அரபு) இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். நம் மொழிகளையே பேசுவார்கள்” என்று பதிலளித்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இத்தகைய கால கட்டத்தை நான் அடைந்தால் என்ன செய்யவேண்டும் என எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அதன் ஆட்சியாளரையும் பற்றிக்கொள்” என்று பதிலளித்தார்கள். அதற்கு நான், “அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஆட்சியாளரோ இல்லை (என்ற நிலையில் பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால் (என்ன செய்வது)?” என்று கேட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு (விலகி) ஒதுங்கிவிடு. (ஒதுங்கி வாழும் சூழலுக்கு முட்டுக்கட்டையாகப் பல்வேறு சிரமங்கள் நேர்ந்தாலும்) ஒரு மரத்தின் வேர் பாகத்தைப் பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, இறுதியில் அதே நிலையில் நீ இருக்கவே இறப்பு உன்னைத் தழுவினாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் நீ சேர்ந்துவிடாதே)” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி), நூல்: புஹாரி 3764
எனவே எந்தவொரு மார்க்க விஷயமாக இருந்தாலும் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் செய்கிறார்கள் என்று ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். அதை விடுத்து அரபிகள் அதிலும் குறிப்பாக மக்கா, மதீனாவில் இருப்பவர்கள் செய்தால் அது கண்டிப்பாக சரியாக இருக்கும் என்று குருட்டுத்தனமாக நம்பி ஆட்டு மந்தைகளைப் போன்று அவர்களை அடியொற்றி பயணித்துவிடக்கூடாது. இதைப் புரியாமல் பல முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இவர்கள் இனியாவது திருந்துவார்களா?
மொழியைப் பயன்படுத்தும் விதம்
நாம் எந்தவொரு மொழியைப் பேசுவதாக இருந்தாலும் பயன்படுத்துவதாக இருந்தாலும் அது மார்க்கத்திற்கு உட்பட்ட வகையில் நல்ல முறையில் இருக்க வேண்டும், மோசமான அருவருப்பான வார்த்தைகளைப் பேசுவது கூடாது. அதுபோன்று தவறான தீய அர்த்தம் கொண்ட சொற்பிரயோகத்தைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக, அவ்லியாவின் ஆசியால் பிறந்த குழந்தை என்ற மூடநம்பிக்கையால் மைதீன் பிச்சை என்றும், அரசர்களுக்கெல்லாம் அரசன் என்ற அர்த்தம் கொண்ட ஷாஜஹான், ஷாகுல் ஹமீது என்றும் பெயர்களை பயன்படுத்தும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இவ்வாறான பெயர்களை நம்பிக்கையாளர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ்விடம் மிகவும் கேவலமான பெயர், (உலகில்) ஒரு மனிதன் தனக்கு “மன்னாதி மன்னன்‘ (ம-க்குல் அம்லாக்) என்று பெயர் சூட்டிக்கொண்டதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புஹாரி 6206, முஸ்லிம் 4338
(என் தந்தை) உமர் (ரலி) அவர்களுக்கு “ஆஸியா‘ (பொருள்: பாவி) எனப்படும் புதல்வியொருவர் இருந்தார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜமீலா (பொருள்: அழகி) என (மாற்று)ப் பெயர் சூட்டினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: முஸ்லிம் 4333
மொழி மூலம் வரும் பிரச்சனைகள்
ஒருவர் தமது சொந்த மொழியாக இருந்தாலும் பிறமொழியாக இருந்தாலும் அதைச் சரியான முறையில் அணுக வேண்டும். அதன் இலக்கண இலக்கிய முறைகளை அறிந்து பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், அதுவே பல பிரச்சனைகள் சச்சரவுகளுக்கு வழிவகுத்துவிடும்.
