குடும்பவியல் தொடர்: 6
குடும்பத்தை நாசமாக்கும் விபச்சாரம்
எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.
குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கிய பின்னர் அதைப் பலர் நாசமாக்கி விடுகின்றனர். இதற்குக் காரணம், ஒரு பெண்ணின் கணவனாக இருந்து கொண்டே தவறாகப் பிற பெண்களிடம் உடலுறவு கொள்வதும், ஒரு ஆணுடைய மனைவியாக இருந்து கொண்டே பிற ஆண்களிடம் உடலுறவு கொள்வதுமேயாகும்.
அதாவது கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையான விசுவாசமானவர்களாக இருப்பதில்லை. உண்மையான விசுவாசிகளாக ஒருவருக்கொருவர் இருந்தால் தான், குடும்ப அமைப்பில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று நாம் இந்தத் தொடரில் தெரிந்து கொண்டோமோ அவை அனைத்தும் நமக்குக் கிடைக்கும்.
எப்போது ஒருவன் மனைவியல்லாத வேறொரு பெண்ணின் பக்கம் கவனத்தைத் திருப்பி விடுகிறானோ அப்போது அவனுக்கு மனைவி அசிங்கமாகத் தான் தெரிவாள். அதேபோன்று கணவல்லாதவனின் பால் கவனத்தைத் திருப்பிய பெண்ணுக்கு அவளது கணவன் அருவருப்பாகத் தான் தெரிவான்.
கணவன், மனைவியின் மீதும் மனைவி, கணவன் மீதும் மட்டுமே கவனத்தைச் செலுத்த வேண்டும். பார்ப்பதையெல்லாம் ரசிக்க ஆரம்பித்து தட்டுத் தடுமாறினால் கடைசியில் இங்கேயும் மகிழ்ச்சியில்லாமல் அங்கேயும் மகிழ்ச்சியில்லாமல் நாசமாகி விடுகிறார்கள். எனவே கணவன் மனைவி என்ற ஹலாலான முறையிலேயே முழு இன்பத்தையும் ஒருவருக்கொருவர் அடைய முடியும். யாரோ தவறாகச் சொன்னதையெல்லாம் மனதிற்குள் நினைத்துக் கொண்டு, ஹராமான முறையில் வேலி தாண்டிச் செல்கின்ற கணவனுக்கோ மனைவிக்கோ எந்த நிம்மதியும் கிடைக்கவே கிடைக்காது. இன்னும் சொல்லப்போனால் வேலி தாண்டிச் செல்கின்ற போது, மனிதன் என்ற முறையில் கிடைக்கிற அடிப்படையான விஷயங்களில் கூட நிம்மதியை இழக்கிறார்கள்.
அறிவியல் பிரகாரம் கணவன், மனைவி என்ற குடும்ப அமைப்பில் பெறும் இல்லறத்தினால் நிம்மதி கிடைக்கிறது. மன உளைச்சலுக்கும் உடற்கூறு பிரச்சனைகளுக்கும் அருமருந்தாக இல்லறம் பயன்படுகிறது. ஆனால் வேலி தாண்டிச் செல்கிறவர்களுக்கு அந்த மருந்தே விஷமாக மாறிவிடுகிறது. அதாவது நல்லதைக் கெட்டதாக்கி விடுகிறார்கள்.
மருந்து என்பது நோயைக் குணப்படுத்துவதற்குத் தான். அந்த மருந்தே விஷமாகவும் நோயாகவும் மாறிவிட்டால் அந்த மருந்தைச் சாப்பிடாமலேயே இருந்திருக்கிலாம்.
தாம்பத்தியம் என்ற மருந்தைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருப்பதால் விஷமாக்கிக் கொண்டார்கள். இப்படிப்பட்ட ஆண்களுக்கு தனது மனைவியிடமும் சரியான சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்காது. எந்த வழியில் தவறாக தாம்பத்தியத்தைப் பெறுகிறானோ அங்கேயும் முழுமையான சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்காது. இதே நிலை தடம் மாறிச் செல்கிற பெண்களுக்கும் பொருந்தும்.
