இரண்டாம் ஜமாஅத்: மத்ஹபுவாதிகளின் அறியாமை

இரண்டாம் ஜமாஅத்: மத்ஹபுவாதிகளின் அறியாமை

இலங்கையைச் சேர்ந்த நவ்பர் என்பார், “ஒரு ஜமாஅத் முடிந்து மற்றொரு ஜமாஅத் நடத்துவது கூடாது” என்று வாதிட்டு வருகிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஆராய்ச்சிக்குக் கடந்த இதழில் மறுப்பு வெளியிட்டோம். இதே போன்று இரண்டாம் ஜமாஅத் விஷயத்தில் மத்ஹபுவாதிகளின் நிலையைப் பற்றி இங்கு விளக்கியுள்ளோம்.

இரண்டாம் ஜமாஅத் தொழுகையை மத்ஹபுவாதிகளும் தடுத்து வருகின்றனர். அவர்களுக்காகவும் சில விஷயங்களைத் தெளிவு படுத்துகிறோம்.

“(சுபுஹ், இஷா ஆகிய) இந்த இரண்டு தொழுகைகளும் முனாஃபிகீன்களுக்கு மிகவும் பாரமான தொழுகைகளாகும். இந்த இரண்டில் உள்ள (நன்மைகளை) அவர்கள் அறிந்தால் முட்டுக்கால்களில் தவழ்ந்தாவது அதற்கு வந்து விடுவார்கள். (இறை நெருக்கத்தைப் பெறுவதில்) முதல் வரிசையாகிறது மலக்குமார்களின் வரிசை போன்றதாகும். நீங்கள் அதன் சிறப்புகளை அறிந்தால் அதற்காக ஒருவருக்கொருவர் போட்டி போடுவீர்கள். ஒருவர் மற்றொருவரோடு சேர்ந்து தொழுவது அவர் தனியாகத் தொழுவதை விட மிக பரிசுத்தமானதாகும். ஒருவர் இருவரோடு சேர்ந்து தொழுவது ஒருவரோடு சேர்ந்து தொழுவதை விட மிகப் பரிசுத்தமானதாகும். எண்ணிக்கை அதிகரிப்பது தான் உயந்தோனாகிய அல்லாஹ்விடம் மிக விருப்பத்திற்குரியதாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி), நூல்: அபூதாவூத் 467

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதை விட இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்.

அறிவிப்பவர்: அபூஹரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1147

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது தனியாகத் தொழுவதை விட இருபத்தேழு மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: முஸ்லிம் 1151

மேற்கண்ட ஹதீஸ்கள் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழுவதன் சிறப்புகளை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. மேலும் பள்ளியில் தொழும் போது ஜமாஅத்தாகத் தான் தொழ வேண்டும் எனபதை வலியுறுத்துகின்றன. பள்ளியில் முதலில் தொழுகின்ற ஜமாஅத்தை மட்டும் தான் இவை குறிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

கொஞ்சம் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்துப் பார்த்தால் ஒருவன் பள்ளிக்கு வருவதே அங்கு வருபவர்களுடன் சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்பதற்காகத் தான். தனியாகத் தொழுவதென்றால் வீடுகளிலோ, கடைகளிலோ தொழுது கொள்ளலாம். ஏனென்றால் பூமி முழுவதும் தொழுமிடமாகும். பள்ளிவாசல் கட்டப்படுவதன் நோக்கமே அங்கு தொழப்படும் தொழுகைகள் ஜமாஅத்தாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காகத் தான். இதன் காரணமாகத் தான் ஜமாஅத்தாகத் தொழுவது தனியாகத் தொழுவதை விட இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறும் கூறியுள்ளார்கள்.

ஒருவர் தம்முடைய வீட்டில் அல்லது கடைவீதியில் தொழுவதைவிட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது.

அறிவிப்பவர்: அபூஹரைரா (ரலி), நூல்: புகாரி 647

பள்ளிவாசலில் தொழுவது என்றாலே ஜமாஅத்தாகத் தொழுவது தான் என்ற காரணத்தினால் தான் நபியவர்கள், வீட்டிலோ கடையிலோ தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும் என்று கூறியுள்ளார்கள்.

