ஏசு மரணிக்கவில்லை 

தொகுப்புரை

இதுவரை எடுத்துக் காட்டிய அனைத்து ஆதாரங்களும் ஏசு இறக்கவில்லை என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இங்கு இதுவரை கண்ட விளக்கங்களிலிருந்து சிறு குறிப்புகள் அடங்கிய ஒரு தொகுப்பை இங்கே அளிக்கிறோம்.

 1. இறப்பதற்கு ஏசு காட்டிய தயக்கம்

யூதர்களை அடக்குவதற்காக அவர் போர் வியூகம் வகுத்தார். காரணம், தாம் உயிருடன் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

 1. கடவுளின் உதவி கேட்டுப் பிரார்த்தனை

கடுமையான கதறல், கண்ணீர் மூலம் தன்னை உயிருடன் காக்க வேண்டும் என்று அவர் பிரார்த்தனை புரிந்தார்.

 1. இறைவன் அவரது பிரார்த்தனையை அங்கீகரித்தல்

தன்னை உயிருடன் காக்க வேண்டும் என்று ஏசு செய்த பிரார்த்தனையை கடவுள் ஒப்புக் கொண்டார்.

 1. வலுப்படுத்த வந்த வானவர்

அவரை உயிருடன் பாதுகாக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் கடவுள் வானவரை அனுப்பி அவரை வலுப்படுத்தினார்.

 1. பிலாத்து அவரை நிரபராதியாகக் காணுதல்

ஏசு ஒரு நிரபராதி என்று பிலாத்து செய்த முடிவு. ஏசுவுக்கு உயிர் வாழ்வளிப்பதற்கு ஒரு பொருத்தமான காரணமாக அமைகின்றது.

 1. பிலாத்தின் மனைவி கண்ட கனவு

ஏசுவுக்கு எந்தத் தீங்கும் ஏற்படக் கூடாது; அதாவது அவர் உயிருடன் காப்பாற்றப்பட வேண்டும் என்று பிலாத்தின் மனைவி, பிலாத்திடம் கோரிக்கை வைக்கின்றார்.

 1. சிலுவையில் 3 மணி நேரம்

வழக்கத்தில் உள்ள முறைப்படி, சிலுவையில் யாரும் இவ்வளவு சீக்கிரம் இறப்பதில்லை. ஏசு சிலுவையில் கட்டித் தொங்க விடப் பட்டிருந்தாலும் அவர் உயிருடன் தான் இருந்தார்.

 1. இரு சிலுவைக் கூட்டாளிகளும் உயிருடன் இருத்தல்

ஏசுவுடன் சிலுவையில் மாட்டப்பட்ட இரு சக சிலுவைக் கூட்டாளிகள் அதுவரை உயிருடன் தான் இருந்தனர். எனவே ஏசுவும் அதே கால கட்டத்திற்கு உயிருடன் தான் இருந்தாக வேண்டும்.

 1. பைபிள் கலைக் களஞ்சியத்தின் கருத்து

ஏசுவின் உடலில் ஈட்டி ஊடுறுவிய போது ஏசு உயிருடன் தான் இருந்தார் என்று சிலுவை என்ற தலைப்பின் கீழ் பைபிள் கலைக் களஞ்சியம், 960ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

 1. இரத்தமும் தண்ணீரும் கொப்பளித்தல்

ஈட்டி குத்திய மாத்திரத்தில், உடனே இரத்தமும் தண்ணீரும் கொட்டியது ஏசு உயிருடன் இருந்தார் என்பதற்கு ஒரு சிறந்த அடையாளம்.

 1. கால் எலும்புகள் முறிக்கப்படவில்லை

ஏசு உயிருடன் இருந்தால் தான் எலும்புகள் உடைக்கப்படாமல் இருப்பதில் ஒரு பயன் இருக்கும்.

 1. இடி, நில நடுக்கம், கிரகணம்

ஏசு சிலுவையில் கட்டப்பட்டிருக்கும் போது யூதர்கள் அருகில் இருந்தால், அவர் மரணிக்கவில்லை என்பதை யூதர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். அதனால் அவர்களைக் கலைப்பதற்காக இடி, நில நடுக்கம் மற்றும் கிரகணத்தைக் கடவுள் ஏற்படுத்துகிறார்.

 1. யூதர்களின் சந்தேகம்

ஏசு மரணத்திலிருந்து தப்பி விட்டார்; அவர் உயிருடன் உள்ளார் என்று யூதர்கள் சந்தேகம் கொண்டனர்.

 1. பிலாத்தின் ஆச்சரியம்

அவ்வளவு சீக்கிரத்தில் சிலுவையில் மாட்டப்பட்ட ஒருவர் இறக்க மாட்டார் என்று பிலாத் அனுபவத்தில் விளங்கியிருந்தார். அதனால் அவர் ஏசுவின் மரணத்தில் சந்தேகம் கொண்டிருந்தார்.

