இறுதிநபித்துவ எதிர்ப்பு வாதங்கள்
அண்மையில் நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் 11.12.2011 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இறுதி நபித்துவம் என்ற தலைப்பில் ஆற்றப்பட்ட உரை:
மிர்ஸா குலாம் போன்ற பொய்யர்கள் தோன்றுவதற்கு சுன்னத் ஜமாஅத் என்று கூறிக் கொள்ளும் ஆலிம்கள் தான் காரணம்.
முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மட்டும் தான் வஹீ வந்தது; அவர்களுக்குப் வேறு யாருக்கும் வஹீ வரவில்லை என்று நம்பிய மக்களை, நபியவர்களுக்குப் பின் பலருக்கும் வஹீ வரும் என்று நம்ப வைத்தார்கள். நான்கு இமாம்களையும் நபி (ஸல்) அவர்களின் இடத்தில் கொண்டு போய் வைத்தார்கள்.
“கல்பை (உள்ளத்தை) பளிங்கு போல் ஆக்கி விட்டால் அங்கு அல்லாஹ்வின் கஷ்ஃப் எனும் அகஞானம் தோன்றி விடும். அத்தகையவர்களின் உள்ளத்தில் அல்லாஹ் வந்து பேசுவான்” என்று இவர்களால் மிகவும் மதிக்கப்படுகின்ற, கல்விக் கடல் என்று போற்றப்படுகின்ற கஸ்ஸாலி எழுதி வைத்துள்ளார். இவ்வாறு எழுதி வஹீயின் வாசலைத் திறந்து விட்ட அவரை, மக்களின் தலைவர் என்று இவர்கள் மெச்சுவதுடன், “எங்களின் உள்ளங்களை இவரைப் போல் பிரகாசிக்கச் செய்வாயாக!’ என்று பிரார்த்தனையும் செய்கின்றனர்.
மிர்ஸா குலாம் தன்னை நபி என்றதற்கு ஆத்திரப்படும் இவர்கள், யாகுத்பா என்ற பாடல் வரிகளில் முஹ்யித்தீனைக் கடவுளாக்கி ஏற்றிப் புகழ்வதுடன் முஹ்யித்தீன் என்று அவரை அழைத்து திக்ர் செய்கின்றனர்; வணங்குகின்றனர்.
எவர் ஒருவர் தனிமையில் அமர்ந்தவராகவும், தனது உறக்கத்தை களைந்தவராகவும், உறுதியான நம்பிக்கையுடனும் என் திருநாமத்தை ஆயிரம் தடவைகள் அழைப்பாரோ அவ்வாறு அவர் (என்னை) அழைத்த காரணத்திற்காக விரைந்தோடி வந்து நான் அவருக்கு மறுமொழி சொல்வேன்.
நூல்: யாகுத்பா
தன்னை ஒரு நபி என்று வாதித்த மிர்சாவைக் கண்டிக்கும் நீங்கள், முஹ்யித்தீனை அல்லாஹ்வாக ஆக்கி, அவரை உதவிக்கு அழைக்கின்ற உங்கள் ஜமாஅத்தினரை ஏன் கண்டிக்கவில்லை?
நான் நபி என்று சொன்ன காதியானி காஃபிர் என்றால், “அனல் ஹக் – நான் தான் ஹக் (அல்லாஹ்)” என்று சொன்ன மன்சூர் ஹல்லாஜ் யார்?
(நூல்: அல்பஹ்ஜதுஸ் ஸனிய்யா, பக்கம் 136)
இவனுக்கு எப்படி ரஹ்மத்துல்லாஹி அலைஹி (அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டும்) என்று சொல்கிறீர்கள்?
அபூயஸீத் அல்புஸ்தாமி என்பவனை மவ்லிது துஆ ஓதும் போது நினைவு கூர்கின்றீர்களே!
“நான் தூய்மையானவன்; நான் தூய்மையானவன். என்னுடைய விஷயம் எவ்வளவு மகத்துவமானது? என் ஜிப்பாவில் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை” என்று கூறியவன் தானே இந்த அபூயஸீத் அல்புஸ்தாமி.
