கொள்கை உறவே வேராகட்டும்! குருதி உறவு வேறாகட்டும்!

மாநாடு நமக்கு விடுக்கப் போகும் செய்தி:

கொள்கை உறவே வேராகட்டும்!

குருதி உறவு வேறாகட்டும்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் ஏகத்துவத்தை எடுத்துச் சொன்ன போது அது மதீனா மக்களையும் ஈர்த்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதி மொழி கொடுத்த (மதீனாவின்) தலைவர்களில் நானும் ஒருவனாவேன்.

நாங்கள் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்க மாட்டோம் என்றும், திருட  மாட்டோம் என்றும், விபச்சாரம் புரிய மாட்டோம் என்றும், அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள (மனித) உயிரை நியாயமின்றிக் கொல்ல மாட்டோம் என்றும், நாங்கள் (பிறர் பொருளை) அபகரிக்க மாட்டோம் என்றும், இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றினால் (எங்களுக்கு) சொர்க்கம் உண்டு என நாங்களாகத் தீர்ப்பளித்துக் கொள்ள மாட்டோம்;  (இறைவனிடமே ஒப்படைத்து விடுவோம்) என்றும், இக்குற்றங்களில் எதையேனும் நாங்கள் செய்து விட்டால் அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே உண்டு என்றும் நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தோம்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)

நூல்: புகாரி 3893

ரசூல் (ஸல்) அவர்களையும், ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக் கொண்ட மற்ற மக்களையும் மக்கா துரத்தியடித்த போது அவர்களை மதீனாவின் அன்சாரித் தோழர்கள் அப்படியே அரவணைத்துக் கொண்டார்கள்.

இவ்வாறு அவர்கள் ஆதரவுக் கரம் நீட்டியது உலக ஆதாயத்திற்காக அல்ல!

எந்த மறுமை ஆதாயத்திற்காக, எந்தச் சுவனம் என்ற ஆதாயத்திற்காக இஸ்லாத்தை ஏற்றார்களோ, அதே ஆதாயத்திற்காகத் தான், மக்காவிலிருந்து வந்த அகதிகளுக்கு ஆதரவளித்தார்கள்.

இது அவர்களிடம் எவ்வளவு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது என்று பார்ப்போம்.

அன்சாரிகளின் தாராள மனம்

முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு வந்த போது அவர்களின் கையில் (செல்வம்) எதுவும் இருக்கவில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துக்களையும் வைத்திருந்தனர்.

ஒவ்வோர் ஆண்டும் தங்கள் சொத்துக்களின் விளைச்சல்களை அவர்களுக்கு (குறிப்பிட்ட விகிதத்தில்) கொடுப்பதாகவும் “எங்களுக்குப் பதிலாக நீங்கள் அதில் சிரமப்பட்டு உழைக்க வேண்டும்‘ என்ற நிபந்தனையின் பேரிலும் அவற்றை முஹாஜிர்களுக்கு (குத்தகை நிலங்களாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள்.

எனது தாயார் உம்மு சுலைம் அவர்கள் (என் தாய்வழிச் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீ தல்ஹாவின் தாயாராகவும் இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்பாகக்) கொடுத்திருந்தார்கள். அவற்றை நபி (ஸல்) அவர்கள் தமது அடிமைப் பெண்ணான, உஸாமா பின் ஸைதுடைய தாயார் உம்மு அய்மனுக்கு (அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.

கைபர்வாசிகள் மீது போர் தொடுத்து முடித்து, மதீனாவுக்குத் திரும்பிய போது முஹாஜிர்கள், இரவலாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்சாரிகள் அன்பளிப்புச் செய்த பேரீச்சந் தோட்டங்களை அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களும் என் தாயாரிடம் அவருடைய பேரீச்ச மரங்களைத் திருப்பித் தந்து விட்டார்கள்.  அவற்றுக்குப் பதிலாக, உம்மு அய்மன் அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மா-க்  (ரலி)

நூல்: புகாரி 2630

இவ்வாறு மதீனாவாசிகள் அள்ளிக் கொடுத்த போதும், மக்கத்து முஹாஜிர்கள் அதைத் தானமாக ஏற்க மறுத்து தங்கள் கண்ணியத்தை நிலைநிறுத்தினார்கள்.