 1. கல்லறை ஒரு நல்லறை

ஏசுவின் கல்லறை விசாலமான, காற்றோட்டமான ஓர் அறையாக அமைந்திருந்தது. இது ஏசுவை உயிருடன் காப்பதற்கு வசதியாக அமைந்தது.

 1. அகற்றப்பட்ட கல்லறைக் கதவு

கல்லறைக் கதவு அகற்றப்பட்டது. உடல் துணி மடிக்கப்பட்டிருந்தது. எல்லாமே ஏசு உயிருடன் இருப்பதால் தான்.

 1. பிரேதத் துணி ஆய்வறிக்கை

ஏசுவின் பிரேதத் துணியை ஆய்வு செய்த ஜெர்மானிய அறிவியல் ஆய்வாளர்கள் ஏசுவின் இதயம் இயங்கிக் கொண்டிருந்தது என்று தெரிவிக்கின்றனர்.

 1. தோட்டக்காரர் வேடம்

ஏசு ஆவியானவராக எழுந்திருந்தால் தோட்டக்கார வேடம் அவருக்குத் தேவையில்லை. தோட்டக்கார வேடம் அவருக்குத் தேவைப்பட்டதற்குக் காரணம், தன்னை யூதர்கள் அடையாளம் கண்டு கொன்று விடக் கூடாது என்பதற்காகத் தான்.

 1. என்னைத் தொடாதே!

என்னைத் தொடாதே என்று மகதலா மேரியைப் பார்த்து ஏசு சொல்கிறார். அவ்வாறு தொடுவது தனக்கு வேதனையளிக்கும் என்பதால் இப்படிச் சொல்கிறார். இவ்வாறு அவர் சொல்வதிலிருந்து அவர் உயிருடன் இருப்பது உறுதியாகின்றது.

 1. தந்தையிடம் இன்னும் நான் செல்லவில்லை

யூதர்களின் வார்த்தையில், நான் இன்னும் இறக்கவில்லை, உயிருடன் தான் இருக்கிறேன் என்று ஏசு தெரிவிக்கின்றார்.

 1. பயப்படாத மேரி

ஏற்கனவே ஏசுவை உயிர்த் துடிப்புடன் கண்டதால் மகதலா மேரி, உயிருடன் உள்ள ஏசுவையே தேடுகின்றார்.

 1. பயத்தில் உறைந்த பக்த சீடர்கள்

ஏசு சிலுவையில் மாட்டப்பட்டு உயிர் துறந்தார் என்று செவி வழிச் செய்திகளை நம்பியதால் ஏசுவை நேரில் கண்டதும் சீடர்கள் பயத்தில் உறைந்தனர்.

 1. உணவு உண்ட ஏசு

உணவு இன்றியமையாதது. எப்போது? உயிருடன் இருக்கும் போது! ஏசு உயிருடன் இருந்தார். அதனால் அவர் உணவு சாப்பிட்டார்.

 1. எதிரிகளின் பார்வையிலிருந்து தப்பிய ஏசு

ஏசு எதிரிகளின் கண்களை விட்டும் தன்னைத் தற்காத்துக் கொண்டார். காரணம் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார் என்பதால் தான்.

 1. சுருக்கமான பயணம்

ஏசு மிக சுருக்கமான பயணத்தை மேற்கொண்டார். காரணம் அவர் உயிருடன் இருந்ததால்! ஆவியாக இருந்தால் தூரம் ஒரு பொருட்டல்ல!

 1. கல்லறைத் தோழர்களின் வாக்குமூலம்

கல்லறைத் தோழர்கள், மகதலா மேரியிடம், அவர்கள் அப்பெண்களை நோக்கி, “உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?” என்று கேட்கின்றனர். (லூக்கா 24:4)

ஏசு உயிருடன் இருந்தார் என்பதையே இது காட்டுகின்றது.

 1. வானவர்களின் வாக்குமூலம்

ஏசு உயிர் பெற்று எழுந்தார் என்றோ அல்லது ஆவியாக எழுந்தார் என்றோ வானவர்கள் சொல்லவில்லை. உயிருடன் உள்ளார் என்று தான் குறிப்பிடுகின்றனர்.

 1. மகதலா மேரியின் வாக்குமூலம்

மகதலா மேரி ஏசுவின் ஆவியை அல்லது அவரது பேயைத் தேடவில்லை. உயிருடன் உள்ள ஏசுவைத் தான் தேடுகிறார். சீடர்கள் நம்ப மறுத்தது, ஏசு உயிருடன் இருக்கிறார் என்பதைத் தான்.

