ஓரினச் சேர்க்கை

குடும்பவியல் தொடர்: 4

ஓரினச் சேர்க்கை

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

குடும்பவியலில் முதற்கட்டமாக, குடும்ப அமைப்பைச் சீரழிக்கும் காரணங்களைப் பார்த்து வருகின்றோம்.

துறவறம், யாரும் யாருடனும் சேர்ந்து கொள்ளலாம் எனப் போதிக்கும் கட்டுப்பாடற்ற உறவுகள் போன்றவற்றின் தீமைகளைக் கடந்த இதழ்களில் கண்டோம். அந்த வரிசையில் ஒன்றுதான் ஓரினச் சேர்க்கையாகும்.

ஆண் இனம், பெண் இனத்துடன் தான் உடலுறவு கொள்ள வேண்டும். அதுதான் இயற்கை. அப்படித்தான் அல்லாஹ் படைத்திருக்கிறான். ஆனால் மனித சமூகத்தில் சில ஈனச் செயல் புரிகின்ற இழிபிறவிகள், ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண் என்று சொல்லும் ஹோமோ, லெஸ்பியன் என்ற ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர். இப்படியொரு தவறான செயலைச் செய்து கொண்டு, அது தவறு இல்லை என்று ஓரினச் சேர்க்கைக்காக ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்கிற சூழ்நிலையெல்லாம் தற்போது நிலவி வருகின்றது. இதுபோன்ற நிலையை எல்லா ஆண்களும், பெண்களும் எடுத்தால், இவ்வுலகத்தில் மனித சந்ததிகள் அத்துடன் முடிவடைந்துவிடும்.

இப்படி ஆணுடன் ஆண், பெண்ணுடன் பெண் என்று திரிபவர்களுக்கு இளமையாக இருக்கிற போது நன்றாகத்தான் தெரியும். ஆனால் ஐம்பது அறுபது வயதை அடையும் போது, இந்த உடலுறவு ஆசைகள் அற்றுவிடுகின்ற, தள்ளாடும் வயதை அடையும் போது அவனுக்குக் கஞ்சி கொடுப்பதற்கு வாரிசு இருக்குமா?

ஆணுடன் ஆணும், பெண்ணுடன் பெண்ணும் சேர்ந்தால் வாரிசு உருவாகாது. நமக்கென நாம் பெற்றெடுத்த ஒரு வாரிசு இருந்தால் தான் நம்மைத் தூக்கிப் பராமரிப்பார்கள். நமக்குத் தேவையான வசதி வாய்ப்புக்களைச் செய்து தருவார்கள். ஆணுடன் பெண், பெண்ணுடன் ஆண் என்று இயற்கை நியதியில் இருந்தால் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பார்கள். ஒருவருக்கொருவர் சேவை செய்ய வேண்டும் என்கிற மனநிலையில் தான் மனிதன் படைக்கப்பட்டிருக்கிறான்.

ஆண், பெண் என்ற வெவ்வேறான பாலியல் முறையே சேவை செய்யத் தூண்டும். ஆனால் ஒரே இனத்தைச் சார்ந்த இருவர்கள் வாலிபப் பருவத்தில் அந்த உடலுறவு ஆசை இருக்கும் போது உள்ள ஈர்ப்பு கடைசி வரைக்கும் வராது. ஏனெனில் தவறானதைச் செய்வதற்குத் தான் பழகினார்களே தவிர, கணவன் மனைவி எனும் குடும்ப அமைப்பு அதில் இருக்காது. பிறகு எப்படி சேவை செய்கின்ற மனப்பான்மை வரும். நான் இவனுக்கு ஏன் சேவை செய்ய வேண்டும் என்று தான் தோன்றும். இந்த உறவு முறையை இன்றைய மீடியாக்களும், பத்திரிக்கைகளும், போலி அறிவு ஜீவிகளும் சரிகாண்பது மனித சமூகத்தைச் சீரழித்துவிடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

எனவே ஓரினச் சேர்க்கை என்பதும் குடும்ப அமைப்பைச் சீரழிக்கின்ற காரணங்களில் உள்ளது தான். ஓரினச் சேர்க்கைக்கு எதிராக, லூத் என்ற ஒரு தனி நபியை அல்லாஹ் அனுப்பி எச்சரித்து, பிறகு அந்த ஓரினச் சேர்க்கையாளர்களின் ஊரையே அழித்ததாகத் திருக்குர்ஆன் மூலம் மனித சமூகத்தை இஸ்லாம் எச்சரிக்கின்றது.

