இஸ்லாம் தான் எங்கள் அடையாளம்

இஸ்லாம் தான் எங்கள் அடையாளம்

மோடி ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் கழிந்து விட்டன. 68வது சுதந்திர தினம் அன்று அவர் குண்டு துளைக்காத கண்ணாடிக்குள் நிற்காமல் திறந்த வெளியில் நின்று பேசியதை ஓர் அசாதாரண செய்தி என்று தினமணி நாளிதழ் 21.08.2014 அன்று ஒரு தலையங்கமே தீட்டியிருந்தது. அவ்வாறு அவர் பேசியது ஒரு துணிச்சலான செயல் என்று தூக்கிப் போற்றியது.

பிரதம மந்திரியின் சுதந்திர தின உரையைக் கேட்க செங்கோட்டைக்கு வருவோர் அனைவரும் சோதனைக்குள்ளாகாமல் வர முடியாது. சாதாரண, சாமான்ய மக்கள் மற்ற பொதுக்கூட்டங்களில் சங்கமிப்பது போன்று அங்கு சங்கமிக்க முடியாது. கடுமையான பாதுகாப்பு வளையங்களைத் தாண்டித் தான் அங்குள்ள சபைகளுக்கு வர முடியும்.

மோடி கோட்டைக்கு வருவதற்கு முன்னால் இந்தப் பாதுகாப்பு அம்சங்கள் உறுதி செய்யப்பட்டு விடுகின்றன. கண்ணாடிக் கூண்டில் நிற்காமல் பேசினார், அது துணிச்சல், தைரியம் என்றெல்லாம் பாராட்டுவதற்கு இதில் ஏதுமில்லை.

அடுத்து, அவரது சுதந்திர தின உரையை தினமணி மட்டுமல்ல! அனைத்து அச்சு ஊடகங்களும், மின்னணு ஊடகங்களும் ஆஹா, ஓஹோ என்று பக்கம் பக்கமாகப் பாராட்டின. படம் படமாகக் காட்டி, புகழ்ந்து தள்ளின.

சாதுரியமான பேச்சு; சாணக்கியமான பேச்சு! அலங்கார வார்த்தைகள் இல்லாமல் பாமர மக்களின் அன்றாட வாழ்க்கையைப் படம் பிடிக்கும் பேச்சு என வானளாவப் புகழந்தன. உண்மையில் மோடியின் பேச்சு அனைவரையும் கவரும் வகையில் தான் இருந்தது.

சாதியம், வகுப்புவாதம் நம்முடைய முன்னேற்றத்தின் தடைக்கற்கள் என்று அவர் பேசும் போது, பேசுவது மோடிதானா என ஒரு கணம் யோசிக்க வைத்தது. வன்முறைப் பாதைக்கு விடை கொடுப்போம் என்று அவர் கூறியபோது, குஜராத்தின் கலவரக்கார மோடியல்ல, இந்தியாவின் சமாதானக்கார மோடி என்று நமக்குத் தோன்றியது.

ஆனால் அந்தப் பேச்சில் உண்மை இல்லை. மோடி மாறவில்லை. அவர் இன்னும் இந்துத்துவாவின் மூடி தான் என்பதை 17.08.2014 அன்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசிய பேச்சு தெளிவுபடுத்தி விட்டது.

“இந்தியா ஓர் இந்து நாடு! இந்துத்துவா தான் நமது நாட்டின் அடையாளம். அதாவது இந்த நாட்டின் குடிமக்கள் அனைவரின் அடையாளம் இந்துத்துவம் தான்” என்று மும்பையில் நடந்த வி.ஹெச்.பி. பொன்விழாக் கொண்டாட்டத்தின் போது மோகன் பகவத் பேசியுள்ளார்.

அனைத்து இந்தியர்களின் கலாச்சார அடையாளம் இந்துத்துவா தான்; தற்போதைய இந்தியாவில் வாழ்பவர்கள் அந்தக் கலாச்சாரத்தின் வழிவந்தவர்கள் தான் என்று அவர் முழங்கியுள்ளார்.

21.08.2014 அன்று இந்து ஆங்கில நாளேடு “கட்சியைக் கட்டுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் தீட்டிய தலையங்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளது,

“கருத்தொற்றுமையின் மூலமே ஆட்சி நடத்தியுள்ளேன். நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பலத்தை வைத்து அல்ல!” பிரதமர் மோடி கூறுகின்றார். ஆனால் மோகன் பகவத் போன்றவர்கள் இந்தியக் குடிமக்களை இந்துத்துவாவுடன் இணைத்துப் பேசும் பேச்சுக்களைப் பார்க்கும் போது, மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் பெரும்பான்மை சிந்தனையின் பக்கம் பாஜக ஆட்சி திரும்பிக் கொண்டிருக்கின்றது என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்துத்துவாவின் தாக்கத்தில் தாங்கள் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாக, மோகன் பகவத்தின் பேச்சுக்கும், தங்களுக்கும் அறவே சம்பந்தமில்லை என்பதை பாஜக பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு இந்து ஆங்கில நாளோடு கூறியுள்ளது.

