குளிர் தரும் போதனைகள்

குளிர் தரும் போதனைகள்

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

சத்தியத்தை விளங்கிக் கொள்வதற்கு ஏராளமான சான்றுகள் வானங்கள் மற்றும் பூமி முழுவதும் நிறைந்து இருக்கின்றன. அவற்றுள் முக்கியமான ஒன்று நம்மைச் சுற்றி நிகழும் பருவ மாற்றம் ஆகும். மழை, வெயில், குளிர் என்று மாறிக் கொண்டே இருக்கும் சூழ்நிலை மாற்றத்தைப் பற்றி முறையாக, சரியாகச் சிந்தித்தால் சத்தியத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

பிரபஞ்சத்தைப் படைத்துப் பரிபாலிக்கும் பரம்பொருளான இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதையும், அவனுக்கு மட்டுமே படைப்பினங்களின் மீது அபரிதமான ஆற்றல், பரிபூரணமான அதிகாரம் இருப்பதையும் அதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இன்னும் அவனால் அளிக்கப்பட்ட இந்த இஸ்லாமிய மார்க்கமே மண்ணுக்கேற்ற, மனிதனுக்கேற்ற மார்க்கம் என்பதையும் புரிந்து கொள்ளலாம். இந்த வகையில், குளிர் காலத்தைப் பற்றி யோசிக்கும் போதும் அதிலும் நமக்கு பல்வேறான போதனைகள் படிப்பினைகள் ஒளிந்து இருக்கின்றன. அவற்றை மார்க்கம் கூறும் விதத்தில் தெரிந்து கொள்வோம்.

குளிரிலிருந்து காப்பாற்றும் கால்நடைகள்

மனித இனத்தின் வாழ்க்கை சீரும் சிறப்பாக இருப்பதற்காகவே பூமியில் இருக்கும் அனைத்தையும் படைத்ததாக வல்ல இறைவன் திருமறையில் தெரிவிக்கிறான். இவ்வகையில், கால்நடைகளை நமக்காகப் படைத்ததாகவும் நம்மைக் குளிரிலிருந்து பாதுகாக்கக்கூடியவை அவற்றில் இருப்பதாகவும் குறிப்பிடுகிறான். இதன் மூலம், நமது இயல்பான வாழ்க்கையை பாதிக்கும் வகையில் குளிர் அதிகரிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்திய இறைவன் அவ்வாறான நேரத்தில் அதிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான வாய்ப்பையும் வசதியையும் வழங்கியிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.  இன்னும், அவன் நம்மீது கொண்டிருக்கும் இரக்கம், கருணையையும் அதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

கால்நடைகளை உங்களுக்காகவே அவன் படைத்தான். அவற்றில் குளிரைத் தடுப்பவை (கம்பளி) உண்டு. பல பயன்களும் உள்ளன. அவற்றிலிருந்து சாப்பிடுகிறீர்கள். மாலையில் ஓட்டிச் செல்லும் போதும், காலையில் ஓட்டிச் செல்லும் போதும், அதில் உங்களுக்கு அந்தஸ்து இருக்கிறது. பெரும் சிரமத்துடனே நீங்கள் சென்றடையும் ஊருக்கு உங்கள் சுமைகளை அவை சுமந்து செல்கின்றன. உங்கள் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுள்ளவன். (அல்குர்ஆன் 16:5-7)

இறையாற்றலைப் புரியவைக்கும் பருவமாற்றம்

எல்லாப் பொருட்களிலும் இடங்களிலும் குளிரும், வெப்பமும் இருக்கின்றன. அதே சமயம் அவை கலந்திருக்கும் விகித அளவு கூடுதல் குறைவு கொண்டு வேறுபட்டதாக இருக்கும். குளிரைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்போது அதை வெப்பமான பொருள், வெப்பமான பகுதி என்று கூறுகிறோம். வெப்பத்தைவிட குளிர்ந்த தன்மை அதிகமாக இருக்கும் போது குளிர்ந்த பொருள் குளுமையான பகுதி என்று சொல்கிறோம்.

இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி ஒன்று இருக்கிறது. கால சூழ்நிலையை மாற்றும் இறைவன் நாடினால், நம்மால் பார்க்கப்படும் பொருளை நாம் நினைக்கும் தன்மையில் இருப்பதாக மட்டும் வைத்து விட்டு அதன் ஒட்டுமொத்த தன்மையையும் அவனால் மாற்ற முடியும். நமது புலன்களுக்கு வெப்பமாகத் தெரியும் பொருளைக் குளிர்ந்ததாகவும், குளிர்ந்தததாக தெரியும் பொருளை வெப்பமானதாகவும் மாற்றும் வல்லமை ஆற்றல் அல்லாஹ்விற்கு இருக்கிறது என்பதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது. இதைப் பின்வரும் வசனங்கள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்காதவற்றையும் உங்களுக்குத் தீங்கும் தராதவற்றையும் வணங்குகின்றீர்களா?”  என்று (இப்ராஹீம் நபி) கேட்டார். “அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?” (என்றும் கேட்டார்.) “நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்!என்றனர். “நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகிவிடுஎன்று கூறினோம். அவருக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவர்களை நஷ்டமடைந்தோராக ஆக்கினோம்.

அல்குர்ஆன் 21:66-70

இறை மறுப்பாளர்கள் மூட்டிய நெருப்பு அவர்களின் பார்வைக்கு சுட்டுப் பொசுக்கும் தன்மை கொண்டதாகத் தெரிந்தாலும் அதன் உண்மையான தன்மை மாற்றப்பட்டுவிட்டது. அதைக் குளிர்ந்த தன்மை கொண்டதாக அல்லாஹ் மாற்றிவிட்டான்.

இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம், குளிர் அதிகமாக இருக்கிறது என்று தினமும் தண்ணீரை சூடேற்றி வைத்துக் குளிக்கிறோம். ஜலதோசம் பிடித்துவிடக்கூடாது என்று வெந்நீரை குடிக்கிறோம். இப்படிப் பலவீனமாக இருக்கும் நாம் இதைப் புரிந்து கொண்டால் இறைவனின் ஆற்றலை அலட்சியப்படுத்திவிட்டு படைப்பினங்களிடம் உதவி தேடிப் படைபெயடுக்க மாட்டோம். ஒட்டுமொத்த இடத்தையும் நடுங்க வைக்கும் குளிராக மாற்றாமல் நம்மைக் காப்பாற்றிய இறைவனின் அருட்கொடையை பொருட்படுத்தாமல் அவன் மீது அச்சமில்லாமல் வாழமாட்டோம்.

உயிரைப் பறிக்கும் கடுங்குளிர்

இறைவன் ஒட்டுமொத்த மனித இனத்தையும் ஒரேயடியாக அழிப்பதற்கு இந்தப் பூமிக்கு நேரடியாக இறங்கி வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. அல்லது அதற்காக வானவர்களைப் படையெடுத்து அனுப்ப வேண்டிய தேவையும் இல்லை. நம்மைச் சுற்றியிருக்கும் குளிரைக் கொஞ்சம் கூட்டினால் போதும். மறுகணம் இங்கு எந்தவொரு ஜீவராசியும் இருக்காது. இதை மற்ற கோள்களுக்கும் பூமிக்கும் இருக்கும் வேறுபாட்டின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

பூமியில் மட்டும்தான் ஜீவராசிகள் வாழ்வதற்கு ஏற்ப வெயில், குளிர், காற்று அனைத்தும் சரியான விதத்தில் இருக்கின்றன. குளிரைக் குறிப்பிட்டுச் சொல்வதெனில், சூரியனுக்கு வெகுதொலைவில் இருக்கும் கோள்களில் மனிதனுடைய இரத்தத்தை உறைய வைக்கும் அளவிற்கு கடுமையான குளிர் இருப்பதால் அங்கு மனித இனம் வாழ்வது சாத்தியமற்றது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். இதை ஏக இறைவனே தமது திருமறையின் மூலம் நமக்குச் சொல்லிவிட்டான். மேலும், இவ்வாறு பூமியில் நிம்மதியான வாழ்விடத்தைக் கொடுத்ததற்காக நன்றி செலுத்தாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறான்.

பூமியில் உங்களை வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் இதில் ஏற்படுத்தினோம். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்!

