காசு பணமா? கற்பு மானமா?

காசு பணமா? கற்பு மானமா?

படிப்பதற்கு முன்…

சமுதாயத்தில் நடைபெறும் அவலங்களைச் சுட்டிக் காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். இதில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள் அனைத்தும் உண்மையில் நடந்த நிகழ்வுகளாகும். சமுதாயத்தில் அனைத்துப் பெண்களும் இப்படித் தான் என்பது இதன் பொருளல்ல! மார்க்கத்தைப் பின்பற்றி, தங்கள் கற்பு நெறிகளைப் பாதுகாக்கும் பெண்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், சூழ்நிலை காரணமாக வழிதவறும் பெண்களைப் பற்றி எச்சரிப்பது மார்க்க அடிப்படையில் நமது கடமை என்பதற்காகவே இந்தக் கட்டுரை வெளியிடப்படுகின்றது.

காலம் காலமாக முஸ்லிம்கள் வெளிநாட்டில் போய் சம்பாதித்து வருகின்றனர். கடந்த காலத்தில் சிங்கப்பூர், மலேஷியா என்று பயணம் மேற்கொண்டனர். அப்படிப் பயணம் சென்றவர்கள் இரண்டாண்டுக்கு ஒரு முறை அல்லது ஓராண்டுக்கு ஒரு முறை வந்தாலும் ஆறு மாத காலம் விடுப்பில் வருவார்கள். இத்தகைய பயணங்களால் பெரும்பாலும் பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை. அரபு நாட்டுப் பயணம் துவங்கியது தான் தாமதம். பிரச்சனைகள், மடை திறந்த வெள்ளமாய் சமுதாயத்தை நோக்கிப் பாய ஆரம்பித்து விட்டன.

வளைகுடாப் பயணம் மேற்கொள்வோருக்குப் பெரும்பாலும் இரண்டாண்டுகளுக்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் அல்லது 40 நாட்கள் விடுமுறை தருகிறார்கள். சில கம்பெனிகளில் ஆண்டுக்கு ஒரு மாதம் விடுமுறை!

இவ்வளவு குறைந்த விடுமுறையில் வருகின்ற ஒருவர் திருமணம் முடித்து விட்டுச் செல்கின்றார். கணவனின் முகம் மனைவிக்கும், மனைவியின் முகம் கணவனுக்கும் நினைவில் நன்கு பதியாத இந்தக் குறைந்த அவகாசத்தில் மீண்டும் வெளிநாடு திரும்பி விடுகின்றார்.

அடுத்து அவர் ஊருக்குத் திரும்புவது இரண்டாண்டுகளுக்குப் பின்னர் தான். இதற்கிடையே இங்கே நடப்பது என்ன? அது தான் இரத்தத்தைக் கொதிக்க வைத்து இதயத்தை வெடிக்கச் செய்யும் அதிர்ச்சி நிகழ்வுகளாகும்.

குடும்பத்திலேயே குள்ள நரி

நம் நாட்டு வாழ்க்கை அமைப்பு முறை கூட்டுக் குடும்பமாகும். அண்ணன், தம்பிகள் எல்லோரும் ஒரே குடும்பமாக, ஒன்றாய் உண்டு ஒரே வீட்டில் வாழ்கின்றனர்.

அண்ணன் மனைவி தம்பியிடமோ, தம்பி மனைவி அண்ணனிடமோ பலியாகி விடுகின்றனர். கணவன் ஊரில் இருக்கும் போதே இந்த அபாயம் நடக்கின்றது எனும் போது கணவன் வெளிநாட்டில் இருந்தால் ஏற்படும் அபாயத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. கணவன் வீட்டிலே அல்லது மனைவியின் வீட்டிலே கூட இந்தப் பேராபத்தும் பெரு விபத்தும் நடைபெறுகின்றது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் மக்களிடம் இஸ்லாம் அதன் தூய வடிவில் வந்து சேரவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: புகாரி 5232

தவ்ஹீத் ஜமாஅத் வந்து தான் இந்த ஹதீஸை தயவு தாட்சண்யமின்றி போட்டு உடைத்துச் சொல்கின்றது. மார்க்கம் சொல்கின்ற இந்தத் தடுப்பு அரண் கணவன் ஊரில் உலவிக் கொண்டிருக்கும் போதே உடைத்து நொறுக்கப்பட்டு விபத்தும் விபரீதமும் ஏற்படுகின்றது. கணவன் வெளிநாடு சென்று விடுகிறான் எனும் போது ஷைத்தான் முழுமையாகப் புகுந்து விளையாடி விடுகின்றான். இப்படிக் குடும்பத்தில் விளையாடும் குள்ள நரிக்கு இப்பெண்கள் பலியாவது ஒரு ரகம்.

