கல்விக் கடலா கஸ்ஸாலி?

கல்விக் கடலா கஸ்ஸாலி?

“வானத்தின் ரட்சகா! மக்களின் தலைவர் கஸ்ஸாலியின் உள்ளத்தை ஒளிரச் செய்தது போன்று இந்தப் புதியவனின் உள்ளத்தை ஒளிரச் செய்!”

காலை மாலையில் நடைபெறும் மக்தபுகள் முதல், பட்டமளிப்பு விழா நடக்கும் பெரிய மதரஸாக்களின் மாணவர்கள் வரை ஒரு பிரார்த்தனையாகப் பாடுகின்ற பாடல் வரிகள் தான் இவை.

அறிவுக் கடல், கல்விக் கடல் என்று இந்த ஆலிம்களால் மெச்சப்படுகின்றவர் கஸ்ஸாலி!

இவர் கல்விக் கடலா? என்பதைக் கீழ்க்காணும் அவரது நூற்களில் இடம் பெறும் பதிவுகளைப் பார்த்து முடிவு செய்வோம்.

மெஞ்ஞானிகள் (ரகசியம்) ஹகீகத் எனும் வானில் உயர்ந்து அங்கே சஞ்சரிக்கும் போது உலகிலே அவர்கள் ஒரே (அல்லாஹ்வான) ஒருவனைத் தவிர வேறு எதையுமே காணவில்லையென ஏகோபித்து, ஒருமித்துக் கூறுகின்றனர். எனினும் சிலருக்கு இந்நிலை தெள்ளத் தெளிவாக அறிவியல் ரீதியாகப் புலப்படும். (அவர்கள் இந்த இரகசியத்தால் குழம்பிப் போக மாட்டார்கள்). இன்னும் சிலருக்கோ அவர்கள் இதன் உச்ச இன்பத்தையே சுவைத்து விடுவார்கள். அப்படியானவர்கள் “எல்லாம் ஒன்றே’ எனும் ஓர்மையில் மூழ்கித் திளைத்து ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்து “வோறொன்று’ என்ற வார்த்தை – அதாவது பன்மை என்பதே அவர்களிடமிருந்து அடியோடு நீங்கி விடும். அவர்களின் விழிகளுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறொன்றும் புலப்படாது. அனைத்துமே அல்லாஹ்வாகவே தென்படும். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் ஒரு வகை போதையேற்பட்டதன் காரணத்தினாலேயே அவர்களில் சிலர் “நான்தான் அல்லாஹ்’ என்றும் வேறு சிலரோ “நானே அல்லாஹ். நான் தூய்மை மிக்கவன், வல்லமை மிக்கவன்’ என்றோ வேறு சிலர் “எனது ஜூப்பாவிலும் அல்லாஹ்வையன்றி வேறில்லை’ என்றோ கூறியிருக்கின்றார்கள்……

நூல்: மிஷ்காத்துல்அன்வார்

இதன் மூலம், காணும் பொருளெல்லாம் கடவுள் எனும் முஹ்யித்தீன் இப்னு அரபியின் வழிகெட்ட கொள்கையைத் தான் கஸ்ஸாலியும் கொண்டிருக்கிறார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

அபூதுராப் தக்ஷபீ சில சீடர்களைக் கண்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்து விடுவார். அவரைத் தன்னருகில் அழைத்து அவருக்கு நல்லறம் செய்வார். ஆனால் அந்தச் சீடர் இறை வணக்கத்திலும் இறை தியானத்திலும் திளைத்திருப்பார். ஒரு நாள் அபூதுராப் அது போன்ற ஒரு சீடரிடம், “நீ அபூயஸீத் அல்புஸ்தாமியைப் பார்த்தால் என்ன?” என்று கேட்டார். “எனக்கு அவரைப் பார்க்க நேரமில்லை” என்று சீடர் பதிலளித்தார். “நீ அபூயஸீத் அல்புஸ்தாமியைப் பார்த்தால் என்ன?” என்று அபூதுராப் திரும்பத் திரும்ப வலியுறுத்தவே அது அவரது கோபத்தைக் கிளறி விட்டது. “அபூயஸீத் அல்புஸ்தாமியைப் பார்த்து நான் என்ன கிழிக்க வேண்டியிருக்கிறது? நான் தான் அல்லாஹ்வைப் பார்த்து விட்டேன். அவன் அபூயஸீத் அல்புஸ்தாமியைப் பார்ப்பதற்குரிய அவசியம் இல்லாமல் ஆக்கி விட்டானே” என்று சீடர் கூறியதும் அபூதுராபுக்கு அது ஆத்திரத்தை ஏற்படுத்தி விட்டது.

