செல்வந்தர்கள் கவனத்திற்கு…

பொருளியல்  தொடர்: 4

செல்வந்தர்கள் கவனத்திற்கு…

இறை நினைவை திசை திருப்பக்கூடாது

செல்வம் இருப்பதால் அல்லாஹ்வை நினைவு கூர்வதை மறந்துவிடக் கூடாது. இன்று எத்தனையோ நபர்கள் பணம் வருவதற்கு முன் வணக்க வழிபாட்டில் ஈடுபாட்டுடன் இருந்தவர்கள், பணம் வந்தவுடன் அல்லாஹ்வை நினைவு கூர்வதை மறந்துவிடுகிறார்கள். இந்த நிலை வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பொருளாதாரம் இறை நினைவை விட்டும் திருப்பி விடாது என்று உறுதியாக நம்பினால் மட்டுமே காசு பணத்தை வைத்துக் கொள்ளலாம்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள். (அல்குர்ஆன் 63:9)

சோதனையில் வெற்றி பெறுதல்

இறைவன் தன்னுடைய அடியானை எப்படியும் சோதிப்பான். அந்த வகையில் ஒருவனுக்குப் பணத்தைக் கொடுத்து, அவனை செல்வந்தனாக மாற்றி அவனுடைய பணத்தை எந்த முறையில் பயன்படுத்துகிறான் என்று சோதிக்கிறான். இன்னொருவனுக்குப் பணத்தை எடுத்து வறுமையைக் கொடுப்பான். வறுமையினால் அவன் என்ன செய்கிறான் என்பதைப் பார்க்கிறான் ஆக எது நமக்கு வந்தாலும் அதில் வெற்றி பெறவேண்டும்.

மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச் செய்து இன்பத்தையும் வழங்கி சோதிக்கும் போது “என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான்என்று கூறுகிறான். அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும் போது “என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்எனக் கூறுகிறான். (அல்குர்ஆன் 89:15, 16)

சம்பாதிப்பதும் செலவழிப்பதும்

பணத்தை எப்படியும் சம்பாதிக்க முடியும் என்று சம்பாதிக்கக் கூடாது. அதில் ஹலாலானதை மட்டும் சம்பாதிக்க வேண்டும். சம்பாதித்த பின் அந்தப் பணத்துக்குரிய ஸகாத்தை கொடுக்க வேண்டும். நல்ல முறையில் ஏழை எளியவர்களுக்கு தான தர்மம் செய்ய வேண்டும்.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் அமர்ந்து) “இறைவன் உங்களுக்காக வெளிக் கொணரும் பூமியின் வளங்களைத் தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன்என்று சொன்னார்கள். “பூமியின் வளங்கள் எவை?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் “(கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய) இவ்வுலகக் கவர்ச்சிப் பொருட்கள்(தாம் அவை)என்று பதிலளித்தார்கள்.

அப்போது ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் “(செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா?” என்று வினவினார். அதற்கு (பதிலளிக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறதோ என்று நாங்கள் நினைத்தோம்.

பிறகு, தமது நெற்றியைத் துடைக்கலானார்கள். பின்னர் “கேள்வி கேட்டவர் எங்கே?” என்று வினவினார்கள். அம்மனிதர் “(இதோ) நான் (இங்கிருக்கிறேன்)என்று கூறினார். (அவர் கேள்வி கேட்டதையடுத்து மக்களுக்குப் பயனளிக்கும்) அந்த பதில் வெளிப்பட்டதற்காக அவரை நாங்கள் மெச்சினோம்.

நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நன்மையால் நன்மையே விளையும். இந்த (உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். வாய்க்கால் மூலம் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,) வயிறு புடைக்கத் தின்ன வைத்துக் கொன்று விடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் சென்று விடுகின்றன. பசுமையான புல்லைத் தின்னும் கால்நடைகளைத் தவிர. (அவை மடிவதில்லை. ஏனெனில்,) அவை (புல்லைத்) தின்று வயிறு நிரம்பிவிடும் போது சூரியனை நோக்கி(ப் படுத்து)க்கொண்டு அசை போடுகின்றன. (இதனால் நன்கு சீரணமாகி) சாணமும் சிறுநீரும் வெளியேறுகின்றன. பின்னர் (வயிறு கா-யானவுடன்) மறுபடியும் சென்று மேய்கின்றன.