வேலி தாண்டும் வெள்ளாடு

குடும்பத்தில் நடக்கும் இந்தக் குழப்பம் புகைந்து, பற்றி எரிந்து விவாகரத்தில் போய் முடிகின்றது. அண்ணன், தம்பிக்கு மத்தியில் மாறாப் பகை, தீராப் பழி ஏற்பட்டு விடுகின்றது.

குடும்பத்தைத் தாண்டிச் சென்று சில பெண்கள், வேலி தாண்டும் வெள்ளாடாகவும் ஆகி விடுகின்றனர். இந்தக் கட்டத்தில் இப்பெண்கள் இஸ்லாத்தை விட்டே ஓடி விடுகின்றனர். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

வட்டிக்காரன்

பொதுவாக நம்முடைய சமுதாயத்தின் பலவீனத்தைப் பிற சமுதாயத்தவர்கள் நன்கு தெரிந்தே வைத்திருக்கின்றனர். வெளிநாட்டுக்குச் செல்கின்றவர்களின் குடும்பங்களை நன்கு நோட்டமிட்டு இரையைப் பார்த்து வட்டமிடுகின்ற கழுகாக கணக்குப் போட்டு தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

இதில் வட்டிக்கென்றே பெயர் பெற்ற ஒரு சமுதாயத்தினர் முதலிடம் வகிக்கின்றனர். இவர்களிடம் தான் நம்முடைய சமுதாய மக்கள் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு போய் வட்டிக்கு வாங்குகின்றனர். அதன் பின்னர் கணவன் பயணம் போய் விடுகின்றான். இங்கே இவனுடைய மனைவியிடம் வட்டிக்காரனின் புதிய பயணம் துவங்கி விடுகின்றது. கடனும் அடைத்தபாடில்லை. கள்ளத் தொடர்பும் முடிந்தபாடில்லை. இப்படியே கணவனுக்கு விவகாரம் தெரிய வர விவாகரத்தில் போய் முடிகின்றது.

பலி கொள்ளும் பால்காரன்

பொதுவாகவே பால்காரனின் பார்வைகள் பலான பலன் கிடைக்காதா என்ற ஏக்கப் பார்வைகள் தான். நெல்லை மாவட்டத்தில் ஓர் ஊரில் வெளிநாட்டில் இருக்கின்ற ஒருவரின் மனைவி பால்காரனிடம் வழிதவறுகின்றாள். 5 மணிக்குக் கொடுக்கும் வழக்கத்தை மாற்றி 7 மணிக்குப் பால் கொடுக்கின்றான்; பலனை அனுபவிக்கின்றான்.

மேய வருகின்ற மேஸ்திரி

இது பால்காரனின் பாலியல் விளையாட்டு என்றால் வீடு கட்டுவதற்குக் காண்டிராக்ட் எடுக்கின்ற கொத்தனார் மேஸ்திரியின் மேய்ச்சலை நினைத்தால் வயிறு எரிகின்றது.

இவனுக்கும் நமது சமுதாயப் பெண்களின் கற்பு கறிவேப்பிலையாகி விட்டது. இது போல் வீட்டிற்கு வருகின்ற பொற்கொல்லன், ஆசாரி என்று பட்டியலே நீள்கின்றது.

பிரச்சார ஆலிமின் விபச்சாரம்

சென்னை சைதாப்பேட்டையில் இருக்கும் ஒரு பிரச்சார ஆலிமின் பெயர் முஜீபுர்ரஹ்மான். இவனுடைய காமக் களியாட்டத்தைப் பாருங்கள்.

வெளிநாட்டில் இருக்கும் ஒரு சகோதரருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஒரு விரிசல்! இந்தச் சிறிய இடைவெளியில் இந்த ஆபாச ஆலிம்சா, சமாதானம் செய்கிறேன் என்ற சந்தடி சாக்கில் நுழைந்து விடுகிறான்.

