கருத்தைக் கவனித்து நிராகரிக்கப்பட்டவை

ஹதீஸ் கலை ஆய்வு                சென்ற இதழின் தொடர்ச்சி…

கருத்தைக் கவனித்து நிராகரிக்கப்பட்டவை

குர்ஆனுக்கு ஒரு ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் அதில் ஏதோ நமக்குத் தெரியாத பிழை ஏற்பட்டுள்ளது என்ற அடிப்படையில் அந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளாமல் குர்ஆனிற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறி வருகிறோம். இந்தக் கருத்தை சிலர் மறுப்பதால் உண்மை நிலை எது என்பதைச் சென்ற இதழ்களில் விரிவாக, தெளிவாக எழுதியுள்ளோம். ஒரு ஹதீஸ் ஏற்கப்படுவதற்கு அறிவிப்பாளர் தொடர் சரியாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அது போல ஹதீஸின் கருத்தும் சரியாக இருப்பது முக்கியம் என்பதை அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை முறையாகப் படித்தவர்கள் சந்தேகத்திற்கிடமின்றி அறிந்து கொள்வார்கள். இதற்கான சான்றுகள் சிலவற்றைக் காண்போம்.

இமாம் இப்னு ஹஜர்

ஜஃபர் பின் அபீதாலிப் அவர்கள் நோன்பு வைத்தவராக இரத்தம் குத்தி எடுத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரைக் கடந்து சென்ற போது “இவ்விருவரும் நோன்பை முறித்துக் கொண்டார்கள்என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுப்பதில் நோன்பாளிக்குச் சலுகை வழங்கினார்கள். அனஸ் நோன்பு வைத்த நிலையில் இரத்தம் குத்தி எடுப்பவராக இருந்தார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),  நூல்: தாரகுத்னீ, பாகம்: 6, பக்கம்: 24

இப்னு ஹஜர் கூறுகிறார்கள்: இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் புகாரியின் அறிவிப்பாளர்கள் என்றாலும் இச்செய்தியில் மறுக்கப்பட வேண்டிய அம்சம் உள்ளது. ஏனென்றால் இந்நிகழ்வு மக்கா வெற்றியின் போது நிகழ்ந்ததாக வந்துள்ளது. ஆனால் ஜஃபர் மக்கா வெற்றிக்கு முன்பே கொல்லப்பட்டு விட்டார்.

நூல்: ஃபத்ஹுல் பாரீ, பாகம்: 4, பக்கம்: 178

ஜஃபர் (ரலி) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்படுவதற்கு முன்பே போல் கொல்லப்பட்டு விட்டார்கள். மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பிறகு ஜஃபர் (ரலி) அவர்கள் உயிருடன் இருந்தார்கள் என்று தாரகுத்னீயில் இடம்பெற்றுள்ள ஹதீஸ் கூறுகிறது. எனவே இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் புகாரியில் இடம்பெற்ற நம்பகமானவர்களாக இருந்தாலும் நிரூபிக்கப்பட்ட வரலாற்றுக்கு மாற்றமாக இருப்பதால் இதன் கருத்தை மறுக்க வேண்டும் என்று இப்னு ஹஜர் கூறுகிறார்கள்.

(தாரகுத்னீயின் மேற்கண்ட அறிவிப்பில் இது மக்கா வெற்றியின் போது நடந்ததாகக் கூறப்படவில்லை. இப்னு ஹஜர் அவர்கள் எந்த அறிவிப்பின் படி இப்படிக் கூறுகிறார் என்று தெரியவில்லை. ஹதீஸின் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்து அந்த ஹதீஸின் கருத்து தவறாக இருந்தால் அந்த ஹதீஸை ஏற்கக் கூடாது என்ற கருத்து இப்னு ஹஜர் அவர்களிடம் இருந்துள்ளது என்பதைத் தெளிவுபடுத்தவே இதைக் குறிப்பிடுகிறோம்.)