இந்த (உலகின்) செல்வம் இனிமையானதாகும். யார் இதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகின்றாரோ அவருக்கு அது நல்லுதவியாக அமையும். யார் இதை முறையற்ற வழிகளில் சம்பாதிக்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்.

நூல்: புகாரி 6427, 1425, 2842

“இந்தச் செல்வமும் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். அதை முறைப்படி அடைந்து, அதை அல்லாஹ்வின் பாதையிலும் அனாதைகளுக்காகவும் ஏழை எளியவர்களுக்காகவும் செலவிட்ட முஸ்லிமுக்கு அந்தச் செல்வம் சிறந்த தோழனாகும். அதை முறைப்படி அடையாதவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவன் ஆவான். அச் செல்வம் மறுமை நாளில் அவனுக் கெதிராக சாட்சி சொல்லும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 2842)

பொருளாதாரத்தை விட வணக்கம் சிறந்தது

அன்றைய காலகட்டத்தில் கிராமத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் பொருளை வாங்க முடியாது. அவர்கள் பொருட்களை வாங்க வேண்டுமென்றால் வாரத்துக்கு ஒருமுறை நடக்கும் சந்தைக்குச் சென்று வாங்க வேண்டும். அல்லது வியாபாரக் கூட்டம் அந்த ஊருக்கு வந்து முகாமிட்டு இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருக்கும். அப்போது வாங்கினால் தான் உண்டு.

ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் போது வியாபாரக் கூட்டம் வந்ததைப் பார்த்த ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களை நிற்க வைத்து விட்டு வணிகக் கூட்டத்தை நோக்கி ஓடி விட்டார்கள். பதினேழு ஸஹாபாக்கள் மட்டுமே எஞ்சியிருந்தார்கள். இதைக் கண்டித்து அல்லாஹ் ஒரு வசனத்தை இறக்குகின்றான்.

“(முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்என கூறுவீராக!.

(அல்குர்ஆன் 62:11)

தொழுகைக்கு பாங்கு சொல்லப்படும் போது வியாபாரம் தான் முக்கியம் என்று இருந்து விடக் கூடாது. வணக்க வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வியாபாரத்தை நிறுத்தி வைத்துவிட்டுத் தொழுகைக்கு வரவேண்டும். பொருளாதாரமும் அவசியமானது தான். பொருளாதாரமா? வணக்கமா? என்று வருகின்ற போது வணக்கம் தான் சிறந்தது என்று நினைக்க வேண்டும்.

வறுமை, செல்வம் ஆகிய இரண்டை விட்டும் பாதுகாப்பு தேடுதல்

வறுமையின் சோதனையிலிருந்தும் செல்வத்தின் சோதனையிலிருந்தும் அல்லாஹ்விடம் அதிகமதிகமாக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்திருக்கின்றார்கள். அல்லாஹ்வுடைய தூதரே இவற்றிலிருந்து பாதுகாப்பு கேட்டதிலிருந்து அது எவ்வளவு பயங்கரமானது என்பதை உணர்ந்து அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட வேண்டுமென்று விளங்குகின்றது.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக்க மினல் கஸலிலி வல்ஹரமி வல்மஃஸமி வல் மஃக்ரமி, வ மின் ஃபித்னத்தில் கப்றி வ அதாபில் கப்றி, வ மின் ஃபித்னத்திந் நாரி வஅதாபிந் நாரி, வ மின் ஷர்ரி ஃபித்னத்தில் ஃகினா. வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் ஃபக்ர். வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால். அல்லாஹும்மஃக்ஸில் அன்னீ கத்தாயாய பி மாயிஸ் ஸல்ஜி, வல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமா நக்ககைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸ். வ பாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல்மஃக்ரிப்என்று பிரார்த்தித்து வந்தார்கள்.

