இஸ்லாம் ஓர் ஈர்ப்பு சக்தி

இஸ்லாம் ஓர் ஈர்ப்பு சக்தி

இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டது என்று இஸ்லாத்தின் எதிரிகள், குறிப்பாக கிறித்தவ நாடுகளின் ஊடகங்கள் தொடர்ந்து, திட்டமிட்டு ஒரு தவறான பிரச்சாரத்தைச் செய்து வருகின்றன. ஆனால் உண்மை நிலை என்ன?

இன்று உலகில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாம் பெரும் வளர்ச்சியைக் கண்டு கொண்டிருக்கின்றது. அந்த நாடுகளிலெல்லாம் யாரும் இஸ்லாத்தை வற்புறுத்திப் பரப்பவில்லை.

இஸ்லாத்தின் கடவுள் கொள்கையான ஓரிறைக் கொள்கை, இந்த அறிவியல் யுகத்திலும் அசைக்க முடியாத அற்புதமாகத் திகழும் அல்குர்ஆன், அதைக் கடைப்பிடிக்கும் முஸ்லிம்களின் செயல்பாடுகள் ஆகியவற்றைப் பார்த்தே அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றனர்.

அண்மையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வேய்ன் பர்னல் என்பவர் கிறித்தவ மதத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தைத் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் இஸ்லாத்தில் இணைவதற்குத் தூண்டுகோலாக இருந்தது எது? அவரை இஸ்லாத்தின்பால் ஈர்த்தது எது? வாள்முனையா? யாரேனும் ஒருவருடைய வற்புறுத்தலா? அல்லது பணத்தைக் காட்டி இஸ்லாத்திற்கு அழைத்தார்களா?

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மற்றொரு வீரர் ஹாஷிம் அம்லா என்பவர். இவர் தனது அணி கிரிக்கெட் விளையாடுவதற்காக எங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் ஐவேளைத் தொழுகையையும் விடாமல் கடைப்பிடிக்கின்றார். மது வினியோகம் நடைபெறுகின்ற எந்தவொரு விழாவிலும் அவர் பங்கேற்பது கிடையாது. அவருடன் விளையாடும் சக வீரர்கள் மது அருந்துதல் மற்றும் இதர கொண்டாட்டங்களில் ஈடுபடும் போது அவர் விலகியே இருப்பார். கேஸ்டல் லேஜர் என்ற பீர் கம்பெனியால் செலவுப் பொறுப்பேற்று வழங்கப்பட்ட ஆடைகளை அவர் அணிய மறுத்து விட்டார். இது எங்களுடைய உள்ளத்தைத் தொட்டு விட்டது என்று அவருடன் விளையாடும் சக வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

வேய்ன் பர்னலை, இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஹாஷிம் அம்லா ஒருபோதும் வற்புறுத்தியது கிடையாது. ஆனாலும் அம்லாவின் மார்க்கப் பிடிப்பு வேய்ன் பர்னலை இஸ்லாத்தின் பால் ஈர்த்துள்ளது என்பதை விளங்க முடிகின்றது.

கிரிக்கெட் விளையாட்டு மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதல்ல என்றாலும் அதிலுள்ள அனாச்சாரங்களால் அது வரவேற்கத்தக்க விளையாட்டும் அல்ல. இருந்தாலும் அதில் ஈடுபட்ட ஒருவர், மது அருந்தாமல் இருப்பது, தொழுகை உள்ளிட்ட மார்க்க விஷயங்களைக் கடைப்பிடிப்பதே இவ்வளவு ஈர்ப்பைப் பெறுகின்றது என்றால் குர்ஆனை முஸ்லிம்கள் முழுமையாகப் பின்பற்றினால் அல்லாஹ்வின் அருளால் உலகில் மாபெரும் புரட்சி மலர்ந்து விடும்.

சொல் பிரச்சாரம் மட்டுமே மக்களை ஈர்ப்பதில்லை. ஒருவர் மார்க்கத்தைப் பின்பற்றும் அந்தச் செயல்பாடு, அவரது ஒழுக்கம், ஈடுபாடு போன்றவை ஒரு செயல் பிரச்சாரமாகி விடுகின்றது.

