கொள்கையா? கூட்டமா?

கொள்கையா? கூட்டமா?

தமிழகத்தில் தவ்ஹீதுப் பிரச்சாரம் 80களில் துவங்கி, பின்னர் அதற்காக ஓர் அமைப்பு உருவானது. இறுதியில் அது ஒரு தனி சமுதாயமாகப் பரிணமித்திருக்கின்றது. முன்னர் சில வருடங்களில் தனியாகப் பெருநாள் கொண்டாடினாலும் அதிகமான சந்தர்ப்பங்களில் தனியாகப் பெருநாள் கொண்டாடவில்லை.

சமீப காலங்களில் ஜாக் மற்றும் தமுமுகவினர் அதிகமான சந்தர்ப்பங்களில் நோன்பு மற்றும் பெருநாளை தனியாகக் கொண்டாடினர்.

நம்மை நோக்கி ஜாக்கினர், “இவர்கள் கூட்டம் சேர்ப்பதற்காக குராபிகளுடன் ஒத்துப் போகிறார்கள்’ என்று விமர்சித்தனர்.

கூட்டம் கூட்டுவதற்காக, வசூலை அள்ளிக் கொட்டுவதற்காக இவர்கள் சு.ஜ.வுடன் சேர்ந்து பெருநாள் கொண்டாடுகிறார்கள் என்று விமர்சனம் செய்வதற்கு அருகதையற்ற சுனாமித் திருடர்களும் விமர்சனம் செய்தனர்.

சு.ஜ. கூட்டத்தை வைத்துத் தான் தவ்ஹீத் ஜமாஅத் இதுவரை படம் காட்டியது. தனியாக நின்றால் இவர்களின் சாயம் வெளுத்து விடும் என்று நந்தினி நாயகர்களும் தங்கள் பங்குக்கு விமர்சனம் செய்தனர்.

கூட்டத்திற்காகக் கொள்கை காணும் சந்தர்ப்பவாத நாடகக் கூட்டம் என்று நம்மைப் பற்றி இவர்கள் எண்ணிக் கொண்டனர். இது கொள்கைக்காக உள்ள இயக்கம் என்பதை இவர்கள் மறந்து விட்டனர். இந்த இயக்கத்திற்கு எண்ணிக்கை ஒரு பொருட்டே கிடையாது. லட்சியம் தான் அதன் இலக்கும் எல்லையும் ஆகும். கூட்டம் ஒரு பொருட்டே கிடையாது. கொள்கை தான் இதன் உயிர் மூச்சாகும். அதைத் தான் இந்தப் பெருநாள் நிரூபித்துக் காட்டியது.

இந்த இயக்கம் பிறை விஷயத்தில் இறையச்சத்தைப் பார்த்தது. நிறையப் பேர் எதில் இருக்கிறார்கள் என்ற பெரும்பான்மையைப் பார்க்கவில்லை.

பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை.

(அல்குர்ஆன் 6:116)

இந்த வசனத்தின் அடிப்படையில் பெரும்பான்மையைத் தூக்கி எறிந்து விட்டு, தூதருக்குத் தான் கட்டுப்பட்டது. பழிப்பவரின் பழிப்புக்கு அஞ்சாமல் அல்லாஹ்வுக்கே அஞ்சியது.

நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏக இறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன் 5:54)

குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக ஒரு செயலைச் செய்யும் போது அதற்கு யாராலும் பதில் சொல்ல முடியாது. காரணம் பதில் இருக்காது.

இதுவரை எந்த நடைமுறையைப் பின்பற்றினீர்கள்? சென்ற நோன்புப் பெருநாளில் பிற மாநிலப் பிறையை ஏன் ஏற்கவில்லை? முந்தி வந்தால் மட்டும் ஏற்பீர்கள்; பிந்தி வந்தால் வந்தால் ஏற்க மாட்டீர்களா? என்ற கேள்விகளுக்கு டவுண் காஜியும் பதில் அளிக்க முடியவில்லை. உல(க)மாக்கள் சபையாலும் விடையளிக்க முடியவில்லை.

இந்தக் கேள்விக் கணைகளுக்கு விடையாகத் தான் மடை திறந்த வெள்ளமாய் இந்தப் பெருநாளில் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய தொழுகைகளில் மக்கள் வந்து இறங்கினர். அந்தத் திடல்களைக் கடல்களாக்கினர்.

“இதுவே எனது பாதை. நானும், என்னைப் பின்பற்றியோரும் தெளிவான விளக்கத்தில் இருந்து கொண்டு அல்லாஹ்வை நோக்கி அழைக்கிறோம். அல்லாஹ் தூயவன். நான் இணை கற்பிப்பவன் அல்லன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!  (அல்குர்ஆன் 12:108)

அல்லாஹ் சொல்வது போன்று எங்கள் பாதையில் தெளிவிருக்கின்றது; அதனால் துணிவிருக்கின்றது. தொய்வின்றி எங்கள் பயணம் தொடர்கின்றது. வெற்றி கொள்கைக்காகத் தான்! கூட்டத்திற்கு அல்ல!

நம்மை விமர்சிக்கும் இவர்களுக்குக் கூட்டத்தின் மீது தான் நாட்டம். கொள்கை இல்லை. அதனால் கூட்டம் அவர்களிடம் இல்லை. வெறும் கூடாரம் மட்டும் தான் இருக்கின்றது.

எங்களுக்குக் கொள்கையில் மட்டும் தான் நாட்டம். கூட்டத்தைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் கூட்டம் எங்களுக்கு வருகின்றது. இது அல்லாஹ்வின் வேலை.