காலாடை கரண்டையைத் தாண்டலாமா?
ஆடை தரையில் படாமல் கணுக்கால் வரை உடுத்திக் கொள்வதற்குத் தடையில்லை என்பதற்கான ஆதாரங்களைக் கடந்த இதழில் கண்டோம். இதற்கு மாற்றமாக, கணுக்காலில் ஆடை படவே கூடாது என்று வாதிடுவோர் சில ஆதாரங்களை எடுத்துக் காட்டுகின்றனர். அவற்றைப் பார்ப்போம்.
முதல் ஆதாரம்
ஹுஜைமீ குலத்தைச் சார்ந்த நபித்தோழர் ஒருவர் கூறுகிறார்: நான் நபி (ஸல்) அவர்களிடம் கீழாடையைப் பற்றிக் கேட்டேன். “நான் கீழாடையை எதுவரைக்கும் அணியலாம்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தனது முதுகை வளைத்து தன் கெண்டைக்காலின் எலும்பைப் பிடித்து, “இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் இதற்குக் கீழே இதுவரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்கு மேல் இது வரை அணிந்து கொள். இதையும் நீ விரும்பாவிட்டால் பெருமையடித்து ஆணவத்துடன் நடக்கும் யாரையும் மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ் விரும்பமாட்டான்” என்று கூறினார்கள். (நூல்: அஹ்மது 15389)
இந்தச் செய்தியில் ஆடையை நீட்டுவதற்குக் கடைசி எல்லையாக கணுக்கால்களின் மேல் பகுதி கூறப்பட்டுள்ளது. இதை ஆதாரமாக வைத்து கணுக்காலில் ஆடை விழக் கூடாது. கணுக்காலுக்கு மேல் வரை மட்டுமே ஆடையை இறக்கலாம் என்று வாதிடுகின்றனர்.
இந்த அறிவிப்பை அபூ தமீமா என்பாரிடமிருந்து அபுஸ்ஸலீல் என்பவர் அறிவிக்கின்றார். இந்தச் செய்தியை அபூ தமீமாவிடமிருந்து அபுஸ்ஸலீல் மட்டும் அறிவிக்கவில்லை. அபூ தமீமாவிடமிருந்து அபுஸ்ஸலீல் உட்பட காலித் மற்றும் அபூ ஃகிஃபார் ஆகிய மூவர் அறிவித்துள்ளனர்.
இந்த மூவரும் நம்பகமானவர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அபுஸ்ஸலீல் காலிதுக்கும் அபூ ஃகிஃபாருக்கும் மாற்றமாக இந்த செய்தியை அறிவித்துள்ளார்.
காலிதுடைய அறிவிப்பிலும் அபூஃகிஃபாருடைய அறிவிப்பிலும் கணுக்கால்கள் வரை அணியலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது கணுக்கால்களின் மீது ஆடை படுவது தவறல்ல என்றே கூறப்பட்டுள்ளது. ஆனால் மேற்கண்ட அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பவில் கணுக்கால்கள் மீது ஆடை விழவே கூடாது என்று இதற்கு மாற்றமாகக் கூறப்பட்டுள்ளது.
அபுஸ்ஸலீலை விட காலிதே உறுதியானவர் என்பதாலும் அபூ ஃகிஃபாருடைய அறிவிப்பு காலிதுடைய அறிவிப்புக்கு மேலும் வலு சேர்ப்பதாலும் கீழாடை கணுக்கால்களைத் தொடலாம் என்று கூறும் காலிதுடைய அறிவிப்பே சரியானதாகும். கணுக்காலில் ஆடை படக்கூடாது என்று கூறும் அபுஸ்ஸலீலுடைய மேற்கண்ட அறிவிப்பு பலவீனமாகும்.
காலிதுடைய அறிவிப்பு
“கெண்டைக்காலின் பாதிவரை கீழாடையை அணிந்துகொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்கள் வரை அணிந்துகொள். கீழாடையை (தரையில் படுமாறு) நீட்டுவதை விட்டும் உம்மை நான் எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்பமாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மது 22121)
அபூ ஃகிஃபாருடைய அறிவிப்பு
“உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்கள் வரை (அணிந்து கொள்). கீழாடையை (தரையில்) தொங்க விடுவதை விட்டும் உம்மை எச்சரிக்கின்றேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். அல்லாஹ் (நாம்) பெருமை கொள்வதை விரும்ப மாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவுத் 3562)
அபூஹுரைரா (ரலி), இப்னு உமர் (ரலி), அபூசயீத் (ரலி), அனஸ் (ரலி), சமுரா (ரலி) ஆகிய ஐந்து நபித்தோழர்கள் வழியாக வந்த அறிவிப்புகளை முன்னர் பார்த்தோம். இந்த அறிவிப்புகளும் கணுக்காலில் ஆடை படுவதை அனுமதிக்கின்றன.