அல்குர்ஆன் இறங்கிய இந்த அருள் மாதத்தில் நாம் நம்முடைய மார்க்கத்தை முழுமையாகக் கடைப்பிடித்து, அதன் மூலம் நம்மைச் சுற்றியுள்ள மக்களிடம் இந்தத் தூய மார்க்கத்தை எடுத்துச் செல்வதற்கு உறுதியேற்போம்.

அமுலுக்கு வந்த அல்குர்ஆன் சட்டங்கள்

1980க்கு முன்பு தமிழகத்தில் தவ்ஹீது என்ற வார்த்தை கூட அறிமுகமாகி இருக்கவில்லை. ஆனால் ஆலிம்களிடம் அறிமுகமாகி இருந்தது. இன்றைக்கு நாம் விளங்கி வைத்திருக்கும் அர்த்தத்தில் அல்ல! “இறந்து விட்ட எந்தப் பெரியாரிடமும் உதவி தேடக் கூடாது; அவர்கள் ஒரு போதும் செவியேற்க மாட்டார்கள்; அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே பிரார்த்திக்க வேண்டும்’ என்று நாம் இன்று விளங்கி வைத்திருக்கும் அர்த்தத்தில் அன்று இந்த வார்த்தை அறிமுகமாகவில்லை. இறந்து விட்ட பெரியார்களிடமும் பிரார்த்திக்கலாம், அதுவும் தவ்ஹீதில் உள்ளது தான் என்று விளங்கி வைத்திருந்தோம்.

உம்மு ஹபீபா அவர்களும் உம்மு சலமா அவர்களும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள். மேலும் அவ்விருவரும், நபி (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும் போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டி அதில் (அவருடைய) அந்த உருவங்களை வரைவார்கள். அவர்கள் தாம் மறுமை நாளில் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 427

நீங்கள் கப்ருகள் மீது அமராதீர்கள். கப்ருகளை நோக்கித் தொழாதீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமர்ஸத் அல்ஃகனவீ, நூல்: முஸ்லிம் 1613

கப்ரு பூசப்படுவதையும் அதன் மீது அமர்வதையும் அதைக் கட்டுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 1610

கப்ருகள் பூசப்படுவதையும், அதன் மீது எழுதப்படுவதையும், அதன் மீது கட்டடம் எழுப்புவதையும் அதை மிதிப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: திர்மிதீ 972

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டு விடாதீர்; (தரையை விட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அஸதீ, நூல்: முஸ்லிம் 1609

இந்த ஹதீஸ்கள் எல்லாம் மக்களிடம் மறைக்கப்பட்டு இருந்தன. இந்த ஹதீஸ்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து இதன் படி மக்களை இன்று செயல்பட வைத்திருக்கின்றோம், அல்ஹம்துலில்லாஹ்!

கப்ருகள், விண்ணைத் தொடும் மினாராக்களுடன் கட்டப்பட்ட தர்ஹாக்கள் தகர்க்கப்படவும், தரை மட்டமாக்கப்படவும் வேண்டிய பணியை மட்டும் நம்மால் செய்ய முடியவில்லை. காரணம், இது ஆட்சியாளர்களால் செய்யப்பட வேண்டியதாகும். எல்லோரும் மொத்தமாக ஏகத்துவத்தில் இணைந்த சகோதரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கப்ருகளைத் தரை மட்டமாக்கிய வரலாறும் உண்டு.

ஆனால் அதே சமயம் தர்ஹாக்களே கதி என்று குடியிருந்தவர்கள் எல்லாம் தவ்ஹீதே கதி என்றாகி விட்டனர். குறிப்பாகப் பெண்களிடம் இத்தகைய மாற்றம் ஏற்பட்டது அல்லாஹ்வின் மகத்தான கருணையாகும்.

பெண்கள் தான் அதிகமாக தர்ஹா வழிபாட்டில் மூழ்கிக் கிடந்தவர்கள். அவர்கள் இன்று தவ்ஹீதைத் தங்கள் உள்ளங்களில் ஏந்திக் கொண்டு தவ்ஹீதுக் கூட்டங்களில் தேனீக்கள் போன்று மொய்க்கும் காட்சி தமிழகம் காணாத வரலாற்றுப் புரட்சியாகும்.