பொருளியல் – தொடர்: 5
நபியவர்களின் வறுமை
பொருளாதாரம், இறை நினைவை விட்டும் திசை திருப்பக் கூடியதாக ஆகி விடக் கூடாது என்பதைக் கடந்த இதழில் கண்டோம். இதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வறுமையான நிலையிலேயே தமது வாழ்நாளைக் கழித்துள்ளார்கள்.
நபிகள் நாயகத்துக்கு ஏற்பட்ட வறுமையைப் போன்று இன்று வரைக்கும் எவருக்கும் ஏற்படவில்லை. அப்படிப்பட்ட நிலையில் பல ஆண்டுகள் வாழந்தார்கள். நபிகள் நாயகம் சிறு வயதில் தாய் தந்தையை இழந்த அனாதையாக இருந்தார்கள். அப்போது ஆடு மேய்த்து வாழ்க்கையை ஓட்டினார்கள். நபியாக ஆனதற்குப் பின் அவர்களை அல்லாஹ், தன்னிறைவு பெற்றவராக ஆக்கினான். இதைத் திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் கூறிக் காட்டுகின்றான்.
உம்மை வறுமையில் கண்டு தன்னிறைவு பெற்றவராக்கினான்.
அல்குர்ஆன் 93:8
மக்காவில் வாழ்ந்த போது செல்வம் கையில் நன்றாகப் புழங்கியது. மதீனா வாழ்க்கையில் கடுமையான வறுமை ஏற்பட்டது. அவர்களுக்கு ஏற்பட்ட வறுமையைப் போன்று யாருக்கும் ஏற்படவில்லை. இதைப் பற்றி நபிகள் நாயகத்தின் மனைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்:
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், “என் சகோதரி மகனே! நாங்கள் பிறை பார்ப்போம்; மீண்டும் பிறை பார்ப்போம்; பிறகும் பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று முறை பிறை பார்ப்போம். அப்படியிருந்தும், அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் (அடுப்பில்) நெருப்பு மூட்டப்படாது” என்று கூறினார்கள். நான், “என் சிறிய அன்னையே! நீங்கள் எதைக் கொண்டு தான் வாழ்க்கை நடத்தினீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இரு கருப்பான பொருள்கள்: (ஒன்று) பேரீச்சம் பழம்; (மற்றொன்று) தண்ணீர். தவிர, அல்லாஹ்வின் தூதருக்கு அன்சாரிகளான சில அண்டை வீட்டார் இருந்தார்கள். அவர்களிடம் சில அன்பளிப்பு ஒட்டகங்கள் (மனீஹாக்கள்) இருந்தன. (அவற்றைக் குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் இரவல் வாங்கியிருந்தனர்.) அவர்கள் (அவற்றி-ருந்து கிடைக்கின்ற) தமக்குரிய பாலை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள்” என்று கூறினார்கள்
நூல்: புகாரி 2567
அல்லாஹ்வின் படைப்பில் மிகச் சிறந்த படைப்பான, அகிலத்தின் அருட்கொடை என்று நாம் போற்றுகின்ற, நம் உயிரினும் மோலாக மதிக்கின்ற நபி (ஸல்) அவர்களுக்கே வறுமையை அல்லாஹ் தந்துள்ளான். சுலைமான் நபிக்கு செல்வத்தை வழங்கியது போன்று, ஒரு சாம்ராஜ்யத்தின் தலைவரான இறுதித் தூதருக்கு அல்லாஹ் தரவில்லை. வறுமையில் உள்ளவர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் அனைவரும் நபியை விட மிகப் பெரிய பணக்காரர்களாகவே இருக்கின்றோம். நபியவர்களுக்கு வந்த வறுமையைப் போன்று நமக்கு யாருக்கும் வரவில்லை.
பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட சிலரிடம் தான் குவிந்து கிடக்கின்றது; அல்லாஹ் நம்மைக் கஷ்டப்படுத்துகிறான் என்று நாம் நினைத்தால் நபியவர்களின் வாழ்க்கையை நினைக்க வேண்டும். அல்லாஹ் நம்மை ஏழையாக வைத்துள்ளான் என்று நினைத்தால் நம்மை விட ஏழையாக உள்ளவர்களைக் கவனிக்க வேண்டும்.