நூல்: அபூயஸீத் அல்புஸ்தாமி, பக்கம்: 49, ஷத்ராதுத் தஹப், பாகம் 2, பக்கம் 142
“அவன் (அல்லாஹ்) என்னைப் புகழ்கின்றான்; நான் அவனைப் புகழ்கின்றேன். அவன் என்னை வணங்குகின்றான்; நான் அவனை வணங்குகின்றேன்”
நூல்: ஃபுசூஸுல் ஹிகம், பாகம்: 1, பக்கம் 83
இப்படிக் கூறிய முஹ்யித்தீன் இப்னு அரபியை, ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்று சொல்கின்றீர்களே!
மிர்ஸாவை நபி என்று நிலைநிறுத்துவதற்குக் காதியானிகள் மேற்படி நபர்கள் சொன்னதையும் அவர்கள் எழுதிய நூற்களையும் தான் சான்றாகக் கொண்டு வருகின்றனர். எனவே சு.ஜ. எனப்படும் இவர்களுக்கு காதியானிகளைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.
இறுதி நபித்துவக் கொள்கையில் உறுதியாக நிற்பது தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் தான். நாங்கள் நபித்தோழர்களைக் கூட பின்பற்றக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். ஸஹாபாக்களை மதிப்போம்; ஆனால் பின்பற்ற மாட்டோம்.
இவ்வளவு ஏன்? நபி (ஸல்) அவர்களைக் கூட இறைத் தூதர் என்ற நிலையில் அவர்கள் நமக்குக் கூறிய விஷயங்களை மட்டுமே பின்பற்ற வேண்டும். அதாவது மார்க்க விஷயங்களில் அவர்களைப் பின்பற்றியே தீர வேண்டும். கோதுமை, பேரீச்சம்பழம் போன்ற உணவு விஷயங்கள், ஆடைகள், வாகனங்கள் போன்ற உலக விஷயங்களில் அவர்களைப் பின்பற்றத் தேவையில்லை என்று தெளிவாக விளங்கி வைத்திருக்கின்றோம். இதற்கு முஸ்லிமில் வரும் ஹதீஸ் தெளிவான சான்றாகும்.
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனாவாசிகள் பேரீச்ச மரங்களை ஒட்டுச் சேர்க்கை செய்துகொண்டிருந்தனர். தாங்கள் பேரீச்ச மரங்களை சூல் கொள்ளச் செய்வதாக அவர்கள் கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். மக்கள் “(வழக்கமாக) இவ்வாறே நாங்கள் செய்துவருகிறோம்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் நன்றாயிருந்திருக்கலாம்” என்று சொன்னார்கள். ஆகவே, அவர்கள் அ(வ்வாறு செய்வ)தை விட்டுவிட்டனர். அந்த வருடத்தில் கனிகள் “உதிர்ந்துவிட்டன’ அல்லது “குறைந்து விட்டன’.
அதைப் பற்றி மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அவர்கள், “நான் ஒரு மனிதனே; உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்) சொந்தக் கருத்தாக உங்களுக்கு நான் ஏதேனும் கட்டளையிட்டால் நானும் ஒரு மனிதனே” என்று சொன்னார்கள்.
(நூல்: முஸ்லிம் 4712)
இறுதி நபித்துவ விளக்கப் பொதுக்கூட்டத்தில் ஷம்சுல்லுஹா ரஹ்மானி பேசும் போது, காதியானிகளுக்கு எதிராக முதன் முதலில் போர்க்கொடி தூக்கியது தவ்ஹீத் ஜமாஅத் தான்; கோவையில் 1994ஆம் ஆண்டில் காதியானிகளுடன் 9 நாட்கள் விவாதம் நடத்தினோம். அந்த விவாதத்தில் காதியானிகள் எழுப்பிய கேள்விகளை தவ்ஹீத் ஜமாஅத் எப்படி எதிர்கொண்டது? அதில் ஈஸா (அலை) சம்பந்தப்பட்ட வசனங்களுக்கு காதியானிகள் மண்ணைக் கவ்வுகின்ற அளவுக்கு தவ்ஹீத் ஜமாஅத் அணியினர் நுணுக்கமான விளக்கங்களைக் கொடுத்தனர் என்பதை விளக்கிப் பேசினார்.