எனவே கணுக்காலில் ஆடை படக்கூடாது என்று கூறும் அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பு காலித் மற்றும் அபூஃகிஃபாருடைய அறிவிப்புக்கும் அந்த ஐந்து நபித்தோழர்கள் வழியாக வரும் அறிவிப்புகளுக்கும் மாற்றமாக இருப்பதால் அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பு தவறானதாகும்.
மேலும் காலித் மற்றும் அபூ ஃகிஃபாருடைய அறிவிப்புகளில் கணுக்கால்கள் வரை அணியலாம் என்று கூறப்படுவதைத் தொடர்ந்து தரையில் படும் வகையில் ஆடை அணியக் கூடாது என்றும் சேர்த்துக் கூறப்படுகின்றது.
ஆனால் அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பில் தரையில் படும் வகையில் ஆடை அணியக்கூடாது என்ற தகவல் கூறப்படவில்லை. எனவே அபுஸ்ஸலீலின் அறிவிப்பு முழுமையற்றதாகவும் பிழையானதாகவும் உள்ளது.
பல நம்பகமானவர்களின் அறிவிப்புகளுக்கு ஒருவரின் அறிவிப்பு மாற்றமாக இருந்தால் அவரது அறிவிப்பு ஏற்றுக் கொள்ளப்படாது என்ற ஹதீஸ் கலை விதியின் படி இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இரண்டாவது ஆதாரம்
அபுல் காசிம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக்கால்களின் பாதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் இதற்குக் கீழே கணுக்கால்களுக்கு மேல் வரை இருக்க வேண்டும். இதற்குக் கீழே செல்பவை நரகத்திற்குச் செல்லும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மது (10151)
இந்தச் செய்தியில் கணுக்காலின் மேல் பகுதி இறுதி எல்லையாகக் கூறப்படுவதால் இதையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். இந்தச் செய்தியில் முஹம்மது பின் அம்ர் என்பவர் இடம் பெறுகிறார். இவர் நம்பகமானவர் எனினும் இவரிடமிருந்து தவறுகள் பல ஏற்படும் என்று இமாம் இப்னு ஹஜர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட இந்த செய்தியில் இவர் தவறிழைத்துள்ளார் என்பது சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகியுள்ளது. ஏனென்றால் இந்த செய்தியை அவர் அப்துர் ரஹ்மான் பின் யஃகூப் என்பாரிடமிருந்து அறிவிக்கின்றார்.
அப்துர் ரஹ்மான் பின் யஃகூபிடமிருந்து முஹம்மது பின் இப்ராஹீம் என்பாரும் இந்தச் செய்தியை அறிவித்துள்ளார். கீழாடை கணுக்கால்கள் வரை இருக்க வேண்டும் என்றே இவரது அறிவிப்பில் உள்ளது. அதாவது கீழாடை கணுக்கால்களைத் தொடுவது தவறல்ல என்றே இவருடைய அறிவிப்பில் உள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக்கால்களின் சதைப்பகுதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் கெண்டைக்காலின் பாதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் அவரது கணுக்கால்கள் வரை இருக்க வேண்டும். இதற்குக் கீழே செல்லும் ஆடை நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மது (7519)
இதுவே முஹம்மது பின் இப்ராஹீமின் அறிவிப்பாகும். இவர் உறுதியானவர் நம்பகமானவர். இவர் முஹம்மது பின் அம்ரை விட வலிமையானவர். எனவே இவருக்கு மாற்றமாக அறிவிக்கும் முஹம்மது பின் அம்ருடைய அறிவிப்பை ஏற்க இயலாது.
மேலும் இதே செய்தி அபூ சயீத் மற்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் ஆகிய இருவர் வழியாகவும் வந்துள்ளது. இந்தச் சரியான அறிவிப்புகளில் கணுக்கால்கள் வரை அதாவது கணுக்கால்களை கீழாடை தொடலாம் என்றே கூறப்பட்டுள்ளது. கணுக்கால்களுக்கு மேல் வரை அணிய வேண்டும் என்று கூறப்படவில்லை. இந்த அறிவிப்புகளை முன்பே நாம் பார்த்து விட்டோம்.
எனவே முஹம்மது பின் அம்ருடைய அறிவிப்பு நம்பகமானவர்களின் அறிவிப்புக்கு மாற்றமாக இருப்பதால் கணுக்கால்களுக்கு மேல் அணிய வேண்டும் என இவர் தவறுதலாக அறிவித்திருப்பது தெளிவாகி விட்டது. இந்த தவறான அறிவிப்பை ஆதாரமாக எடுக்க இயலாது.