சில துஆக்கள் மூலம் பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறேன் என்று சதி சரச வலையைப் பின்னுகிறான். ஆலிம் என்ற போர்வையில் கணவனிடம் பேசுகிறான். ஆலிம் என்றால் இந்தச் சமுதாயம் ஈமானையும் இழந்து விடும் அளவுக்கு நம்பும் அல்லவா? அது தான் இங்கு நடந்திருக்கின்றது. இவனும் அடிக்கடி வர ஆரம்பித்திருக்கிறான். போன் தொடர்பும் ஏற்பட்டுள்ளது. பிறகு விவகாரம் முற்றிப் போய் ஊர் முழுக்க நாற ஆரம்பித்திருக்கிறது.

கல்லூரி படிக்கின்ற வயது வந்த மகள், +2 படிக்கின்ற மகனுடன் அந்தப் பெண்ணைக் கடத்திக் கொண்டு ராஜபாளையம் என்ற ஊருக்கு வந்து விடுகின்றான். சைதை ஜமாஅத் கொந்தளித்துப் போய் ராஜபாளையம் வந்து, கையும் களவுமாகப் பிடித்து பிள்ளைகளைக் காப்பாற்றிச் செல்கின்றனர். மனைவி ராமநாதபுரத்தைச் சேர்ந்த வசதி படைத்த பெண். விவாகரத்துச் செய்யப்படுகின்றாள்.

வைப்புக்கு எதிராக வைஃப் போராட்டம்

விவகாரம் இத்துடன் நிற்கவில்லை. இந்த அயோக்கிய ஆலிம்சாவுக்கு ஆராம்பண்ணை என்ற இடத்தில் புரோகித வேலையும் கிடைக்கிறது. பொறுக்கிகளும் இமாமத் வேலை பார்க்கலாம் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. “நான் இருக்கும் போதே இவளை எப்படி இழுத்து வரலாம்’ என்று இவனது மனைவி போராடுகின்றாள்.

அன்றாடம் தன்னை அலைக்கழிக்கின்ற மனைவியை திட்டமிட்டே இந்த ஷைத்தான் ஒரு ஆசாரியுடன் போகச் சொல்கிறான். அவள் ஆசாரியுடன் சுற்ற ஆரம்பிக்கின்றாள். பூங்கா, ஹோட்டல்கள் என அவ்விருவரும் பொழுதுபோக்க ஆரம்பிக்கின்றனர். இந்தச் சமயத்தில் சமுதாயத்தின் சில இளைஞர்களிடம் இந்தக் கள்ள ஜோடியினர் சிக்கிய போது தான் காமுக ஆலிம்சாவின் கரை படிந்த வரலாறு தெரிய வருகின்றது.

கணவனின் வீட்டில் கள்ளக் காதலன்

இன்னொரு கணவன் வெளிநாட்டில் காலா காலம் சம்பாதித்து அவற்றைத் தனது மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளான். சம்பாதித்த பணத்தில் சொத்துக்களை வாங்கச் சொல்லியிருக்கிறான், மனைவியும் கணவன் வெளிநாட்டில் இருப்பதால் தனது பெயருக்கு வீடுகளை வாங்கியிருக்கிறாள்.

கணவன் அனுப்பிய பணத்தில் வாங்கிய வீட்டில் மின்வாரிய ஊழியர் ஒருவனை வாடகைக்கு வைத்துள்ளாள். அவனுடன் தொடர்பு ஏற்பட்டு, கணவன் ஊருக்கு வந்த சமயத்தில் நேரிலேயே அதைப் பார்த்து விட தற்போது விவாக ரத்தில் போய் முடிந்திருக்கிறது.

கணவனது பணத்தில் வாங்கிய நான்கு வீடுகள் மட்டுமின்றி, கணவனது பூர்வீக வீட்டிலும் இருந்து கொண்டு காலியாக மறுக்க தகராறு ஏற்பட்டு காவல்துறையில் வழக்கு பதிவாகியுள்ளது. இதில் வயதுக்கு வந்த மகன், தாயின் நடத்தை தெரிந்தே அவளுக்கு ஆதரவாக இருப்பது கொடுமையிலும் கொடுமை!

அப்பாவிக் கணவன் தனது வாழ்க்கையையும் இழந்து, சம்பாதித்த பொருளாதாரத்தையும் இழந்து, சொந்த வீட்டையும் இழந்து, தற்போது வழக்கிலும் சிக்கியுள்ளான்.

இன்னொருவர் வெளிநாட்டில் இருக்கும் போது அவரது மனைவி ஒரு மாற்று மதத்தவருடன் ஓடிப் போய் விட, வீட்டிலிருந்த அவளது ஒரு வயது கைக்குழந்தை தாயைப் பிரிந்த ஏக்கத்தில் மரணத்தைத் தழுவிய கொடுமையும் நடந்தேறியுள்ளது.

