நபியவர்களின் வறுமை

பொருளியல்      தொடர்: 6

நபியவர்களின் வறுமை

நபியவர்களின் படுக்கை வசதி

நமது காலத்தில் மிகவும் வறுமைக்குக் கீழ் உள்ளவர்கள் கூட, படுப்பதற்குப் பாய் வைத்திருப்பர்கள். தரையிலும் ஈச்சம்பாயிலும் யாரும் படுக்க மாட்டார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு அரசனாக இருந்தாலும், மக்களுக்கு ஜனாதிபதியாக இருந்தாலும் தரையிலும் ஈச்சம் பாயிலும் படுத்துள்ளார்கள்.

நபியவர்கள் ஒரு ஈச்சம் பாயின் மீது தூங்கினார்கள். அதனுடைய வரிகள் அவர்களின் விலாப்புறத்தில் (நன்றாக) பதிந்திருந்தது. “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்கு ஒரு விரிப்பை ஏற்பாடு செய்யட்டுமா?” என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள், “எனக்கும் இந்த உலகிற்கும் என்ன இருக்கிறது? ஒரு மரத்தின் கீழ்  நிழலிற்காக ஒதுங்கி ஓய்வெடுத்து, பிறகு அதை விட்டுச் செல்கிறானே அந்தப் பயணியைப் போன்று தான் இவ்வுலகத்தில் நான்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)

நூல்: திர்மிதி 2299

நமது காலத்தில் வாழ்கின்ற அனைவருடைய வீட்டிலும் குறைந்தது இரண்டு பாயாவது இருக்கும். ஆனால் அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் ஒரு பாய் தான் இருந்தது. அதை வைத்துப் பகலில் படுப்பார்கள். இரவில் தனது வீட்டிற்குக் கதவாகப் பயன்படுத்துவார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் பாய் ஒன்று இருந்தது; பகலில் அதை விரித்துக் கொள்வார்கள். இரவில் அதையே அறை போன்று அமைத்துக் கொள்வார்கள். (அதற்குள் நின்று அவர்கள் தொழும் போது) மக்களில் சிலர் அவர்களிடம் திரண்டு (வந்து) அவர்களுக்குப் பின்னால் (நின்று அவர்களைப் பின்பற்றித்) தொழுவார்கள்.

நூல்: புகாரி 730

இதன் மூலம் நமக்கு ஒரு படிப்பினையை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். நபியவர்கள் வறுமையாக இருந்தாலும் சீராகவும் சிறப்பாகவும் வாழ்ந்துள்ளார்கள். நபியவர்களின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்த்தால் அல்லாஹ் நம்மை செழிப்பாக்கியுள்ளான். அதனால் நாம் நபி (ஸல்) அவர்களை ஒப்பிட்டுப் பார்த்து சீருடனும் சிறப்புடனும் வாழ வேண்டும்.

குட்டையாக இருந்த வீட்டுச் சுவர்

சாதாரண ஏழைகள் கூட தனது வீட்டைக் கட்டினால் குறைந்த அளவு ஒரு நபரின் உயரத்தை விட அதிகமாகத் தான் கட்டுவார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதருடைய வீட்டின் உயரத்தை எடுத்துக் கொண்டால் வீட்டுச் சுவர் அவர்களது மார்பளவு தான் இருக்கும். அந்த அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தமது அறையில் தொழுபவர்களாக இருந்தார்கள். அந்த அறையின் சுவர் குட்டையானதாக இருந்தது. ஆகவே நபி (ஸல்) அவர்களின் உருவத்தை மக்களால் பார்க்க முடிந்தது. அப்போது மக்களில் சிலர் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி (சுவருக்கு அப்பால் நின்றுத்) தொழலாயினர். (மறு நாள்) காலையில் இது பற்றி அவர்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். இரண்டாம் நாளில் நபி (ஸல்) அவர்கள் (இரவுத் தொழுகைக்காக) எழுந்தபோது அப்போதும் சிலர் அவர்களுடன் எழுந்து அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று இரவுகள் செய்தனர். அதன் பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த இடத்திற்கு தொழ) வராமல் (வீட்டிலேயே) அமர்ந்துவிட்டார்கள். காலையில் மக்கள் இது பற்றி (நபியவர்களிடம்) பேசியபோது, “இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என நான் அஞ்சினேன் (அதனால்தான் நான் வரவில்லை)என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 729

வீடோ சிறியது; விளக்கும் கிடையாது!