இமாம் நவவீ

நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் பள்ளிவாசலிலிருந்து (விண்ணுலகப் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவைக் குறித்துப் பேசினார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னால் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிக் கொண்டிருந்த போது (வானவர்களில்) மூன்று பேர் அவர்களிடம் வந்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 3570

இந்தப் பாடத்தில் ஷரீக் என்பார் அறிவிக்கும் இந்த ஹதீஸில் பல தவறுகள் உள்ளன. இவற்றை அறிஞர்கள் ஏற்க மறுத்துள்ளார்கள். “அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னால்’ என்ற வார்த்தையை (கூறாமல்) சுருக்கிப் பதிவு செய்ததில் உள்ள தவறை இமாம் முஸ்லிம் சுட்டிக் காட்டுகிறார். “அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னால்’ என்ற இந்த வார்த்தை தவறாகும். இதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் விண்ணுலகப் பயணம் தொடர்பாக (கூறப்படும் கால அளவில்) மிகவும் குறைவாகச் சொல்லப்படுவது என்னவென்றால் நபி (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டு 15 மாதங்களுக்குப் பிறகு தான் விண்ணுலகப் பயணம் செய்தார்கள் என்பதாகும். (ஆனால் இச்சம்பவம் விண்ணுலகப் பயணம் நடைபெறும் வரை வஹீ அருளப்படவில்லை என்று கூறுகிறது.) இன்னும் விண்ணுலகப் பயணத்தின் இரவின் போது தான் தொழுகை கடமையானது என்று அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளார்கள். அப்படியிருக்க நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அறிவிக்கப்படுவதற்கு முன்னால் தொழுகை எப்படி கடமையாக்கப்பட்டிருக்க முடியும்?

“விண்ணுலகப் பயணம் நடைபெறுவதற்கு முன்பு வரையும் அப்பயணத்தின் போதும் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்படவில்லை; மாறாக அப்பயணத்திற்குப் பின்பு தான் வஹீ அருளப்பட்டது” என்று இந்த ஹதீஸின் வார்த்தை உணர்த்துகிறது. இதனால் பெரும்பெரும் அறிஞர்கள் இதன் அறிவிப்பாளர் தொடரைப் பற்றிப் பேசாமல் உறுதி பெற்ற விஷயத்திற்கு இதன் கருத்து மாற்றமாக இருப்பதால் இதை மறுக்கிறார்கள்.

ஹதீஸைச் சரி காணுவதற்கு அறிவிப்பாளர் தொடரை மட்டும் பார்த்தால் போதும் என்றால் ஏன் இந்த அறிஞர்கள் ஹதீஸின் கருத்தைப் பார்க்க வேண்டும்? அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்தால் மட்டும் போதாது. அதன் கருத்தும் சரியாக இருக்க வேண்டும் என்பதையே அறிஞர்களின் இந்த வழிமுறை உணர்த்துகிறது.

இமாம் ஹாகிம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவு மற்றும் பகல் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்துகள் தான். வித்ரு என்பது இரவின் கடைசியில் ஒரு ரக்அத் ஆகும்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: திர்மிதி 543

இமாம் ஹாகிம் கூறுகிறார்: இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் உறுதிமிக்க நம்பகமானவரைத் தவிர வேறு யாரும் இல்லை. இதிலே பகல் என்ற வார்த்தையைக் கூறியிருப்பது தவறாகும்.

நூல்: மஃரிஃபது உலூமில் ஹதீஸ் பாகம்: 1 பக்கம்: 94

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் அனைவரும் நல்லவர்கள் தான் என்று ஹாகிம் ஒத்துக் கொள்கிறார். மற்ற நம்பகமானவர்கள் பகல் என்ற வார்த்தையைக் கூறாமல் இரவு என்பதை மட்டும் கூறுவதால் பகல் என்ற வார்த்தை தவறுதலாக வந்துள்ளது என்று ஹாகிம் முடிவு செய்கிறார்.