இன்றும்கூட பல தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் விஷயத்தில், யார் பேசுவது சரி என்று இலங்கைத் தமிழர்களும் தமிழகத்தில் இருப்பவர்களும் வாதம் செய்வதைப் பார்க்கலாம். அதுபோன்று அமெரிக்கன் ஆங்கிலம் சரியா? பிரிட்டிஷ் ஆங்கிலம் சரியா? என்று குழம்புபவர்களைக் காணலாம். இன்னும் சொல்வதென்றால் தமிழக முஸ்லிம் சமுதாயத்தில், ஸிஹ்ரு என்ற அரபி வார்த்தைக்கு முஸ்லிமல்லாதவர்கள் பயன்படுத்தும் சூனியம் என்ற தவறான அர்த்தத்தை சில ஆலிம்கள் கொடுத்ததால் மக்களிடம் பல்வேறு மூடநம்பிக்கைள் பெருகிக்கிடக்கின்றன. எனவே எந்தவொரு மொழியையும் முறையாக அணுகும் பழக்கம் நம்மிடம் இருக்க வேண்டும். இல்லாதபோது அதன்மூலம் பிரச்சனைகள் தோன்றுவது தவிர்க்க இயலாததாகி விடும். இதைப் புரிந்து கொள்வதற்கு இரு சம்பவங்களைக் காண்போம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாழ்நாளில் ஹிஷாம் பின் ஹகீம் (ரலி) அவர்கள் “அல்ஃபுர்கான்‘ எனும் (25ஆவது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை நான் செவியுற்றேன். அவரது ஓதலை நான் செவி தாழ்த்திக் கேட்டபோது எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அதை அவர் ஓதிக்கொண்டிருந்தார். தொழுகையில் வைத்தே நான் அவரைத் தண்டிக்க முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும்வரை பொறுத்துக்கொண்டேன்.
(அவர் தொழுது முடித்த) பிறகு அவரது மேல் துண்டைக் கழுத்தில் போட்டுப் பிடித்து, “நீர் ஓதியபோது நான் செவியுற்ற இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக் காண்பித்தது யார்?” என்று கேட்டேன். அவர், “இதை எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் ஓதிக்காண்பித்தார்கள்” என்று பதிலளித்தார். உடனே நான், “நீர் பொய் சொல்-விட்டீர்! ஏனெனில், நீர் ஓதியதற்கு மாற்றமாகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை எனக்கு ஓதிக் கொடுத்தார்கள்” என்று கூறியபடி அவரை இழுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்களிடம், “(அல்லாஹ்வின் தூதரே!) தாங்கள் எனக்கு ஓதிக்கொடுக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் “அல்ஃபுர்கான்‘ அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை விடுங்கள்!” என்று கூறிவிட்டு (ஹிஷாம் அவர்களை நோக்கி), “ஹிஷாமே, நீங்கள் ஓதுங்கள்!” என்றார்கள். அவர் என்னிடம் ஓதியது போன்றே நபி (ஸல்) அவர்களுக்கு முன்னாலும் ஓதிக் காட்டினார். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது” என்று கூறினார்கள்.
பிறகு (என்னைப் பார்த்து), “உமரே, ஓதுங்கள்!” என்று சொன்னார்கள். எனக்கு அவர்கள் ஓதிக்கொடுத்திருந்த ஓதல்முறைப் படி நான் ஓதினேன். (அதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப் பெற்றது. இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கின்றது. ஆகவே, உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி), நூல்: புஹாரி 4992, 5041, 6936
ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம் (அவர்களது ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான் (ரலி) அவர்கள், அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றி கொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்திருந்தார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்-ம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்து வேறுபாடு கொண்டது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆகவே, ஹுதைஃபா (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம், “யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களுடைய வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது போல் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!” என்று கூறினார்கள். ஆகவே, உஸ்மான் (ரலி) அவர்கள் (அன்னை) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி “தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்” என்று தெரிவித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: புஹாரி 4987
மொழி சம்பந்தமான பல தகவல்களைத் தெரிந்து கொண்டோம். மனிதர்கள் பல மொழிகள் பேசுவது இறைவன் ஒருவன் இருப்பதற்கான மிகப்பெரும் சான்று என்றும் அனைத்து மொழிகளும் சமமானவை என்றும் அறிந்து கொண்டோம். இன்னும் மார்க்கத்தை அறிந்து கொள்வதற்கும் அதை நிலைநாட்டி அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்கும் மொழிப்புலமையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மொழி எனும் ஆயுதத்தை எப்படிப் பயன்படுத்துகிறோமோ அதற்கு ஏற்ப பின்விளைவுகள் நிகழும். எனவே எப்போதும் நல்ல முறையில் மொழிப் புலமையைக் கையாளவேண்டும் என்பதை விளங்கிக் கொண்டோம். இதற்குத் தோதுவாக திறம்பட செயல்பட்டு வெற்றிபெறுவதற்கு இறைவன் நமக்கு அருள்புரிவானாக!