அல்குர்ஆன் 7:10

இனிமேலாவது, மற்ற கோள்களில் இருப்பது போன்ற கடுமையான குளிரைக் கொடுத்து நம்மை ஒட்டுமொத்தமாக அழிக்காமல் வைத்திருக்கும் ஏக இறைவனை வணங்கி அவனுக்கு நன்றி செலுத்துபவர்களாக நாம் இருக்க வேண்டும். அவன் சொன்னபடி வாழ்பவர்களாக இருக்கவேண்டும். நமது வாழ்நாளில் குளிரைச் சந்திக்கும் நாழிகைகளில் இதன் மூலமும் இறைவன் நம்மை தண்டிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தப் போதனையை, பேருண்மையைப் பின்வரும் செய்தியைப் படிப்பதன் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தஜ்ஜால் என் சமுதாயத்தாரிடையே புறப்பட்டு வந்து, நாற்பது வரை தங்கியிருப்பான். (நாற்பது நாட்களா, அல்லது நாற்பது மாதங்களா, அல்லது நாற்பது ஆண்டுகளா என்பது எனக்குத் தெரியவில்லை.) அப்போது அல்லாஹ், மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்களை அனுப்புவான். அவர்கள் (சாயலில்) உர்வா பின் மஸ்ஊத் அவர்களைப் போன்றிருப்பார்கள். அவர்கள் தஜ்ஜாலைத் தேடி வந்து அழிப்பார்கள். பிறகு மக்கள் ஏழாண்டுகள் தங்கியிருப்பார்கள். அன்று எந்த இருவருக்குமிடையேயும் பகையுணர்வு இருக்காது. பிறகு அல்லாஹ் ஷாம் (சிரியா) நாட்டின் திசையிலிருந்து குளிர்ந்த காற்று ஒன்றை அனுப்புவான். அப்போது பூமியின் மீது தமது உள்ளத்தில் கடுகு மணியளவு நன்மை, அல்லது இறைநம்பிக்கை (ஈமான்) உள்ள எவரது உயிரையும் அது கைப்பற்றாமல் விட்டுவைக்காது. எந்த அளவுக்கென்றால், உங்களில் ஒருவர் மலைக்கு நடுவே நுழைந்து விட்டாலும் அங்கும் அது நுழைந்து அவரது உயிரைக் கைப்பற்றும். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு (தீமைகளை நோக்கி) விரைந்து செல்வதில் பறவைகளையும் குணத்தில் மிருகங்களையும் ஒத்த தீய மனிதர்களே எஞ்சியிருப்பார்கள். அவர்கள் எந்த நன்மையையும் அறியவுமாட்டார்கள். எந்தத் தீமையையும் மறுக்கவுமாட்டார்கள். அப்போது அவர்களிடையே ஷைத்தான் காட்சியளித்து, “நீங்கள் (எனக்குப்) பதிலளிக்க மாட்டீர்களா?” என்று கேட்பான். அந்த மக்கள், “நீ என்ன உத்தரவிடுகிறாய்?” என்று கேட்பார்கள். அப்போது ஷைத்தான், சிலைகளை வழிபடுமாறு உத்தரவிடுவான்.

இவ்வாறு அவர்கள் (சிலைவழிபாடு செய்துகொண்டு) இருக்கும்போது அவர்களின் வாழ்வாதாரம் தாராளமானதாய் இருக்கும். அவர்களின் வாழ்க்கை செழிப்பானதாக இருக்கும். பிறகு எக்காளம் (ஸூர்) ஊதப்படும். அதைக் கேட்கும் ஒவ்வொருவரின் கழுத்தும் ஒரு பக்கம் சாயும்; மறுபக்கம் உயரும். (அதாவது சுய நினைவிழந்து மூர்ச்சையாகி விடுவார்கள்.) தமது ஒட்டகத்தின் தண்ணீர் தொட்டியைச் செப்பனிட்டுக்கொண்டிருக்கும் மனிதர் ஒருவரே அந்தச் சப்தத்தை முதலில் கேட்பார். உடனே அவர் மூர்ச்சையாகி (விழுந்து) விடுவார். (இதையடுத்து) மக்கள் அனைவரும் மூர்ச்சையாகி விடுவர்.