இமாம் தஹபீ

  1. இஸ்மாயீல் பின் இஸ்ஹாக் என்பவர் கூறுகிறார்: அஹமது பின் ஹம்பல் அவர்கள் (என்னிடம்), “இந்த ஹாரிஸ் உங்களிடம் அதிகமான நேரம் இருக்கிறார். இவரை உங்கள் வீட்டிற்கு (ஒரு முறை) வரவழைத்து இவரது பேச்சைக் கேட்பதற்காக என்னை ஒரு இடத்தில் அமர வைக்கலாமே!” என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். ஹாரிஸும் அவரது மாணவர்களும் வந்து சாப்பிட்டு விட்டு இஷா தொழுதார்கள். பின்பு அவர்கள் சுமார் இரவின் பாதி வரை ஹாரிஸின் முன்பு அமைதியாக அமர்ந்தார்கள். அவர்களில் ஒருவர் கேள்வி கேட்டு ஆரம்பித்து வைத்தார். ஹாரிஸ் பேசத் தொடங்கினார். அவர்களுடைய தலையில் பறவை தங்கும் அளவிற்கு (கவனத்துடன் கேட்டார்கள்) ஹாரிஸ் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்களில் சிலர் அழுது விட்டார்கள். சிலர் திடுக்கத்திற்குள்ளானார்கள். அப்போது நான் மேல் அறைக்குச் சென்று அஹ்மத் இமாமைப் பார்த்த போது அவர்கள் மயக்கமுறுகிற அளவிற்கு அழுது கொண்டிருந்தார்கள். இவர்கள் சென்ற பிறகு அஹ்மத் அவர்கள் “நான் இவர்களைப் போன்று யாரையும் பார்த்தில்லை. இவரது பேச்சைப் போன்று எவரது பேச்சையும் கேட்டதில்லை” என்று கூறினார்கள்.

இமாம் தஹபீ கூறுகிறார்: இது சரியான அறிவிப்பாளர் தொடரைக் கொண்ட சம்பவம். ஆனாலும் மறுக்கப்பட வேண்டியது. எனது உள்ளம் இதை ஏற்றுக் கொள்ளாது. அஹ்மத் போன்ற (பெரிய அறிஞரிடமிருந்து) இது போன்ற நிகழ்வு ஏற்படுவதை நான் அசாத்தியமானதாகக் கருதுகிறேன்.

நூல்: மீஸானுல் இஃதிதால் பாகம்: 1 பக்கம்: 430

ஹாரிஸ் என்பாரின் பேச்சில் சாதாரண மக்கள் மயங்குவதைப் போல் மாபெரும் அறிஞராகத் திகழ்ந்த அஹ்மத் இமாம் மயங்கினார்கள் என்று இச்சம்பவம் கூறுவதால் இதன் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் அஹ்மதின் தன்மைக்கு மாற்றமாக இருப்பதால் இதை ஏற்க மாட்டேன் என்று தஹபீ கூறுகிறார்.

ஞானத்தைத் தொலைத்து விட்ட அறிஞர்களே! இமாம் அஹ்மதை விட நபி (ஸல்) அவர்கள் அந்தஸ்தில் குறைந்தவர்களா? அஹ்மது இமாமின் கண்ணியத்தைப் பாதுகாக்க அவர்களின் செய்திக்கு இந்த அளவுகோல் என்றால் ஏன் உத்தமத் தூதரின் கண்ணியத்தைப் பாதுகாக்க இந்த அளவுகோலை கையில் எடுக்கத் தயங்குகிறீர்கள்?

  1. 2. அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் என்பவர் சொல்கிறார்: எனது நண்பர் ஒருவர் பிரயாணியாக இருக்கும் போது மரணித்து விட்டார். அவருடைய மண்ணறையில் நானும் இப்னு உமர் அவர்களும் அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்களும் இருந்தோம். (அப்போது) எங்களுடைய பெயர் அல்ஆஸ் என்றிருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்களது பெயர் அப்துல்லாஹ்வாக இருக்கும் நிலையில் இவரது கப்ரில் இறங்குங்கள்என்று எங்களுக்குக் கூறினார்கள். நாங்கள் எங்களது சகோதரரை அடக்கம் செய்துவிட்டு எங்கள் பெயர் மாற்றப்பட்ட நிலையில் மேலே ஏறி வந்தோம்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ்

