குடும்பவியல் தொடர்: 3
குடும்ப அமைப்பைச் சீரழிக்கும் கட்டுப்பாடற்ற உறவு
எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.
குடும்ப அமைப்பையும் உறவையும் சீரழிக்கின்ற காரணங்களில் முதலாவதாக துறவறத்தைப் பற்றிக் கடந்த இதழ்களில் கண்டோம். குடும்ப அமைப்பைச் சீர்குலைக்கும் இரண்டாவது காரணம், ஃப்ரீ செக்ஸ் என்ற பெயரில் ஆணும் பெண்ணும் எப்படி வேண்டுமானாலும் சென்று கொள்ளலாம் என்கின்ற கட்டுப்பாடற்ற உடலுறவு முறையாகும்.
“நான் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் போவேன். தினசரி ஒரு பெண்ணிடம் போய்விட்டு வருவேன், யாரும் அதைத் தடுக்கக் கூடாது’ என்று ஓர் ஆண் கூறுவது. அதேபோன்று ஒரு பெண், “நான் எப்படி வேண்டுமானலும் எந்த ஆணோடும் போவேன். இது எங்களுக்குரிய உரிமை, எங்களது சுதந்திரம், எங்களது சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் கிடையாது’ என்று கூறி தான்தோன்றித் தனமாகத் திரிவது.
இப்படிக் கணவன் மனைவி என்ற குடும்ப அமைப்பில்லாமல் உல்லாசமாக, கட்டுபாடற்று சுற்றித் திரிவதாகும். இவனுக்கு மனைவி யார்? இவளுக்குக் கணவன் யார்? கணவன் மனைவி என்ற குடும்ப அமைப்பு இல்லாவிட்டால் பிறக்கின்ற குழந்தைக்குப் பொறுப்பு யார்? அந்தக் குழந்தையை யார் வளர்ப்பது? உறவு முறைகள் எப்படி வரும்? இதற்கெல்லாம் எந்த விடையும் கிடைக்காது.
சமூகத்தில் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் வாழலாம் என்கிற சிந்தாந்தமும் இன்றைய நவீன யுகத்தில் விதைக்கப்படுகிறது. அதை ஒரு புரட்சியாகவும் பலர் நினைக்கின்றனர். பெரிய பெரிய அறிஞர்களும் நீதிபதிகளும் கூட, கணவன் மனைவி எனும் குடும்ப அமைப்பு தேவையில்லை என்கிறார்கள். அதாவது கணவன் மனைவி என்பது போன்ற பொறுப்பைச் சுமக்காமல் 3 மாதத்திற்கோ, 6 மாதத்திற்கோ வாழ்ந்து பார்ப்போம். நன்றாக இருந்தால் தொடரலாம். இல்லையெனில் விட்டுவிட்டுச் செல்லலாம் என்கிறார்கள்.
இதில் புரிய வேண்டிய விஷயம், திருமணம் என்றால் பொறுப்பைச் சுமக்கிறோம் என்பதாகும். ஓர் ஆண் ஒரு பெண்ணோடு சேர்கிறான். அதன் பிறகு அவளுக்கு வருகின்ற நல்லது கெட்டதை இவன் சுமக்கிறான். இவனுக்கு ஏற்படும் நல்லது கெட்டதை அவள் சுமக்கிறாள். அவள் குழந்தையைச் சுமக்கும் போது இவன் அவளையும் சேர்த்துச் சுமக்கிறான். அவளது நலத்திற்காகப் பாடுபடுகிறான். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து தியாகம் செய்கிற இப்படியொரு அழகிய குடும்பவியலமைப்பை நாசமாக்குகின்ற சித்தாந்தம் தான் “கண்டதே காட்சி; கொண்டதே கோலம்’ என்ற கட்டுப்பாடில்லாத சுதந்திரம்.
ஆண்-பெண் விஷயத்தில் எந்தச் சட்டமும் இருக்கக் கூடாது என்று ஒரு நடிகை பேசி, வழக்கெல்லாம் போடப்பட்டு, அதைத் தடுப்பதற்கு எந்தச் சட்டமும் இல்லை என்று கூறி உச்சநீதிமன்றமும் அதைச் சரி காண்பதைப் பார்க்கிறோம். இப்படியொரு கேடுகெட்ட சட்டம் நமது நாட்டில் இருக்கிறது. ஒரு ஆண் தான் விரும்பிய எந்தப் பெண்ணையும் இழுத்துக் கொண்டு செல்லலாம். ஆனால் அந்தப் பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும். இதில் ஒருவருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் அது பலாத்காரம், வன்புணர்வு என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் இந்தச் சட்டத்தை மக்கள் அனைவரும் புறக்கணிப்பதிலிருந்தே இது கேடுகெட்டது என புரிந்து கொள்ள முடிகிறது.