இதுவரை நீங்கள் பார்த்த பதிவுகள் நம்மை உணர்ச்சிப் பிழம்பாக ஆக்கியிருக்கும். நமது உடலில் ஓடுகின்ற உதிரம் மட்டுமல்ல! நம்முடைய மூச்சும் சூடாகின்றது.

ஆட்டோ, கார் ஓட்டுனர்கள், கண்டக்டர்கள், கணவன் அனுப்புகின்ற பணத்தைக் கை நீட்டி வாங்குவதற்காகச் செல்லும் வங்கியின் ஊழியர்கள் என நமது சமுதாயத்தின் கற்பு சூறையாடப்படுகின்றது.

இப்போது சிந்தியுங்கள். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன? வெளிநாட்டுப் பணம்! அதற்காக நமது பயணம்!

இந்தக் காசு பணத்திற்காகக் கற்பும் மானமும் காணாமல் போகின்றது. கண்ணை விற்றுச் சித்திரம் வாங்க வேண்டுமா? இதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் என்னென்ன?

  1. சமுதாய மானம் காற்றில் பறக்கின்றது.
  2. நல்ல பெண்களிடம் கூட விபச்சார சிந்தனை தோன்றி விடுகின்றது.
  3. பிற மதத்தவருடன் ஓடி இஸ்லாத்தை விட்டே வெளியேறி விடுதல்.
  4. வெளிநாட்டில் இருக்கும் சகோதரர்களின் பிள்ளைகளை மனைவி தான் வளர்க்கிறாள். தாயுடன் இருக்கும் அந்தக் குழந்தைகளின் நிலை என்ன? தாய் நல்லவளாக இருந்தால் பிள்ளைகளும் நல்லவர்களாக இருப்பார்கள். மேற்கண்ட சம்பவங்களில் பிள்ளைகள் தாய்க்கு ஆதரவாக இருந்ததை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் நம்முடைய தலைமுறையே தவறில் தொடருவதற்கு இந்த வெளிநாட்டுப் பயணம் காரணமாகி விடுகின்றது.

நாம் வெளிநாட்டில் இருந்தோம்; நமது மனைவி தவறி விட்டாள் என்று இதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அல்லாஹ் அவ்வாறு எடுத்துக் கொள்ள மாட்டான். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தம் குடிமக்கள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மக(னான குடும்பத் தலைவ)னும் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியே! அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் (-மனைவி-), தன் கணவரது வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளுடைய பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாளர் தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 893, 2409

இந்த ஹதீஸின் அடிப்படையில் நமது மனைவி, மக்கள் தவறு செய்தாலும் அதற்குப் பொறுப்பான நாம் மறுமையில் மாட்டிக் கொள்வோம். அந்த விசாரணையிலிருந்து நாம் தப்ப முடியாது. அதிலும் மதம் மாறுதல் என்பது சாதாரண பாவம் கிடையாது.

நம்பிக்கை கொண்டு, பின்னர் (ஏக இறைவனை) மறுத்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பின்னர் மறுத்து, பிறகு (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. அவர்களுக்கு வழி காட்டுபவனாகவும் இல்லை. (அல்குர்ஆன் 4:137)

இதற்கும் நாம் தான் பொறுப்பேற்க வேண்டும்.

அடுத்தது, நம்முடைய சந்ததிகள் கெடுவார்களானால் அதனால் ஏற்படும் தீமைகள், இறுதி நாள் வரை அதன் பங்கு நம்முடைய கணக்கில் சேர்ந்து கொண்டே இருக்கும்.

யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டுஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 1848

இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு முஸ்லிமுக்கு ரோஷம் வர வேண்டும்.

சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் என் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருப்பதைக் கண்டால், நான்கு சாட்சிகளைக் கொண்டு வரும்வரை நான் அவனைத் தொடக் கூடாதா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்என்றார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், “இல்லை; தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நானாக இருந்தால், அதற்கு முன்பே வாளால் அவனை வெட்டிவிடுவேன்என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் தலைவர் என்ன சொல்கிறார் கேளுங்கள்! அவர் ரோஷக்காரர். ஆனால், நான் அவரை விட ரோஷக்காரன்; அல்லாஹ் என்னை விட ரோஷக்காரன்என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 3000

இப்படி ஒரு ரோஷம் முஸ்லிம்களிடம் இருக்க வேண்டும்.