பொருள்: இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும், பாவத்தி-ருந்தும், கடனி-ருந்தும், மண்ணறையின் சோதனையி-ருந்தும் அதன் வேதனையி-ருந்தும், நரகத்தின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையி-ருந்தும், செல்வத்தின் தீமைகளிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், நான் உன்னிடம் வறுமையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜா-ன் சோதனையி-ருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை என்னி-ருந்து கழுவுவாயாக! மேலும், அழுக்கி-ருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப் படுத்துவதைப் போன்று தவறுகளிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக. (நூல்: புகாரி 6368, 3375, 6376, 6377)

செல்வத்தைப் பொறுத்த வரை, படித்தவன், படிக்காதவன், அறிவாளி, முட்டாள், நல்லவன், கெட்டவன், குறிப்பிட்ட நாட்டுக் காரன், குறிப்பிட்ட ஊர்க்காரன், குறிப்பிட்ட மொழி பேசக் கூடியவன் என்று யாரையும் குறிப்பிட்டு செல்வம் கொடுக்கப்படவில்லை.

அல்லாஹ் இருக்கிறான் என்பதற்கு இது ஒரு வகையில் சான்றாகக் கூட இருக்கலாம். ஏனென்றால் உலகக் கண்ணோட்டத்தில் நாம் பார்க்கும் போது அறிவாளிகள் தான் செல்லவந்தராக இருக்க வேண்டும். ஆனால் இன்று எத்தனையோ அறிவாளிகள், படிக்காத முட்டாளிடம் சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள். அறிவில்லாதவர்கள் தான் படித்தவனை விடப் பணக்காரனாகவும் இருக்கின்றார்கள்.

உலக நியதிப்படி அறிவாளிகள் தான் செல்வந்தராகவும் இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை. ஆக பணக்காரனாக்குவதும் ஏழையாக்குவதும் அல்லாஹ்வுடைய கையில் தான் இருக்கின்றது என்பதை அறியலாம்.

பணத்தைப் பொறுத்த வரை அறிவாளி, அறிவில்லாதவன், திறமைசாலி, திறமையில்லாதவன், படித்தவன், படிக்காதவன், நல்லவன், கெட்டவன் என்ற எந்த வேறுபாடுமில்லாமல் அல்லாஹ் யாருக்குக் கொடுக்க நாடுகின்றானோ அவனுக்குக் கொடுப்பான். பணமுடையவன் அல்லாஹ்விடத்தில் பாக்கியசாலி; மற்றவர்கள் பாக்கியம் கொடுக்கப்படாதவர்கள் என்று எண்ணக் கூடாது.

தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும் போது இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம் தவிர வேறில்லை  (அல்குர்ஆன் 13:26)

தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 17:30)

தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும், குறைத்தும் வழங் குகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத் துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:37)

செல்வத்தை பொறுத்த வரை நமக்கு இல்லாவிட்டலும் அல்ஹம்துலில்லாஹ், அது இருந்தாலும் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி இது அல்லாஹ்வின் சோதனை தான் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.

செல்வம் கொடுக்கப்பட்டவன் நல்லவன் என்றோ செல்வம் கொடுக்கப்படாதவன் கெட்டவன் என்பதோ கிடையாது. அவனுடைய செயலினால் தான் அவன் நல்லவனாக மாறுவதும் கெட்டவனாக மாறுவதும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

நல்லவர்களுக்கும் வறுமை

உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. “அல்லாஹ்வின் உதவி எப்போது?” என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது. (அல்குர்ஆன் 2:214)

மேற்கண்ட வசனம் நபிமார்கள் மற்றும் நல்லவர்கள் அனைவருக்கும் இறைவன் ஏழ்மையின் மூலம் சோதனையைக் கொடுப்பான் என்பதை தெளிவுபடுத்துகிறது.