நாம் வறுமையில் இருந்தாலும் கூட வாழ்வதற்கு வசதியிடத்தை சரியாக அமைத்துக்  கொள்கிறோம். இக்காலத்தில் வாழ்கின்ற ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும் தனது வீட்டை சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ கட்டுகிறார்கள். எல்லா வீட்டிலும் சமையலறை, படுக்கையறை அல்லது ஹால் வைத்துக் கட்டுவார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதருடைய வீட்டை எடுத்துக் கொண்டால் மிகவும் சிறியதாக இருக்கும். ஒரு நபர் படுத்தால் மற்றொரு நபர் தொழ முடியாது. வீட்டில் வேறு இடத்திலும் தொழ முடியாது. இந்த அளவுக்கு வீடு மிகவும் சிறியதாக இருந்தது.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்புறமாக(ப் படுத்து) உறங்கிக் கொண்டிருப்பேன். அப்போது எனது கால்கள் அவர்களது கிப்லாவில் (அவர்கள் “சஜ்தாசெய்யுமிடத்தில்) இருந்து கொண்டிருக்கும். அவர்கள் “சஜ்தாவிற்கு வரும் போது என்னை தமது விரலால் தொட்டுணர்த்துவார்கள். உடனே நான் எனது கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் நிலைக்குச் சென்றுவிட்டால் (மறுபடியும்) நான் கால்களை நீட்டிக் கொள்வேன். அந்த நாட்களில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் இருக்கவில்லை.

நூல்: புகாரி 382, 513

நமது வீட்டில் ஒரு நாள் மின்சாரம் இல்லையென்றால் மிகவும் கஷ்டப்படுகிறோம். இரவில் சரியாகத் தூங்க முடிவதில்லை. ஆனால் அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் வாழ்நாள் முழுவதும் விளக்கு கிடையாது. இப்படித் தான் தனது வாழ்க்கையைக் கழித்துள்ளார்கள்.

தலையணை

நம்முடைய வீட்டில் உள்ள தலையணையை எடுத்துக் கொண்டால் பருத்திப் பஞ்சாலும், இளவம் பஞ்சாலும், அல்லது ஏனைய உயர் ரக பஞ்சுகளால் நிரப்பிய தலையணையைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பேரிச்சம் நாரினால் செய்யப்பட்ட தலையணையைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: பேரீச்சம் நாரினால் நிரப்பப்பட்ட பதனிடப்பட்ட தோலே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் படுக்கை விரிப்பாக இருந்தது 

நூல்: புகாரி 6456

நபியவர்களின் ஆடைகள்

ஒரு நாட்டிற்கு மன்னராகவும் சாம்ராஜ்யத்திற்கு அதிபதியாகவும் இருந்த அல்லாஹ்வின் தூதரிடத்தில் ஒரு ஆடை தவிர வேறு ஆடையில்லை. அந்தக் காலத்தில் வாழ்ந்த மன்னர்களை எடுத்துக் கொண்டால் பல விதமான உயர் ரக ஆடைகளை வைத்திருந்தார்கள். ஆனால் நபியவர்கள் ஆடைக்கு மிகவும் கஷ்டப்பட்டார்கள். அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகான ஒரு ஆடையிருக்கும். பெருநாள் அல்லது முக்கியமான நபர்களைச் சந்திக்கும் போது அதனைப் பயன்படுத்துவார்கள். இன்னொரு ஆடை வைத்திருப்பார்கள். அந்த ஆடையைத் தான் எப்பொழுதும் உடுத்தியிருப்பார்கள். அந்த ஆடையில் விந்து பட்டால் கழுவி விட்டு மீண்டும் அந்த ஆடையை உடுத்திக் கொள்வார்கள்.

உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து கொண்டு, அதன் இரு ஓரங்களையும் தமது தோள்கள் மீது மாற்றிப் போட்டுக் கொண்டு தொழுதார்கள்.

நூல்: புகாரி 354, 355, 356

அல்லாஹ்வின் தூதரிடத்தில் ஒரு ஆடையிருந்தாலும் முழுமையான ஆடையாக இருந்ததா என்றால் கிடையாது. அந்த ஆடையின் அளவு அவர்களது உடலின் பாகங்கள் வெளியில் தெரிகின்ற மாதிரி இருக்கும். சாம்ராஜ்யத்தின் அதிபதிக்கு ஆடைக்குப் பஞ்சமாகி விட்டது. இப்படி ஆடை கூட இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.

அப்துல்லாஹ் பின் மா-க் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தொழும்போது (சஜ்தாவில்) தமது இரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்கு ஒரு கை (புஜங்)களையும் விரி(த்து வை)ப்பார்கள்.

நூல்: புகாரி 807

சொத்து எதையும் விட்டுச் செல்லவில்லை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போது தனது குடும்பத்தாருக்கு எந்தச் செல்வமும் கொடுக்கவில்லை. சரி! மரணத்திற்குப் பிறகாவது தனது குடும்பத்தாருக்கு எதையாவது விட்டுச் சென்று இருக்கிறார்களா? என்று பார்த்தால் மரணத்திற்குப் பிறகும் எந்தச் செல்வத்தையும் விட்டுச் செல்லவில்லை. தனது குடும்பத்திற்காக கோவேறுக் கழுதையையும் தனது ஆயுதத்தையும் ஒரு நிலத்தையுமே விட்டுச் சென்றார்கள். அந்த நிலத்தையும் தர்மமாக ஆக்கியிருந்தார்கள்.

அம்ர் பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ), அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, (வேறு எந்தச் செல்வத்தையுமோ) விட்டுச் செல்லவில்லை; “பைளாஎனும் தமது கோவேறு கழுதையையும், தம்முடைய ஆயுதங்களையும், வழிப்போக்கர்களுக்குத் தர்மமாக ஆக்கி விட்டிருந்த  ஒரு நிலத்தையும் தவிர!

நூல்: புகாரி 4416, 2739, 3149, 6088

ஆயுதத்தை அடைமானம் வைத்தல்

அல்லாஹ்வின் தூதருடைய கஷ்டத்தை எடுத்துக் கொண்டால் கேட்பதற்கே மிகவும் துயரமாக இருக்கும். தனது வாழ்நாளில் யாரிடமும் கையேந்தாமல் தனது பொருட்களை அடைமானம் வைத்து, கடைசி வரை அதை மீட்டாமலேயே மரணித்து விட்டார்கள். அந்தச் செல்வத்தை தனது குடும்பத்திற்கு விட்டு செல்ல வில்லை.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது போர்க் கவசத்தை வாற் கோதுமைக்குப் பகரமாக அடகு வைத்திருந்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் வாற்கோதுமை ரொட்டியையும் வாசனை நீங்கிய உருகிய கொழுப்பையும் கொண்டு சென்றேன். “முஹம்மதின் வீட்டாரிடம், அவர்கள் ஒன்பது வீட்டினராக இருந்தும் கூட ஒரேயொரு ஸாஉ (தானியம் அல்லது பேரீச்சம் பழம்) தவிர, காலையிலோ மாலையிலோ வேறெதுவும் இருந்ததில்லைஎன்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்.

நூல்: புகாரி 2508, 2069

வளரும் இன்ஷா அல்லாஹ்