அவர்களின் நிலையை நாம் நினைத்தால் அவர்களை விட அல்லாஹ் நம்மை சிறப்பாக வைத்துள்ளான் என்பதை உணர்ந்து கொள்ளலாம். இப்படி நினைத்தால் நமது உள்ளத்திற்கு ஆறுதலாக இருக்கும். நம்மை விட மிக ஏழையான, சாம்ராஜ்யத்தின் தலைவரான இறுதித் தூதருடைய வாழ்க்கையில் இருந்த உடை, ஆடை, இருப்பிடம் ஆகியவைப் பற்றிய ஆதாரப்பூர்வமான செய்திகளை நாம் பார்த்தால் நமது கண்களில் கண்ணீர் வந்துவிடும். இந்த அளவுக்கு வறுமை இருந்தும் செம்மையாக வாழ்ந்துள்ளார்கள்.
நமக்கு வறுமை வந்தால் நம்மில் சிலர் தற்கொலை செய்து விடுகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் கடுமையான வறுமையில் இருந்துள்ளார்கள். அல்லாஹ் எதற்காக நபிக்கு வறுமையை உண்டாக்கினான் என்றால் சமுதாயத்திற்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வசதியை பார்ப்போம்.
அல்லாஹ்வின் தூதருடைய வீட்டிலிருந்த உணவு வகைகள் எப்படி இருந்தது என்று நாம் பார்க்க வேண்டும்.
சல்லடை கிடையாது
நபி (ஸல்) அவர்கள் மாவு சலிக்கும் சல்லடையைக் கூட பயன்படுத்தியதில்லை. சல்லடை இருந்தால் மாவைத் தனியாகவும், உமியைத் தனியாகவும் பிரித்தெடுக்க முடியும். மாவைத் தனியாக பிரித்தெடுத்தால் தான் மன நிறைவாகவும் நிம்மதியாகவும் சாப்பிட முடியும். இல்லையென்றால் அதை சாப்பிடுவதற்குக் கஷ்டப்பட வேண்டும். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சல்லடை கூட இல்லாமல் தமது வாழ்க்கையைக் கழித்துள்ளார்கள். அப்படிப்பட்ட வறுமையில் வாழ்ந்துள்ளார்கள்.
அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நன்கு ச-த்து சுத்தம் செய்யப்பட்ட மாவில் தயாரிக்கப்பட்ட) வெள்ளை ரொட்டியைச் சாப்பிட்டதுண்டா?” என்று கேட்டேன். அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மை (இறைத்தூதராக) அல்லாஹ் தேர்ந்தெடுத்ததி-ருந்து தமக்கு அவன் இறப்பை அளிக்கும் வரை (ச-த்து சுத்தமாக்கப்பட்ட மாவினாலான) வெள்ளை ரொட்டியைப் பார்த்ததேயில்லை” என்று பதிலளித்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடைகள் இருந்ததுண்டா?” என்று கேட்டேன். அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மை (இறைத் தூதராக) அல்லாஹ் தேர்ந்தெடுத்ததி-ருந்து தம்மை அவன் இறக்கச் செய்யும் வரை சல்லடையைக் கண்டதேயில்லை” என்றார்கள். நான், “கோதுமையை நீங்கள் எப்படிச் சாப்பிட்டு வந்தீர்கள்? சலிக்காமலேயா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நாங்கள் கோதுமையை அரைத்து, (உமியை நீக்க) அதில் (வாயால்) ஊதுவோம். அதி-ருந்து (தவிடு, உமி போன்ற) பறப்பவை பறந்து விடும். எஞ்சியதைத் தண்ணீர் கலந்து (ரொட்டி தயாரித்து) உண்போம்” என்றார்கள்.
நூல்: புகாரி 5413
வயிறு நிறைய சாப்பிட்டதில்லை
ஒரு மனிதன் வயிறு நிரம்ப சாப்பிடுவான். அல்லது அரை வயிறாவது சாப்பிடுவான். ஆனால் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் வயிறு நிரம்பவோ அல்லது அரை வயிறோ கூட சாப்பிடதில்லை.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததி-ருந்து அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.
