ஜனநாயகம் நவீன இணை வைத்தலா? – 3

தொடர்: 3

ஜனநாயகம் நவீன இணை வைத்தலா?

மனிதச் சட்டங்களின் காரணமாகத் தான் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. குடும்பக்கட்டுப்பாடு போன்ற சட்டங்களும் இதன் காரணமாகவே கொண்டு வரப்படுகின்றன என்பது ஜனநாயகம் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் துணைக் காரணங்கள்.

மதுக்கடைகளை அரசாங்கம் திறந்தால் ஒவ்வொரு முஸ்லிமும் குடித்தாக வேண்டும் என்று அதன் அர்த்தமில்லை. குடித்தே ஆக வேண்டும் என்று எந்த நாட்டிலும் சட்டம் இயற்ற முடியாது. நாம் குடிக்காமல் இருந்து கொள்வதற்கும் உரிமை உள்ளது.

அது போல் கட்டாயம் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. மனிதச் சட்டங்கள் ஆட்சி புரியும் நாடுகளில் கோடானுகோடி பேர் குடும்பக் கட்டுப்பாடு செய்யாமலேயே வாழ்கின்றனர்.

ஒன்றிரண்டு சட்டங்கள் இஸ்லாத்திற்கு எதிரானதை முஸ்லிம்கள் மீது திணிக்கும் வகையில் அமைந்தால் அதை மட்டும் எதிர்த்து நின்று போராடி அதை ரத்துச் செய்ய முடியும்.

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்குக் கட்டாய ஜீவனாம்சம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்ட போது முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டு அந்தச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு இந்த ஜனநாயகம் தான் காரணமாக அமைந்தது.

முஸ்லிம்கள் உண்மை முஸ்லிம்களாக வாழ விரும்பினால் அதை எந்த மனிதச் சட்டத்தாலும் மறுக்க முடியாது என்பது தான் யதார்த்த நிலை!

வணக்க வழிபாடுகள் தவிர மற்ற விஷயங்களில் மனிதர்களுக்கு சட்டமியற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி மனிதர்கள் இயற்றும் சட்டங்கள் மார்க்கத்திற்கு எதிராக இல்லாவிட்டால் அதற்குக் கட்டுப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. மார்க்கத்திற்கு எதிராக இருந்தால் அதை எதிர்த்துப் போராடும் கடமை நமக்கு உள்ளதே தவிர மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அதிகாரத்தை ஒட்டு மொத்தமாகப் பறிப்பது நமது வேலையில்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொரு கோணத்திலும் இதை நாம் சிந்திக்க வேண்டும்.

மனிதச் சட்டம் என்ற வாதத்தை எடுத்து வைப்போர் எத்தனையோ மதரஸாக்கள், பள்ளிக்கூடங்களை நடத்துகிறார்கள். பல நிறுவனங்களையும் தொழில்களையும் நடத்துகின்றனர். அங்கெல்லாம் சட்டம் இயற்றும் அதிகாரத்தை இவர்கள் எடுத்துக் கொள்கிறார்களே! அது எப்படி?

தங்கள் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் குறிப்பிட்ட நிறத்தில், குறிப்பிட்ட ஆடையைத் தான் அணிய வேண்டும் என்று கூறுவதன் மூலம் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.

தங்கள் நிறுவனத்துக்கு இத்தனை மணிக்குப் பணியாளர்கள் வரவேண்டும்; இத்தனை மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்றெல்லாம் கூறுகிறார்களே! இதன் மூலம் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தமது கைகளில் எடுத்துக் கொள்கிறார்கள்.

ஒரு குடும்பத் தலைவன் தனது மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் சில ஒழுங்குகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கிறான். இப்படி எல்லா மனிதர்களும் தத்தமது வட்டத்துக்குள் சட்டம் இயற்றும் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளாமல் இல்லை.

அது போல் தான் நாட்டை ஆளும் பொறுப்பு சுமத்தப்பட்டவர்கள் அதற்குரிய சட்டங்களை வகுக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்கள் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் இவ்வாறு வாதிடுகின்றனர்.

முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ள நாடுகளில் அவர்களால் இஸ்லாம் கூறுகின்ற சட்ட திட்டங்களைச் செயல்படுத்தும் ஆட்சியை அமைக்க முடியாது. இத்தகைய நாடுகளில் ஆட்சியைக் கைப்பற்றக் களமிறங்கும் கட்சிகளில் ஒரு கட்சி அதிகத் தீமை செய்யும் கட்சியாகவும், இன்னொரு கட்சி குறைந்த தீமை செய்யும் கட்சியாகவும் இருக்கலாம்.

நமது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் அதிகத் தீமை செய்பவர்கள் ஆட்சியைக் கைப்பற்றாமல் நம்மால் தடுக்க முடியும். இதை நாம் புறக்கணித்தால் மிகவும் அதிகத் தீமை செய்பவர்கள் ஆட்சிக்கு வரக் கூடிய நிலை நமது மடத்தனத்தால் ஏற்பட்டு விடும் என்பதையும் இவர்கள் உணரவில்லை.

மனிதச் சட்டங்களின் அடிப்படையில் அமைந்த ஆட்சியை ஏற்படுத்த வாக்களிப்பது ஒரு புறமிருக்கட்டும். அத்தகைய ஆட்சியில் நாம் அங்கம் வகிப்பதற்கும் நமக்கு அனுமதி உண்டு.

நம்முடைய மானம், மரியாதை, நமது கொள்கை ஆகியவற்றை மீறாமல் அத்தகைய வாய்ப்பு நமக்குக் கிடைக்குமானால் அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே என்பதற்கு யூசுப் நபியின் வரலாறு சான்றாக அமைந்துள்ளது.

யூசுப் நபியின் வரலாறு பற்றி அல்லாஹ் கூறும் போது, “கேள்வி கேட்பவர்களுக்கு அவரது வரலாற்றில் சான்றுகள் உள்ளன” என்று அல்லாஹ் கூறுகின்றான்.

யூசுப் நபியவர்கள் இறைத் தூதராக இருந்தும் மனிதச் சட்டத்தின்படி நடந்த ஆட்சியில் அமைச்சர் பதவியைக் கேட்டுப் பெற்றார்கள்.

இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள்! நான் அறிந்தவன்; பேணிக் காப்பவன்என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 12:55

மேலும் மன்னர் இறைச் சட்டத்தின்படி ஆட்சி நடத்தவில்லை என்பதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம்.

அல்லாஹ் நாடினால் தவிர அந்த மன்னரின் சட்டப்படி தமது சகோதரரை எடுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார்.

அல்குர்ஆன் 12:76

அறிவுப்பூர்வமாகச் சிந்திக்காமல், குர்ஆனை உரிய முறைப்படி ஆராயாமல் அரை வேக்காட்டுத் தனமாக அணுகியதால் தான் இந்த வாதத்தை எடுத்து வைக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

ஜனநாயகம் ஒரு இணை வைத்தலே என்பதற்கு இவர்கள் மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கின்றனர்.

ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்வதாகும். ஆனால் திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் பெரும்பான்மைக்குக் கட்டுப்படக் கூடாது என்று எச்சரிக்கிறது. எனவே பெரும்பான்மையினரின் முடிவை ஏற்க வேண்டும் என்பது குர்ஆனுக்கு எதிரானது என்று கூறுகின்றனர். இதுவும் அரைவேக்காட்டுத் தனமே ஆகும்.

இதுபற்றியும் நாம் விரிவாகவும் விளக்கமாகவும் அறிந்து கொள்வோம்.