எனவே நபியவர்கள் என்ன நோக்கத்திற்காகப் பள்ளிவாசலில் தொழுவதை வலியுறுத்திக் கூறியுள்ளார்களோ அந்நோக்கத்தைப் பாழ்படுத்தும் வண்ணம் தான் இன்றைய சுன்னத் ஜமாஅத்தினர் பள்ளியில் தாமதமாக வருபவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவதைத் தடை செய்து தங்கள் முதுகுகளில் பாவச் சுமைகளைச் சுமந்து கொள்கிறார்கள்.

நபியவர்கள் கூறிய வார்த்தைகளை நன்றாகக் கவனிக்கக் கடமைப்பட்டுள்ளோம். கடை, அல்லது வீட்டை விட ஜமாஅத்தாகத் தொழுவது சிறந்தது என்கிறார்கள். எந்த இடத்தில் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் எனக் கூறவில்லை. ஏனென்றால் ஜமாஅத்தாகத் தொழுவது என்றாலே அது பள்ளிவாசல் தான் என்பதை அனைவரும் அறிந்திருந்த காரணத்தினாலேயே நபியவர்கள் பள்ளிவாசல் என்று கூறவில்லை. பள்ளிவாசல் என்றாலே அங்கு வரக் கூடியவர்கள் கடமையான தொழுகையை ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்பதற்காகத் தான். சுன்னத்தான தொழுகையை ஜமாஅத்தாகத் தொழ வேண்டியதில்லை. எனவே தான் நபியவர்கள் சுன்னத்தான தொழுகையை வீட்டில் தொழுவது சிறந்தது எனக் கூறியுள்ளார்கள்.

சஹாபாக்களின் நடவடிக்கைகளும் ஆதாரமாகும் என்று மத்ஹபுவாதிகள் கூறுவதால் அவர்களுக்காகப் பின் வரும் தகவல்களையும் மேலதிகமாக முன் வைக்கிறோம்.

அனஸ் (ரலி) ஒரு பள்ளிவாசலுக்கு வந்த போது அங்கே தொழுகை முடிந்து விட்டது. உடனே பாங்கும் இகாமத்தும் சொல்லி ஜமாஅத்தாகத் தொழுகையை நிறைவேற்றினார்கள்.

நூல்: புகாரி, பாகம் 1, பக்கம் 505

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் ஒரு பள்ளியில் நுழைந்தார்கள். அவர்கள் தொழுது முடித்திருந்தார்கள். எனவே அல்கமா, அஸ்வத், மஸ்ரூக் ஆகியோருடன் ஜமாஅத் தொழுகை நடத்தினார்கள்

அறிவிப்பவர்: ஸலமா இப்னு குகைல்

நூல்: அல்அவ்ஸத் லிஇப்னி முன்திர், பாகம் : 6, பக்கம்: 318)

நபித்தோழர்கள் மற்றும் அதற்கடுத்த தலைமுறையினரில் அநேக அறிஞர்களின் கூற்றும் இதுவே. ஜமாஅத் தொழுகை நடந்து முடிந்து பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழுவதில் தவறில்லை என்று கூறுகின்றனர். இமாம் அஹ்மத், இஸ்ஹாக் ஆகியோரும் இவ்வாறே கூறுகின்றனர்.

நூல்: திர்மிதி

இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரே பள்ளியில் மீண்டும் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை. ஏனென்றால் பள்ளியில் உள்ள அனைத்து மக்களுமே சமமானவர்கள் தான். (பள்ளிவாசல் என்பதே) ஜமாஅத்தாகத் தொழுகையை நிறைவேற்றுவதற்காகத் தான். இதுதான் வீதிகளின் ஓரங்களிலுள்ள பள்ளிவாசல்களுக்குரிய சட்டமுமாகும். அங்கு மீண்டும் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவதில் எந்தத் தவறும் இல்லை

ஆதாரம்: ஹனஃபி மத்ஹப் நூல் அல்மப்சூத், பாகம்: 1, பக்கம்: 39

இமாம் அபூயூசுப் அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுவதாவது: இமாமிற்கென்று வரையறுக்கப்பட்ட இடமல்லாத ஒரு மூலையில் ஜமாஅத் தவறிய மூன்று பேர்களோ அல்லது நான்கு பேர்களோ நின்று பாங்கு சொல்லித் தொழுதால் எந்தத் தவறுமில்லை. இது அழகானதாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது. ஒரு கிராமவாசி பள்ளியில் நுழைந்து தொழுவதற்கு நின்ற போது நபி (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவர் இவருக்கு தர்மம் செய்யமாட்டாரா? (அவ்வாறு தர்மம் செய்பவர்) எழுந்து இவரோடு தொழட்டும்’ என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுந்து அவரோடு தொழுதார்கள்.