அபூதுராப் கூறுகிறார்:

அவர் இவ்வாறு சொன்னதும் எனக்குக் கிளம்பி விட்டது. என்னை நான் கட்டுப்படுத்த முடியவில்லை. அவரை நோக்கி, “உனக்கு நாசம் உண்டாகட்டும். மகத்துவமும் கம்பீரமும் மிக்க அல்லாஹ்வûக் கண்டு நீ ஏமாறுகின்றாய். நீ அல்லாஹ்வை எழுபது தடவை பார்ப்பதை விட அபூயஸீத் அல்புஸ்தாமியை ஒரு தடவை பார்ப்பது உனக்கு மிகவும் பயனுடையதாகும்” என்று நான் அந்தச் சீடரிடம் சொன்னேன்.

இந்த வார்த்தையைக் கேட்டு அந்தச் சீடர் என்னை வெறுக்கலானார். “நீங்கள் எப்படி இவ்வாறு கூறுகின்றீர்கள்?” என்று என்னிடம் அவர் கேட்டார். “அல்லாஹ் தஆலா உன்னிடத்தில் உன்னளவுக்குத் தான் காட்சியளிப்பான். ஆனால் அபூயஸீத் அல்புஸ்தாமியிடம் அவர் அளவுக்குக் காட்சியளிப்பான் என்பதை நீ கவனிக்க வேண்டாமா?” என்று நான் பதிலளித்தேன்.

இதை விளங்கிய அவர் என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னார். நான் அவரை அழைத்துச் சென்று அவரும் நானும் ஒரு திட்டில் நின்றிருந்தோம்.

வன விலங்குகள் வாழ்கின்ற காட்டில் ஒதுங்கியிருக்கும் அவர், அங்கிருந்து புறப்பட்டு வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். எதிர்பார்த்தது போன்றே அவர் எங்களைத் தாண்டிச் சென்றார். அப்போது அவர் தன் முதுகின் மேல் ஒரு தோல் ஆடையைப் புரட்டிப் போட்டிருந்தார்.

நான் அந்த இளைஞரிடம், “இவர் தான் அபூயஸீத் அல்புஸ்தாமி” என்று தெரிவித்தேன். அந்தச் சீடர் அவரைப் பார்த்த மாத்திரத்தில் மயக்கம் போட்டுக் கீழே விழுந்து விட்டார். அவரை அசைத்துப் பார்த்தோம். அவர் இறந்தே போயிருந்தார். அவரை அடக்கம் செய்தோம்.

நான் அபூயஸீதிடம், “என்னுடைய தலைவரே! அவர் உங்களை நோக்கிப் பார்க்கத் தான் செய்தார். அந்தப் பார்வை அவரைப் பலி கொண்டு விட்டதே!” என்று கேட்டேன்.

“உண்மை அதுவல்ல! உங்களுடைய நண்பர் ஓர் உண்மையாளராக இருந்தார். அவருடைய உள்ளத்தில் ரகசிய ஞானம் குடிகொண்டிருந்தது. ஆனால் அது அவருக்கேற்ற தன்மையுடன் அவருக்கு உதயமாகவில்லை. அவர் நம்மைப் பார்த்ததுமே அவருடைய உள்ளத்தின் அகமிய ஞானம் வெளிப்பட்டது. அதை அவர் தாங்க முடியாதபடி நெருக்கடிக்கு உள்ளானார். காரணம் அவர் பலவீனமான பக்தர்; சீடர்! அதனால் தான் அவர் இறந்தே போய் விட்டார்” என்று அபூயஸீத் அல்புஸ்தாமி தெரிவித்தார்.