(மதீனா வாசிகளான) அன்சாரித் தோழர்கள், நபி (ஸல்) அவர்களிடம், “எங்களுக்கும் (மக்கா நகரிலிருந்து வந்த) எங்கள் (முஹாஜிர்) சகோதரர்களுக்குமிடையே எங்கள் பேரீச்ச மரங்களைப் பங்கிட்டு விடுங்கள்” என்றனர். அதற்கு அண்ணலார், “வேண்டாம்” என்று கூறி விட்டார்கள். இதனைக் கேட்ட அன்சாரித் தோழர்கள், முஹாஜிர் சகோதரர்களை நோக்கி, “அப்படியென்றால், எங்கள் தோட்டத்தை எங்களுக்குப் பதிலாக நீங்கள் பராமரித்து வாருங்கள். நாங்கள் உங்களுடன் அதன் வருமானத்தில் பங்கு பெற்றுக் கொள்கின்றோம்” என்று கூறினர். அதற்கு முஹாஜிர்கள், “செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம் (அவ்வாறே செய்கிறோம்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2325

உடுத்திய ஆடையுடன் வெறும் கையோடு வந்த மக்களுக்கு, தங்களிடம் உள்ள சொத்துக்களைப் பங்கு வைத்துக் கொடுக்கின்றனர். கொள்கை உறவு அவர்களிடத்தில் குருதி உறவை விட மிஞ்சி நிற்கின்றது.

இப்படியொரு சகோதர வாஞ்சையுடன் நடந்து கொண்ட அம்மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் உட்பட அனைவரும் மிகக் கண்ணியத்துடன் நடந்து கொண்டதைப் பார்க்கிறோம். அன்சாரிகளிடம் பெற்ற உதவிகளை, தங்களுக்கு வசதி கிடைத்ததும் திரும்ப அளித்ததை மேற்கண்ட ஹதீஸில் பார்க்கிறோம்.

மனைவியரை மணக்கச் சொல்லும் மனப்பாங்கு

முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்த போது நபி (ஸல்) அவர்கள் என்னையும் சஅத் பின் ரபீஉ (ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சஅத் (ரலி), “நான் அன்ஸாரிகளில் அதிகச் செல்வமுடையவன்; எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என் இரு மனைவியரில் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! அவரை உமக்காக விவாகரத்துச் செய்கிறேன். அவரது இத்தா முடிந்ததும் அவரை உமக்கு மணம் முடித்துத் தருகிறேன்!” எனக் கூறினார். அப்போது நான், “இது எனக்குத் தேவையில்லை! வியாபாரம் நடைபெறுகின்ற கடை வீதி ஏதும் (இங்கு) இருக்கிறதா?” எனக் கேட்டேன். அவர், “கைனுகா எனும் கடை வீதி இருக்கிறது!” என்றார். நான் அங்கே சென்று பாலாடைக் கட்டியையும் நெய்யையும் (லாபமாகக்) கொண்டு வந்தேன். மறு நாளும் தொடர்ந்து சென்றேன்.

சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி (ஸல்) அவர்கள், “நீ மணமுடித்து விட்டாயா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்!” என்றேன். “யாரை?” என்றார்கள். “ஓர் அன்ஸாரிப் பெண்ணை!” என்றேன். “எவ்வளவு மஹ்ர் (மணக்கொடை) கொடுத்தாய்?” என்று கேட்டார்கள். “ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்!” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பாயாக!” என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)

நூல்: புகாரி 2048

இப்படி ஓர் இறுக்கமான இணைப்பை அவர்களுக்குக் கொடுத்தது எது? இந்த ஏகத்துவம் தான். இது நாளடைவில் வலுத்து வலுத்து, தங்களது சொத்துக்களைத் தங்களின் உறவினர்களுக்குக் கொடுக்காமல் அகதிகளாக வந்த மக்கத்துச் சகோதரர்களுக்குக் கொடுக்க முன் வந்தனர். அப்போது தான் அல்லாஹ் குறுக்கிட்டு, இரத்த பந்தங்களுக்குச் சொத்தைக் கொடுக்க வேண்டும் என்று கட்டளை இடுகின்றான்.

பெற்றோர்களும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் வாரிசுகளை ஏற்படுத்தியுள்ளோம். நீங்கள் (திருமண) உடன்படிக்கை எடுத்தோருக்கும் அவர்களது பங்கைக் கொடுத்து விடுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:33

மனித குல வரலாற்றில் இப்படி ஓர் இணக்கம், பாசம், இரத்த பந்தத்தை மிஞ்சிய இலட்சிய பந்தம் எப்படி உருவெடுத்தது? ஏகத்துவம் என்ற கொள்கையினால் தான்.