ஆதாரம்: ஹனஃபி மத்ஹப் நூல் அல்மப்சூத், பாகம்: 1, பக்கம்: 399

ஹாமிஸல் ஹஸாயின் என்ற நூலில் ஷாரிஹ் அவர்கள் கூறியுள்ளதாவது: மீண்டும் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவது தொடர்பாக குர்ராக்களின் ஆசிரியராகிய மௌலானா முல்லா அலீ காரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவருடைய கருத்தாகிறது ஒரே பள்ளியில் மீண்டும் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவது குற்றமாகாது என்பதின் மீது அமைக்கப்பட்டதாகும்

ஆதாரம்: ஹனஃபி மத்ஹப் நூல் ரத்துல் முஹ்தார், பாகம்: 3, பக்கம்: 166

மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவது என்பதின் கருத்தாகிறது, ஒரு பகுதியின் இமாம் தொழுகை நடத்தி முடித்த பிறகு வேறொரு ஜமாஅத்தினர் அங்கு வந்தால் அவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவது விரும்பத்தக்கதாகும். இது தான் இப்னு மஸ்வூத் (ரலி) அதாவு, ஹஸன், மற்றும் இப்ராஹிம் நகயீ, இஸ்ஹாக் ஆகியோருடைய கருத்துமாகும்

ஆதாரம்: ஹன்பலி மத்ஹப்

நூல்: அஷ்ஷரஹல் கபீர் லிஇப்னி குதாமா, பாகம்: 2, பக்கம்: 7

மேலும் ஹன்பலி மத்ஹப் அறிஞர்கள் இதற்குச் சான்றாக நபியவர்களின் ஹதீஸ்களைத் தான் ஆதாரமாக முன்வைக்கிறார்கள். இதோ அஷ்ஷரஹுல் கபீர் என்ற நூலாசிரியர் கூறுவதைப் பாருங்கள்:

ஜமாஅத் தொழுகை நடந்த பள்ளியில் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவதற்கு நம்முடைய ஆதாரமாகிறது: தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும் என்று வரக்கூடிய நபியவர்களின் பொதுவான கட்டளையாகும்.

மேலும் அபூ ஸயீதுல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபியவர்கள் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் வந்தார். உங்களில் யாராவது ஒருவர் இவரோடு தொழுது இவருக்கு தர்மம் செய்ய மாட்டாரா? என்று நபியவர்கள் கூறினார்கள் என்ற ஹதீஸும் நமக்குரிய ஆதாரமாகும். இதே ஹதீஸிற்குரிய அறிவிப்பாளர் வரிசையில் அபூ உமாமா (ரலி) அவர்கள் வாயிலாக பின்வரும் அதிகப்படியான கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன. அவர்கள் இருவரும் தொழுது முடித்த போது நபியவர்கள், “இந்த இருவரும் ஜமாஅத் ஆகும்’ என்று கூறினார்கள்.

ஆதாரம்: அஷ்ஷரஹுல் கபீர், பாகம்: 2, பக்கம்: 7

பள்ளியில் தாமதமாக வருவதைத் தடை செய்யும் மத்ஹபுவாதிகள் மத்ஹபையே பின்பற்றாதவர்கள். இன்னும் சொல்லப் போனால் இவர்கள் நபிவழிக்கு மட்டுமல்ல! மத்ஹபிற்கும் எதிரானவர்கள் என்பது தெளிவாகிறது.

எனவே மத்ஹபுவாதிகள் மத்ஹபில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அவர்கள் இரண்டாம் ஜமாஅத் நடத்தத் தடை செய்யக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.