கண்ணியமும் மகிமையும் நிறைந்த அல்லாஹ், இறுதி நாளில் மூன்று பேர்களைப் பார்க்க மாட்டான். 1. தன் பெற்றோருக்கு மாறு செய்தவன். 2. ஆணைப் போல் காட்சியளிக்கும் பெண். 3. மனைவி விவகாரத்தில் ரோஷமில்லாதவன்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: பஸ்ஸார்

இந்த ரோஷத்தைத் தான் மார்க்கம் வலியுறுத்துகின்றது. மேற்கண்ட ஹதீஸ்களின் எச்சரிக்கையும், ரோஷமும் நமக்கு வந்து விட்டால், “கற்பை இழந்து விட்டுக் காசு பணம் தேவையில்லை; கற்புடன் கூழும் கஞ்சியும் போதும்’ என்ற முடிவுக்கு வந்து விடுவோம்.

சர்ச்சையாக்கப்படும் புர்கா

முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய பிரான்ஸ் அரசு தடை விதிக்க உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் பெண்கள் தமது உடலை மறைத்துக் கொள்வதற்கு எதிராக எந்தச் சட்டமும் இயற்ற முடியாது. ஆடைகளைக் குறைக்கவும், உடலை மறைக்கவும் ஜனநாயக நாடுகளில் பெண்களுக்கு உரிமை உள்ளது. பிரான்ஸிலும் இந்த உரிமை உண்டு. மக்களுக்கு உரிமை வழங்கப்படாத சர்வாதிகார நாடுகளில் தான் இது சாத்தியமாகும்.

முகம் மற்றும் முன் கை தவிர உடலின் மற்ற பகுதிகளைப் பெண்கள் மறைத்துக் கொள்வதற்கு எதிராக எந்தச் சட்டமும் இயற்ற முடியாது.

பெண்கள் முகத்திரை அணிந்து கொண்டு தங்களின் அடையாளத்தை மறைத்துக் கொண்டு செல்வதைத் தடை செய்யப் போவதாகத் தான் பிரான்ஸ் அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.

“முகத்திரை போட்டுக் கொள்வது மத அடையாளம் என்று ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளதிலிருந்து, இஸ்லாத்தில் இது இல்லை என்ற கருத்தைத் தான் கூறியுள்ளார். முகத்திரை போட்டுக் கொண்டு தமது அடையாளங்களை மறைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறியதிலிருந்து இதை அறியலாம்.

“முகம், முன் கைகள் தவிர மற்ற உறுப்புக்களை மறைத்துக் கொள்ள அனுமதி இல்லை’ என்று அவர் கூறியிருந்தால் அது இஸ்லாத்தின் மீதான தாக்குதல் என்று எடுத்துக் கொண்டு நாம் களமிறங்கிப் போராடியாக வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் இதை எதிர்க்காமல் இருப்பதே நல்லது.

ஏனெனில் முகத்திரை போட்டுக் கொள்ளுமாறு இஸ்லாம் பெண்களுக்குக் கட்டளையிடவில்லை.

இஸ்லாம் கூறாமல் மக்களாக உருவாக்கிக் கொண்ட இந்தப் பழக்கத்தினால் முஸ்லிம் சமுதாயத்துக்கு அதிகமதிகம் கேடுகள் ஏற்படுவதை பெரு நகரங்களில் வசிப்பவர்கள் அனுபவப்பூர்வமாக உணரலாம்.

பொதுவாகத் தன்னை மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள் என்ற காரணத்துக்காகவே மனிதன் ஒழுக்கமாக வாழ்கிறான். இறையச்சத்துடன் உள்ளவர்கள் இதில் விதிவிலக்கு.

தான் யார் என்று தெரியாவிட்டால் எந்தத் தவறு செய்வதற்கும் அது துணிவை அளித்து விடுகிறது. இது தான் யதார்த்தமான உண்மை. சொந்த ஊரில் நல்லவனாக இருப்பவன், தன்னை யாரும் அறிந்து கொள்ள முடியாத ஊரில் தவறுகள் செய்வதற்கும் அல்லது தவறுகள் செய்வதற்காக வெளியூர் செல்வதற்கும் இதுவே காரணம்.

ஒரு பெண் முகத்தை மறைத்துக் கொண்டால் அவள் யாரோடும் ஊர் சுற்றலாம். கணவனுடன் செல்கிறாள் என்று மக்கள் நினைத்துக் கொள்வார்கள் என்று நினைக்க இது வழி வகுத்துள்ளது.