கெட்டவனுக்கும் செல்வம்

இப்றாஹீம் (அலை) அல்லாஹ்விடம், “என்னையும் இஸ்மாயீலையும் எப்படி மக்களுக்கு இமாமாக ஆக்கினாயாயோ அதே போன்று என் வாரிசுகளையும் இமாமாக ஆக்கு’ என்று பிரார்த்தனை செய்த போது அவரது சந்ததி அனைவரும் நல்லவர்கள் என்பதற்கு உத்தரவாதம் கொடுக்க அல்லாஹ் மறுத்து விட்டான்.

எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!என்று அவர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 25:75)

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான். “எனது வழித் தோன்றல்களிலும்” (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது” என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 2:124)

இப்படிக் கேட்பது ஒரு வேளை அல்லாஹ்வுக்கு பிடிக்கவில்லை என்று நினைத்து துஆவை மாற்றிக் கேட்கின்றார்கள். “இந்த ஊரில் இறை நம்பிக்கையாளராக யார் இருக்கின்றார்களோ அவர்களுக்கு செல்வத்தை வழங்கு’ என்று பிராத்தனை செய்தார்கள். இதையும் மறுத்து, “நான் அனைவருக்கும் செல்வத்தைக் கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.

இறைவா! இவ்வூரை பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!என்று இப்ராஹீம் கூறிய போது, “(என்னை) மறுப்போருக்கும் சிறிது காலம் வசதிகள் அளிப்பேன்; பின்னர் அவர்களை நரக வேதனையில் தள்ளுவேன்; சேருமிடத்தில் அது மிகவும் கெட்டதுஎன்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 2:126)

காரூனுக்கு வழங்கப்பட்ட செல்வம்

காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமை மிக்க கூட்டத்தினருக்கு சிரமமாக இருக்கும். “மமதை கொள்ளாதே! மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்என்று அவனிடம் அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 28:76)

தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். “காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான்என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர். (அல்குர்ஆன் 28:79)

மேற்கண்ட வசனம் காரூன் என்ற கெட்டவனுக்கு அல்லாஹ் எவ்வளவு பெரிய செல்வ வளத்தை வழங்கியிருந்தான் என்பதை விளக்குகின்றன. கீழ்க்கண்ட வசனங்களும் தீயவர்களுக்கு அல்லாஹ் செல்வத்தைக் கொடுப்பான் என்பதற்குச் சான்றாகும்.

அவர்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் உம்மைக் கவர வேண்டாம். அவற்றின் மூலம் இவ்வுலக வாழ்க்கையில் அவர்களைத் தண்டிப்பதையும், அவர்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களது உயிர்கள் பிரிவதையுமே அல்லாஹ் நாடுகிறான். (அல்குர்ஆன் 9:55)

அவர்களுக்கு நாம் செல்வத்தையும், பிள்ளைகளையும் வழங்கியிருப்பது குறித்து “நல்லவற்றை விரைந்து வழங்குகிறோம்என்று எண்ணுகிறார்களா? அவ்வாறில்லை! அவர்கள் உணர மாட்டார்கள். (அல்குர்ஆன் 23:55, 56)

கொடுங்கோல் அரசன் ஃபிர்அவ்னிடம் செல்வம்

எங்கள் இறைவா! ஃபிர்அவ்னுக்கும், அவனது சபையோருக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும், செல்வங்களையும் அளித்திருக்கிறாய்! எங்கள் இறைவா! உன் பாதையிலிருந்து அவர்களை வழி கெடுக்கவே (இது பயன் படுகிறது). எங்கள் இறைவா! அவர்களின் செல்வங்களை அழித்து, அவர்களின் உள்ளங்களையும் கடினமாக்குவாயாக! துன்புறுத்தும் வேதனையைக் காணாமல் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்என்று மூஸா கூறினார். (அல்குர்ஆன் 10:88)

