ஜமாஅத் தலைவர்களும் ஜமாஅத் தொழுகைகளும்

ஜமாஅத் தலைவர்களும் ஜமாஅத் தொழுகைகளும்

இணைவைப்புக்கு எதிரான வலுவான யுத்தத்தின் உச்சக்கட்டமாக, அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக ஒவ்வொரு ஊரிலும் தனிப்பள்ளிகளைக் கண்டு வருகிறோம். முந்தைய காலகட்டத்தில் பள்ளிக்கு ஏக்கர் கணக்கில் நிலங்களைத் தானமாக வழங்குவது மிகவும் சர்வ சாதாரணமாக நடந்தது. இன்று ஒரு சதுர அடி நிலத்தை வாங்குவதற்குக் கூட தலைகீழாகப் புரள வேண்டியிருக்கின்றது. அந்த அளவுக்கு மண்ணின் விலை விண்ணைத் தொட்டு நிற்கின்றது.

நம்முடைய ஜமாஅத்தில் பணக்கார வர்க்கம் என்பது மைக்ரோ அளவில் தான் உள்ளது. பாட்டாளி வர்க்கத்தின் வியர்வைத் துளிகள் தான் பணத்துளிகளாகப் பரிணமிக்கின்றன. ஊர் ஊராக அலைந்து, ஒவ்வொரு பள்ளியாகப் படியேறி, ஒவ்வொரு பைசாவாகச் சேர்த்துத் தான் நாம் ஒரு பள்ளியை நிறுவுகின்றோம்; நிர்மாணிக்கின்றோம்.

இப்படிக் கடின உழைப்பைச் செலுத்தி ஒரு பள்ளிக் கட்டுமானத்தை எழுப்புகின்றோம். எழுப்பிய பின்னால் மின்விளக்குகளை எரிய விடுதல், மின்விசிறிகளை இயக்குதல், தண்ணீர் மோட்டார்களை இயக்குதல் போன்றவை தான் பள்ளிவாசலை நிர்வகிப்பது, பரிபாலணம் செய்வது என்று நாம் விளங்க மாட்டோம்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர்வழி பெற்றோராக முடியும்.

அல்குர்ஆன் 9:18

இந்த வசனம் கூறுகின்ற நிபந்தனைகளின்படி செயல்படுவது தான் ஒரு பள்ளியின் உண்மையான நிர்வாகம் என்று நாம் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றோம். இதன் அடிப்படையில் ஒரு பள்ளியின் நிர்வாகிகள் அந்தப் பள்ளியில் நிறைவேற்றப்படும் ஜமாஅத் தொழுகைகளில் சரியாகக் கலந்து கொள்ள வேண்டும்.

இன்று ஒரு சில கிளைகளின் பொறுப்பாளர்கள் ஜமாஅத் தொழுகைகளைப் புறக்கணித்துவிட்டு, அல்லது அலட்சியம் செய்து விட்டுத் தங்கள் வீடுகளிலேயே தொழுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு வருகின்றது. இத்தகைய பொறுப்பாளர்கள், நபி (ஸல்) அவர்கள் ஜமாஅத் தொழுகைக்கு அளித்த முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜமாஅத் பொறுப்பாளர்களாக இருப்பவர்கள் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். இரவு ஒரு மணி வரை ஏகத்துவப் பொதுக்கூட்டம் நடத்தினோம் என்று பெருமைப்பட்டுக் கொள்பவர்கள் காலையில் ஃபஜ்ர் தொழுகையைப் பலியாக்கி, பாழாக்கிவிடுகின்றனர். இந்த நிலை ஒரு நிர்வாகியிடம் இருக்கக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபஜ்ர், இஷா ஆகியத் தொழுகைகளைவிட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறேதும் இல்லை. அவ்விரு தொழுகைகளிலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு அவர்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள். தொழுகை அறிவிப்பாளரிடம் (பாங்கு மற்றும்) இகாமத் சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரிடம் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்)குமாறு பணித்துவிட்டு, பிறகு தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு, இன்னும், தொழுகைக்கு புறப்பட்டு வராமலிருப்பவரை (நோக்கிச் சென்று, அவரை) எரித்துவிட முடிவு செய்தேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 657

ஃபஜ்ர் தொழுகையைக் கோட்டை விட்டுவிட்டுக் குறட்டை விடுவோரிடம் நயவஞ்சகத்தின் நாற்றம் வீசுகின்றது என்பதை இந்த ஹதீஸில் நமக்கு நபி (ஸல்) அவர்கள் புரிய வைக்கின்றார்கள்.

அத்துடன் ஜமாஅத்திற்கு வராதவர்களின் வீடுகளை தீயிட்டுக் கொளுத்த முனைவேன் என்றும் நபி (ஸல்) அவர்கள் விடுக்கின்ற எச்சரிக்கையை நமது உள்ளத்தில் பதிய வைக்க வேண்டும்.