மூன்றாவது ஆதாரம்
ஹுதைஃபா (ரலி) கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கெண்டைக்காலின் சதைப்பகுதியைப் பிடித்து இதுவே கீழாடையின் (எல்லையான) இடம். இதை நீ விரும்பாவிட்டால் இதற்குக் கீழே அணிந்து கொள்ளலாம். இதையும் நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களில் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை” என்று கூறினார்கள். (நூல்: திர்மிதி 1705)
இந்தச் செய்தியில் ஹுதைஃபா (ரலி) முஸ்லிம் பின் நதீர் அபூ இஸ்ஹாக் அபுல் அஹ்வஸ் மற்றும் குதைபா ஆகியோர் அறிவிப்பாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.
இதில் இரண்டாவதாக இடம்பெறும் அறிவிப்பாளர் முஸ்லிம் பின் நதீர் நம்பகமானவர் என்று அறிஞர்களால் நிரூபிக்கப்படவில்லை. இமாம் இப்னு ஹிப்பான் மட்டுமே இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார். இப்னு ஹிப்பான் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களை எல்லாம் நம்பகமானவர் என்று கூறும் அலட்சியப் போக்குடையவர் என்பதால் இவரது கூற்றை ஏற்க முடியாது.
நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் மக்பூல் என்ற வாசகத்தால் குறிப்பிடுவது வழக்கம். அறிவிப்பாளர் முஸ்லிம் பின் நதீரை இமாம் இப்னு ஹஜர் மக்பூல் என்றே குறிப்பிட்டுள்ளார்.
இவரது அறிவிப்பை முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. மற்ற செய்திகளை வலுவூட்டுவதற்கு துணைச் சான்றாக எடுத்துக் கொள்ளலாம் என்ற கருத்தில் இமாம் தஹபீ மற்றும் அபூஹாதிம் ஆகியோர் கூறியுள்ளனர்.
மேற்கண்ட செய்தியை ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்து இவர் மட்டுமே தனித்து அறிவிக்கின்றார். அத்துடன் கீழாடை கணுக்கால்களைத் தொடுவதால் தவறல்ல என்று கூறும் ஏராளமான சரியான அறிவிப்புகளுடன் முரண்படும் வகையில் அறிவித்துள்ளார். இவர் தனித்து அறிவித்தாலே ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றால் ஆதாரப்பூர்வமான செய்திகளுக்கு மாற்றமாக அறிவித்தால் அறவே ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இந்த அறிவிப்பை ஏற்க இயலாது.
இவர் மேற்கண்ட செய்தியைப் பிழையாக அறிவித்திருந்தாலும் வேறு ஒரு நேரத்தில் சரியாக அறிவித்துள்ளார்.
ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கெண்டைக்காலின் சதைப் பகுதியைப் பிடித்து இதுவே கீழாடையின் (எல்லையாக உள்ள) இடமாகும். இதை நீ விரும்பா விட்டால் இதற்குக் கீழே அணிந்து கொள்ளலாம். இதையும் நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்குக் கீழ் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்கள். (நூல்: திர்மிதி 1705)
இந்த அறிவிப்பில் கணுக்கால்களுக்குக் கீழே எந்த உரிமையும் இல்லை என முஸ்லிம் பின் நதீர் சரியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பே மற்ற சரியான ஆதாரங்களுடன் ஒத்துப் போகின்றது. எனவே கணுக்கால்களில் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என அவர் அறிவித்தது தவறு என்பது இதன் மூலமும் தெளிவாகிறது.
ஆய்வின் சுருக்கம்
கீழாடை தரையில் படுமாறு ஆடையை இறக்கி அணிவதையே மார்க்கம் தடை செய்கின்றது. கணுக்கால்களுக்குக் கீழ் ஆடை செல்லக் கூடாது என்பதன் கருத்து தரையில் ஆடை படுமாறு அணியக் கூடாது என்பதாகும்.
கணுக்கால்களின் மேற்பகுதியே கீழாடையின் இறுதி எல்லை என்ற கருத்தில் வரும் செய்திகள் பலவீனமானவை. கணுக்கால்களின் மீது ஆடை படும் வகையில் அணிந்தால் தவறில்லை என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
எனவே ஒருவர் தன் கீழாடையை தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை. இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வழிமுறையாகும்.
அதே நேரத்தில் ஆடையை அனுமதிக்கப்பட்ட எல்லையைக் காட்டிலும் மேலே உயர்த்தி அணிவது சிறந்ததாகும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் கெண்டைக்காலின் பாதி வரை அணிய வேண்டும் என்பதை முதல் உத்தரவாகப் பிறப்பிக்கின்றார்கள். இதை விரும்பாவிட்டாலே இதற்கு அடுத்த நிலையைக் கடைப்பிடிக்குமாறு கூறுகிறார்கள். எனவே ஆடையை உயர்த்திக் கட்டுவது மார்க்கத்தில் சிறந்த நிலையாகும்.