இப்படிப்பட்ட ஹோமோ செக்ஸ் என்று சொல்லப்படும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்கள், குடும்பத்துடன் இருந்தாலும் அவர்கள் குடும்பத்தினருக்குத் துரோகம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.

ஓரினச் சேர்க்கையாளர்கள் இந்தப் பழக்கத்தைச் சரி காண்பதற்காக இது ஆதி மனிதன் காலத்திலிருந்தே வந்ததாகச் சொல்லுவார்கள். ஆனால் அது தவறானது. இயற்கையில் ஒருபோதும் இந்தப் பழக்கம் வந்திருக்கவே முடியாது. இந்தப் பழக்கம் எவனோ ஒரு கேடுகெட்டவனால் மனித சமூகத்தில் இடையில் உருவாக்கப்பட்டது என்பதற்கு, இஸ்லாமிய மார்க்கத்தில் வரலாற்று ரீதியான செய்தியைப் பார்க்க முடிகிறது.

லூத் என்ற ஒரு நபியின் காலத்தில் தான் இந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் உருவானார்கள் என்பதே சரியானதாகும்.

இறைவனின் படைப்பில் ஆண் பெண் உறவு தான் இயற்கையானது. இதுபோன்ற கேடுகெட்ட செயல் இடையில் உள்ளது தான்.

லூத்தையும் (தூதராக அனுப்பினோம்). “உலகில் உங்களுக்கு முன் யாரும் செய்திராத வெட்கக்கேடான காரியத்தையா செய்கிறீர்கள்?” என்று தமது சமுதாயத்திடம் கேட்டார்.

நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள்! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள்” (என்றும் கூறினார்.)

அல்குர்ஆன் 7:80, 81

லூத்தையும் (அனுப்பினோம்). “நீங்கள் வெட்கக்கேடான செயலைச் செய்கிறீர்கள்! அகிலத்தாரில் உங்களுக்கு முன் யாரும் இதைச் செய்ததில்லை. சரியான வழியைத் துண்டித்து விட்டு ஆண்களிடம் செல்கிறீர்களா? உங்கள் சபையில் அந்த வெறுக்கத்தக்க செயலைச் செய்கிறீர்களா?” என்று அவர் தமது சமுதாயத்துக்குக் கூறிய போது, “நீர் உண்மையாளராக இருந்தால் அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராகஎன்று கூறியதைத் தவிர வேறு எதுவும் அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.

அல்குர்ஆன் 29:28, 29

இந்த வசனத்தில் லூத் நபியவர்கள், “இவ்வுலகில் நீங்கள் தான் முதன் முதலாக இந்த மானக்கேடான செயலைச் செய்கிறீர்கள்’ என்று சொன்னதிலிருந்தே லூத் நபி காலத்திற்கு முந்தைய மனித சமூகத்தில் இந்தக் கேடுகெட்ட பழக்கம் இருந்ததில்லை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆண் என்பவன் பெண்ணையும், பெண் என்பவள் ஆணையும் விரும்பக் கூடியவர்களாகத் தான் மனித உருவாக்கமே இருக்கிறது. அதனால் தான் அல்லாஹ், ஆதம் என்ற ஆணையும் ஹவ்வா என்ற பெண்ணையும் படைத்தான். ஆதம் நபியின் வழிகாட்டலில் தான் மனித சமூகம் வந்திருக்க வேண்டும். இந்த இயற்கை அமைப்பு உடைக்கப்பட்டு இயற்கைக்கு மாற்றமான செயல் லூத் நபி காலத்தில் உருவாக்கப்பட்டது.

அல்லாஹ் இந்த இழி செயலுக்குக் கொடுத்த தண்டனை, அந்த ஊரே தலைகீழாகப் புரட்டப்பட்டது. அவர்களின் இழிசெயலினால் அந்தளவுக்கு அல்லாஹ்விற்குக் கோபம் ஏற்பட்டுள்ளது என்பதை இந்தத் தண்டனையிலிருந்து நம்மால் உணர முடிகிறது.