நூல்கள்: புகாரி 5416, 5374, முஸ்லிம் 5682
இப்படி ஒருவராவது நாம் இருக்கிறோமா? என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஆபிஸ் பின் ரபீஆ அல்கூஃபீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான், ஆயிஷா (ரலி) அவர்களிடம் “(ஈதுல் அள்ஹா பெருநாளில் அறுக்கப்படும்) குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்துச் சாப்பிடுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்களா?” என்று கேட்டேன். அவர்கள், “மக்கள் (பஞ்சத்தால்) பசி பட்டினியோடு இருந்த ஓர் ஆண்டில் தான் அவர்கள் அப்படி(த்தடை) செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பட்டினியைப் போக்க) வசதி உள்ளவர், ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். (பிறகு) நாங்கள் ஆட்டுக் காலை எடுத்து வைத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகும் கூட அதைச் சாப்பிட்டு வந்தோம்” என்று பதிலளித்தார்கள். “உங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன வந்தது?” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சிரித்து விட்டு, “முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை அவர்களுடைய குடும்பத்தார் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கூட (கறிக்) குழம்புடன் வெள்ளைக் கோதுமை ரொட்டியை வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை” என்று சொன்னார்கள்
நூல்: புகாரி 5423
நபியின் மனைவிகளிடமும் உணவில்லை
ஆட்சிக்கு தலைவரான, சாம்ராஜியத்திற்கு முதல்வரான, மனித குலத்திற்கு இறுதி தூதரான, அல்லாஹ்வின் தூதருடைய அனைத்து மனைவியர்களிடத்திலும் ஒரே நேரத்தில் உணவு இருந்தது கிடையாது. இந்த வறுமையிலும் கூட அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மார்க்கத்தில் உறுதியாக இருந்துள்ளார்கள். தமது மனைவிமார்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக செல்வங்களை தேடி மார்க்கத்தின் கட்டுப்பாடுகளை விட்டு விலகவில்லை.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “எனக்கு (கடுமையான பசி)த் துன்பம் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டுவரச் சொன்)னார்கள். அதற்கு அத்துணைவியார், “தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! என்னிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று பதிலளித்தார். பிறகு (தம் துணைவியரில்) மற்றொருவரிடம் ஆளனுப்பியபோது, அவரும் அதைப் போன்றே பதிலளித்தார். முடிவில் ஒவ்வொரு துணைவியரிடமிருந்தும் அதே பதிலே வந்தது. “இல்லை; தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! என்னிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை” என்றே கூறினர்.
நூல்: முஸ்லிம் 4175
ஒரே நாளில் இரண்டு வேளை சாப்பிட்டதில்லை
நாம் ஒரு நாளைக்கு இருவேளை உணவு சாப்பிடாமல் இருந்ததில்லை. ஆனால் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இரண்டு வேளை சாப்பிடாமல் இருந்திருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரே நாளில் இரண்டு வேளை ரொட்டியும் ஆலிவ் எண்ணெயும் வயிறு நிரம்ப உண்ணாமலேயே இறந்தார்கள்.
நூல்: முஸ்லிம் 5691
மாதக் கணக்கில் அடுப்பு எரியாத நிலை
நமது காலத்தில் வாழக் கூடியவர்கள் வீட்டில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் அடுப்பு பற்ற வைக்காமல் இருந்ததில்லை. யாருடைய வீட்டிலும் தொடர்ந்து இரண்டு மாதங்கள் அடுப்பு பற்ற வைக்காமல் இருக்க மாட்டார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் தொடர்ந்து மாதக் கணக்கில் அடுப்பு பற்ற வைக்காமல் இருந்துள்ளார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரான நாங்கள் அடுப்பு பற்றவைக்காமல் ஒரு மாதத்தைக் கழித்திருக்கிறோம். அப்போது பேரீச்சம் பழமும் தண்ணீருமே எங்கள் உணவாக இருந்தன.
நூல்: முஸ்லிம் 5688
உணவிற்காகப் பிரார்த்தனை
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! முஹம்மதின் குடும்பத்தாருக்கு (பசியைத் தணிக்கத்) தேவையான அளவு உணவை வழங்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
நூல்: முஸ்லிம் 5680
எண்ணையில் பொறித்த இறைச்சியை சாப்பிடவில்லை
இந்த காலத்தில் வாழக்கூடிய நமது வீட்டில் சில நபர்கள் இறைச்சியில்லாமல் சாப்பிட மாட்டார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எண்ணையால் பொறித்த இறைச்சியைச் சாப்பிட்டதில்லை.
கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அனஸ் பின் மா-க் (ரலி) அவர்களிடம் சென்று வருவோம். அவர்களுடன் அவர்களுக்காக ரொட்டி தயாரிப்பவர் ஒருவரும் இருப்பார். (ஒருநாள்) அனஸ் (ரலி) அவர்கள், “சாப்பிடுங்கள்! (ஆனால்,) நான் அறிந்த மட்டில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை மிருதுவான ரொட்டியைப் பார்த்ததில்லை. வெந்நீரால் முடி களையப்பட்டு தோலுடன் சமைக்கப்பட்ட (இளம்) ஆட்டை அவர்கள் தமது கண்ணாலும் ஒருபோதும் கண்டதில்லை” என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 5421, 6457
அனஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதருடைய பணியாளராகத் திகழ்ந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப் பார்த்து கவலைப்படுகிறார்கள். அல்லாஹ்வின் தூதருக்கு அவரது பணியாளரான அனஸ் (ரலி) உணவு வழங்கியுள்ளார்கள். நமது காலத்தில் யாருக்காவது அவரது பணியாளர் உணவு வழங்கியுள்ளார் என்று சரித்திரம் உண்டா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் தீட்டப்படாத கோதுமையில் தயாரிக்கப்பட்ட ரொட்டியையும் வாசனை நீங்கிய உருக்கப்பட்ட கொழுப்பையும் கொண்டு சென்றேன். நபி (ஸல்) அவர்கள் தமது கவசத்தை மதீனாவில் உள்ள ஒரு யூதரிடம் அடைமானமாக வைத்து அவரிடமிருந்து தமது குடும்பத்தினருக்காகத் தீட்டப்படாத கோதுமையை வாங்கியிருந்தார்கள். முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரிடம் தீட்டிய கோதுமையில் ஒரு ஸாஉ, மற்ற தானியத்தில் ஒரு ஸாஉ இருந்ததில்லை. அந்த நேரத்தில் நபியவர்களுக்கு ஒன்பது மனைவியர் இருந்தனர்.
நூல்: புகாரி 2069, 2508
ஒரே உணவை 15 நாள் வைத்து சாப்பிடும் நிலை
நமது வீட்டில் எதாவது உணவு செய்தால் அதை இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்துச் சாப்பிடுவோம். ஆனால் அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் ஒரு உணவைப் பதினைந்து நாட்கள் வைத்து சாப்பிடுவார்கள்.
ஆபிஸ் பின் ரபீஆ அல்கூஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான், ஆயிஷா (ரலி) அவர்களிடம் “(ஈதுல் அள்ஹா பெருநாளில் அறுக்கப்படும்) குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்துச்சாப்பிடுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்களா?” என்று கேட்டேன். அவர்கள், “மக்கள் (பஞ்சத்தால்) பசி பட்டினியோடு இருந்த ஓர் ஆண்டில்தான் அவர்கள் அப்படி(த் தடை) செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பட்டினியைப் போக்க) வசதி உள்ளவர், ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விரும்பி னார்கள். (பிறகு) நாங்கள் ஆட்டுக் காலை எடுத்து வைத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகும் கூட அதைச் சாப்பிட்டு வந்தோம்” என்று பதிலளித்தார்கள். “உங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன வந்தது?” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சிரித்து விட்டு, “முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை அவர்களுடைய குடும்பத்தார் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கூட (கறிக்) குழம்புடன் வெள்ளைக் கோதுமை ரொட்டியை வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை” என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி 5423
இந்த வாழ்க்கையை நபியவர்கள் எப்படித் தான் வாழ்ந்தார்கள் என்று நாம் எண்ணிப் பார்த்தால் நமக்கு நமது வாழ்க்கை வறுமையாகத் தெரியாது.
எதுவுமே இல்லாத நிலை
நாம் வாழக் கூடிய சமுதாயத்தில் அடிமட்ட ஏழையை எடுத்துக் கொள்வோம். அவனது வீட்டில் ஏதாவது உணவிருக்கிறதா என்று கேட்டால் உணவுயில்லையென்று சொன்னாலும் மற்ற பொருட்கள் இருக்கும். ஆனால் நபியவர்களின் வீட்டில் பேரிச்சம் பழம் கூடக் கிடையாது.
உம்மு அத்திய்யா (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் (வீட்டிற்கு) சென்று “(உண்பதற்கு) ஏதேனும் உள்ளதா?” எனக் கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி), “நீங்கள் நுஸைபாவுக்கு தர்மமாக அனுப்பிய ஆட்டின் ஒரு பகுதியை அவர் நமக்கு அனுப்பி வைத்துள்ளார். அதைத் தவிர வேறொன்றும் நம்மிடம் இல்லை” என்றார். நபி (ஸல்) அவர்கள் “அப்படியெனில் அது தனது இடத்தை (அன்பளிப்பின் அந்தஸ்தை) அடைந்துவிட்டது” என்றார்கள்.
நூல்: புகாரி 1494
இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் என்னிடம் வந்து, “உங்களிடம் (உண்பதற்கு) ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நாங்கள் “இல்லை‘ என்றோம். “அப்படியானால் நான் (இன்று) நோன்பாளியாக இருந்து கொள்கிறேன்” என்றார்கள். பிறகு மற்றொரு நாள் அவர்கள் எம்மிடம் வந்தபோது, “அல்லாஹ்வின் தூதரே! நமக்கு “ஹைஸ்‘ எனும் பலகாரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது” என்றோம். அதற்கு அவர்கள், “எனக்கு அதைக் காட்டு. நான் இன்று காலை நோன்பு நோற்றிருந்தேன்” என்று கூறிவிட்டு, அதை (வாங்கி)ச் சாப்பிட்டார்கள்.