மோகன் பகவத்தின் பேச்சுக்கு மோடி இதுவரை மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. தன் ஆட்சிக்கு வில்லங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக மோடி தற்காலிகமாக வாய் மூடியிருக்கின்றாரா? பின்னால் வாய் திறப்பாரா? என்பது தெரியவில்லை.

அவர் இந்துத்துவாவின் நிகழ்ச்சி நிரலைப் பேசவும், செயல்படுத்தவும் முனைவாரானால் நாடு சுடுகாடாக மாறிப் போய்விடும் என்று எச்சரிக்கின்றோம். அந்த அளவிற்கு அவர் செல்ல மாட்டார் என்று நம்புகின்றோம். அனைத்து மக்களும் மோடியிடம் விரும்புவதும், எதிர்பார்ப்பதும் கலவரம் இல்லாத ஒரு சமாதான ஆட்சியைத் தான்.

அத்துடன் மோடிக்கும், மோகன் பகவத்திற்கும் இன்னொன்றையும் சொல்லிக் கொள்கிறோம். இந்தியாவில் வாழ்கின்ற முஸ்லிம்களாகிய நாங்கள் இந்நாட்டு மண்ணின் மைந்தர்கள். கைபர் கணவாய் வழியாக வந்த வந்தேறிகள் அல்லர். நீங்கள் நம்புகின்ற இந்துக் கலாச்சாரத்தில் இருந்தவர்கள் தான் நாங்கள்! சாதிய நுகத்தடியில் அடிமைகளாய் நசுக்கப்பட்டவர்கள்! மனிதனாய் மதிக்கப்படாதவர்கள்! இந்தக் கட்டத்தில் தான் இஸ்லாம் எங்களை அரவணைத்து மனிதாக்கியது. எங்களுக்கு சம அந்தஸ்தும் சமூக மரியாதையும் அளித்தது. அதனால் நாங்கள் இஸ்லாத்தை எங்கள் அடையாளமாக்கிக் கொண்டோம். அது கூறிய இறை நம்பிக்கையை உயிர்மூச்சாக ஆக்கிக் கொண்டோம். அந்த அடையாளத்தை எங்களிடமிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது.

அப்படிப் பிரிக்க நினைத்தால் எங்களின் பதில் இது தான். தன்னையே கடவுள் என்று பிதற்றிக் கொண்ட ஃபிர்அவ்ன் எனும் கோர, கொடிய ஆட்சியாளனிடம், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மந்திரவாதிகள் முழங்கிய முழக்கத்தையும் வீர தீர விளக்கத்தையும் இங்கு மோடியை நோக்கி நாங்கள் கூறுகிறோம். இதோ அந்த அனல் பறக்கும் ஆவேச வார்த்தைகள்:

எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்என்று அவர்கள் கூறினார்கள்.

அல்குர்ஆன் 20:72

எங்களின் உயிர்க்காற்றை உடற்கூட்டிலிருந்து பிரிக்கலாமே தவிர எங்களின் ஈமானியக் கொள்கையை, இஸ்லாமிய அடையாளத்தை எங்களை விட்டும் பிரிக்க முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இஸ்லாம் என்ற அடையாளம் உங்களையும் எங்களையும் படைத்த ஏக இறைவன் இட்ட அடையாளமாகும்.

அல்லாஹ் தீட்டும் (இஸ்லாம் எனும்) வர்ணத்தை (நாங்கள் ஏற்பவர்கள்.) அல்லாஹ்வை விட அழகிய வர்ணம் தீட்டுபவன் யார்? நாங்கள் அவனையே வணங்குபவர்கள்

அல்குர்ஆன் 2:138

அத்துடன் இன்னொன்றையும் சொல்லிக் கொள்கிறோம்.

சாதிக் கொடுமை, பாலியல் கொடுமை, லஞ்ச ஊழல்கள் போன்றவற்றைப் பற்றி மோடி தனது உரையில் பேசியுள்ளார். இந்த சமூகக் கொடுமையிலிருந்து ஒரு நாடு விடுதலை பெறாத வரை அந்நாடு சுதந்திர நாடல்ல! அது அடிமை நாடுதான் என்று அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சமூகக் கொடுமைகளிலிருந்து நாடு விடுதலை பெறவேண்டுமானால் அதற்குரிய ஒரே வழி இந்நாட்டுக் குடிமக்கள் இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்வது தான். இது நடக்காதவரை நாடு உண்மையான விடுதலையை அடையாது.