ஏசு மரணிக்கவில்லை  பைபிளின் வாக்குமூலம்

ஏசு மரணிக்கவில்லை  பைபிளின் வாக்குமூலம்

அமெரிக்காவைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரும் கணக்கியல் நிபுணருமான மைக்கேல் ஹெச். ஹார்ட் என்பவர், THE 100 “அந்த நூறு பேர்’ என்ற நூலை வெளியிட்டிருந்தார். கிறித்தவரான அவர், வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த நூறு பேர்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குத் தான் முதலிடம் கொடுத்திருந்தார். இரண்டாவது இடத்தை நியூட்டனுக்கும் மூன்றாவது இடத்தை ஏசுவுக்கும் ஆறாவது இடத்தை பவுலுக்கும் கொடுத்திருந்தார்.

உலகில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 1000 மில்லியன். கிறித்தவர்களின் எண்ணிக்கை 1200 மில்லியன். 200 மில்லியன் அதிகம். அதாவது முஸ்லிம்களை விட கிறித்தவர்கள் 20 கோடி பேர் அதிகம். (இது 20 ஆண்டுகளுக்கு முன் உள்ள கணக்கு)

இவ்வளவு பெரிய தொகையினர் பின்பற்றுகின்ற இந்தக் கிறித்தவத்தின் புகழை இரண்டு பங்குகளாக்கி, அதில் ஒரு பெரும் பங்கை பவுல் என்பாருக்கு அளிக்கின்றார். காரணம் அவர் தான் கிறித்தவத்தின் உண்மையான நிறுவனர்.

கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்.

1 கொரிந்தியர் 15:14

ஆம்! ஒருவர் ஆன்மா மீட்பு அல்லது ஆன்மா மோட்சம், ஆத்ம ரட்சிப்பை அடைய வேண்டுமாயின் அதற்கு ஏசு மரணித்து, உயிர் பெற்று வர வேண்டும். இது தான் பவுல் புகுத்திய பயங்கரமான, படு மோசமான பாதகக் கொள்கையாகும்.

ஏசு மரணிக்கவில்லை என்றால், அவர் மரணித்து உயிர் பெற்று எழவில்லை என்றால் கிறித்தவத்தில் பாவ விமோச்சனம், ஆன்மா ரட்சிப்பு என்பதே இல்லை.

இது பவுல் அறிமுகம் செய்த கொள்கை! இந்தக் கொள்கை, கோட்பாட்டில் தான் மொத்த கிறித்தவமும் தொங்கிக் கொண்டிருக்கின்றது. உண்மையில் இது ஏசு போதித்த போதனைக்கு எதிரான கொள்கையாகும்.

ஒருவர் இயேசுவிடம் வந்து, “போதகரே, நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

இயேசு அவரிடம், “நன்மையைப் பற்றி என்னை ஏன் கேட்கிறீர்? நல்லவர்  (கடவுள்) ஒருவரே. நீர் வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும்” என்றார்.

அவர், “எவற்றை?” என்று கேட்டார். இயேசு, “கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச் சான்று சொல்லாதே; தாய் தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்பு கூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்று கூறினார். அந்த இளைஞர் அவரிடம், “இவை அனைத்தையும் நான் கடைப்பிடித்து வந்துள்ளேன். இன்னும் என்னிடம் குறைபடுவது என்ன?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்றார்.

மத்தேயு 19:16-21

ஆசான் ஏசுவின் இந்தக் கொள்கையைத் தான் மாணவர் பவுல் சிலுவையில் அறைந்து தொங்க விட்டு விட்டார்.

கிறித்தவர்களிடமிருந்து முஸ்லிம்கள் வேறுபட்டு நிற்பதற்கு அடிப்படை விவகாரமே பவுலுடைய “மனிதர்களின் பாவ மீட்சிக்காக ஏசு இரத்தம் சிந்தி, சிலுவையில் தொங்கி மரணித்தார்’ என்ற கொள்கை தான்.