இந்த கூட்டத்தில் பெருக்கெடுத்த மக்கள் வெள்ளமும், எழுச்சியும் 1997ஆம் ஆண்டு இதே இடத்தில் நடைபெற்ற, “நான்கு மத்ஹபுகளும் நவீன பிரச்சனைகளும்’ என்ற தலைப்பில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு ஏற்பட்ட எழுச்சியை நினைவூட்டுவதாக அமைந்திருந்தது.
அவ்வளவு தான். உலமாக்களின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது. உடனே ஸைபுத்தீன் ரஷாதி என்பவரை அழைத்து வந்து 06.01.2012 அன்று பதில் கூட்டம் நடத்தினார்கள். இக்கூட்டத்தில் நமக்கு எதிரான வக்கிரமத்தையும் வயிற்றெரிச்சலையும் கொட்டித் தீர்த்தார்கள்.
97லும் இதுபோன்று ஒரு கூட்டத்தைப் போட்டு, இதே ஸைபுத்தீன் ரஷாதியைத் தான் அழைத்து வந்து வசை மாறிப் பொழிந்தார்கள். அன்று கூட்டம் முடிந்தவுடன் தவ்ஹீது சகோதரர்கள் ஸைபுத்தீன் ரஷாதியிடம் கேள்வி கேட்கச் சென்ற போது நைசாக நழுவிச் சென்று விட்டார். அவரை விவாதத்திற்கு அழைத்து சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.
அப்போது நாம் மறுப்புக் கூட்டம் போடவிருந்த தருணத்தில் மேலப்பாளையத்தில் தொடர் கொலைகள் நடந்தன. ஷம்சுல்லுஹா ரஹ்மானி, ஸய்யது இப்ராஹீம் போன்றோர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதனால் அதற்கு மறுப்புக் கூட்டம் போட முடியாமல் போனது. அன்று ஓடிய ஸைபுத்தீன் ரஷாதி, 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் தலைகாட்டினார்.
சவால் விட்டு ஓடிக் கொண்டிருந்த ஷேக் அப்துல்லாஹ் கோமாளியாவது கடைசியில் ஒருவாறாக பொறியில் சிக்கிக் கொண்டார். விவாதத்திற்கு வந்து விட்டார். ஆனால் இன்று வரை பொறியில் சிக்காமல் நமக்கு எதிராக ஊர் ஊராக சவால் விட்டுவிட்டு, தப்பித்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய எத்தர் ஸைபுத்தீன் ரஷாதி தான். மேடையில் நாக்கூசாமல் பொய் பேசுவார்.
இந்தக் கூட்டத்திலும் கேனயன், கிறுக்கன், மொள்ளமாரி, முடிச்சவிக்கி, பெட்டை, இப்லீஸ், தஜ்ஜால் என்று நாலாந்தர ரவுடியின் பாணியில் கத்தி விட்டுப் போனதைத் தவிர நாம் வைத்த வாதங்களுக்கு எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை.
மறுப்பு தெரிவித்து பேசிய ஸைபுத்தீன் ரஷாதி, மகன் இறந்தாலும் பரவாயில்லை, மருமகள் விதவையாக வேண்டும் என்று நினைக்கும் கொடூர மாமியாரைப் போல் பேசினார்.
முஸ்லிம் நூலில் இடம் பெறும் நபி (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸையே மறுத்து விட்டுப் போயிருக்கின்றார். மவ்லவி என்ற பெயரில் மாநபியவர்களின் ஹதீஸை, அதிலும் குறிப்பாக உலக விஷயம், மார்க்க விஷயம் என்ற வித்தியாசத்தைக் காட்டுகின்ற அதி உன்னதமான ஹதீஸை மறுக்கின்ற இந்தப் பயங்கரவாதியை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காகவே அவர் நமக்கு எதிராகக் கக்கிய விஷக் கருத்துக்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகின்றது.
தவ்ஹீதுக்கு எதிரான பிரச்சாரத்தில் இவர் எப்படிப்பட்டவர் என்பதை தமிழகம் முழுவதும் அந்தந்த பகுதி மக்களிடம் தவ்ஹீதுவாதிகள் அடையாளம் காட்டுவதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் இந்தப் பதில் உரையை இங்கு வழங்குகின்றோம்.