சென்னை போன்ற நகரங்களில் கல்லூரி மாணவிகளில் பலர் இப்படி முகம் மறைத்துச் செய்யும் அநியாயம் கொஞ்சமல்ல.

முஸ்லிமல்லாத பெண்களும் தங்களின் ஆண் நண்பர்களுடன் சுற்றும் போது முகத்திரை போட்டு தம்மை மறைத்துக் கொள்கின்றனர். கிழக்குக் கடற்கரை சாலையில் முகத்திரை போட்டு, கண்டபடி சுற்றும் இளவட்டங்களில் பாதிப் பேர் முஸ்லிம்கள் அல்லர் என்பதே உண்மை.

அது போல் வேசித் தொழில் செய்யும் முஸ்லிமல்லாத பெண்களும் போலீஸ் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக முகத்திரை அணிந்து ஆண்களுக்கு வலை வீசுவதை நாம் காணலாம்.

சமூக விரோதச் செயலில் ஈடுபடும் ஆண்கள் கூட முகத்திரை அணிந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதை நாம் காண முடிகிறது.

முகத்தைப் பெண்கள் மறைக்க வேண்டும் என்ற தவறான கொள்கை உடைய சிலர் தான் இதை எதிர்க்கிறார்களே தவிர பிரான்ஸின் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் இதை எதிர்க்கவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதே சமயம், முகம், முன் கைகள் தவிர மற்ற பகுதிகளை பெண்கள் கட்டாயம் மறைத்தாக வேண்டும்.

இதற்கு எதிராக யாரேனும் பிரச்சாரம் செய்தாலோ, அல்லது சட்டம் இயற்றினாலோ அதை நாம் கண்டிப்பதுடன் அதற்குரிய விளக்கத்தையும் கொடுப்பது நமது கடமையாகும்.

ஹிஜாப் ஏன்?

பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்றே இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது ‘ஹிஜாப்’ என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.

முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் இதுவும் முக்கியமானதாகத் திகழ்கின்றது.

‘ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!’ என்று முற்போக்குவாதிகளும் அறிவு ஜீவிகளும் கூறுகின்றனர். எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் இந்தப் போலித் தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர்.

‘ஹிஜாப்’ என்பது உண்மையில் பெண்களைக் கவுரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.

இது பற்றி விளக்குவதற்கு முன்னால் இவர்களின் போலித்தனத்தையும் இவர்கள் தங்களின் கூற்றுக்குத் தாங்களே முரண்படுவதையும் இனம் காட்ட வேண்டியுள்ளது.

ஹிஜாபை எதிர்ப்பவர்களின் போலித் தனம்

ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எனவும், கூடுதல் சுமை எனவும் கூறுவோர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே சுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும். ஆனால் சமத்துவம் பேசும் அவர்கள் கூட அவ்வாறு அளிக்கத் தயாராக இல்லை.

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் சட்டை பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை நிக்கர் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். அதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை ஏதுமின்றி பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை. தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் இந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.

அது போல் நடுத்தர வர்க்கத்து, அல்லது மேல் மட்டத்து ஆடவன் ஒருவன் மேலாடை ஏதுமின்றி வெளியில் காட்சி தராவிட்டாலும் வீட்டிற்குள் குடும்பத்தினர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் இவ்வாறு இல்லா விட்டாலும் கடினமான வேலையின் போதும் கடுமையான கோடையின் போதும் இந்தக் கோலத்துடன் இருப்பதுண்டு. அதே வர்க்கத்துப் பெண்கள் இவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப் படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமின்றிக் குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில் கூட இந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது. ஏன் குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு காட்சி தர அனுமதிக்கப்படுவது கிடையாது. முற்போக்குவாதிகள் உட்பட எவருமே இதை அனுமதிக்க மாட்டார்கள்.

‘ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்து உள்ளனர்’ என்பதற்கு இந்தப் போக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

ஹிஜாபை விமர்சனம் செய்பவர்களிடம் நாம் கேட்கிறோம்; ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று? பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று? முழு அளவுக்கு இல்லையானாலும் ஓரளவுக்கு இவர்களும் ஹிஜாபை வற்புறுத்தவே செய்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.

ஏனெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு இருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.

பெண்களுக்குப் பாதுகாப்பு

இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம்.

ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப் பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இரு பாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.

பெண்களின் ரசனை இத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. இதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை.

ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும் கூட இதை அறியலாம்.

ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.

அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.

பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.

இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.

ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.