எனவே ஒருக்காலும் மனித சமூகம் இதுபோன்று தடம் மாறிச் சென்றுவிடக் கூடாது. பிற சமூக மக்களை விட முஸ்லிம்கள் தடம் மாறிச் செல்லாமல் இருப்பது இலகுவானது தான். ஏனெனில் பிற சமூக மக்களுக்கு இறைநெறி, மறுமை போன்றவைகளில் சரியான நம்பிக்கை கிடையாது. முஸ்லிம்களைப் பொறுத்த வரை அல்லாஹ் நாம் செய்கிற நல்ல, கெட்ட அனைத்து செயல்பாடுகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்; அல்லாஹ் பதிவு செய்து வைத்திருப்பதை விசாரிப்பான்; மறுமையில் அதனடிப்படையில் தான் சுவர்க்கமும் நரகமும் தீர்மானிக்கப்படும் என்றெல்லாம் நம்புகிறோம். எனவே இது சம்பந்தமாக இஸ்லாம் என்னவெல்லாம் நமக்குச் கட்டளையிடுகிறது என்பதைத் தெரிந்து கொண்டால் இதுபோன்ற ஷைத்தானியப் பண்புகளிலிருந்து கண்டிப்பாக விடுபட்டுவிடுவோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபச்சாரம் செய்பவன், விபச்சாரம் புரியும் போது மூமினாக இருந்து கொண்டு விபச்சாரம் புரிவதில்லை. மேலும், ஒருவன் மது அருந்தும் போது மூமினாக இருந்து கொண்டு மது அருந்துவதில்லை. ஒருவன் திருடுகின்ற பொழுது மூமினாக இருந்து கொண்டு திருடுவதில்லை. ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, (பிறரது பொருளை அபகரித்துக்) கொள்ளையடிக்கும் போது மூமினாக இருந்து கொண்டு கொள்ளையடிப்பதில்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 2475, 5578, 6772, 6782, 6810
விபச்சாரம் செய்கின்ற போது ஒருவன் முஃமினாக இருக்கவே மாட்டான் என்று நபியவர்கள் சொல்லிக் காட்டுகின்றார்கள். அப்படியெனில் விபச்சாரம் செய்கின்ற போது மரணம் வந்தால், நிச்சயமாக அவர் முஃமினாக இருக்கவே முடியாது. மரணிக்கிற போது முஃமினாக இல்லாமல் மரணித்தால் நரகத்திற்குத் தான் செல்வான்.
எனவே விபச்சாரம் செய்யும் ஒவ்வொருவரும், அதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிற ஒவ்வொருவரும் இந்தச் செய்தியை நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளனர். எந்த நிலையிலும் மரணம் வரலாம் என்று மரணத்தை நினைவு கூர்ந்து இதுபோன்ற தவறுகளிலிருந்து தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். ஈமானே போய் விடுகிறதெனில் அதை விடப் பெரும்பாவம் வேறொன்றும் இல்லை என்ற கருத்தை இந்தச் செய்திகள் தருகின்றன.
நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது” என்று சொன்னார்கள். நான், “நிச்சயமாக அது மிகப்பெரிய குற்றம் தான்” என்று சொல்-விட்டு, “பிறகு எது?” என்று கேட்டேன். “உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது” என்று சொன்னார்கள். நான், “பிறகு எது?” என்று கேட்க, அவர்கள், “உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி 4477, 4761, 6001, 6811, 6861, 7520, 7532
இதில் முதலாவது பெரும்பாவமாக நபியவர்கள் சொன்னதும் ஸஹாபாக்கள் அது உண்மையில் பெரியது தான் என்று எங்களுத்தான் தெரியுமே என்று பதில் சொல்கிறார்கள். எனவே இந்தச் சமூகம் அடிப்படையாகத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இணை வைப்பு என்ற மாபாதகச் செயலைத் தான். அடுத்து தன் குழந்தையைத் தானே கொல்வதை நபியவர்கள் கூறினார்கள். மூன்றாவதாக, அண்டை வீட்டாரின் மனைவியுடன் விபச்சாரம் செய்வது பற்றி எச்சரிக்கிறார்கள்.