நூல்: முஸ்லிம் 5635

உலகம் ஒட்டுமொத்தமாக அழியும் போது இந்தப் பூமியின் மீது முஃமின்களில் ஒருவர் கூட இருக்க மாட்டார். மோசமான தீமையான காரியங்களைச் செய்யும் மனிதர்களே அப்போது இருப்பார்கள். இவ்வாறு முஸ்லிம்களை இங்கு இல்லாமல் ஆக்குவதற்கு அல்லாஹ் ஷாம் நாட்டு திசையிலிருந்து குளிர்ந்த காற்றை அனுப்புகிறான் என்று முன்சென்ற செய்தியில் தெரிந்துகொண்டோம்.

இப்போது நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும், உலக அழிவின் அடையாளங்கள் நடக்கும் நேரத்தில் அனுப்பும் அதே குளிர்ந்த காற்றை அல்லாஹ்வினால் இப்போது அனுப்ப முடியாதா? அல்லது தற்போது இருக்கும் குளிரை அதுபோன்று மாற்றமுடியாதா? யோசித்துப் பாருங்கள். ஆனால், அவனை ஏற்றுக் கொள்ளாமல் அவனுக்கு மாறு செய்தாலும் அவ்வாறு அழிக்காமல் அவகாசம் அளிக்கிறான். இதற்குப் பிறகாவது, அனைவரும் இதை உணர்ந்து சரியான முறையில் செயலாற்ற வேண்டும்.

தனித்துவமான இஸ்லாமிய மார்க்கம்

இஸ்லாமிய மார்க்கம் இறைவனால் கொடுக்கப்பட்டதாக இருப்பதால் அது தனித்துவம் கொண்டதாக இருக்கிறது. இந்த மார்க்கம் மனித சமுதாயத்துக்கு நல்லதாக இருப்பதை ஏவும்; தீயதாக இருப்பதைத் தடுக்கும். மனிதர்களின் நலன் விரும்பும் மார்க்கம் இது மட்டுமே என்பதைப் பருவ மாற்றங்களின் போது இந்த மார்க்கத்தில் இடப்பட்டுள்ள கட்டளைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக, இந்தக் குளிர் காலத்திலும் மனிதர்களின் சூழ்நிலையைக் கவனித்து சட்டதிட்டங்களில் சிறப்பான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

வீட்டை விட்டு வெளியே வந்தால் பற்கள் தட்டச்சு செய்யத் துவங்கிவிடும்; குளிரால் உடல் ஆட்டம் போட ஆரம்பித்துவிடும்; நோய்நொடிகள் வந்துவிடும் என்ற மோசமான நிலையிலும் ஒருவர் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும் என்று இஸ்லாத்தில் கூறப்படவில்லை. நமக்குத் துன்பத்தை, துயரத்தைத் தரும் வகையில் குளிர் வாட்டி வதைக்கும் போது வீட்டில் தொழுது கொள்ளலாம்.

இன்னும் சொல்வதெனில், தொழுவதற்கு கண்டிப்பாகக் குளிக்க வேண்டும் என்ற குளிப்பு கடமையான நிலையில் இருப்பவர்கள்கூட அதற்குப் பகரமாக தயம்மம் செய்து கொள்ளலாம். குளிர் தருணங்களை சமாளிக்க நமக்குத் தரப்பட்டுள்ள இந்தச் சட்டங்கள் இஸ்லாம் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்பதை மெய்ப்படுத்துகின்றன. இதற்குரிய சில ஆதாரங்களைக் காண்போம்.

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள். அப்போது “அலா ஸல்லூ ஃபிர்ரிஹால்‘ (ஒரு முக்கிய அறிவிப்பு! நீங்கள் (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்) என்றும் அறிவிப்புச் செய்தார்கள். பிறகு “(கடுங்)குளிரும் மழையும் உள்ள இரவில் “ஒரு முக்கிய அறிவிப்பு! நீங்கள் (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்என்று அறிவிக்குமாறு தொழுகை அறிவிப்பாளரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணிப்பார்கள்என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1240, 1241, 1242

ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூமூசா (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் “அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் (உமர் (ரலி) அவர்களிடம்) சொன்ன (பின்வரும்) செய்தியை நீங்கள் கேள்விப்படவில்லையா?” என்று கேட்டார்கள். (அம்மார் கூறினார்கள்:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஒரு தேவை நிமித்தம் (படைப்பிரிவொன்றில்) அனுப்பிவைத்தார்கள். அப்(பயணத்தின்)போது எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) விட்டது. அப்போது எனக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. ஆகவே, நான் (குளியலுக்குத் தயம்மும் செய்வதற்காகப்) பிராணிகள் புரள்வதைப் போன்று மண்ணில் புரண்டேன். பிறகு (ஊர் திரும்பியதும்) நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைச் சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “உங்களுடைய கரங்களால் இப்படிச் செய்திருந்தால் போதுமே!என்று கூறிவிட்டுத் தம் கரங்களால் பூமியில் ஓர் அடி அடித்து, பின்னர் தமது இடக் கரத்தால் வலக் கரத்தையும் இரு புறங்கைகளையும் முகத்தையும் தடவலானார்கள்.