தனிப் பங்கீட்டை மறுத்த அன்சாரிகள்

நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு, பஹ்ரைனுடைய நிலங்களை வருவாய் மானியமாக வழங்கிட அவர்களை அழைத்தார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அப்படி நீங்கள் (எங்களுக்கு) வருவாய் மானியம் வழங்குவதாயிருந்தால் எங்களுடைய குறைஷிச் சகோதரர்களுக்கும் அதே போன்று எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டார்கள். ஆனால், (அனைவருக்கும் வருவாய் மானியம் தருகின்ற அளவுக்கு) மானிய நிலங்கள் (அல்லது நிலவரி மூலமாகக் கிடைக்கும் நிதிகள்) நபி (ஸல்) அவர்களிடம் இருக்கவில்லை. ஆகவே, நபி (ஸல்) அவர்கள், “எனக்குப் பின்னால் சுயநலப் போக்கை நீங்கள் பார்ப்பீர்கள். ஆகவே, என்னை (மறுமையில்) நீங்கள் சந்திக்கும் வரை பொறுமையைக் கைக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 2377

உண்மையில் இந்தப் பந்தம் ஈமானிய பந்தம்! இந்தச் சொந்தம் ஒரு கொள்கைச் சொந்தம்! இதை ஏற்படுத்துவது சத்திய ஏகத்துவம்!

தங்களுக்கின்றி உதவும் தயாள குணம்

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து “எனக்கு (பசியினால்) துன்பம் ஏற்பட்டுள்ளது, அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு வரச் சொன்)னார்கள். அவர்களிடம் ஏதும் இருக்கவில்லை.

அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), “இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் ஆள் உண்டா? அவருக்கு அல்லாஹ்  அருள் புரிவான்” என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “நான் (இவருக்கு விருந்தளிக்கிறேன்), அல்லாஹ்வின் தூதரே!” என்று சொல்- (அவரை அழைத்துக் கொண்டு) தம் வீட்டாரிடம் சென்று தம் துணைவியாரை நோக்கி, “(இவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விருந்தாளி. (இவருக்குத் தராமல்) எதனையும் நீ சேமித்து வைத்துக் கொள்ளாதே!” என்று சொன்னார்.

அதற்கு அவர் மனைவி, “அல்லாஹ்வின் மீதாணையாக! நம் குழந்தைகளின் உணவைத் தவிர என்னிடம் வேறெதுவுமில்லை” என்று பதிலளித்தார். அவர், “குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்கச் செய்துவிடு! பிறகு நீ வந்து, (வீட்டில் இருக்கும் உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு, விளக்கை ஏற்றி விடுவது போல் பாவனை செய்து) விளக்கை அணைத்து விடு! (இருப்பதை விருந்தாளிக்குக் கொடுத்து விட்டு) இன்றிரவு நாம் வயிற்றைச் சுருக்கிக் கொள்வோம்” என்று சொன்னார். அவ்வாறே அவர் (மனைவி) செய்தார்.

பிறகு, (விருந்தளித்த) அம்மனிதர் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, நபி (ஸல்) அவர்கள், “இன்னார் இன்னாரை (உங்கள் இருவரையும்) கண்டு மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் “வியப்படைந்தான்’ அல்லது (மகிழ்ச்சியால்) “சிரித்துக் கொண்டான்’ என்று சொன்னார்கள்.

அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், “தமக்கே தேவை இருந்தும் கூட தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள்…” எனும் (59:9வது) வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4889

இந்த மனப் பக்குவத்தைத் தந்தது எது? ஏகத்துவக் கொள்கை தான். அதைத் தான் அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.

அல்குர்ஆன் 3:103

இப்படி ஓர் ஒற்றுமையா? என்று உலகமே உற்று நோக்கும் வண்ணம் வாழ்ந்த அந்த நபித்தோழர்கள் வாழ்விலும் ஒரு சில நெருடல்கள், உரசல்கள் நிகழாமல் இல்லை. ஆனால் அதையும் அன்சாரிகள் சரி செய்து கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மீது அன்சாரிகளின் வருத்தம்

தங்களை விட மக்கத்து அகதிகளை அரவணைத்து நின்ற அன்சாரிகள், ஒரு கட்டத்தில் அகதிகளான நபி (ஸல்) அவர்கள் மீதும், மக்கத்து நபித்தோழர்கள் மீதும் வருத்தம் அடைகிறார்கள்.