நூல்: பைஹகீ, பாகம்: 9, பக்கம்: 307

இமாம் தஹபீ கூறுகிறார்: இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் இது மறுக்கப்பட வேண்டிய கருத்தாகும். (ஏனென்றால்) இப்னு உமர் அவர்களின் பெயர் ஹிஜ்ரீ ஏழு வருடத்திற்குப் பிறகு வரை மாற்றப்படாமல் இருந்தது என்ற கருத்தை இது கொடுக்கிறது. இக்கருத்து ஏற்கத் தகுந்ததல்ல.

நூல்: சியரு அஃலாமின் நுபலா, பாகம்: 3, பக்கம்: 209

இப்னு உமர் (ரலி) அவர்களின் பெயர் ஹஜ்ரீ 7 வரை மாற்றப்படவில்லை என்பது தவறான கருத்து. இந்தக் கருத்தை மேலுள்ள ஹதீஸ் சொல்வதால் இதன் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று தஹபீ கூறுகிறார்.

இது போன்று அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்த போதும் ஹதீஸின் கருத்தில் பிழை இருப்பதால் பல ஹதீஸ்களை தஹபீ மறுத்துள்ளார். இதைப் பின்வரும் செய்திகள் மேலும் உறுதிப்படுத்துகின்றன.

  1. ஹாகிமில் 1868வதாக இடம்பெற்ற செய்தியை தஹபீ அவர்கள் பின்வருமாறு விமர்சனம் செய்கிறார்.

மரண வேளையில் தவித்துக் கொண்டிருந்த எனது உறவினருக்கருகில் நான் இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் என்னிடமிருந்த கவலையைப் பார்த்த போது “உனது உறவினருக்காக நீ கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் இந்தச் சிரமமும் அவரது நன்மைகளில் ஒன்றாகி விடுகிறதுஎன்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: இப்னு மாஜா 1441

தஹபீ கூறுகிறார்: இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் நம்பகமானவர்கள் என்றாலும் இது மறுக்கப்பட வேண்டிய செய்தி.

நூல்: தத்கிரதுல் ஹுஃப்பாள், பாகம்: 2, பக்கம்: 688

  1. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் (குறையை விட்டும்) தூய்மையாக இருப்பதுடன் இது மறுக்கப்பட வேண்டிய செய்தியாகும். இது இட்டுக்கட்டப் பட்டதாக இருக்குமோ என்று நான் அஞ்சுகிறேன்.

நூல்: தல்ஹீஸுல் முஸ்தத்ரக், பாகம்: 1, பக்கம்: 506, 507

  1. ஹாகிமில் 3387வதாக இடம்பெற்ற செய்தியை தஹபீ பின்வருமாறு விமர்சிக்கிறார்.

இதன் அறிவிப்பாளர் தொடர் தூய்மையானதாக உள்ளது. செய்தி மறுக்கப்பட வேண்டியதாக உள்ளது.

நூல்: தல்ஹீஸுல் முஸ்தத்ரக் பாகம்: 2 பக்கம்: 366, 367

  1. ஹாகிமில் 4640 என்ற எண்ணில் பதிவு செய்யப்பட்ட செய்தியை தஹபீ பின்வருமாறு விமர்சிக்கிறார்.

இந்த ஹதீஸை அறிவிப்பவர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் இது மறுக்கப்பட வேண்டியது. இட்டுக்கட்டப்பட்ட வகையை விட்டும் தூரமானதாக இது இல்லை.

நூல்: தல்ஹீஸுல் முஸ்தத்ரக், பாகம்: 3, பக்கம்: 127, 128

  1. ஹாகிமில் 6738வதாகப் பதிவுசெய்யப்பட்ட ஹதீஸை அதன் கருத்தைக் கவனித்து மறுக்கிறார்.