சில கேடுகெட்ட இழிந்தவர்கள் தவறு செய்வதை நியாயப்படுத்துவதற்காக நமது நாட்டில் இந்தச் சுதந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி நாட்டிலுள்ள அனைவரும் தவறான கட்டுப்பாடற்ற பாலியல் உறவை ஆரம்பித்தால், குடும்பம் என்கிற கட்டமைப்பு காணாமல் போய்விடும்.
இந்தக் கட்டுபாடற்ற உடலுறவு முறையில் அதிகமாகப் பாதிக்கப்படுவது பெண்கள் தான். கொஞ்ச நேரம் தவறான சுகம் அனுபவிப்பதற்காக இதைச் சரி கண்டால், அதன் பிறகு உருவாகிற குழந்தையைச் சுமப்பது பெண் தான். அதன் பிறகு அந்தப் பெண்ணுக்கு எந்த நாதியும் இருக்காது. அவர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இருக்காது. அவர்கள் தங்கள் கையைக் கொண்டு தான் வாழவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இன்னும் சொல்லப் போனால் பெண்களின் பலவீனத்தைக் கவனித்துத் தான் குடும்ப அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
எனவே பெண்கள் இதை விரும்பி ஆதரிப்பது தவறான போக்காகும். உடலில் இளமையும் முறுக்கும் இருக்கும் போது இந்தக் கட்டுப்பாடற்ற உறவின் கேடு தெரியாது. ஆனால் ஒரு நேரம் வரும். அல்லாஹ் ஒரு நரம்பைப் பிடித்து இழுப்பான். முதுமையை அனைவரும் அடைவதைப் போன்று பெண்களும் அடைவார்கள். இரத்த ஓட்டம் சோர்ந்து போய்விடும். பெண்கள் தங்கள் உடல் அழகை மட்டும் மூலதனமாக வைத்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் வாழ முடியாது. 40 வயதைக் கடந்து விட்டால் அவள் தன்னுடைய அழகை இழக்கத் தொடங்கி விடுவாள். அந்த நேரத்தில் இதனால் ஏற்பட்ட விளைவுகளை தாங்கிக் கொள்ள முடியாமல் பாரதூரமான கஷ்டப்படுகிற சூழ்நிலை ஏற்படும்.
இதில் ஏற்படுகிற இன்னொரு விளைவு, இன்றைய நவீன காலத்தில் பரவலாகப் பேசுகின்ற எய்ட்ஸ் என்னும் ஒரு நோயாகும். ஹெச்.ஐ.வி என்ற வைரஸ் ஒருவரைத் தாக்கினால், இரண்டு அல்லது மூன்று அல்லது பத்து வருடத்தில் எய்ட்ஸ் நோயை உண்டாக்கிவிடும். அதாவது இந்த வைரஸ் ஒருவரது உடலில் புகுந்துவிட்டால் அவரது உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும்.
அல்லாஹ் மனிதனின் உடலிலேயே எல்லா நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியையும் வைத்திருக்கிறான். ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு மருந்து சாப்பிடாமல் இருந்தாலும் குணமாகி விடுகிறதெனில், அதற்குக் காரணம் நமது உடலிலுள்ள எதிர்ப்பு சக்தி தான். ஜலதோஷத்திற்கு மருந்து சாப்பிட்டால் ஏழு நாட்கள். மருந்து சாப்பிடாவிட்டால் ஒரு வாரம் என்று பழமொழி கூடச் சொல்வார்கள். ஜலதோஷமும் ஒரு வைரஸினால் தான் வருகிறது. அதை எதிர்த்து நமது உடல் போராடுகிறது. ஜலதோஷத்தை உண்டாக்கும் கிருமியை நமது உடலிலுள்ள எதிர்ப்பு சக்தி போராடி ஒரு வாரத்தில் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது.
காய்ச்சலுக்கும் அப்படித் தான். காய்ச்சலினால் ஏற்பட்ட வலியைக் குறைப்பதற்குத் தான் மருந்து சாப்பிடுகிறோமே தவிர காய்ச்சலை முழுவதுமாகக் குணப்படுத்துவது நம் உடலிலுள்ள வெள்ளை அணுக்கள் என்று சொல்லப்படும் நோய் எதிர்ப்பு சக்திதான். அதனால் தான் எந்த நோய் வந்தாலும் அது நீங்கிய பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடுகிறோம். இது இறைவன் மனிதனுக்குக் கொடுத்த ஒரு அருட்கொடை.