நூல்: முஸ்லிம் 601

சொர்க்கத்தில் சேர்க்கும் குளிர்நேரத் தொழுகைகள்

குளிர் நிறைந்த நாட்களில் தொழுவதற்காகத் தயாராவதில் தான் நமக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. தொழுவதற்கே ஒட்டுமொத்தமாக விதிவிலக்கு வழங்கப்படவில்லை என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

குளிர் அதிகமாக இருக்கும் நேரங்களில் பெரும்பாலும் தொழுவதற்கு சோம்பலாக இருக்கும். ஷைத்தான் நம்மை மற்ற நாட்களில் ஏமாற்றுவதைவிட இதுபோன்ற நாட்களில் கொஞ்சம் கூடுதலாகவே இறைவனை நினைப்பதை விட்டும் நம்மைத் தடுக்க முயற்சிப்பான். ஆகவே, குளிரைச் சாக்குபோக்காகச் சொல்லிக்கொண்டு தொழுகையை விட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் நம்மை ஆர்வமூட்டுவதற்காகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு அற்புதமான நற்செய்தியை நவின்றுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பகலின் இரு முனைகளிலுள்ள ஃபஜ்ர், அஸ்ர் ஆகிய) இரு குளிர் நேரத் தொழுகைகளைத் தொழுபவர் சொர்க்கத்தில் நுழைவார்.

இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 1117

குளிர்காலத்திலும் சமுதாயப்பணி

திருக்குர்ஆன் படிப்பது, அழைப்புப்பணி செய்வது, பிறருக்கு உதவுவது, தீமைக்கு எதிராகக் களமிறங்குவது என்று மற்ற மாதங்களிலே நற்செயல்களில் கவனத்தோடு இருப்பவர்கள் குளிர்காலத்திலும் இவ்வாறு இருக்கவேண்டும்.

நாள்தோறும் நிறைவேற்றும் மார்க்கக் காரியங்களை மொத்தமாக விட்டுவிடாமல் சூழ்நிலைக்குத் தோதுவாக மாற்றி செம்மையாக நிறைவேற்ற வேண்டும். அதைவிட்டு, குளிர் அதிகமாக இருப்பதைக் காரணம் காட்டி, நற்காôரியங்களைச் செய்வதை விட்டும் ஒதுங்கிக் கொள்ளக் கூடாது. இவ்வாறு குளிர்காலமாக இருப்பதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு மார்க்கக் காரியங்களிலும் சமூகப் பணிகளிலும் கவனக்குறைவாக இருப்பவர்கள் பின்வரும் செய்திகளில் இருந்து பாடம் பெறவேண்டும்.

கடும் குளிர் வீசும் காலத்திலும் நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் மார்க்கத்திற்காகவும் மக்களுக்காகவும் உழைத்திருக்கிறார்கள்; சமூக நோக்கத்தோடு, தியாகச் சிந்தனையோடு செயல்பட்டுள்ளார்கள் என்பதை படிக்கும்போது குளிரின் பெயரைச் சொல்லி மூலையில் முடங்குபவர்கள் தங்களது நிலையைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

யஸீத் பின் ஷரீக் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நாங்கள் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது ஒரு மனிதர், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்திருந்தால், அவர்களுடன் சேர்ந்து போர்களில் ஈடுபட்டிருப்பேன்; கடுமையாக உழைத்திருப்பேன்என்று கூறினார். அதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நீ அவ்வாறு செய்திருக்கவா போகிறாய்? அகழ்ப்போர் இரவில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். கடுமையான காற்றும் குளிரும் எங்களை வாட்டிக்கொண்டிருந்தன. (ஹதீஸின் ஒரு பகுதி)

நூல்: முஸ்லிம் 3662

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலைத் தொழுகையை தொழுது முடித்ததும் மதீனாவின் பணியாளர்கள் தண்ணீருள்ள பாத்திரங்களைக் கொண்டு வருவார்கள். அவ்வாறு கொண்டு வரப்படும் ஒவ்வொரு பாத்திரத்தினுள்ளும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையை மூழ்கச் செய்வார்கள். சில வேளைகளில் குளிரான காலை நேரங்களிலும் அதைக் கொண்டு வருவார்கள். அப்போதும் அதனுள்ளே கையை மூழ்கச் செய்வார்கள்.