நூல்: முஸ்லிம் 2125
நபியின் பசி
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “ஒரு பகல்‘ அல்லது “ஓர் இரவு‘ (தமது இல்லத்திலிருந்து) வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்?” என்று கேட்டார்கள். அதற்கு, “பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே!” என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது அதனால்)தான். உங்கள் இரு வரையும் வெளியேவரச் செய்ததே என்னையும் வெளியேவரச் செய்தது” என்று கூறி விட்டு, “எழுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர்.
அப்போது அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும், “வாழ்த்துகள்! வருக” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், “அவர் எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், “எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டு வருவதற்காக (வெளியே) சென்றுள்ளார்” என்று பதிலளித்தார்.
அப்போது அந்த அன்சாரி வந்து விட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டார். பிறகு “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லை” என்று கூறிவிட்டு, (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார். அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும் கனிந்த பழங்களும் செங்காய்களும் இருந்தன. அவர், “இதை உண்ணுங்கள்” என்று கூறிவிட்டு, (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள்.
அவ்வாறே அவர்களுக்காக அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிலிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர். வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள்” என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 4143
வினிகரை குழம்பாகப் பயன்படுத்துதல்
அல்லாஹ்வுடைய தூதரின் வீட்டில் உண்ணுவதற்கு உணவு இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளார்கள். அப்படி உணவு கிடைத்தாலும் குழம்பு இருக்காது அப்படி இருந்தாலும் புளியாகத் தான் இருக்கும். புளியை வைத்து அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ரொட்டியை சாப்பிட்டுள்ளார்கள். இப்படித் தான் தமது வாழ்க்கையைக் கழித்துள்ளார்கள்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நான் என் வீட்டில் அமர்ந்திருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது (தம்மருகே வருமாறு) என்னை நோக்கி சைகை செய்தார்கள். நான் அவர்களிடம் எழுந்து சென்றேன். அவர்கள் எனது கையைப் பிடித்துக்கொண்டார்கள்.
பிறகு நாங்கள் இருவரும் நடந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரது அறை வந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். பிறகு எனக்கும் (உள்ளே வர) அனுமதியளித்தார்கள். நான் வீட்டாருக்காக இடப்பட்டிருந்த திரை வரை சென்றேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஏதேனும் உணவு உள்ளதா?” என்று கேட்டார்கள். வீட்டார், “ஆம்‘ என்றனர். பிறகு மூன்று ரொட்டிகள் கொண்டுவரப்பட்டு, அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ரொட்டியை எடுத்துத் தமக்கு முன்னால் வைத்தார்கள்.
பிறகு மற்றொரு ரொட்டியை எடுத்து எனக்கு முன்னால் வைத்தார்கள். பிறகு மூன்றாவது ரொட்டியை எடுத்து அதை (இரண்டாக)ப் பிட்டு, ஒரு பாதியைத் தமக்கு முன்னாலும் மற்றொரு பாதியை எனக்கு முன்னாலும் வைத்தார்கள்.
பிறகு (தம் வீட்டாரிடம்), “குழம்பேதும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். வீட்டார், “இல்லை; சிறிதளவு காடியைத் தவிர வேறெதுவுமில்லை” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதைக் கொண்டுவாருங்கள். குழம்புகளில் அருமையானது அதுவே” என்று சொன்னார்கள்.
நூல்: முஸ்லிம் 4172
சாப்பிடுவதற்குப் பாத்திரம் கூட இல்லை
நமது வீட்டில் சாப்பிடுவதற்கு தட்டு இல்லாமல் இருந்ததில்லை. நம்மிடத்தில் சாப்பிடுவதற்குத் தட்டு இல்லையென்றால் வாழை இலையாவது நாம் பயன்படுத்துவோம். ஆனால் அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் தட்டு இல்லாமல் தான் தமது வாழ்க்கையைக் கழித்துள்ளார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் பெரிய வட்டிலில் (ஸஹனில்) வைத்து (உணவு) உண்டதை ஒருபோதும் நான் அறிந்ததில்லை. அவர்களுக்காக ஒருபோதும் மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதில்லை. மேலும், அவர்கள் உணவு மேசையில் (அமர்ந்து) ஒருபோதும் சாப்பிட்டதில்லை. இதன் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்) அவர்களிடம், “அப்படியென்றால், அவர்கள் எதில் அமர்ந்து உண்டுவந்தார்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “உணவு விரிப்பில்” என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி 5386, 5415
வளரும் இன்ஷா அல்லாஹ்