இதையறிந்த நபி (ஸல்) அவர்கள் அனைத்து அன்சாரிகளையும் ஓரிடத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்கள்.

அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹவாஸின் குலத்தாரின் செல்வத்தை (வெற்றிப் பரிசாக) அளித்த போது நபி (ஸல்) அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) மக்களுக்கு நூறு ஒட்டகங்களை கொடுக்கலானார்கள். உடனே, (அன்சாரிகளில்) சிலர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! (எதிரிகளான) குறைஷிகளின் இரத்தம் நம் வாட்களில் சொட்டிக் கொண்டிருக்க, (நமக்குக் கொடுக்காமல்) இவர்களுக்குக் கொடுக்கிறார்களே! ஆனால், (தியாகங்கள் பல புரிந்த) நம்மை விட்டு விடுகின்றார்களே!” என்று (கவலையுடன்) சொன்னார்கள்.

அவர்களின் இந்தப் பேச்சு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு ஆளனுப்பி அவர்களைப் பதனிடப்பட்ட தோலால் ஆன ஒரு கூடாரத்தில் ஒன்று திரட்டினார்கள். அவர்களுடன் மற்றவர்களை நபி (ஸல்) அவர்கள் அழைக்கவில்லை.

அவர்கள் ஒன்று கூடியதும் நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, “உங்களைக் குறித்து எனக்கு எட்டியுள்ள செய்தி என்ன? (உண்மை தானா?)” என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகளிலிருந்த விவரமானவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் தலைவர்கள் எதுவும் சொல்லவில்லை. எங்களில் இள வயதுடைய மக்கள் சிலர் தான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! நம்முடைய வாட்களில் குறைஷிகளின் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்க, நம்மை விட்டு விட்டு அவர்களுக்குக் கொடுக்கிறார்களே!’ என்று பேசிக் கொண்டனர்” என்று கூறினார்கள்.

அப்போது, நபி (ஸல்) அவர்கள், “இறை மறுப்பை விட்டு இப்போது தான் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சிலருக்கு நான் கொடுக்கிறேன். (அதன் வாயிலாக) அவர்களுடன் நான் இணக்கம் ஏற்படுத்திக் கொள்கிறேன். மக்கள் (பிற உலக) செல்வங்களை எடுத்துக் கொண்டு செல்ல, நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைத் தூதரையே கொண்டு செல்வதை விரும்பவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் பெற்றுத் திரும்பும் செல்வங்களை விட நீங்கள் பெற்றுத் திரும்புவதே சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.

அன்சாரிகள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (எங்களுடன் உங்களைக் கொண்டு செல்வதையே) விரும்புகிறோம்” என்று கூறினார்கள்.

அப்போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “விரைவில் சுயநலப் போக்கைக் காண்பீர்கள். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (மறுமையில்) சந்திக்கும் வரை பொறுமையாயிருங்கள். ஏனெனில், அன்று நான் (எனக்கு வழங்கப்படவுள்ள சிறப்புப் பரிசான “அல் கவ்ஸர்’ எனும்) தடாகத்தின் அருகே இருப்பேன்” என்று சொன்னார்கள். ஆனால், மக்கள் பொறுமையாக இருக்கவில்லை.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 4331

அன்சாரிகள் எந்தச் சுவனத்தைக் கொண்டு ஈமான் கொண்டார்களோ அந்தச் சுவனத்தையே நபி (ஸல்) அவர்கள் இங்கு நினைவூட்டுகிறார்கள்.

“வீட்டுக்கு நபியைக் கொண்டு செல்கிறீர்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதன் கருத்து, அன்சாரிகள் தம்முடன் சொர்க்கத்தில் இருப்பார்கள் என்பது தான்.

“நபி (ஸல்) அவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்டு அன்சாரிகள் தங்கள் தாடி நனைகின்ற அளவுக்கு அழுதார்கள்” என்று அஹ்மத் 11305வது ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

மறுமை மீது கொண்டிருந்த நம்பிக்கை, ஏகத்துவக் கொள்கை முஹாஜிர்கள் – அன்சாரிகள் உறவில் கடுகளவு கூடப் பிரிவினை ஏற்படாமல் தடுத்தது. நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகும் பிரியாமல் தடுத்துக் காத்தது.

நபி (ஸல்) அவர்கள் இறந்ததும், யார் ஆட்சி செலுத்துவது? என்ற பிரச்சனை எழுகின்றது.