இறை தரிசனமே இலட்சியம்

ஏகத்துவக் களப்பணியாற்றுகின்ற நமக்கு ஒரே ஒரு இலட்சியம் இறைவனுடைய தரிசனம் தான். அதனால் தான் நாம் அல்லாஹ்வுக்கு எள்ளளவு கூட இணை வைப்பதில்லை.

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 18:110

ஏக இறைவனின் இந்தக் கூற்று தான் நமது ஏகத்துவப் பணியின் லட்சியம். இந்த லட்சியம் வெற்றி பெற வேண்டுமா? அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறும் வழிமுறை இதோ:

(முழு நிலவுள்ள ஓர் இரவில்) நபி (ஸல்) அவர்களுடன் (அமர்ந்து கொண்டு) இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவைக் கூர்ந்து பார்த்தபடி, “இந்த நிலவை நீங்கள் நெரிசல் இல்லாமல் காண்பது போன்று உங்கள் இறைவனையும் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் வெளிவேலைகள் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்என்று கூறிவிட்டு “சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள்எனும் (50:39ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 554

அதனால் அதிகாலைத் தொழுகையில் இனிமேல் அலட்சியம் காட்டாமல் இருப்போமாக!

பார்வை இழந்தவரும் வரவேண்டும்

பொதுவாகவே அனைத்து ஜமாஅத் தொழுகைகளிலும் ஆர்வமும் அக்கறையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களிடம் பார்வையற்ற ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைப் பள்ளிவாசலுக்கு அழைத்து வரக்கூடிய வழிகாட்டி எவரும் எனக்கு இல்லைஎன்று கூறி, வீட்டிலேயே தொழுதுகொள்ள தமக்கு அனுமதியளிக்குமாறு கோரினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்றபோது அவரை அழைத்து, “தொழுகை அறிவிப்பு சப்தம் உமக்குக் கேட்கிறதா?” என்று கேட்டார்கள். அவர் “ஆம்‘ (கேட்கிறது) என்றார். நபி (ஸல்) அவர்கள் “அப்படியானால் நீர் அதற்கு செவிசாய்ப்பீராக!” (கூட்டுத்தொழுகையில் வந்து கலந்துகொள்வீராக!) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1044

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கண் தெரியாத தோழரையும் பள்ளிக்கு வருமாறு பணிக்கின்றார்கள். அல்லாஹ் நமக்குப் பார்வையை அளித்தும் பள்ளிக்கு வருவதைப் புறக்கணிக்கலாமா?

பாத அடிகளுக்குப் பல நன்மைகள்

பள்ளிக்கு ஜமாஅத் தொழுகைக்காக நாம் வருகின்ற போது எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு எட்டுக்கும் இறைவனிடத்தில் நன்மை பதிவு செய்யப்படுகின்றது. இதன் காரணமாக நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு அருகில் வசிப்பதை விட தூரத்தில் வசிப்பதையே சிறப்பித்துக் கூறுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களில் தொழுகையால் அதிக நற்பலன் அடைபவர் வெகு தொலைவிலிருந்து (பள்ளியை நோக்கி) வருபவராவார். அடுத்து அதற்கடுத்த தொலை தூரத்திலிருந்து வருபவராவார். யார் (கூட்டுத்) தொழுகையை இமாமுடன் தொழக் காத்துக் கொண்டிருக்கிறாரோ அவரே (தனியாகத்) தொழுது விட்டு உறங்கிவிடுபவரை அதிக நற்பலன் அடைபவர் ஆவார்.

அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி)

நூல்: புகாரி 651

பனூ ஸலமா கிளையினர் பள்ளிக்கு அருகில் வந்து வசிக்க ஏற்பாடு செய்தனர். இதைத் தெரிந்து நபி (ஸல்) அவர்களை நோக்கிக் கூறுவதைப் அவர்கள் கூறியதாவது:

பனூசலிமா குலத்தார் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலருகே குடிபெயர விரும்பினர். மதீனா(வின் மற்ற பகுதிகள்) நபி (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள். எனவே, “பனூசலிமா குலத்தினரே! நீங்கள் (பள்ளிவாசலுக்கு நடந்து வருவதற்கான) காலடிச் சுவடுகளின் நன்மைகளை (நற்பலனை) எதிர்பார்க்க மாட்டீர்களா?” என்று கேட்டார்கள். ஆகவே, பனூசலிமா குலத்தினர் (தாம் முன்பு வசித்துக் கொண்டிருந்த இடத்திலேயே) தங்கிவிட்டனர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 1887