பெண்களைப் பார்த்து ஆண்கள் ரசிப்பது போலவே பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு இவ்வாதம் வலுவானதன்று

ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும் ஆண்கள் விரும்பாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.

இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.

அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர்.

ஹிஜாபைக் குறை கூறுவோர் இதைச் சிந்திப்பதில்லை.

பெண்ணுரிமை இயக்கங்களும், முற்போக்குவாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனர். ‘இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்; அரபு நாட்டுச் சட்டம் இங்கும் வேண்டும்’ என்றெல்லாம் கூறுகின்றனர்.

ஆனால் ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிக்கின்றனர்.

பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகளும் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும் ஆபாச சுவரொட்டிகளைக் கிழிப்பதையும், சாயம் பூசி மறைப்பதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது? பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள் மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா?

பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் ஏன்?

பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது; அதை அவளும் பார்க்கிறாள் எனும் போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும் கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?

பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் அவள் இப்படி ஆபாசமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் என்பதை இவர்கள் மறந்தது ஏனோ?

எனவே இவர்களது கூற்று இவர்களது செயல்களுக்கு முரணாகவே அமைந்துள்ளது. பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன.

இவ்விடத்தில் எழும் மற்றொரு சந்தேகத்தை விளக்கியாக வேண்டும்.

பெண்களின் முழு உடலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும் போது முகத்தையும், கைகளையும் கூட மறைத்துத் தானே ஆக வேண்டும் என்ற கேள்வி நியாயமானது தான். அதை விட நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் இந்த இரண்டு உறுப்புகளையும் மறைக்காமலிருக்கச் சலுகை வழங்கியிருக்கின்றது.

ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவே. பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்பு, பாதிக்கப்படும் என்று அஞ்சுவது தான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இது தான் காரணம்.

முகத்தையும் ஒரு பெண் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும் போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.

ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுய ரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லா விட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்ட வேண்டும்.

மேலும் முகத்தையும் மறைக்கக் கட்டளையிட்டால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத பெண்களும் கூட தவறு செய்யும் போது முகத்தை மறைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். அப்படியும் சில பகுதிகளில் நடப்பதை நம்மால் அறிய முடிகின்றது.

பெண்கள் மட்டுமின்றி தவறான செயல்களில் ஈடுபடும் ஆண்கள் கூட பெண்களைப் போல் முகம் மறைத்து பல தவறுகளைச் செய்யக் கூடிய நிலமையும் ஏற்படலாம்.

எனவே தான் பெண்களின் முகம் ரசிக்கத்தக்கதாக இருந்தும், மிக மோசமான விளைவுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகத் தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.

நபித்தோழியர் எவரும் தாங்கள் யார் என்று அடையாளம் தெரியாத வகையில் முகத்தை மறைத்துக் கொண்டதில்லை என்று வரலாற்று நூற்களில் காண்கிறோம்.

கொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபடக் கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக் கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும். இதனால் தான் மணிக்கட்டு வரை கைகளை மறைத்துக் கொண்டு மற்ற பகுதியை மட்டும் மறைக்காமலிருக்கலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கின்றது.

இதைத் தவிர மற்ற பாகங்கள் கண்டிப்பாக ஆண்களின் ஒழுக்கத்திற்குச் சவால் விடக் கூடியவை. அப்பாகங்களைத் திறந்து காட்டுவதால் எந்தப் பயனுமில்லை. அன்னியப் பெண்களைத் தடையின்றிப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான ஆசை கொண்டவர்களே பெண்களை அரை நிர்வாணத்துடனும் கால் நிர்வாணத்துடனும் நடைபோட அனுமதி கேட்கின்றனர்.

முகமும், கைகளும் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவது பெண்களின் முன்னேற்றத்துக்கு தடை எனக் கூறுவதும் ஏற்கக்கூடிய வாதமன்று.

இந்த நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர். ஆயினும் அவர்கள் பெரும் பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.

பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் இடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை. முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக் கொண்டிருப்பதில்லை.

ஆனால் ஆண்களை விடக் குறைவான அளவு பெண்கள் மறைப்பதைச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?

அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.

ஆண்கள் குறைவான அளவு மறைத்தாலும் கேடுகள் ஏற்படாது. அவ்வாறு இருந்தும் ஆண்கள் நிறைவாக ஆடை அணிந்து முன்னேறுகிறார்கள். குறைவான அளவு ஆடையால் அடுத்தவரைப் பாதிக்கும் உடலமைப்புக் கொண்ட பெண்கள் நேர் மாறாக நடப்பது தான் நமக்கு வியப்பாகவுள்ளது.

இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக் காட்ட வேண்டும். ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.

கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது.

இறையச்சத்தைப் பாழாக்கும் பஸ் பயணங்கள்

நபி (ஸல்) அவர்கள் பயணத்தைத் துவங்கும் போது இறையச்சத்தைக் கோரி பிரார்த்தனை புரிவார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை, “அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர்எனக் கூறுவார்கள். பின்னர் பின்வருமாறு கூறுவார்கள்:

ஸுப்ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன். அல்லாஹும்ம இன்னா நஸ்அலு(க்)க ஃபீ ஸஃபரினா ஹாதா அல்பிர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸஃபரனா ஹாதா வத்வி அன்னா புஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு ஃபிஸ்ஸஃபரி வல் கலீஃப(த்)து ஃபில் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸஃபரி வகாப தில் மன்ளரி வஸுயில் முன்கலபி ஃபில் மாலி வல் அஹ்லி

(பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)

நூல்: முஸ்லிம் 2392

இன்றைய பஸ் பயணங்கள் உண்மையில் இறையச்சமுள்ள ஆணையும் பெண்ணையும் நெளிய வைக்கின்றன. கொஞ்ச தூரப் பயணங்களின் போது விரச எண்ணத்தைத் தூண்டுகின்ற வீடியோ படங்கள், காமத்தைத் தாங்கிய பாடல் வரிகள் என நம்மை அல்லாஹ்வுடைய பயத்தை விட்டே விலகச் செய்து விடுகின்றன. இதில் நீண்ட தூரப் பயணத்தைக் குறிப்பிடவே தேவையில்லை.

டவுண் பஸ்கள் எப்போதுமே காலையில் பிதுங்கிப் பிதுங்கி நகரத்தில் கொண்டு வந்து மக்களைக் கொட்டுகின்றன. மாலையில் பிதுங்கப் பிதுங்கச் சென்று கிராமத்தில் வந்து மக்களைக் கொட்டுகின்றன. டவுன் பஸ்கள் என்றாலே சில சபலங்கள் உரசலுக்காகவே பயணம் மேற்கொள்கின்றனர்.

நடத்துனர்களின் நடத்தையும் நாரசமாகவே அமைகின்றன. இந்த உரசலுக்காகவே நடத்துனர் பணியில் சேர்ந்திருக்கலாமே என்று ஏக்கத்தில் மற்றவர்கள் பார்க்கின்றனர். எட்ட, கிட்ட பயணங்களில் நடத்துனரும், ஓட்டுனரும் அழகிய பெண்களை முன் இருக்கையில் வைத்துக் கொண்டு அழகைப் பருகிக் கொண்டே ஆனந்தப் பயணம் மேற்கொள்கின்றனர்.

ஆக மொத்தத்தில் ஒரு டவுண் பஸ் என்பது காம, காந்த அலைகளின் கந்தகப் பெட்டகமாகவே மிதந்து போகின்றது. இத்தகைய பஸ்களில் பயணம் மேற்கொள்ள இறையச்சமுள்ள ஆண்களே அஞ்சுகின்ற போது, பெண்கள் (எல்லா பெண்களும் அல்ல) கூனல் குறுகல் இன்றி, கூச்ச நாச்சமின்றி ஒய்யாரமாக பயணம் மேற்கொள்கின்றனர். எழுதுவதற்கு எழுதுகோல் கூசுகின்ற அளவுக்குத் தொடர்புகளின் பரிமாற்றத் தளங்களாகப் பேருந்துகள் அமைகின்றன. இது போன்ற பஸ் பயணங்களை கண்ணியமிக்க பெண்கள் தவிர்த்துக் கொள்வது தான் இறையச்சத்திற்கு உகந்ததாகும்.

இது போன்ற கட்டங்களில் கூட்ட நெரிசல் இல்லாத பேருந்தைத் தேர்வு செய்ய வேண்டும். அதற்கு முடியவில்லையெனில் கொஞ்சம் காசு பணம் போனால் பரவாயில்லை என்று ஆட்டோ அல்லது கார்களில் பயணம் செய்வது சிறந்ததாகும். அதே சமயம் ஆட்டோ அல்லது கார் ஓட்டுனரையும் நல்ல பண்புள்ள, ஒழுக்கமானவர்களாகத் தேர்வு செய்வது அவசியம்.