பிறருக்கு உதவி செய்வதிலும், நன்மையான காரியங்களைச் செய்வதிலும் முஸ்லிம்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர். அவர்களை நோக்கி கிறித்தவப் பாதிரியார்கள், “நீங்கள் ஏசுவின் மரணத்தையும் அவர் உயிர் பெற்று எழுந்ததையும் நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் உங்கள் செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைகள், கருகிய இலைகள்’ என்று கூறுகின்றனர்.

எனவே கிறித்தவத்தின் இந்தக் கொள்கை சரி தானா என்ற ஆய்வில், கிறித்தவர்களின் சிம்ம சொப்பனமான அறிஞர் அஹ்மத் தீதாத் இறங்கினார்.

இந்த ஆய்வின் முடிவில், ஏசு மரணிக்கவில்லை என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்களை அள்ளிப் போடுகின்றார். அந்த ஆதாரங்களை இஸ்லாமிய ஆதார நூற்களான குர்ஆன், ஹதீஸிலிருந்து எடுத்துப் போடவில்லை. பைபிளிலிருந்தே எடுத்துப் போடுகின்றார். இதை இவ்விதழில் இன்ஷா அல்லாஹ் விரிவாகப் பார்ப்போம்.

ஏசுவின் மரணத்தைக் குறித்து முஸ்லிம்களின் நிலைப்பாட்டை முதலில் பார்த்துக் கொள்வோம்.

நாங்கள் தான் ஏசுவைக் கொன்றோம் என்று யூதர்கள் பெருமையடித்துக் கொள்கின்றனர். அவர்களுடைய பெருமையையும், கிறித்தவர்களின் சிலுவைக் கொள்கையையும் அல்லாஹ் அடித்துத் தகர்த்தெறிகிறான்.

அவர்கள் (ஏக இறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், “அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம்என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:156-158)

அவர் (ஈஸா) அந்த நேரத்தின் அடையாளமாவார். (அல்குர்ஆன் 43:61)

ஏசு சிலுவையில் அறையப்படவில்லை; அவர் கொல்லப்படவில்லை; மரணிக்கவும் இல்லை. அவருக்குப் பதிலாக வேறொருவர் சிலுவையில் அறையப்பட்டார். ஏசுவை அல்லாஹ் வானத்திற்கு உயர்த்திக் கொண்டான். கியாமத் நாள் நெருங்கும் போது ஏசு மீண்டும் வானிலிருந்து இறங்குவார். அதன் பின்னர் அவர் மரணிப்பார்.

இது ஏசு குறித்து முஸ்லிம்களின் நிலைப்பாடு!

ஒரு போலிக் கொள்கையைத் தகர்த்தெறிவதில் உறுதியான, ஆணித்தரமான, அழுத்தமான, கொள்கையில் சமரசம் செய்யாத பிரகடனம் இதை விட வேறென்ன இருக்க முடியும்?

கிறித்தவர்கள் மட்டும் குர்ஆனை அல்லாஹ்வின் வார்த்தைகள் என்று ஏற்றுக் கொண்டிருந்தால் சிலுவைப் பிரச்சனை அறவே எழுந்திருக்காது. ஆனால் அவர்கள் வலுக்கட்டாயமாக மறுப்பதுடன் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக அனைத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கின்றனர்.

தாமஸ் கார்ஸல் என்பவர் கூறுகிறார்: “அந்த மனிதர் முஹம்மது மீதும் அவரது மார்க்கத்தின் மீதும் வெறுப்புக் காட்டுமாறு கிறித்தவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.”

இந்த ஆய்வில் இடம் பெறும் கருத்துக்கள் அனைத்தும் கிறித்தவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில், முழுக்க முழுக்க பைபிளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. நமது கருத்தல்ல என்பதை மீண்டும் இங்கே பதிய வைக்கிறோம்.

இதை முழுமையாக மனதில் நிறுத்திக் கொண்டு இப்போது ஆய்வுக்குள் செல்வோம்.