நூல்: இஹ்யாவு உலூமித்தீன்

இந்தச் சம்பவத்தில் தான் எத்தனை அபத்தங்களும் ஈமானுக்கு வேட்டு வைக்கின்ற விஷக் கருத்துக்களும் இடம் பெற்றிருக்கின்றன என்பதைச் சற்று பார்ப்போம்.

  1. அல்லாஹ்வைப் பார்ப்பது மறுமையில் தான் நடக்கும். இவ்வுலகில் நடக்காது என்று அல்லாஹ் திருக்குர்ஆன் தெளிவாகச் சொல்லி விட்டான். ஆனால் இந்தக் கதையில் அபூதுராபின் சீடர் அல்லாஹ்வைப் பார்த்ததாகக் கூறப்படுகின்றது.
  2. “அல்லாஹ்வைப் பார்த்து விட்டு ஏமாந்து விடாதே!’ என்று அபூதுராப் என்ற ஷைத்தான் சொல்வது!

ஒரு பேச்சுக்கு அல்லாஹ்வைப் பார்த்தார் என்று வைத்துக் கொள்வோம். பாக்கியம் பெற்றவராகத் தானே ஆவார். அவர் எப்படி ஏமாற்றத்திற்குரிவர் ஆவார்?

  1. எழுபது தடவை அல்லாஹ்வைப் பார்ப்பதை விட அபூயஸீத் அல்புஸ்தாமியைப் பார்ப்பவன் சிறந்தவன் என்று இந்த ஷைத்தான் கூறுவது! இங்கு அல்லாஹ்வை விட எழுபது மடங்கு அபூயஸீத் அல்புஸ்தாமி உயர்ந்தவன் என்ற கருத்து விதைக்கப்படுகின்றது. (நவூதுபில்லாஹ்)
  2. அபூயஸீத் என்ற ஷைத்தானைப் பார்த்த மாத்திரத்தில் அந்தச் சீடர் மயக்கமாகி இறந்து விடுதல்.

மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் பேரொளியைப் பார்த்து மயக்கமடைந்தது போன்று ஒரு தோற்றம் ஏற்படுத்தப்படுகின்றது.

அந்தச் சீடர் ஏற்கனவே அல்லாஹ்வைப் பார்த்தவர்(?). அப்போதெல்லாம் மயக்கம் ஏற்படாத அவருக்கு அபூயஸீத் அல்புஸ்தாமியைப் பார்த்தவுடன் மயக்கம் ஏற்படுகின்றது என்றால் அபூயஸீதை எந்த நிலையில் கொண்டு வைக்கின்றார்கள் என்று பாருங்கள்.

அபூயஸீத் அல்புஸ்தாமியை அல்லாஹ்வுக்கும் மேலாக வைத்து வழிபடுகின்ற இந்த அபூதுராபின் சம்பவத்தை, இந்தக் கப்ஸாவை தனது இஹ்யா உலூமித்தீன் என்ற நூலில் கஸ்ஸாலி பதிவு செய்திருக்கின்றார் என்றால் இவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த இலட்சணத்தில், “இஹ்யாவைப் படிக்காதவன் “அஹ்யா’ (உயிருள்ளவர்களின்) பட்டியலில் இல்லை” என்ற புகழாரம் வேறு! இந்தக் குஃப்ரான கருத்தைப் பதிவு செய்த கஸ்ஸாலிக்கு, கல்விக் கடல் என்ற பட்டமும் பாராட்டும் வேறு!

இவரது நூலில் பரவியும் விரவியும் கிடப்பது, மலிந்தும் குவிந்தும் கிடப்பது “அத்வைதம்’ என்ற கேடு கெட்ட கொள்கை தான். ஏகத்துவம் என்ற மரத்தை ஆணி வோரோடு கெல்லி எறிகின்ற நச்சுக் கொள்கையைப் பதிவு செய்கின்ற இவர் எப்படி இமாமாக இருக்கமுடியும்? அவர் எழுதிய நூற்கள் எப்படி இஸ்லாமியப் பாட நூல்களாக இருக்க முடியும்?