நூல்: முஸ்லிம் 4646

சொர்க்கமும் நரகமும்

நரகமும் சொர்க்கமும் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ் தமது திருமறையில் பல இடங்களில் பேசுகிறான். அவற்றைப் பற்றி குறிப்பிடும் போது சொர்க்கத்தில் இருக்கும் இன்பங்கள், நரகத்தில் இருக்கும் தண்டனைகள் போன்றவற்றை மட்டும் சொல்லாமல், அங்கு இருக்கும் காலச்சூழ்நிலையையும் சுட்டிக் காட்டுகிறான்.

சொர்க்கத்தில் கடுமையான குளிரும் இருக்காது; வாட்டி வதைக்கும் வெயிலும் இருக்காது. மாறாக, இரண்டும் சரியான விதத்தில் கலந்து இதமான காலநிலை நிலவும் என்றும், நரகத்தில் குளிர், குளுமை என்ற பேச்சுக்கே இடமில்லை; அங்கு அனல்காற்று வீசிக்கொண்டேயிருக்கும்; நெருப்பாலான வேதனைகள் தயார் செய்யப்பட்டிருக்கும் என்றும் எடுத்துரைக்கிறான்.

அவர்கள் பொறுத்துக் கொண்டதால் சொர்க்கத்தையும், பட்டையும் பரிசாக அவர்களுக்கு வழங்கினான். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பார்கள். அங்கே சூரியனையும், கடும் குளிர்ச்சியையும் காண மாட்டார்கள்.

அல்குர்ஆன் 76:12, 13

வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் யுகம் யுகமாக தங்குவார்கள். அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள். கொதி நீரையும், சீழையும் தவிர.

இடதுபுறத்தில் இருப்பவர்கள்! இடது புறத்தில் இருப்போர் என்பது என்ன? அவர்கள் அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள். அதில் குளிர்ச்சியும் இல்லை. இனிமையும் இல்லை. இதற்கு முன் அவர்கள் சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்தனர். பெரும் பாவத்தில் பிடிவாதமாக இருந்தனர். “நாங்களும் முந்தைய எங்களின் முன்னோர்களும் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும் போது உயிர்ப்பிக்கப் படுவோமா?” என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

அல்குர்ஆன் 56:41-48

எனவே, நாம் நரகத்திலிருந்து தப்பித்து, சொர்க்கம் செல்ல வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்த உலக வாழ்க்கையில் மட்டுமல்ல! மறுமை வாழ்விலும் நமக்கு வரும் இன்ப துன்பங்களில் கால சூழ்நிலைக்கும் முக்கிய பங்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நரகத்தில் தள்ளும் காரியங்களை விட்டு விலகி சொர்க்கத்தில் சேர்க்கும் காரியங்களைக் கண்ணும் கருத்துமாகக் கடைபிடிக்க வேண்டும்.

இந்தப் பிரபஞ்சத்தில் எந்தவொன்றையும் வீணுக்காகவோ விளையாட்டுக்காகவோ அல்லாஹ் படைக்கவில்லை. ஒவ்வொன்றுக்குப் பின்னும் அவை அமைக்கப்பட்டதற்கான காரணம் இருக்கிறது. எனவே, குளிர்காலம் போன்ற பருவ மாற்றத்தின் போது அவற்றை இரசிப்பது, அப்போது நேரும் துன்பங்களிலிருந்து தப்பிக்கும் வழியைத் தேடுவது என்று மட்டும் இல்லாமல் அவற்றைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதன் மூலம் அழகிய போதனைகள் பெற்று நமது வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்வதற்கு அது வாய்ப்பாக அமையும். அவ்வாறு வாழ்ந்து ஈருலகிலும் வெற்றி பெறுவதற்கு அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!