அதேபோன்று பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை போன்ற தொற்று நோய்களுக்குத் தடுப்பூசி போடுவார்கள். நலமாக இருக்கிற குழந்தைக்கு எதற்கு மருந்து என்று கேட்டால், மஞ்சள் காமாலை வருகிற வைரஸைத் தான் தடுப்பூசி என்ற பெயரில் போடுவார்கள். ஆனால் உண்மையில் அந்த ஊசியில் மஞ்சள் காமாலையை வரவைக்கிற வைரஸ் தான் இருக்கும். அப்படியெனில் இதில் என்ன மருத்துவ முறை இருக்கிறது என்றால், குழந்தையின் இரத்தத்தில் தேவையான நோய் எதிப்பு சக்தி இருக்கும். அதாவது வெள்ளை அணுக்கள் நல்ல நிலையில் இருக்கும். இந்த மஞ்சள் காமாலையை எதிர்த்து போராடி, ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும். மீண்டும் நமது வாழ்நாளில் அதுபோன்று வந்தால், குழந்தையாக இருக்கிற போது நம் உடல் எப்படி போராடியதோ அதேபோன்ற முறையில் போராடி மஞ்சள் காமாலையை வென்றுவிடும். இதுவெல்லாம் இறைவனால் மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட அருட்கொடை தான்.
ஆனால் இந்த ஹெச்.ஐ.வி என்கிற வைரஸ், மனித உடலில் இருக்கிற நோய் எதிர்ப்பு சக்தியை அழித்துவிடுகிறது. அப்படியெனில் ஜலதோஷம் பிடித்தால் அது போகாது. ஏனெனில் அதை எதிர்க்கிற சக்தியை ஹெச்.ஐ.வி அழித்துவிடும். இப்படி என்னென்ன நோய்கள் வந்தாலும் அதை எதிர்த்து நின்று போராடுகிற சக்தியை இந்த எய்ட்ஸ் கிருமிகள் அழித்துவிடும். முடிவு மரணம் தான்.
ஒரு நோய் காலம் முழுவதும் இருந்தால் மனிதன் வாழமுடியுமா? தலைவலியே காலம் முழுவதும் இருந்தால் இறந்துவிடுவோம். எனவே ஒரு நோய் என்றால் வரவேண்டும்; போக வேண்டும். ஆனால் நீங்காமல் போகாமல் இருந்தால் மனிதனால் தாங்கிக் கொள்ள முடியாத பல்வேறு மாற்று விளைவுகளை உண்டாக்கிவிடும். அப்படியெல்லாம் வராமல் இருக்க வேண்டுமெனில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வேண்டும். ஆனால் ஹெச்.ஐ.வி என்கிற வைரஸ் மனித உடலில் புகுந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை ஒன்றுமில்லாமல் ஆக்கி எய்ட்ஸை உருவாக்கிவிடும் என்று கூறுகின்றன இதுவரை நிரூபிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகள்.
எனவே இந்த எய்ட்ஸ் எதனால் ஏற்படுகிறது என்று ஆராய்ந்தால், இரண்டு காரணங்களால் தான். எய்ட்ஸ் பல காரணங்களால் தொற்றும். ஆனால் ஏற்படுவது இரண்டு காரணங்களால் தான். தொற்றுவது வேறு, உருவாவது என்பது வேறு. தகாத பாலியல் உறவு கொள்கிற பெண்கள் பல ஆண்களிடம் செல்வதால் ஏற்படுகிறது. பிறப்புறுப்பில் இருக்கின்ற திரவங்களிலிருந்து வெளியாகிற நச்சுக் கிருமிகள் பல ஆண்களின் உயிரணுக்களுடன் கலந்துவிடுகிற போது, இந்தக் கேடுகெட்ட வைரஸ் கிருமிகள் உருவாகிறது. விரைவாக பெண்களுக்குத் தான் தொற்றுகிறது என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றது. எனவே எய்ட்ஸ் வந்த ஒரு பெண்ணுடன் இன்னொரு ஆண் உடலுறவு கொள்ளும் போது அவனுக்கும் நோய் தொற்றுகிறது.
ஆனால் இங்குள்ள மருத்துவர்களும் அரசாங்கமும் ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒரு விளம்பரம் செய்கிறது. இந்த விளம்பரம் முற்றிலும் தவறானது. ஒருத்திக்கு ஒருவன் என்றுதான் விளம்பரம் செய்யவேண்டும். அரபு நாட்டில் ஒன்றுக்குப் பதிலாக நான்கு மனைவிமார்கள் வைத்திருக்கிறார்கள். எந்த எய்ட்ஸும் அவர்களுக்கு வரவில்லை. எனவே ஒருவன் நான்கு மனைவியை வைத்திருந்தால் எய்ட்ஸ் வராது. ஆனால் ஒருத்திக்கு நான்கு புருஷன் இருந்தால் எய்ட்ஸ் வந்துவிடும்.