குரைஷிக் காஃபிர்களின் பொருளாதாரம்

குரைஷிகளை மகிழ்வித்ததற்காகவும், குளிர் மற்றும் கோடை காலப் பயணங்களில் அவர்களை மகிழ்வித்ததற்காகவும், இந்த ஆலயத்தின் இறைவனை அவர்கள் வணங்கட்டும். பசியின் போது அவர்களுக்கு உணவளித்தான். பயத்திலிருந்து அவர்களுக்கு அபயமளித்தான். (அல்குர்ஆன் 106வது அத்தியாயம்)

மேற்கண்ட அத்தியாயம் குரைஷிக் காஃபிர்களுக்கு அல்லாஹ் வியாபாரப் பயணங்களின் மூலம் ஏராளமான செல்வங்களை வழங்கினான் என்பதைக் குறிப்பிடுகின்றன.

கெட்டவர்களுக்கு, அவர்கள் கெட்டவர்கள் என்பதற்காக அல்லாஹ் செல்வத்தைக் கொடுக்கவில்லை. மாறாக அவர்களை சோதித்துப் பார்ப்பதற்காகத் தான் கொடுத்தான். கெட்டவனுக்குத் தான் செல்வத்தைக் கொடுப்பான் என்று எண்ணிவிடக் கூடாது நல்லவர்களுக்கும் கொடுப்பான் என்பதைப் பின்வரும் வசனங்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

சுலைமான் நபியின் செல்வச் செழிப்பு

சுலைமான் நபிக்குக் கொடுக்கப்பட்ட செல்வங்களைப் போன்று யாருக்கும் கொடுக்கப்படவில்லை. இவ்வளவு கொடுக்கப்பட்டாலும் கெட்டவர்கள் அல்லாஹ்வை மறந்ததைப் அவர் அல்லாஹ்வை மறந்துவிடவில்லை. சுலைமான் நபியின் மாளிகையைப் பற்றி திருக்குர்ஆன் எடுத்துரைப்பதைப் பாருங்கள்.

இம்மாளிகையில் நுழைவாயாக!என்று அவளிடம் கூறப்பட்டது. அதை அவள் கண்ட போது தண்ணீர்த் தடாகம் என நினைத்து, தனது கீழாடையைக் கரண்டைக்கு மேல் உயர்த்தினாள். “அது பளிங்குகளால் பளபளப்பாக்கப்பட்ட மாளிகைஎன்று அவள் கூறினாள். “நான் எனக்கே தீங்கு இழைத்து விட்டேன். ஸுலைமானுடன் சேர்ந்து அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டு விட்டேன்என்று அவள் கூறினாள்.  (அல்குர்ஆன் 27:44)

தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். “மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்கு தரப்பட்டுள்ளது. இதுவே தெளிவான அருட்கொடையாகும்என்று அவர் கூறினார். ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.  (அல்குர்ஆன் 27:16, 17)

சுலைமான் நபிக்கு நல்லவர் என்பதற்காக கொடுக்கவில்லை. நல்லவராக இருப்பாரா என்று சோதித்துப் பார்ப்பதற்காகத் தான் செல்வத்தைக் கொடுத்தான். இதே போன்று காரூனுக்கும் கொடுக்கப்பட்டது. அவன் அல்லாஹ்வை மறந்தான். சுலைமான் நபி (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள். பணம் இருப்பதால் அகம்பாவம் வரக் கூடாது. சுலைமான் (அலை) அவர்கள் எவ்வளவு பணிவானவர்களாக இருந்தார்கள் என்பதைப் பின்வரும் வசனங்களிலிருந்து அறியலாம்.

கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது. தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும் “நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா?” என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ என் இறைவன் தேவையற்றவன்; கண்ணியமிக்கவன். (அல்குர்ஆன் 27:40)

அவர் விரும்பிய போர்க்கருவிகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன. “தாவூதின் குடும்பத்தாரே! நன்றியுடன் செயல்படுங்கள்! எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர்என்று கூறினோம். (அல்குர்ஆன் 34:13)