அன்சாரிகளில் ஒருவருடைய வீடு மதீனாவிலேயே (பள்ளிவாசலுக்கு) வெகு தொலைவில் அமைந்திருந்தது. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எல்லாத் தொழுகைகளிலும் தவறாமல் கலந்துகொள்வார். நாங்கள் அவருக்காக (வெகு தொலைவிலிருந்து சிரமப்பட்டு வருகிறாரே என்று) அனுதாபப்பட்டோம். இதையடுத்து அவரிடம் நான், “இன்னாரே! நீங்கள் கழுதையொன்றை வாங்கி (அதில் பயணம் செய்து வருவீரா)னால் நன்றாயிருக்குமே! கடும் வெப்பத்திலிருந்தும் விஷ ஜந்துக்களிலிருந்தும் உங்களைக் காத்துக் கொள்ளலாமே?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அறிவீர்: அல்லாஹ்வின் மீதாணையாக! எனது இல்லம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய இல்லத்துடன் (மஸ்ஜிதுந் நபவீ அருகிலேயே கயிறுகளால் இணைத்துக்) கட்டப்பட்டிருக்க வேண்டும் என நான் விரும்பவில்லைஎன்று கூறினார். அவர் அவ்வாறு கூறியது எனக்கு மிகுந்த மன வேதனையளிக்கவே நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தேன். நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்(து விசாரித்)தார்கள். அவர் முன்பு (என்னிடம்) கூறியதைப் போன்றே  கூறினார். மேலும், தம் கால் சுவடுகளுக்கு நன்மை பதிவு செய்யப்பட வேண்டுமெனத் தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் எதிர்பார்த்த நன்மை உங்களுக்கு உண்டுஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி)

நூல்: முஸ்லிம் 1066

வருவதற்கும் திரும்புவதற்கும் கூலி

தேர்தல் காலத்தில் வாக்களிப்பதற்கு வாக்காளர்களை வாகனத்தில் அழைத்துச் செல்வார்கள். ஆனால் ஓட்டுப் போட்டுவிட்டுத் திரும்பும் போது வெறுங்காலில் நடக்க விட்டுவிடுவார்கள். ஆனால் அல்லாஹ்விடம் அந்த அற்பத்தனம் இல்லை.

ஒரு மனிதர் இருந்தார். (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு அவரைவிட வெகு தொலைவிலிருந்து நடந்துவருபவர் வேறு எவரையும் நான் அறிந்திருக்கவில்லை. அவர் எந்தவொரு தொழுகையையும் தவறவிட மாட்டார். எனவே அவரிடம், “நீங்கள் ஒரு கழுதை வாங்கிக்கொண்டால் நன்றாயிருக்குமே! அதன் மீது பயணம் செய்து காரிருளிலும் கடும் வெப்பத்திலும் (தொழுகைக்கு) வரலாமே?” என்று “கேட்கப்பட்டதுஅல்லது “(அவ்வாறு) நான் கேட்டேன்‘. அதற்கு அவர், “எனது இல்லம் பள்ளிவாசலுக்கு அருகிலேயே அமைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்காது. (ஏனெனில்,) நான் பள்ளிவாசலுக்கு நடந்து வருவதும் (பள்ளிவாசலில் இருந்து) இல்லத்தாரிடம் திரும்பிச் செல்வதும் எனக்கு (நன்மைகளாக)ப் பதிவு செய்யப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன்என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவை அனைத்தையும் சேர்த்து அல்லாஹ் உங்களுக்கு வழங்கிவிட்டான்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி)

நூல்: முஸ்லிம் 1065

அபரிமிதமான, அளப்பெரிய நன்மைகளை அள்ளித் தருகின்ற இந்த அரிய ஜமாஅத் தொழுகையை ஒரு தவ்ஹீதுவாதி தொலைக்கலாமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நாம் அல்லாஹ்வுக்கு நன்றியுடைய அடியார்களாகத் திகழ வேண்டும்.

ஏகத்துவ அடிப்படையில் பள்ளிவாசல்கள் இல்லாத நிலையில் வீடுகளில் தொழுது கொண்டிருந்தோம்; வேதனைப்பட்டோம்; விசனப்பட்டோம். இன்று நமக்கென்று பள்ளிவாசல்கள் வந்து விட்டன. ஆனால் இப்போதும் நாம் வீட்டில் தொழுகின்றோம் என்றால் இது நன்றி மறக்கும் தன்மையல்லவா?

ஜமாஅத் தொழுகையை விடுவதற்கென்று சில காரணங்கள் இருக்கின்றன. அந்தக் காரணங்கள் இருந்தால் அல்லாஹ்விடம் பதில் சொல்லலாம். உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தால் வீட்டில் தொழலாம். இதுபோன்ற காரணங்கள் ஏதுமின்றி ஜமாஅத் தொழுகையைப் புறக்கணித்தால் இறைவனுக்கு நன்றி செலுத்த மறுக்கின்றோம் என்பது தான் அதன் பொருள். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!