இந்தக் கண்ணோட்டத்தில் இறுதி நபித்துவ விளக்கப் பொதுக்கூட்டத்தில் விமர்சனம் செய்ததைத் தான் இந்த ஆலிம்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

மற்றவர்களை விமர்சித்தால் கூட இவர்கள் தாங்கிக் கொள்வார்கள். ஆனால் கஸ்ஸாலியை விமர்சனம் செய்தால் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். அதன் வெளிப்பாடு தான் ஸைபுத்தீன் ரஷாதியின் மறுப்புக் கூட்டம்.

அந்த மறுப்புக் கூட்டத்தில் கஸ்ஸாலி பற்றிய கேள்விக்குப் பதிலளிப்பதாகக் கூறி ஆரம்பித்த ஸைபுத்தீன் ரஷாதி சுமார் 20 நிமிடங்கள் கஸ்ஸாலியின் புகழ் பாடினார். மனிதனின் கருத்துக்களில் தவறு இருக்கலாம் என்று இதில் மட்டும் ஒப்புக் கொள்கின்றார். உண்மையில் கஸ்ஸாலி விஷயத்தில் இப்படி, மனிதன் என்ற அடிப்படையில் தவறுகள் இருந்தன என்று யாரும் எளிதில் நழுவி விட முடியாது என்பதை அவர் எழுதிய இஹ்யாவு உலூமித்தீன் என்ற நூலைப் படிப்பவர் யாரும் தெரிந்து கொள்ளலாம்.

காணும் பொருளெல்லாம் கடவுள் என்ற அத்வைதக் கொள்கை இந்த ஸைபுத்தீன் ரஷாதி கூறுவது போல் சாதாரண தவறல்ல. இஸ்லாத்தின் கடவுள் கொள்கையை, ஓரிறைக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைக்கின்ற ஒரு பெரிய பாவச் சொல்லாகும். அல்லாஹ் மன்னிக்காத குற்றமாகும். இதைத் தான் ஸைபுத்தீன் ஏதோ சட்ட விஷயத்தில் ஏற்படும் சிறிய பிழை போல் சித்தரிக்கின்றார்.

கஸ்ஸாலியைப் பற்றி ஸியர் அஃலாமின்னுபலா என்ற நூலில் ஹாபிழ் தஹபீ அவர்கள் புகழ்ந்த புகழ் மாலையை ஸைபுத்தீன் ரஷாதி கொஞ்ச நேரம் வாசித்துக் காட்டினார்.

யார் புகழ் மாலை சூட்டினால் என்ன?

யார் பாராட்டுப் பத்திரம் வழங்கினால் என்ன?

கஸ்ஸாலியின் நூல் கூறுவதென்ன? ஏகத்துவத்திற்கு நேர் எதிரான இறை மறுப்புக் கொள்கையான அத்வைதம். இந்தக் கொள்கையைப் பேசும் நூலைத் தூக்கி எறிவது தான் ஒரு சரியான முஸ்லிமின் நிலையாக இருக்க முடியும்? அதனை தவ்ஹீத் ஜமாஅத் நிலைநாட்டி வருகின்றது. தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தச் செயலைத் தான் ஸைபுத்தீன் ரஷாதி என்ற பொய்யர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இவர் எடுத்துக் காட்டிய அதே ஸியரு அஃலாமின்னுபலா நூலில் இஹ்யா உலூமித்தீனைப் பற்றிக் குறிப்பிடுகையில், “மொத்தத்தில் அதில் பொய்யான ஹதீஸ்களே இடம் பெற்றிருக்கின்றன” என்று கூறப்படுகின்றது.

ஒழுக்கங்கள், போலி நடைமுறைகள், தத்துவ ஞானிகளின் துறவு நிலைகள், சூபிஸத்தின் கொலை பீடங்கள் மட்டும் இல்லையென்றால் அதில் அதிக நன்மை இருக்கின்றது.

அல்லாஹ்விடம் பயனுள்ள கல்வியைக் கேட்போமாக! பயனுள்ள கல்வி என்றால் என்ன? அது குர்ஆனில் இறங்கியதாகும்.

அல்லாஹ்விடமிருந்து தடை வராத ரசூல் (ஸல்) அவர்களின் சொல்லும் செயலும் ஆகும்.