பெண்கள் ஒரு பாத்திரத்தைப் போன்று இருப்பதினால், அந்தப் பெண்களிடம் பல ஆண்கள் உடலுறவு கொள்ளும் போது தான் இந்த கெட்ட வைரஸ் கிருமிகள் உருவாகின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆக, கட்டுப்பாடற்ற உடலுறவு எனும் சுதந்திரத்தைக் கொடுத்தால் எய்ட்ஸ் என்கிற கிருமி உருவாகி, அது பிறருக்கும் பரவி விடுகிறது என்பதைப் புரியவேண்டும்.
மேலை நாடுகளில் ஆணுறை போன்ற பாதுகாப்பான உடலுறவு முறையைக் கடைப்பிடித்து எய்ட்ஸைக் குறைத்துக் கொள்கிறார்கள். உலகத்திலேயே எய்ட்ஸுக்கு முதலிடம் ஆப்பரிக்கா தான். அதன் பிறகு இந்தியா. இந்தியாவிலுள்ள மாநிலங்களில் எய்ட்ஸ் அதிகமுள்ள முதல் மாநிலம் தமிழ்நாடு தான். இதற்குக் காரணம் உடலுறவில் கட்டுப்பாடற்ற முறை தான். இந்த தவறான பாலியல் உறவு முறையின் மூலம் எய்ட்ஸ் உருவாகி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவிக் கொண்டே இருக்கிறது.
எனவே இப்படி எய்ட்ஸ் நமக்கும் வந்துவிடக் கூடாது என்றால், நாம் இதைத் தடுப்பதற்குச் சட்டம் போடவேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்தத் தீமையை ஒழிக்கப் பாடுபட வேண்டும். எய்ட்ஸ் நோயாளியிடமிருந்து சின்னச் சின்ன காரணங்களால் கூட நமக்கும் பரவும். அதற்காக எய்ட்ஸ் நோயாளியைத் தொடுவதாலோ அல்லது பார்ப்பதாலோ அல்லது அவனுடன் பழகுவதாலோ அல்லது அவனுடன் ஒரே தட்டில் சாப்பிடுவதாலோ நமக்கு வராது. அதே நேரத்தில் எய்ட்ஸ் நோயாளிக்கு பயன்படுத்திய அதே ஊசியை நமக்கும் பயன்படுத்தினால் அவரது உடலிலுள்ள நச்சுக் கிருமி நமது உடலுக்கும் வந்துவிடும். நமக்கு வேண்டுமானால் தவறான பாலியல் உறவு மூலம் வராமல் இருக்கலாம். எனவே எப்படியிருப்பினும் முதன் முதலில் எய்ட்ஸ் கிருமிகள் உருவாகுவதற்குக் காரணம், பல ஆண்களிடம் கட்டுப்பாடில்லாமல் உறவு வைக்கிற பெண்களின் மூலமாகத் தான் வருகிறது. பிறகு அவளிடம் உடலுறவு கொள்கின்ற அனைத்து ஆண்களுக்கும் பரவுகிறது.
எனவே கட்டுப்பாடற்ற உடலுறவு முறை எய்ட்ஸை உருவாக்குவதுடன், குடும்ப அமைப்பையும் சீரழித்துவிடும்; வாரிசு முறையை இல்லாமல் செய்துவிடும்.
அதிலும் அரசாங்கம், கணவன் மனைவியாக இருந்து இல்லறத்தில் ஈடுபடுங்கள் என்று சொல்வதை விட்டுவிட்டு, பாதுகாப்பான ஆணுறை அணிந்து தவறான பாலியல் உறவான விபச்சாரம் செய்யுங்கள் என்று சொல்வது கொடுமையிலும் கொடுமையாக இருக்கிறது. இப்படி உலகத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் பாதுகாப்பான முறையில், கணவன் மனைவி என்கிற எந்தக் கட்டுப்பாடும் குடும்ப அமைப்பும் இல்லாமல் உடலுறவு மட்டும் கொண்டால் இந்த மனிதச் சமூகம் தழைக்குமா? சந்ததிகள் உருவாகுமா? எப்படி எல்லோரும் சன்னியாசியாகவும் சாமியாராகவும் துறவறம் சென்றால் மனித சந்ததிகள் உருவாகாதோ, அதேபோன்று தான் இந்தக் கட்டுப்பாடற்ற உறவு முறையின் மூலமும் மனித சந்ததி நின்றுவிடும். நாம்தான் இவ்வுலகில் கடைசி சந்ததிகளாக இருப்போம். இப்படி இவர்கள் சொன்ன இந்த முடிவை, இவர்களது தாய் தந்தையர்கள் எடுத்திருந்தால் இவர்கள் பிறந்திருப்பார்களா? என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.