இதன் அறிவிப்பாளர் தொடர் தரமாக இருப்பதுடன் இது மறுக்கப்பட வேண்டியதாகும்.

  1. ஹாகிமில் 7048வதாகப் பதிவாகியுள்ள செய்தியை தஹபீ பின்வருமாறு விமர்சிக்கிறார்.

இதன் அறிவிப்பாளர் தொடர் தூய்மையானதாக இருந்தாலும் இது மறுக்கப்பட வேண்டிய ஹதீஸாகும்.

நூல்: தல்ஹீஸுல் முஸ்தத்ரக், பாகம்: 4, பக்கம்: 99

இமாம் அல்பானியின் பார்வை

  1. எனது சமுதாயத்தில் அப்தால்கள் (என்ற நல்லடியார்களை அறிந்து கொள்வதற்கான) அடையாளம், அவர்கள் யாரையும் எப்போதும் சபிக்க மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்தில் பர் என்பவர் கிதாபுல் அவ்லியா என்ற தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அல்பானீ அவர்கள் குறைகளைக் கூறுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் இதன் கருத்தையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு குறை காணுகிறார். ஹதீஸைச் சரி காணுவதற்கான இரண்டு அளவுகோலையும் இங்கே அல்பானீ பயன்படுத்துகிறார்.

எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமின்றி இந்தச் செய்தி மோசமான கருத்தைக் கொண்டதாக உள்ளது. ஏன்? இது இட்டுக்கட்டப்பட்டது (என்று கூட சொல்லலாம்). ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் பல முறை சபித்துள்ளார்கள். இதை அவர்களே பல ஹதீஸ்களில் கூறியுள்ளார்கள். (நபியவர்கள் சபித்ததாக வரும்) பல ஹதீஸ்களை இன்னொரு சில்சிலாவில் நான் பதிவு செய்துள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட இந்த அப்தால்கள் (நல்லடியார்கள்) முழுமையடைந்தவர்களா?

நூல்: சில்சிலதுல் லயீஃபா, பாகம்: 3, பக்கம்: 474

ஹதீஸின் கருத்தைப் பார்க்கக் கூடாது என்பது ஹதீஸ் கலையின் விதியாக இருக்குமானால் எந்த ஹதீஸையும் அதன் கருத்தைக் கவனித்து விமர்சிப்பது கூடாது என்று கூற வேண்டும்.  ஆனால் அறிஞர்கள் அவ்வாறு செய்யவில்லை.  குறையுள்ள தொடரைக் கொண்ட செய்திக்கும் குறையில்லாத தொடரைக் கொண்ட செய்திக்கும் இந்த அளவுகோலைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

இப்னு சய்யிதின்னாஸ்

நபி (ஸல்) அவர்கள் சிறுவராக இருந்த போது ஆபூதாலிபுடன் ஷாம் நாட்டிற்குக் கூட்டமாக வியாபாரத்திற்காகச் சென்றார்கள். செல்லும் வழியில் ஒரு பாதிரியார் நபி (ஸல்) அவர்களின் தன்மைகளைக் கவனத்தில் கொண்டு இவர் நபியாவார் என்ற தகவலை அவர்களுக்கு அறிவித்தார். ரோம் நாட்டிற்கு நபி (ஸல்) அவர்களை அழைத்துச் சென்றால் அவர்கள் நபியைக் கொன்று விடுவார்கள் என்பதால் அங்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று வற்புறுத்தினார். ரோம் நாட்டிலிருந்து நபி (ஸல்) அவர்களை அழைத்துச் செல்வதற்காக ஏழு நபர்கள் அங்கு வந்தார்கள். அவர்களுடன் நபியவர்களை அனுப்புவதற்கு அபூதாலிப் ஒத்துக் கொண்டார். அபூபக்ர் அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் பிலாலை அனுப்பினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி)

நூல்: திர்மிதி 3553, ஹாகிம் பாகம்: 1, பக்கம்: 672

இவ்வாறு திர்மிதி, ஹாகிம் போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு சய்யித் அவர்கள் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாவிட்டாலும் இதன் கருத்தில் குறை உள்ளது என்று கூறுகிறார்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் புகாரி, முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட அறிவிப்பாளர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. இத்துடன் இந்த செய்தியில் தவறான கருத்து உள்ளது. நபி (ஸல்) அவர்களுடன் அபூபக்கர் பிலாலை அனுப்பினார்கள் என்பதே அந்தத் தவறாகும். அபூபக்கர் அன்றைக்குப் பத்து வயதைக் கூட அடையாமல் இருக்கும் போது இது எப்படி சாத்தியமாகும்?

நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரை விட இரண்டு வயது மூத்தவர்கள். தப்ரீ போன்றோரின் கூற்றுப்படி நபி (ஸல்) அவர்களுக்கு அன்றைய நேரத்தில் வயது ஒன்பதாக இருந்தது. மற்றவர்களின் கூற்றுப்படி 12 ஆக இருந்தது. மேலும் பிலால் அவர்கள் இச்சம்பவம் நடந்து 30 வருடங்களுக்குப் பிறகு தான் அபூபக்ரின் பொறுப்பில் வருகிறார். (ஆனால் இச்செய்தியில் நபி (ஸல்) அவர்கள் சிறுவராக இருக்கும் போதே அபூபக்ரின் பொறுப்பில் பிலால் இருந்ததாக உள்ளது.)

இதற்கு முன்பு பிலால், பனூஹலஃப் என்ற கூட்டத்தாரிடம் இருந்தார். இஸ்லாத்திற்காக பிலால் அல்லாஹ்வின் விஷயத்தில் கொடுமை செய்யப்பட்ட போது அவர் மீது இரக்கப்பட்டும், அவரை அவர்களின் கையிலிருந்து பாதுகாப்பதற்காகவும் அபூபக்கர், பிலாலை அவர்களிடமிருந்து விலைக்கு வாங்கினார்.

நூல்: உயூனுல் அஸர், பாகம்: 1, பக்கம்: 105

ஒரு ஹதீஸைச் சரி காணுவதாக இருந்தால் அதன் தொடர் மற்றும் தகவல் ஆகிய இரண்டையும் உரசிப் பார்க்க வேண்டும் என்பதை அறிஞர்களின் இந்தக் கூற்றுக்கள் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. மேற்கண்ட செய்திகள் அல்லாமல் இன்னும் இது போன்று அறிஞர்கள் பல இடங்களில் நடந்துள்ளார்கள். இதனடிப்படையில் நம்பகமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்ற செய்திகளில் உள்ள பிழையினால் அச்செய்தி மறுக்கப்பட வேண்டியது என்று தீர்ப்பும் வழங்கியுள்ளார்கள்.

அறிவிப்பாளர்களை எடை போடுவது கூட செய்தியைச் சரி காணும் நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதனால் தான் பல அறிவிப்பாளர்களுக்கு அவர்கள் அறிவிக்கும் செய்திகளைக் கவனித்து வலிமையானவர் என்றும் மோசமானவர் என்றும் அறிஞர்கள் தீர்ப்பு அளிப்பார்கள்.

ஒரு அறிவிப்பாளர் நல்லவராக இருந்தாலும் அவர் வழியாகப் பல மோசமான தகவல்கள் அடிக்கடி வந்து கொண்டிருந்தால் இவர் மோசமான செய்திகளை அறிவிக்கக் கூடியவர் என்று கூறி அவரை நிராகரித்து விடுவார்கள். அதே நேரத்தில் மற்றவர்கள் அறிவிப்பதைப் போல் கூட்டாமல் குறைக்காமல் ஹதீஸ்களை அறிவித்தால் அவர் உயர்ந்த மனனத்தன்மை கொண்டவர் உறுதி மிக்கவர் என்று தீர்ப்பு சொல்வார்கள்.

இதிலிருந்து அறிஞர்கள் ஹதீஸின் கருத்தைக் கவனிப்பதில் எவ்வளவு அக்கரைக் காட்டியுள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.