நமது கட்டளை வந்த போது, அவ்வூரின் மீது சுடப்பட்ட கற்களால் கல் மழை பொழிந்து, அதன் மேற்பகுதியை கீழ்ப்பகுதியாக் கினோம்.

அல்குர்ஆன் 11:82

தோசையைப் புரட்டுவது போன்று புரட்டியதாகச் சொல்கிறான். மேலும் சூடேற்றப்பட்ட கற்களை மழையாகப் பொழிந்தான். மேலும் அவர்களைக் குருடர்களாக்கியதாகவும் சொல்கிறான்.

அவருடைய விருந்தினரை தீய காரியத்திற்கு அவர்கள் இழுத்தனர். உடனே அவர்களின் கண்களைக் குருடாக்கினோம். எனது வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவையுங்கள்! (என்றோம்) அதிகாலை நேரத்தில் நிலையான வேதனை அவர்களைப் பிடித்தது.

அல்குர்ஆன் 54:37, 38

ஒட்டுமொத்தமாக ஊரோடு அழித்துவிட்டான். காரணம் அல்லாஹ்விற்கு எதிராக யுத்தம் செய்கின்ற செயல் தான் இந்த ஓரினச் சேர்க்கை என்பது. ஏனெனில் இறைவன் உருவாக்கிய ஆண், பெண் என்ற இயற்கை அமைப்புக்கு எதிரான யுத்தமாகும்.

இன்னும் சொல்லப் போனால், மலம் வருகிற பாதையில் உடலுறவு கொள்வதும் எய்ட்ஸ் உருவாவதற்குக் காரணம் என்பதை இன்றைய உடற்கூறு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதற்குப் பல காரணங்களையும் சொல்கின்றார்கள்.

அன்றைக்கு ஊரோடு அழிப்பதைத் தண்டனையாக இறைவன் கொடுத்தான். ஆனால் இன்று எய்ட்ஸ் என்ற கிருமியைக் கொடுத்து, எந்த நோய் ஏற்பட்டாலும் குணமடையாமல், உயிருடன் இருந்து கொண்டே சாகின்ற நிலையை தண்டனையாகக் கொடுத்துள்ளான்.

எனவே முஸ்லிம்களாகிய நாம், குடும்ப அமைப்பை நாசமாக்குகின்ற எந்தவொரு காரியத்தையும் ஒருக்காலும் கையாண்டுவிடக் கூடாது.

முதலாவதாக, துறவறத்தை எதிர்த்துக் களமிறங்க வேண்டும். மேலும் அதற்கு எதிராக இன்றைய உலகில் வீரியமிக்க பிரச்சாரம் செய்தாக வேண்டும்.

அதேபோன்று குடும்ப அமைப்பைச் சீரழிக்கின்ற இரண்டாவது காரணமான, கட்டுப்பாடற்ற உறவு முறையைக் கடுமையாக எதிர்ப்பதுடன், அதன் விபரீதங்களை உலகம் முழுவதும் எடுத்துச் சொல்லி மனித சமூகத்தைக் காப்பாற்ற வேண்டும். அறிவு ஜீவிகள் என்ற போர்வையில் யார் எதை ஆதரித்தாலும் நாம் ஒருக்காலும் இதுபோன்ற கேடுகெட்ட செயல் முறையை ஆதரித்துவிடக் கூடாது.

அதேபோன்று ஓரினச் சேர்க்கை எவ்வளவு தவறானது என்பதையும், இஸ்லாத்தில் எவ்வளவு பெரிய தண்டனைக்குரிய காரியம் என்பதையும் நம்முடைய முஸ்லிம் சமூகத்திற்கும் பிற சமூக மக்களுக்கும் விளக்க வேண்டும்.

குடும்ப அமைப்பைத் தெரிவதற்கு முன்னால், குடும்ப அமைப்பைச் சிதைக்கின்ற காரியங்களைத் தெரிய வேண்டும். அதில் தெளிவு பெற்றிருக்க வேண்டும். குடும்ப அமைப்பு சம்பந்தமான மேலும் செய்திகளை இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த இதழ்களில் பார்ப்போம்.