மண்ணின் மைந்தர்கள் நாங்கள் தான்; எனவே நாங்கள் தான் ஆட்சி செய்வோம் என்று அன்சாரிகள் ஆட்சிக்கு உரிமை கொண்டாடி இருக்கலாம். அவ்வாறு அவர்கள் உரிமை கொண்டாடியிருந்தால் அது இஸ்லாமிய சாம்ராஜ்யத்தைச் சிதைத்திருக்கும். இங்கு நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகும் பிரியாமல், உடையாமல் காத்து நின்றது இந்த ஏகத்துவம் தான்.

உறவை வளர்க்க உதவிய திருமணங்கள்

மக்காவில் உள்ள மக்களுக்கும், மதீனாவில் உள்ள மக்களுக்கும் இப்படி ஒரு பிரிக்க முடியாத உறவை ஏற்படுத்தியது ஈமான் என்ற கொள்கை உறவு என்பதைக் கண்டோம்.  கொள்கை உறவே அவர்களிடம் குருதி உறவை விட மேலாக நின்றது என்று பார்த்தோம். இந்தக் கொள்கை உறவை மென்மேலும் வலுப்படுத்துவதற்கு நபி (ஸல்) அவர்கள் சில வழிமுறைகளைச் செயல்படுத்தினார்கள். அது தான் திருமண உறவுகள்!

நபி (ஸல்) அவர்கள் தமது மகள் ஃபாத்திமாவை அலீ (ரலி)க்கும், ருகைய்யா மற்றும் உம்மு குல்சூமை உஸ்மான் (ரலி)க்கும் கொடுக்கிறார்கள்.

அபூபக்ர் (ரலி) மகள் ஆயிஷா, உமர் (ரலி) மகள் ஹப்ஸா ஆகியோரை நபி (ஸல்) அவர்கள் மணம் முடிக்கிறார்கள்.

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் சம்பவத்தை (புகாரி 2048) மேலே கண்டோம். அதில் அவர்கள் ஓர் அன்சாரிப் பெண்ணைத் திருமணம் முடித்தார்கள் என்ற செய்தியும் இடம் பெற்றுள்ளது.

இப்படிச் சம்பந்தங்கள் செய்து உறவை வலுப்படுத்துகிறார்கள்.

இது போன்ற திருமண உறவுகளில் ஒரு சில கட்டங்களில் விரிசல்கள் ஏற்படலாம். மண விலக்குகளும் ஏற்படலாம்.

நபி (ஸல்) அவர்கள் குறைஷிக் குலத்தைச் சார்ந்த தமது அத்தை மகள் ஸைனபை, தமது வளர்ப்பு மகன் என்று கருதப்பட்ட ஸைதுக்குத் திருமணம் முடித்து வைத்தார்கள். ஆனால் அவ்விருவருக்கும் மத்தியில் மன ஒற்றுமை இல்லாததால் மண விலக்கு ஏற்படுகின்றது. இப்படி ஒன்றிரண்டு திருமணங்களில் மண விலக்குகள் ஏற்பட்டதால் அது கொள்கை உறவில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தி விடவில்லை.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், அடிமை என்று கருதப்பட்ட ஒருவரிடம் ஒரு திருமண சம்பந்தத்தை நபி (ஸல்) அவர்கள் செய்கின்றார்கள். உயர் குலத்தவர்கள், உயர் குலத்தாரிடம் தான் திருமண சம்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலையைத் தகர்த்தெறிந்தார்கள். கொள்கை உடையவர்கள் செல்வம், குடும்பம், கோத்திரம் என்று எதையும் பார்க்காமல் யாரையும் திருமணம் முடிக்கலாம் என்ற வரலாற்றை இதன் மூலம் தோற்றுவித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இது போன்று முன்மாதிரியைத் தோற்றுவித்து, திருமண உறவின் மூலம் கொள்கை உறவு பலப்படுவதற்கு வழிவகை செய்கிறார்கள். அதனால் தான் அவர்களது சகோதரத்துவ வாஞ்சை சரித்திரம் படைத்தது. சாவிலும் அவர்களது சகோதரத்துவம் சாகாது நின்றது.

