ஏசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டாரா? – ஓர் ஆய்வு
ஒவ்வொரு ரமளான் மாதத்தின் போதும் ஏகத்துவம் மாத இதழ் ஒரு குறிப்பிட்ட தலைப்பை மையப்படுத்தி, திருக்குர்ஆன் சிறப்பிதழாக வெளிவரும். இவ்வாண்டு ரமளான் மாத இதழ், திருக்குர்ஆன் – பைபிள் ஒப்பீட்டு இதழாக மலர்ந்தது. இந்த இதழிலும் அதன் தொடர்ச்சி வெளிவந்து நிறைவு பெறுகின்றது.
மனித குல பாவ மீட்சிக்கு ஒரே வழி ஏசுவின் சிலுவை மரணம் தான் என்ற அறிவுக்கு ஒவ்வாத ஒரு கொள்கையை “பவுல்’ என்பவர் கிறித்தவத்தில் புகுத்தி விட்டார். அந்தப் படுமோசமான கொள்கையில் மொத்தக் கிறித்தவர்களும் வீழ்ந்து கிடக்கிறார்கள்.
தாங்கள் தவறில் வீழ்ந்து கிடப்பது மட்டுமின்றி முஸ்லிம்களையும் அந்தப் பாழுங்கிணற்றில் தள்ளுவதற்காகக் கிறித்தவ அழைப்பாளர்கள் அன்றாடம் ஒரு படையெடுப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற படையெடுப்பை தென்னாப்பிரிக்காவில் நடத்திக் கொண்டிருந்தார்கள். அதில் பாதிக்கப்பட்டவர் தான் டாக்டர் அஹ்மத் தீதாத் அவர்கள்.
அவர்களுக்குப் பதில் தாக்குதல் நடத்தத் துவங்கினார். அதன் விளைவாக விளைந்தது தான் “பைபிள் இறைவேதமா?’ என்ற நூல். அதன் முக்கியக் கூறுகள் சென்ற ஏகத்துவ இதழில் வெளியாயின.
கிறித்தவ அழைப்பாளர்களின் படையெடுப்பின் விளைவாக உருவான மற்றொரு நூல், CRUCIFIXION OR CRUCI-FICTION – “சிலுவை மரணம் நிஜமா? அல்லது கற்பனையா?” என்ற நூல் ஆகும்.
இதில் அஹ்மத் தீதாத் அவர்கள் கனலாய் தெறித்திருக்கிறார். கிறித்தவத்தின் பொய்ச் சரக்குகளை எரித்துக் கரித்திருக்கின்றார். பைபிளின் பழமைக் கால ஆங்கில நடைக்குள் புகுந்து, அதன் கருத்துக்களை விளங்கி அவற்றுக்குப் பதில் கொடுப்பது சாதாரண விஷயமல்ல!
இப்படி ஓர் அபார ஆங்கிலப் புலமையும், ஆய்வுத் திறமையும் பெற்ற அஹ்மத் தீதாத் அவர்கள் இஸ்லாமிய உலகிற்குக் கிடைத்த ஒரு புதையல், ஒரு தங்கச் சுரங்கம் என்று தான் சொல்ல வேண்டும்.
அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்களின் இந்த ஆய்வை நேரடி மொழியாக்கமாகத் தராமல், வாசகர்களுக்கு எளிதாய் விளங்கும் வகையில் அவரது நூலில் கருவாய் இருந்த கருத்துக்களை தமிழ் நடைக்குத் தக்க அளித்திருக்கிறோம். அஹ்மத் தீதாத் அவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக என்று பிராத்திக்கிறோம்.