என்னுடைய நடைமுறையை வெறுப்பவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

என்னுடைய சகோதரனே! அல்லாஹ்வின் வேதத்தை ஆழ்ந்த கவனத்துடன் பற்றிப் பிடித்துக் கொள். புகாரி, முஸ்லிம், சுனன் நஸயீ, நவவீ இமாமின் ரியாளுஸ் ஸாலிஹீன், அவருடைய திக்ரு தொகுப்புகள் போன்றவற்றை முழுச் சிந்தனையுடன் பற்றிப் பிடித்துக் கொள்! நீ வெற்றி பெறலாம்.

தத்துவ ஞானிகளின் வறட்டுத் தத்துவங்கள், அவர்களின் வெற்று ஆன்மீகப் பயிற்சிப் பணிகள், பாதிரிகளின் பட்டினி தவம், தனிமை நாயகர்களின் உருப்படாத உளறல் பேச்சுக்களை நம்பி ஏமாந்து விடாதே என்று உன்னை நான் எச்சரிக்கின்றேன். அனைத்து நன்மையும் தூய, நேரிய மார்க்கத்தைப் பின்பற்றுவதில் தான் அடங்கியிருக்கின்றன. அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவோம்.

இறைவா! எங்களை நேரிய பாதையில் செலுத்துவாயாக!

இவ்வாறு ஸியரு அஃலாமின்னுபலாவில் ஹாபிழ் தஹபீ அவர்கள் கூறுகின்றார்கள்.

பொய்யர் ஸைபுத்தீன் இதையும் சேர்த்துப் படித்திருந்தால் கஸ்ஸாலியைப் பற்றிய தஹபீயின் முழு மதிப்பீடும் மக்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் இதைச் செய்யவில்லை. இவரும் இவரை அழைத்து வந்த மஜ்லிசுல் உலமாவினருக்கும் நோக்கமே கல்விக் கடல் (?) கஸ்ஸாலியைக் காப்பாற்றுவது தான். அதைத் தான் அவர்கள் செய்திருக்கிறார்கள். இந்தத் தூய மார்க்கத்தைக் காப்பாற்றுவது அவர்களின் நோக்கமல்ல!

கஸ்ஸாலியின் நூலிலிருந்து அவர் யார் என்பதை எடுத்துக் காட்டியிருக்கின்றோம். இதன் பின்னரும் அவரை இமாம் என்றும், அவருடைய ஞானத்தைப் போல் தனக்கும் வழங்க வேண்டும் என்றும் கூறுபவர்கள் கடைந்தெடுத்த வழிகேட்டில் தான் இருக்கின்றார்கள் என்பது தெளிவான ஒன்றாகும்.

ஸைபுத்தீன் உட்பட இந்த உலமா சபையினர் அனைவரும் பரேலவிய சிந்தனைவாதிகள். இவர்களுக்கு ஏகத்துவக் கொள்கை என்பதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. மக்கள் இவர்களுடைய வலையில் விழுந்து விடக் கூடாது என எச்சரிக்கை செய்கிறோம்.

கஸ்ஸாலியைப் பற்றி சில அறிஞர்கள் கூறும் போது, அவர் கடைசி நேரத்தில் திருந்தி விட்டார் என்ற வாதத்தை வைக்கின்றனர். கஸ்ஸாலி திருந்தியிருந்தால் அவரை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்.

ஆனால் அதே சமயம், அவர் திருந்தி ஏகத்துவக் கொள்கையை ஏற்றிருந்தால் அதை அவரே கூறியிருக்க வேண்டும். அவ்வாறு அவரிடமிருந்து அந்தக் கருத்து வராத வரை இந்த வாதத்தை நாம் ஏற்க முடியாது.

அவர் எழுதிய நூற்களை மேற்கோள் காட்டியே அவரது கொள்கை தவறு என்று நாம் விமர்சிக்கின்றோம். நாம் பார்ப்பது வெளிப்படையைத் தான். அவரது நூற்கள் மக்களை வழிகெடுத்து விடக் கூடாது என்பதால் அதை அடையாளம் காட்டுவது நம்முடைய மார்க்கக் கடமையாகும்.