யர்மூக் போர்க்களத்தில் இக்ரிமா (ரலி) வெட்டப்பட்டு, வீர மரணம் அடையும் தருவாயில் தண்ணீர் கேட்கிறார்கள். அவரிடம் தண்ணீர் கொண்டு வரப்பட்ட போது, இதே நிலையில் உள்ள அடுத்த தோழர் தண்ணீர் என்று கேட்கிறார். அவரிடம் தண்ணீரைக் கொடுத்து விடுமாறு இக்ரிமா (ரலி) கூறி விடுகின்றார். இரண்டாமவரிடம் தண்ணீர் கொடுக்கப்படும் போது மூன்றாமவர் தண்ணீர் என்று கேட்கிறார். உடனே இரண்டாமவர் மூன்றாவது நபரிடம் கொடுக்கச் சொல்கிறார். மூன்றாமவரிடம் தண்ணீர் குவளை வருவதற்குள்ளாக மூன்று பேருமே மரணத்தைத் தழுவி விடுகின்றார்கள்.

நூல்: தப்ஸீர் இப்னு கஸீர்

இவ்வாறு முஹாஜிர்கள், அன்சாரிகள் என்றில்லாமல் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் உள்ளத்தால் ஒன்றுபடக் காரணமாக அமைந்தது ஏகத்துவக் கொள்கை தான்.

இந்த ஏகத்துவக் கொள்கை தான் தமிழகம் மற்றும் அயலகத்தில் உள்ள நம் அனைவரையும் ஒன்று சேர்க்கவிருக்கின்றது.

இன்று ஷாபி, ஹனபி என்று சமுதாயம் பிரிந்து கிடந்து, இவ்விரு சாராரும் தங்களுக்குள் திருமண சம்பந்தம் செய்து கொள்வது கிடையாது.

ஒரு சில செல்வம் படைத்த ஊரார்கள், தங்களுக்கென்று ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டு, அவர்களுக்குள் மட்டுமே திருமண சம்பந்தம் செய்யும் நிலை இன்றும் தொடர்கின்றது.

உருது – தமிழ்

ஷாபி – ஹனபி

பணக்காரன் – ஏழை

உள்ளூர் – வெளியூர்

என்ற பாகுபாடுகள் நமக்கு மத்தியில் இனி கிடையாது. நாம் தவ்ஹீத் ஜமாஅத்! சத்தியத்தை ஏற்றுக் கொண்ட ஒரு சமுதாயம்! கொள்கை உறுதி மிக்க ஒரு சமுதாயம்!

நம்மில் யார் எங்கு தாக்கப்பட்டாலும், ஊர் நீக்கப்பட்டாலும் அவர் எந்த ஊர்க்காரர், உள்ளூரா? வெளியூரா? என்று பார்க்க மாட்டோம். அவருக்காகக் குரல் கொடுக்க, உரிமை காக்க, தோளோடு தோள் கொடுக்க எங்கிருந்தாலும் அவரை நோக்கிப் புறப்பட்டுச் செல்வோம்.

ஊரால் அவர் தூரத்தில் வாழ்ந்தாலும் கொள்கையில் அவர் அருகில் இருக்கிறார்.

இது போல் மொழியும் குறுக்கே வந்து நிற்காது. அவர் உருதுக்காரர், நான் தமிழன்; அதனால் அவரை நான் கண்டு கொள்ள மாட்டேன் என்ற நிலைமை இருக்காது.

எங்கள் உறவினர் என்ன தான் உறவால் நெருங்கியிருந்தாலும், அவர்களிடத்தில் கொள்கை இல்லையேல் திருமண சம்பந்தம் இல்லை. கொள்கைவாதிகள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், செல்வந்தராக இருந்தாலும் அவர்களுடன் மட்டுமே திருமண சம்பந்தம்!

தவ்ஹீது ஜமாஅத்தில் உள்ள எவரும் எந்த ஊரில் வறுமையில் வாடினாலும், கடனில் சிக்கித் தவித்தாலும் எங்களுக்குச் சக்தி இருக்குமானால் அவரைப் பொருளாதார ரிதீயில் காப்போம்.

இப்படிக் கொள்கை உறவுகளை வலுக்கச் செய்யவே இந்த ஏகத்துவ எழுச்சி மாநாடு!

இம்மாநாடு நமக்குத் தரவிருக்கின்ற செய்திகளில் சொல்லப்பட்டவை கொஞ்சம் தான். சொல்லப்படாத பயன்கள் இன்னும் ஏராளம் உள்ளன. கொள்கை உறவுகளை வலுப்படுத்தி, ஒன்றுபட்ட சமுதாயத்தைக் காண இன்ஷா அல்லாஹ் தஞ்சையில் ஒன்று கூடுவோம்.