 1. டாக்டர் பிரிமோஸ் வாக்குமூலம்

ஈட்டியின் தாக்குதல் உடலில் அதிகமான ஒரு தூண்டுதலை ஏற்படுத்துகின்றது. இதன் காரணமாக இரத்தக் குழாய்களின் நரம்பு மண்டலங்கள் நிலை குலைந்து தண்ணீர் வெளியாகின்றது என்று டாக்டர் பிரிமோஸ் அளிக்கும் வாக்குமூலமும் ஏசு உயிருடன் இருந்தார் என்பதைக் காட்டுகிறது.

 1. ஏசுவின் முன்னறிவிப்பு

ஏசு தன்னை யோனாவுடன் ஒப்பிடுகிறார். இந்த ஒப்பீட்டின்படி அவர் உயிருடன் இருந்தாக வேண்டும்.

இங்கு குறிப்பிட்ட இந்த சிறு குறிப்புத் தொகுப்புகளை, கிறித்தவத்தின் ஆத்மா மீட்புக் கொள்கைகளைப் பொசுக்குகின்ற நெருப்புப் பொறித் தொகுப்புகளைப் படியுங்கள். இதுவரை கண்ட விளக்கங்களையும் வாதங்களையும் படியுங்கள். கிறித்தவ நண்பர்களிடம் விவாதியுங்கள். அவர்கள் உண்மையான இறைத்தூதர் ஏசுவின் கொள்கைகளை ஏற்று மறுமையில் வெற்றி பெற அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.

முடிவுரை

அஹ்மத் தீதாத் கூறுகின்றார்:

என்னுடைய இளமைப் பருவத்தில் தென்னாப்பிரிக்காவின் ஆடம்ஸ் மிஷனில் நான் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது கிறித்தவ பாதிரி மாணவர்களுடன் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட நேர்ந்தது. மனித குல மீட்சிக்கு ஒரே வழி ஏசுவின் சிலுவை மரணம் தான் என்று அப்போதிருந்து எனக்கு ஊட்டப்பட்டது.

ஏசுவின் சிலுவை மரணம் தான் தங்களது விமோசனம் என்று அதிகமான கிறித்தவ இளைஞர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதைக் கண்டேன். அதை நம்பாதவர்கள் நரகவாதிகள் என்று அறிந்தேன். எளிதில் ஈர்ப்புக்குள்ளாகும் இளைஞனாக இருந்த என்னை இது மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கிறித்தவத்தின் அஸ்திவாரமான இந்த நம்பிக்கை, எனது ஆய்வின் மையக் கருவானது. புதிய ஏற்பாடுகள் அனைத்தையும் முழுமையாக மேய்ந்து, ஆய்ந்து உண்மையை அறிய முனைந்தேன்.

இவ்வாறு இந்த ஆய்வில் ஈடுபட்ட என்னிடம் யாரும் முஸ்லிம் என்ற அடிப்படையில் ஏசுவின் சிலுவை மரணம் பற்றி உன்னுடைய நம்பிக்கை என்ன? என்று கேட்க மாட்டார்கள் என்று மிகக் கண்ணியமாக நம்புகிறேன்.

காரணம் ஏசுவின் சிலுவை மரணம் தொடர்பாக என் நம்பிக்கை, திருக்குர்ஆன் 4:157 வசனம் ஆணித்தரமாகத் தெரிவிக்கின்ற அந்த சத்திய நம்பிக்கை தான்.

என் மீது கிறித்தவ நம்பிக்கையாளர்கள் காட்டிய கரிசனமும் அக்கறையும் தான் என்னுடைய இந்த ஆய்வுக்கு ஒரு தூண்டுகோலாகவும் உந்துதலாகவும் அமைந்தது.

அவர்களுடைய கரிசனத்தையும், ஆவலையும் நான் அதிகக் கவனத்துடனும், கருத்துடனும் எடுத்துக் கொண்டு, விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு, அவர்களுடைய ஆதாரங்களையே துணையாகக் கொண்டு இந்த ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டேன். அதன் விளைவுகளைத் தான் நீங்கள் இப்போது பகிர்ந்து கொண்டு திகைப்பில் ஆழ்ந்திருக்கிறீர்கள்.

என்னுடைய வீட்டு வாசலைப் பள்ளமாக்கி, கதவைத் தட்டி, இப்படி ஒரு முயற்சியில் என்னை இறக்கி விட்டு, இப்படி ஓர் ஆய்வை இயற்ற வைத்த நூற்றுக்கணக்கான கிறித்தவ நண்பர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்லாண்டுகள் நான் பட்ட பாட்டின், படித்துப் படித்துப் பார்த்து நான் செய்த ஆய்வின் பலன் இது என்று கூறி முடிக்கிறேன்.

– அஹ்மத் தீதாத்