ஆணுக்கோ பெண்ணுக்கோ பாலியல் ரீதியாக பெரும்பாலான ஒழுக்கக் கேடுகள் நடப்பதற்கு, நெருக்கமானவர்கள் தான் காரணமாக இருக்கின்றார்கள். யாரென்று அறியாதவர்களால் இந்த நிலை பெரும்பாலும் ஏற்படுவதில்லை. பலவந்தமாக, வலுக்கட்டாயமான கற்பழிப்புகள் தான் முன்பின் அறியாதவர்களால் ஏற்படும்.
தெரிந்து கொண்டே செய்கிற விபச்சாரமெல்லாம் நன்றாகப் பழகியவர்கள் மூலமாகவும், வீட்டிற்கு வந்து போய் இருப்பவர்களின் மூலமாகவும் தான் நடக்கிறது. இதுபோன்ற தவறுகள் எல்லாம் தூரத்துச் சொந்தம், அண்டை வீட்டுக்காரன், கணவனுக்கு நெருக்கமானவர்கள் போன்றவர்களின் மூலமாகத் தான் நடக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் திடீரென ஒருவன் ஒரு வீட்டில் நுழைந்தால் நாமெல்லாம் சந்தேகப்பட்டு விடுவோம். ஆனால் அடிக்கடி வந்து போய் பழகுகின்ற ஒருவனை மற்றவர்களும் சந்தேகம் கொள்ள மாட்டார்கள். இப்படி நம்மை நம்பியிருக்கிற அண்டை வீட்டுக்காரனுக்கு நாம் செய்கிற துரோகத்தை விபச்சாரத்தில் பெரியதாக நபியவர்கள் சொல்லிக் காட்டுகிறார்கள்.
அண்டை வீட்டுக்காரன் என்பதில் நிறைய விஷயங்கள் உள்ளடங்கியிருக்கிறன. அண்டை வீடு எனும் போது, அவர்கள் வீட்டில் என்ன நடக்கிறது என ஒருவனுக்குத் தெரியும். அவளது வீட்டுக்காரன் எப்போது வெளியே போவான். எப்போது உள்ளே வருவான் என்பதையெல்லாம் தெரிந்து வைத்திருப்பான். இதையெல்லாம் கண்கானிப்பதற்கு அண்டை வீட்டுக்காரனுக்குத் தான் வாய்ப்புக்கள் அதிகம். இப்படி கண்கானிப்பது தவறு கிடையாது. ஆனால் அவர்களைப் பாதுகாப்பதற்கு அது பயன்பட வேண்டுமே தவிர அவர்களைச் சீரழிப்பதற்குப் பயன்படக்கூடாது.
கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விசுவாசமானவர்களாக நடந்து கொள்வார்கள் எனில், அவர்களுக்கு மறுமையில் அல்லாஹ்வின் நிழல் கூலியாகக் கிடைக்கும். அதில் ஏழு வகையினரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்டியலிடுகிறார்கள். ஒருவன் விபச்சாரம் செய்வதற்கு வாய்ப்பு தானாகக் கிடைத்தும் அல்லாஹ்விற்குப் பயந்து கொண்டு அதிலிருந்து விலகியவனையும் அந்தப் பட்டியலில் சேர்க்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்:
- நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர். 4. அல்லாஹ்வுக்காகவே நட்பு கொண்டு அந்த நிலையிலேயே (இவ்வுலகி-ருந்து) பிரிந்து சென்ற இருவர். 5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும் “நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” என்று கூறியவர். 6. தமது வலக் கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். 7. தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 660, 1423, 6806
இன்னும் இந்தக் குடும்ப வாழ்க்கை சம்பந்தமாக ஏராளமான செய்திகள் இருக்கின்றன. அவை ஒழுங்காக உள்ளத்தில் பதிந்தால் தான் நமது குடும்பத்தை நாம் சரியாக நடத்த முடியும். முதலில் அஸ்திவாரம் சரியாக இருந்தால் தான் அதன் மேல் கட்டடத்தை எழுப்பலாம். அஸ்திவாரம் இல்லாமல் கட்டிடம் எழுப்பினால் ஒரே காற்றில் அனைத்தும் விழுந்துவிடும்.
அஸ்திவாரம் என்றால் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் விசுவாசமாகவும் ஒழுக்கமிக்கவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது தான். எனவே அதிலுள்ள செய்திகளை அறிந்து கொண்ட பிறகு குடும்பவியலின் சட்டத்திற்குள் நுழைவோம்.